கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-7 தாம்பத்யம் இனிக்கும்



‘‘கண்ணா... சுந்தரர் வாழ்க்கைல தியாகேசன் பண்ண அதிசயங்கள் ஏராளம்...’’ கண்சிமிட்டிய நாகராஜன் சொல்லத் தொடங்கினார். சுந்தரர் திருமுதுகுன்றத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சுந்தரருக்கு ஆரூரில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழா நினைவுக்கு வந்தது. கூடவே திருவிழாவுக்கு சிவனடியார்களுக்கு அமுது படைக்க மனைவி பரவை நாச்சியார் பொன் கேட்டதும்.

பொன்னை யாரிடம் சுந்தரர் கேட்பார்..? வழக்கம்போல் ஈசனிடமே கேட்டார். உடனே பன்னிரண்டாயிரம் பொன்களை எடுத்து ஈசன் கொடுத்தார்.
அதை வாங்கியதும்தான் சுந்தரருக்கு இதையும் எடுத்துக்கொண்டு தல யாத்திரை செல்ல முடியாது என்பது புரிந்தது.

உடன் ஈசனைப் பார்த்து, ‘‘தோழரே! நான் தில்லை முதலிய பல தலங்களை சேவிக்க வேண்டும். இதையும் தூக்கிக்கொண்டு எம்மால் அலைய முடியாது. ஆகவே இதை இங்கு உள்ள மணிமுத்தாறு நதியில் போட்டு விடுகிறேன். பின்பு திருவாரூரில் என் இல்லத்துக்குத் திரும்பிய பின் கமலாலயக் குளத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். சரிதானே?’’ என்றார்.

‘‘அப்படியே செய்யுங்கள் தோழரே...’’ என்று ஈசனும் அருளினார். ‘‘ஆனால், நான் உங்களை நம்பமாட்டேன். நீர் மாயையில் வல்லவர். என்னை நீர் ஏமாற்றக்கூடும். ஆம்! நீர் திருவாரூரில் இதே மாற்று பொன்னைத்தான் தருவீர்கள் என்று நான் எப்படி நம்புவது? ஆகவே, இதில் நான்கு பொன்னை என் முந்தியில் முடிந்துகொள்கிறேன். அங்கு நீர் தரும் பொன்னை ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக இருக்கும்! என்ன... சம்மதம்தானே?’’
‘‘என் தோழரின் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? அப்படியே செய்யுங்கள்!’’ என்று ஈசனும் சம்மதம் தெரிவித்தார்.

உடனே சுந்தரர் பொன்னை மணிமுத்தாறு நதியில் போட்டார். பல தலங்களைத் தரிசித்துவிட்டு திருவாரூரில் உள்ள தன் இல்லத்துக்குத் திரும்பினார்.
‘‘பரவை! வா. நீ அடியார்களைப் பூஜிக்க பொன் கேட்டாய் அல்லவா? தருகிறேன்...’’ என்று பரவை நாச்சியாரை அழைத்துக் கொண்டு கமலாலயக் குளத்துக்கு வந்தார். இறங்கி பொன்னைத் தேடினார். கிடைக்கவில்லை!

‘‘மணிமுத்தாறு நதியில் போட்ட பொன் இங்கு எப்படி வரும்? இறைவனை பித்தன் என்று திட்டி நீங்களும் பித்தன் ஆகிவிட்டர்களா?’’ பரவை நகையாடினாள். சுந்தரருக்கு சுறுக் என்று இருந்தது. உடனே, ‘பொன் செய்த மேனியீர்...’ என்று பதிகம் பாடினார். அதில் பரவை தம்மை நகையாடும்படி செய்யலாமா என்று இறைவனிடம் முறையிட்டார்.

பதிகம் பாடி முடித்த வுடனே பொன் மூட்டை சுந்தரர் கையில் அகப்பட்டது. இடுப்பில், தான் முடிந்து வைத்திருந்த நாணயங்களோடு அதை ஒப்பிட்டு அதன் மாற்றை சோதித்தார். திருவாரூர் குளத்தில் கிடைத்த பொன் முன்பு இருந்த பொன்னை விட மாற்று குறைந்துதான் இருந்தது. மேலும் தன்னை சோதிக்க வேண்டாம் என்று இறைவனை வழிபட்டு, சுந்தரர் மீண்டும் ஒரு பதிகம் பாடினார்.

என்ன ஆச்சர்யம்... அனைத்து பொன்னும் உயர்ந்த மாற்றுப் பொன்னாக மாறின! சுந்தரர் ஈசனை பரிபூரணமாக நம்பாததாலும், அவர் செந்
தமிழை மீண்டும் கேட்கவும் பரமன் இந்த நாடகத்தை ஆடிவிட்டார்... திருவாரூர் கோயிலுக்கு வந்த அந்த மனிதரின் நெற்றியில் திருநீறு பளபளத்தது. கண்களில் பக்தி வழிந்தோடியது. முகத்தில் ஞான ஒளி மின்னியது. மெல்ல ஆரூர் அப்பனை மனம் குளிர சேவித்தார். அழுதார். தொழுதார். பிரகாரத்தை வலம் வருவதற்காக சற்று திரும்பி இரண்டடி எடுத்து வைத்தார்.இருள் கண்ணைக் கரித்தது.

‘உலகுக்கே ஒளியாக விளங்கும் பரமனின் ஆலயம் இருள் சூழ்ந்திருப்பதா? என்ன கொடுமை இது! உடன் அருகில் எண்ணெயை இரவலுக்கு வாங்கி வந்து விளக்கேற்றி இந்த இருளை விலக்குகிறேன்...’என்றெண்ணியபடி அந்த நபர் கோயிலுக்கு வெளியே வந்தார். எதிரில் தீப ஒளியில் மின்னும் ஒரு வீடு தெரிந்தது. அங்கு விரைந்தார். ‘‘அன்பர்களே! நான் நமி நந்தி அடிகள் வந்திருக்கிறேன். கோயில் பிராகாரங்களில் இருள் மண்டிக் கிடக்கிறது. அதை விரட்ட விளக்கேற்ற உள்ளேன். சற்று இரவலுக்கு...’’

‘‘மடப்பயலே! உன்னோட கூத்தாடி தெய்வம்தான் கைலயே நெருப்ப வெச்சுகிட்டு இருக்குல... அதுக்கு எதுக்குடா வெளிச்சம்? அப்படியே உனக்கு விளக்கு ஏத்தணும்னா போய் எண்ணெய் வாங்கு. முடியலையா... தண்ணீரை ஊத்தி ஏத்து! உன் தெய்வம்தான் எல்லாம் வல்ல இறைவனாச்சே... தண்ணீரையும் எண்ணெயா மாத்தும்! போ... அட போடாங்கறேன்...’’

நமி நந்தி அடிகள் அந்த வசை மொழிகளைக் கேட்டு மனம் நொந்தார். பதில் எதுவும் பேச முடியாமல் திரும்பும்போதுதான், தாம் இரவல் கேட்டது ஒரு சமண மடாலயம் என்று புரிந்தது. வேறு மதத்தைப் பின்பற்றுவது தவறில்லை. ஆனால், பிற மதத்தை இகழ்வது தவறு.

ஆண்டவனிடம் ஓடினார்.  ‘‘அப்பனே... தியாகேசா! அவர்கள் என்னை வசைபாடவில்லை... உன்னைத்தான் திட்டினார்கள்! எண்ணெய் வாங்க என்னிடம் பொருளில்லை. அதற்காக உனக்கு விளக்கு ஏற்றாமல் செல்ல மனமில்லை. அவர்கள் சொன்னபடி கமலாலயக் குளத்து நீரை எடுத்து விளக்கில் விட்டு சுடர் ஏற்றுவேன். சுடர் பற்றி எரிய வேண்டும்! சமணர் திமிர் அடங்க வேண்டும்! உன் புகழ் ஓங்க வேண்டும்!’’
விடுவிடுவென குளத்துக்குச் சென்று நீரை எடுத்து அகலில் ஊற்றி சுடரை ஏற்றினார். ஈசன் அருளால் தண்ணீரில் சுடர் எரிந்தது!

இந்த அதிசயத்தைக் கண்ட பக்தர்கள் ‘சம்போ மகாதேவா!’ என்று கோஷமிட்டனர். இந்த சத்தம் கேட்டு மடத்தை விட்டு சமணர்கள் வெளியில் வந்தார்கள். நிகழ்ந்ததைக் கேட்டு அதிசயித்தார்கள். தங்கள் தவறுக்காக வருந்தினார்கள். ‘‘இதேபோல தண்டி அடிகள், சோமாசி மாற நாயனார், மகாலட்சுமினு நிறைய பேர் தியாகேசன் அருளால நற்கதி அடைஞ்சிருக்காங்க.

மனைவியோடு சந்தோஷமா வாழணும்னு நினைக்கிற கணவனும்; கணவனோடு ஆனந்தமா வாழணும்னு நினைக்கிற மனைவியும் இந்தக் கோயிலுக்குப் போய் ஈசனை பிரார்த்தனை செஞ்சா போதும். அப்பப்ப வர்ற சின்னச் சின்ன சண்டை சச்சரவுகளை மீறி வாழ்க்கை முழுக்க சந்தோஷமா வாழ்வாங்க...’’ கண்ணனைப் பார்த்துச் சொல்லிவிட்டு, சுவரில் மாட்டப்பட்டிருந்த ஈசன் படத்தை நோக்கி நாகராஜன் வணங்கினார்.

‘‘இன்னொரு சிறப்பும் திருவாரூர்ல இருக்கு கண்ணா... அங்கமட்டும்தான் நவகிரகங்களை ஒரே வரிசைல பார்க்கலாம்!’’ என்றாள் ஆனந்தவல்லி.
‘‘அட அப்படியா..? பாட்டி சொல்றது உண்மையா தாத்தா..? ஏன் இங்க மட்டும் அப்படி இருக்காங்க..?’’ ஆவலுடன் கண்ணன் கேட்டான்.
சத்யகுப்தன் என்ற அசுரனுக்கு பயந்து ஒருவருக்குப் பின் ஒருவராக திருவாரூருக்கு வரிசையாக வந்த நவகிரகங்கள், தியாகேசனை கண்ணீர் மல்க தொழுதார்கள். ‘‘நீதி தவறாமல் எங்கள் கடமையைச் செய்கிறோம். அப்படியிருக்க எங்களுக்கு இந்த சோதனையா? அப்பனே ஊழி முதல்வனே... எங்களைக் காத்தருளும்!’’ மன்றாடினார்கள்.

‘‘உங்களைக் காப்பது பெரிய விஷயமில்லை. செய்கிறேன். இதற்கு பதிலாக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்...’’ ஈசன் புதிர் போட்டார்.
நவகிரகங்கள் விழித்தன. ஈசனுக்கே கைமாறா..? ‘‘எதுவாக இருந்தாலும் ஆணையிடுங்கள். செய்கிறோம்!’’ ஒரே குரலில் சொன்னார்கள்.
‘‘என் அடியவரை நவகிரகங்கள் ஆகிய நீங்கள் தொல்லை செய்யக்கூடாது. அதற்கு அத்தாட்சியாக இங்கு இதே வரிசையில் நீங்கள் நிற்க வேண்டும்!’’
‘‘சுவாமி... ஆணையிட்டால் போதாதா..? கைமாறாகவா இதைக் கேட்க வேண்டும்? தங்கள் சித்தம்...’’ ஈசனை வணங்கிய நவகிரகங்கள் அவர் சொன்னபடியே அசையாமல் அப்படியே நின்றார்கள்.

‘‘மைகாட்... நமக்காக நவகிரகங்கள்கிட்ட சுவாமி வேண்டுகோள் வைச்சாரா..?’’ கேட்கும்போதே கண்ணனின் கண்கள் கலங்கின. ‘‘அவர் கருணையே கருணை தாத்தா...’’ ‘‘ம்... அதனாலதான், ‘பக்தர்கள் கேட்கும்போது காசும் பணமும் கொடுத்து, போகங்களையும் அனுபவிக்கச் சொல்லி, குடும்பப் பிரச்னைகளையும் தீர்த்து வைத்து, நாம செய்யற தப்பை எல்லாம் மன்னிச்சு, இனிமே தவறு செய்யாதீங்கனு அறிவுரையும் சொல்லி நம்மை அரவணைக்கிற திருவாரூரனை மறக்கலாமா’னு சுந்தரர் கேட்கறார்...’’ நாகராஜன் நெகிழ்ந்தார்.

‘‘தாத்தா... அந்த தேவாரப் பாடலைப் பாடிக் காட்டுங்களேன்... ப்ளீஸ்...’’
நாகராஜன் தன் இமைகளை மூடி கரம் கூப்பினார்.
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப்
  போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
  பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறிய வொண்ணா
  எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
  ஆரூ ரானை மறக்கலு மாமே!

காம்போதி ராகத்தில் உள்ளம் உருக பாடி முடித்த நாகராஜன், இமைகளைத் திறந்தார். ‘‘கண்ணா இன்னும் ஆரூர் பத்தி நிறைய சொல்லலாம். சொல்லிக்கிட்டே இருக்கலாம்! ஒரே வார்த்தைல சொல்லணும்னா தியாகேசனும் கமலாம்பிகையும் கேட்ட வரம் தரும் கற்பக விருட்சம்! அவர்கிட்ட வேண்டிக்கிட்டா உன் ஃப்ரெண்டோட அக்காக்கு மட்டுமில்ல... யாருக்குமே ஒரு குறையும் வராது. தாம்பத்ய வாழ்க்கை சந்தோஷமா அமையும்..!’’        

திருவாரூர் தியாகராஜர் கோயில்

முகவரி: சன்னதி தெரு,
திருவாரூர் - 610001.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

 - ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்