ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் பெற்றது ஏன்..?



அம்பலப்படுத்தும் #OneDollarSalary

ஆமாம். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் தொடர்பிருக்கிறது!முதலில் #OneDollarSalary என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். மாதம் முடிந்ததும் உங்களுக்கு சம்பளமாக வெறும் ஒரு டாலரை உங்கள் வங்கிக் கணக்கில் நிறுவனம் செலுத்தினால் எப்படியிருக்கும்?பற்றிக்கொண்டு வரும் என்றால் நீங்கள் வெறும் பணியாளர் என்று அர்த்தம்! அதுவே கெத்தாக பெருமை பூத்தால் நீங்கள் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி - சிஇஓ - என்று பொருள்!

செவி முழுக்க பூ சொருகவில்லை பாஸ். அதுதான் இப்போது டிரெண்ட்!கடந்த ஆண்டு (2018) ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆன டிம் குக், நிறுவனத்தை முன்னேற்றியதற்காக 12 மில்லியன் டாலர்ஸை போனசாகப் பெற்றார். தவிர அவரது சம்பளத்தையும் கடந்த வருடம் 22% ஆக அதிகரித்து 3 மில்லியனாகக் கொடுத்தது ஆப்பிள்! இதுபோக பிரைவேட் ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்ஸை பெற்றார் குக்.

ஆச்சா... இதேநேரம் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (CEO) ஜாக் டார்சி, கடந்த ஆண்டுக்காக வாங்கிய மொத்த சம்பளமும் வெறும் 1.40 டாலர்ஸ்! ம்ஹூம். ரீல் சுற்றவில்லை. அமெரிக்க அரசின் SEC ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்களில் டுவிட்டரே இதை தெரிவித்திருக்கிறது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 97 ரூபாய்தான்! சொல்லப்போனால் இதுவே அவருக்கு அதிகமாம்! இன்னொன்று தெரியுமா? 2015 முதல் 2017 வரை இந்தப் பதவியில் இருக்க எந்த ஒரு பணமும் அவர் பெறவில்லை! தவிர, தான் தொடங்கிய ‘ஸ்கொயர்’ என்ற மொபைல் பேமன்ட் நிறுவனத்திலும் இவர் CEO ஆக இருக்கிறார். இங்கும் அவர் பெறும் சம்பளம் ஜஸ்ட் 2.75 டாலர்ஸ்தான்!

தலையைச் சுற்றுகிறதா..? அனாசின் எல்லாம் வேண்டாம். விடை சிம்பிள். டுவிட்டர் + ஸ்கொயர் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ஜாக் டார்சியிடம்தான் இருக்கின்றன! அந்த வகையில் இப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 4.7 பில்லியன் டாலர்ஸ்! `ஸ்கொயர்’ நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டும் 3.9 பில்லியன் டாலர்ஸ்! டுவிட்டர் பங்குகளின் மதிப்பு 600 மில்லியன் டாலர்ஸ்! டுவிட்டரை நிறுவியவர்களில் ஜாக் டார்சியும் ஒருவர் என்பது தெரியுமல்லவா..?

வெயிட். இவ்வளவு சொத்துகளை வைத்திருப்பவர் ஏன் 1.40 டாலரை சம்பளமாகப் பெற வேண்டும்? இதுதானே கேள்வி?

ஆன்சரைத் தெரிந்துகொள்ள ஓர் எட்டு #OneDollarSalary வரலாற்றைப் பார்த்துவிடலாம்.  ஏனெனில் ஃபேஸ்புக்கின் CEO ஆன மார்க் சக்கர்பெர்க், 2012ல் 770,000 டாலர்ஸை சம்பளமாகவும், போனஸாகவும் பெற்றார். ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் மிகக்குறைந்த சம்பளம் வாங்குவது அவர்தான்! போலவே ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எலிசன், கூகுளின் லாரி பேஜ்... எனப் பலரும் இந்த ஒரு டாலர் சம்பளமே பெறுகின்றனர். இதைத்தான் கெத்தாக #OneDollarSalary என்கின்றனர்.

இந்த வழக்கம் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. உலகப்போர் மற்றும் பிற போர்களின்போது பல தொழில்துறைத் தலைவர்கள் அமெரிக்க அரசுக்காக சேவை புரிந்தனர். இதற்காக எந்த சலுகைகளையும் அவர்கள் பெறவில்லை; விரும்பவுமில்லை. சும்மா பெயருக்கு ஒரு டாலர் சம்பளம் பெற்றனர்.

இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாங்கினார்கள். இவர்களை செல்லமாக அப்போது `டாலர் ஏ இயர் மென்’ (Dollar-a-year men) என அழைத்தனர். பிறகு மெல்ல மெல்ல வழக்கொழிந்து போன இந்த டிரெண்ட் மீண்டும் 1990களில் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்தது! பல வசதி படைத்த CEOக்கள் ஒரு டாலர் சம்பளம் பெறத் தொடங்கினர். ‘One dollar salary’ என்றும் தங்களை அறிவித்துக் கொண்டனர்.

ஆமாம். அறிவித்துக் கொண்டனர்! ஏனெனில் இதன் பின்னால் சொல்லப்படாத செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இவர்களுக்கு கணிசமான அளவில் பங்குகள் இருக்கின்றன என்ற உண்மைதான் அது!சம்பளம் ஒரு டாலராகவே இருந்தாலும் பங்குகளின் வழியே அட்டகாசமாக லாபம் வரும் இல்லையா..? எனவே நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காக உடல் பொருள் ஆவி என சகலத்தையும் அர்ப்பணித்து வேலை பார்ப்பார்கள்!

இப்படிச் செய்பவர்கள் கம்பெனிகளின் சிஇஓ ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் சிலரும்கூட இப்படி ஒரு டாலரை மாதச் சம்பளமாகப் பெற்றிருக்கின்றனர்.தமிழகத்திலேயே ஜெயலலிதா தன் முதல் ஆட்சிக்காலமான 1991 - 96ல் மாதம்தோறும் ஒரு ரூபாய்தானே சம்பளமாகப் பெற்றார்..?

எனில், நிறுவன சிஇஓ போல் அரசியல் தலைவர்களுக்கும் பங்குகள் வழியே ஆண்டுதோறும் கணிசமாக வருமானம் வருமா..?

வரும்! ஜெயலலிதாவே அதற்கு உதாரணம். சொத்துக்குவிப்பு வழக்கில் நம்பர் ஒன் குற்றவாளியாக உச்சநீதிமன்றமே தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறதே! ஒரு ரூபாய் சம்பளத்திலா அவ்வளவு சொத்துகளைச் சேர்த்தார்..?! பங்குகள் வழியேதானே!இதை மனதில் வைத்துத்தானோ என்னவோ ஓஹியோ பல்கலைக்கழகம் 2011ம் ஆண்டு நடத்திய ஆய்வு ஒன்றில், ‘One dollar salary பெறுபவர்கள் அனைவரும் பணம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்கள்...’ என்று குறிப்பிட்டிருக்கிறது!

காம்ஸ் பாப்பா