ரத்த மகுடம்-49



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கெடில நதிக்கரை ஓரத்தில் ஆற்றோடு ஆறாக... மீனோடு மீனாக சிவகாமி கிடந்தாள்.இருள் பெரிதும் சூழ்ந்துவிட்ட இரவின் அந்த நேரத்தில் அளித்த பிரமை தட்டும் காட்சியைக் கண்ட கரிகாலனின் உள்ள உணர்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் பெரிதும் கலங்கிவிட்டன.அடுத்தபடி என்ன செய்வது என்பதை அறியாமல் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்ற இடத்திலேயே கற்சிலை என நின்றான்.

கரையோரத்தில் ஒதுக்கப்பட்டாலும் பாதி தரையிலும் பாதி நீரிலுமாகக் கிடந்த அந்தப் பாவையின் அழகிய உடலின் ஒரு பாதியை திரைகள் அவ்வப்பொழுது வந்து வந்து தழுவிப் பின்வாங்கியதாலும், நிலவின் ஒளி அந்தத் திரைகளின் மீது விழுந்து வெள்ளிப் பாளங்களாக திரை நீரை அடித்ததாலும், சிவகாமியின் உருவத்தை மறைக்க முயன்ற கெடில நதி அரசன் தன் திரைகளைக் கொண்டு வெள்ளிப் போர்வையை அவள் மீது போர்த்திப் போர்த்தி எடுப்பதுபோல் தோன்றிய அந்த மோகனக் காட்சியைக் கண்ட கரிகாலன் உள்ளத்தைப் பெரும் மாயை மூடிக் கொண்டது.


அதுவரை அவன் உள்ளத்தை ஆட்கொண்டிருந்த பல்லவ மன்னரும், காஞ்சியும், ஆதுரச் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தன் தந்தையின் நிலையும், சிவகாமி குறித்த மர்மமும் கரிகாலனின் சிந்தையில் இருந்து அகன்றன.

எதற்கும் அசையாத கரிகாலனின் இரும்பு நெஞ்சம் கீழே கிடந்த மோகனாஸ்திரத்தின் வசியப் பிணைப்பில் இறுகிவிட்டதையும், அப்படி இறுகிவிட்ட நெஞ்சம் எந்தப் பக்கமும் திரும்ப வழியில்லாமல் தவிப்பதையும் கண்ட விண்மீன்கள், கண்களைச் சிமிட்டி அவனை நோக்கி நகைத்தன.

அந்த சமயத்தில் அவன் காலில் வந்து மோதிச் சென்ற கெடில நதி அலைகள் கூட சளக் சளக் என்று சத்தம் போட்டு தங்கள் திரை நுரைகளைக் காட்டி அவனை நோக்கிச் சிரித்தாலும், அந்தத் திரைகளின் சிரிப்பொலியைக் கூடக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நிலைகுலைந்து நீண்ட நேரம் நின்றுகொண்டே இருந்தான்.

அதுவரையில் அவன் காதில் லேசாக விழுந்து கொண்டிருந்த கெடில நதியின் பேரிரைச்சலும், வனங்களில் ஒலித்த வண்டுகளின் ரீங்காரமும் கூட சிவகாமி கிடந்த கோலத்தைக் கண்டது முதல் அடியோடு அகன்று, உலகமே ஒலியிலிருந்து விடுபட்ட சூனியம் போலும், விழுந்து கிடந்த அந்த அழகிய உடல் பிரதிபலித்த ஒளி மட்டுமே உலகத்தில் நிலைத்த உயிர் நிலை போலும் தோன்றக் கூடிய நிலைக்கு அவனைக் கொண்டுவந்து விட்டது. அப்புறமோ இப்புறமோ நகரக் கூடிய உணர்வை கரிகாலன் இழந்தான்.

உணர்விழந்து கிடந்தது, தரையில் புரண்டிருந்த மங்கையா அல்லது அவளைப் பார்த்து பிரமை பிடித்து நின்றுவிட்ட அந்த வாலிப வீரனா என்பதை ஊகிக்க முடியாத நண்டுகள் சில சிவகாமியின் மீதும் இன்னும் சில கரிகாலனின் கால்கள் மீதும் ஏறி ஏறிச் சென்று பார்த்து உண்மையை ஊகிக்க முயன்று தோற்று அப்புறம் நகர்ந்தன.  

மந்திரத்தை மந்திரத்தால்தான் எடுக்க முடியும். அதை எடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பதை நிரூபிக்க இஷ்டப்பட்ட வானவெளி, நாண்மீன் எனப்பட்ட அசுவினி நட்சத்திரக் கூட்டத்தையும், கோண்மீன் எனப்பட்ட செவ்வாய் - புதன் முதலிய கிரகங்களையும் மெல்ல மெல்ல ஒன்று திரட்டி கரிகாலன் மனோநிலையை அந்த அழகியின் மாயா சக்தியில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.

விண்ணின் இஷ்டப்படி விதி வகுக்கப்படுகிறது; நட்சத்திரங்களின் அசைவுக்குத் தகுந்தபடி மனித வாழ்க்கை இயங்குகிறது என்று கூறும் சோதிட சாத்திரத்தை மெய்ப்பிக்கவே நதிக்கரையோரம் ஒதுங்கினவளைப் போல் அதுவரை தரையில் அடியோடு உணர்வற்றுக் கிடந்த சிவகாமியும் அசுவினியும் செவ்வாயும் புதனும் ஒளிவிடத் தொடங்கிய அந்த நேரத்தில் கரிகாலன் மனத்தைக் கட்டுப் படுத்தி இருந்த மந்திரக் கணையை மெல்ல அவிழ்க்கவும் அவன் உணர்ச்சிகளை மெல்ல மெல்ல அவனுக்குத் திரும்ப அளிக்கவும் தன் பூவுடலை லேசாக ஒருமுறை அசைத்தாள்.

அந்த ஓர் அசைவு கரிகாலன் இதயக் கட்டை அவிழ்த்து அவனை இந்த உலகத்துக்குள் கொண்டுவந்துவிட்டதால், சிவகாமிக்கு உதவாமல் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டு நேரத்தை அனாவசியமாக வீணாக்கிக் கொண்டிருந்த தன் மதியீனத்தை நினைத்துப் பெரிதும் வருந்தியவன் சட்டென்று அமர்ந்து அவள் நாசியில் விரலை வைத்துப் பார்த்தான்.

சுவாசம் நிதானமாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்ததால் நீரை அதிகமாக அவள் குடிக்கவில்லை என்பதைத் தீர்மானித்துக் கொண்ட கரிகாலன், அவளைத் தரையிலிருந்து தூக்கினான்.சிவகாமியின் தேகம் அவன் அறிந்ததுதான். பலமுறை புரண்ட உடல்தான். அங்கங்களின் அளவும் செழுமையும் தெரிந்ததுதான். என்றாலும் ஒவ்வொரு முறையும் நினைப்பதுபோலவே அப்போதும் எண்ணினான்.

அழகிய தோற்றமும் கட்டான சரீரமும் படைத்த சிவகாமி தூக்குவதற்கு எத்தனை லேசாக இருக்கிறாள்! இத்தகைய ஒரு சொர்ணச் சிலை எப்படிப் பஞ்சுபோல் இருக்க முடியும்..?வியந்தபடியே அவளைச் சுமந்தபடி வனத்துக்குள் புகுந்தான்.

மழை பெய்து மண்ணைக் குளிரவைக்க வேண்டிய ஆவணி மாதத்தில் மழையோ குளிரோ இல்லை என்றாலும், கைகளிலே தூக்கிச் சென்ற சிவகாமியின் நனைந்த உடையில் இருந்த தண்ணீர் அவன் இதயத்துக்கு அருகே வழிந்து ஓடியதாலும், அவன் கால்கள் நடந்த அதிர்ச்சியால் அவன் மார்பிலே புதைந்த அவள் அங்கலாவண்யங்களின் அசைவால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் வேகத்தாலும், சிவகாமியின் சரீரத்தின் மென்மை உள்ளத்தே கிளப்பிவிட்ட எத்தனை எத்தனையோ தடுமாற்றங்களாலும் கரிகாலனின் உறுதியான கால்கள் கூடச் சற்று தடுமாற்றத்துடனேயே நடந்து சென்றன.

விசாலமான புல்தரையில் அதுகாறும் தாங்கி வந்த சிவகாமியை மெல்லக் கிடத்தினான்.மூர்ச்சை முழுதும் தெளியாமல் இருந்தாலும் கெடில நதிக்கரையில் இருந்து கரிகாலன் அவளைத் தூக்கி வந்தபோது ஏற்பட்ட அசக்கலில் சிவகாமி குடித்திருந்த கொஞ்ச நீரும் வாய் வழியாக வெளிவந்துவிட்டதால் அவள் ஓரளவு சுரணை வரப்பெற்று அப்புறமும் இப்புறமும் அசைந்தாள்.

புஷ்பக் கொத்துகளுடன் காற்றிலாடும் பூஞ்செடியைப் போல் அவள் மெல்ல அசைந்தபோது ஈர உடை சற்றே நெகிழ்ந்ததால் லேசாக வெளிப்பட்ட அவள் தேக லாவண்யங்களின் நிறம் புது செம்பையும் பழிக்கும் தன்மையைப் பெற்றிருந்ததைக் கண்ட கரிகாலன், இப்படியும் ஒரு செம்பு நிறம் படைப்பில் இருக்க முடியுமா என எப்போதும் போல் அப்போதும் நினைத்து பிரமித்துப் போனான்.

உருக்கிய செம்பில் புஷ்பத்தையும் செவ்வரி ஓடாத அல்லி மலரின் உள்ளிதழ்களையும் கூட உவமை சொல்ல முடியாத அத்தனை நிறம் வாய்ந்த சிவகாமியின் அழகிய வதனத்தைச் சூழ்ந்த ஈரத்தால் கன்னத்தில் ஒட்டிக் கொண்டிருந்த கூந்தல் முழு நிலவின் பிம்பத்தை எதிரொலித்தது.

புல் தரையில் கிடந்த சிவகாமியின் உடல் சிறுக்க வேண்டிய இடங்களில் சிறுத்து எழுச்சி பெற வேண்டிய இடங்களில் நன்றாக எழுச்சி பெற்றிருந்ததால் யவனத்துக்கு இலக்கணம் வகுக்கவே இயற்கை அவளை உருவாக்கியது போல் கரிகாலனுக்குத் தோன்றியது.

தன் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் கெடில நதி அரசன் தன் கரங்களால் அவள் ஆடையில் விளைவித்த அலங்கோலத்தினால் மறைவு குறைந்து அழகு எழுந்து நின்றதன் விளைவாகப் பார்த்த இடங்களில் எல்லாம் தாக்கப்பட்டு புயலில் அகப்பட்ட மரக்கலம் போல அல்லாடும் மனநிலைக்கு வந்துவிட்ட கரிகாலன், அவள் வதனம் அசையத் தொடங்கியதும் முழந்தாளிட்டு சிவகாமியை நோக்கிக் குனிந்தான்.மெல்ல இமைகளைப் பிரித்தவள் தன்னருகில் தெரிந்த கரிகாலனின் முகத்தைக் கண்டதும் நிம்மதியடைந்து ‘‘இங்குதான்... இருக்கிறீர்களா..?’’ என மெல்ல உச்சரித்தாள்.

‘‘இங்குதான் இருக்கிறேன்...’’ என்றபடி அவள் கொங்கையின் பிளவுக்குள் தன் முகத்தைப் பதித்தான் கரிகாலன்!‘‘ம்... எங்கு தேடியும் கரிகாலனும் சிவகாமியும் சென்ற இடம் உங்களுக்குத் தெரியவில்லை...’’ சர்ப்பமென ராமபுண்ய வல்லபர் சீறினார்.பதில் பேச முடியாமல் சாளுக்கிய வீரர்கள் தலைகுனிந்தார்கள். ‘‘போகட்டும்... சோழ மன்னரை யார் எடுத்துச் சென்றார்கள்..? எந்த ஆதுரச்சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது..?’’
முன்னிலும் அதிகமாக வீரர்கள் தரையை ஆராய்ந்தார்கள்.‘‘உங்களைச் சொல்லி குற்றமில்லை...

உங்களை வைத்துக் கொண்டு பாண்டியர்களையும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறாரே நம் மன்னர்... அவரைச் சொல்ல வேண்டும்! போங்கள். எல்லாத் திசைகளிலும் அலசுங்கள்! செய்தியோடுதான் இனி என்னைச் சந்திக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் மரணமடைந்த செய்தி வாதாபியில் இருக்கும் உங்கள் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும்!’’ அழுத்தமாகச் சொல்லிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைக்குள் சாளுக்கியர்களின் போர் அமைச்சர் நுழைந்தார்.

வாயிலில் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் எதுவும் சொல்லாமல் ராமபுண்ய வல்லபரை ஒரேயொரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார்.

செல்வதற்கு முன் தன்னைப் பார்த்து அந்த அம்மையார் நகைத்ததாகவே ராமபுண்ய வல்லபருக்குத் தோன்றியது!‘‘வா ...’’ கணங்கள் யுகங்களாகக் கரைந்தபிறகு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் குரல் கொடுத்தார்.மறைவிடத்தை விட்டு வெளியே வந்த பாலகன் மரியாதையுடன் அவர் அருகில் சென்று கைகட்டி நின்றான்.‘‘செய்தியைச் சொல்...’’ மன்னரின் குரலில் கட்டளைக்குப் பதில் அன்பே நிரம்பி வழிந்தது.‘‘கெடில நதிப்பக்கம் கரிகாலனும் சிவகாமியும் சென்றிருக்கிறார்கள்...’’ பாலகன் பவ்யமாகச் சொன்னான்.
‘‘ம்...’’

‘‘அதன் பிறகு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை...’’
‘‘ம்...’’
‘‘குறுவாள் பாய்ந்த சோழ மன்னரைக் காப்பாற்றும் பொறுப்பை காபாலிகனிடம் ஒப்படைத்திருக்கிறார்
கரிகாலர்...’’
‘‘ம்...’’

‘‘ஆனால்...’’ பாலகன் தயங்கினான்.‘‘எந்த ஆதுரச் சாலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை... அப்படித்தானே..?’’
பாலகன் தலையசைத்தான்.‘‘அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... கவலைப்படாதே...’’ ஆறுதல் சொன்ன விக்கிரமாதித்தர், பாலகனை நெருங்கி அவன் தோளில் கைவைத்தார். ‘‘நம் பணி முடியும் வரை கடிகையில் எச்சரிக்கையாக இரு. புலவர் தண்டி மீது ஒரு கண் இருக்கட்டும்...’’தலையசைத்த பாலகன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு வந்த வழியே வெளியேறினான்.

‘‘வருபவன் அந்த பாலகன்தானே..?’’ மகேந்திரவர்ம சாலையில் இருளடர்ந்த பகுதியில் இருந்த உருவம் மெல்லக் கேட்டது.‘‘ஆம்... கடிகையைச் சேர்ந்தவனேதான்!’’ மற்றொரு உருவம் பதில் சொன்னது.சந்தேகம் வராதபடி பாலகனை அவர்கள் இருவரும் பின்தொடர்ந்தார்கள்.

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்