GANGS OF மெட்ராஸ்



காதல் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பெண்ணின் கதையே ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’.மதம் மாறி தன் காதலனைக் கைபிடிக்கிறார் பிரியங்கா ரூத்.  அமைதியாகப் போகிறது அவர்களின் காதல் வாழ்வு. கணவர் அசோக் பணிபுரிகிற இடம் போதை மருந்து கடத்தல் கும்பலின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

அவர்கள் செய்யும் வேலைக்கு போலீசின் தலையீடு அதிகம் இல்லாமல் இருக்க, கணக்குக்காட்ட அசோக்கை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்கள். கொதித்து எழுகிறார் பிரியங்கா. கணவனின் கொலைக்கு ஆதாரமாக இருந்தவர்களை பழிவாங்க, அதற்கான தயாரிப்புகளைத் தொடங்குகிறார். பிரியங்காவின் பழிவாங்கும் முயற்சி எப்படி போய் முடிந்தது என்பது அதிரடி க்ளைமேக்ஸ்.

நமக்கு நன்கு பரிச்சயமான கதைகளின் தொகுப்புதான் என்றாலும் புதுமையான திரைக்கதையில், ஒரு பெண்ணின் வழி கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார். ‘மாயவனை’ப் போல் எதிர்பார்த்து வருகிறவர்களுக்கு வெளிப்படையான வன்முறையும், தெறிக்க விடும் ரத்தமும் கிறுகிறுக்க வைக்கிறது.

சுத்தியலைத் தோளில் சாய்த்துக்கொண்டு இறுக்கமாக நடப்பதாகட்டும், எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல், எதிராளியின் சைக்காலஜியைச் சிதைப்பதாகட்டும், பெரிய கேங்ஸ்டரையே எதிர்க்கும் பிரியங்கா ஆக் ஷனில் அசத்துகிறார்.

ஆனால், தன்மேல் விருப்பம் வைத்தவனை கொடூரமாக சிதைக்கும் அந்த பெர்ஃபாமன்ஸ் பெரும் அவஸ்தை. அவர் அதிரடியாக உருவாகும் வித்தையை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக விதைத்துவிட்டு, பின்பாதியில் அந்த ‘பில்ட் அப்’பைத் தக்கவைக்க தவறிவிட்டீர்களே குமார்?டேனியல் பாலாஜி வழக்கம்போல் வில்லத்தனம் செய்கிறார். கடைசி வரை சென்னை வரப் பிரியப்பட்டு முடியாமலே மும்பை வீட்டு வாசல்படியிலேயே இறந்து விடுகிறார். அமைதியான, ஆனால், திட்டங்களோடு இருக்கிற தாதாவாக வேலு பிரபாகரன் நல்ல பொருத்தம்.

‘ஆடுகளம்’ நரேன், ஈ.ராம்தாஸ், பகவதி பெருமாள் தங்கள் பாத்திரங்களில் வேண்டியமட்டும் உயிர் தருகிறார்கள். சர்வதேச கடத்தல் கும்பல்களின் வியாபாரம், அதன் அளவு, புழங்கும் பணம்  என டீடெயில் பயமுறுத்துகிறது. ஆட்களைப் போட்டுத் தள்ளுகிற விதத்தைப் பார்த்தால் சென்னையா இல்லை லத்தீன் அமெரிக்காவா என சந்தேகம் வருகிறது.

சென்னையின் கேங்ஸ்டர் சண்டையில் இத்தனை கொலைகளா, இத்தனை கொடூர சண்டைகளா என நம்ப முடியவில்லை. படத்தின் டெம்போவை கொஞ்சமேனும் தக்க வைப்பது ஷ்யாமளாங்கனின் பின்னணி இசையும், கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவும் மட்டுமே. ஆக் ஷன், சென்டிமென்ட், போதை கடத்தல் என மசாலா பேக்கேஜில் சினிமா ஆக்க முயற்சித்திருக்கிறார்கள். அதற்கு ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ இன்னும் இடம் கொடுத்திருக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு