தல புராணம்-சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி...



ஒரு பரந்தவெளியின் மையத்தில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது அந்தப் பாழடைந்த கட்டடம். பார்ப்பதற்கு பங்களா போல ரசனையாக மிளிரும் அது, முன்னொரு காலத்தில் பள்ளியாகச் செயல்பட்டது என்றால் நம்பமுடியவில்லை. சென்னை சாந்தோம் சர்ச்சிலிருந்து சிறிது தொலைவிலேயே இருக்கும் சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியின் பழைய தோற்றம் இப்படியாகவே உள்ளது. 1912ம் வருடம் தொடங்கப்பட்ட மெட்ராஸின் முதல் காது கேளாதோர் பள்ளி இது.

இன்று அந்தப் பழமையான கட்டடம் எச்சமாக நிற்க, அருகிலேயே புதிய கட்டடத்தில் 107 வருடங்களைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது காது கேளாதோர் பள்ளி. எப்படி உருவானது?‘இங்கிலாந்து ஜெனானா மிஷனரி சொசைட்டி சர்ச்’சைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ் ஸ்வேன்சன் என்கிற பெண்மணி இந்தக் காது கேளாதோர் பள்ளியைத் தோற்றுவித்தார். இவர் திறமையான செவிலியரும் கூட.

1882ம் வருடம் மதபோதகராக இந்தியா வந்த ஃப்ளாரன்ஸ், தன் சேவையை பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸில் இருந்து தொடங்கினார்.மதபோதனைகளால் நன்கு அறியப்பட்டவர் அங்கிருந்து பாளையங்கோட்டையிலுள்ள சாரா டக்கர் கல்வி நிறுவனத்தில் பணியாற்ற பணிக்கப்பட்டார். அங்கு பணியாற்றியபடியே சமூக சேவையும் செய்து வந்தார்.

ஒருநாள் பத்து வயதுள்ள காது கேளாத பெண் குழந்தை ஒன்று இவரிடம் மருத்துவத்திற்காக வந்தது. அந்தக் குழந்தைக்கு படிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார். தினமும் இந்தக் குழந்தைக்கு வகுப்பு எடுக்க, அவளைப் போல குறைபாடுள்ள நான்கு பெண் குழந்தைகள் வந்து சேர்ந்தனர். தொடர்ந்து, காது கேளாத குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவதையே ஒரு சேவையாக ஆரம்பித்தார்.

பிறகு, சாரா டக்கர் வளாகத்திலேயே இவர்களுக்கு  படிப்புடன், தொழில்கல்வியும் போதித்தார் ஃப்ளாரன்ஸ். அதாவது, டெய்லரிங், அலங்கார வேலைப்பாடுகள் செய்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல்… இப்படியான பணிகளைக் கற்றுக் கொடுத்தார்.இதன்மூலம், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் இந்த மாற்றுத்   திறனாளி  குழந்தைகளிடம் நம்பிக்கை பிறக்கும் என நினைத்தார். அவர் நினைத்தது போலவே நடந்தது. இந்தக் குழந்தைகள் தங்கள் திறமையை நன்கு வளர்த்துக் கொண்டனர்.

இதுவே 1895ம் வருடம் காது கேளாதோருக்கான பள்ளியாக மாறியது. அடுத்த ஐந்து வருடங்களில் ஐந்து குழந்தைகள் என்பது இருபது ஆக உயர்ந்தது.
வெவ்வேறு அனாதைப் பள்ளிகளிலிருந்த காது கேளாத குழந்தைகள், இந்தக் குறைபாட்டின் காரணமாக ெபற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் எனப் பலரும் இந்தப் பள்ளியில் இணைந்து படிக்கலாயினர்.

1897ம் வருடம் பாளை சென்ட்ரல் ஜெயில் எதிரே டாக்டர் தனகோடிராஜு என்பவருக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை நான்காயிரத்து 500 ரூபாய் கொடுத்து வாங்கினார் ஃப்ளாரன்ஸ். இங்கிலாந்திலிருந்து வந்த நன்ெகாடை மூலம் இந்நிலம் வாங்கப்பட்டது.சாரா டக்கர் வளாகத்திலிருந்து இந்தப் புதிய இடத்திற்குப் பள்ளி இடமாற்றமானது. அதுவே, இன்று பாளையங்கோட்டையில் ஃப்ளாரன்ஸ் ஸ்வேன்சன் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில், பம்பாய் மற்றும் கல்கத்தாவிற்குப் பிறகு பாளையங்கோட்டையில்தான் மூன்றாவதாகக் காது கேளாதோர் பள்ளி அமைந்தது.

இதனால், அன்று தென்மாநிலங்களிலிருந்து இப்படியான குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்ந்தனர். மெட்ராஸில் இருந்தும் படித்தனர்.  மெட்ராஸிலிருந்து வந்து படிக்க தூரம் அதிகம் என்பதால் ஃப்ளாரன்ஸ் இங்கேயே ஒரு காது கேளாதோர் பள்ளி அமைக்கத் தீர்மானித்தார். இப்படியாகவே, 1912ம் வருடம் மெட்ராஸில் காது கேளாதோர் பள்ளி உருவானது.

அன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் முஸ்லிம் மற்றும் இந்து மக்கள், தங்கள் உறவுமுறைக்குள் திருமணம் செய்ததால் கேட்டல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம் பிறந்தன. இதனாேலயே, ஃப்ளாரன்ஸ் மயிலாப்பூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து இந்தப் பள்ளியை அமைத்தார்.

ஏழு குழந்தைகளுடன் உறைவிடப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. மேற்சொன்ன அந்தப் பாழடைந்த கட்டடமே அன்று பள்ளியாகவும், விடுதியாகவும் இருந்தது.

இங்கும் ஆரம்பத்தில் டெய்லரிங், கூடை பின்னல் வேலைப் பாடுகள் போன்றவற்றைக் கற்றுத் தரும் தொழில்கல்வி நிறுவனமாகவே துவக்கினார். பிறகு, ஆண்களுக்கான லேத், டிரில்லிங்கும் ஆரம்பிக்கப்பட்டது.குழந்தைகள் அதிகமாகச் ேசர, கல்வியும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார் ஃப்ளாரன்ஸ். அதனால், 1926ம் வருடம் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஆங்கில வழிப் பள்ளியைத் தொடங்கினார்.

‘‘முதல்ல ஆங்கில வழியிலதான் கற்றுக் கொடுத்திருக்காங்க. அப்ப, இங்கு படித்த நிறைய பேர் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கானு பல வெளிநாடுகளுக்கும் வேலைக்குப் போயிருக்காங்க...’’ என அடுத்தடுத்து நடந்த விஷயங்களைச் சுவாரஸ்மாகப் பகிர்ந்தார் இப்போதைய பள்ளி தலைமையாசிரியரான ேஜம்ஸ் ஆல்பர்ட்.‘‘இந்த கட்டடம் இருநூறு வருட பாரம்பரியம் கொண்டதுனு சொல்றாங்க.

பிரிட்டிஷ் கால கட்டடத்தைத்தான் அன்னைக்கு ஃப்ளாரன்ஸ் அம்மையார் வாங்கியிருக்கார். அப்ப, மெட்ராஸ் மாகாண கவர்னராக இருந்த லார்டு பென்ட்லாண்ட்டின் மனைவி இங்கு வந்த புகைப்படம் இருக்கு. அவருடன் ஃப்ளாரன்ஸ் ஸ்வேன்சனும் இருக்கார். அநேகமாக இந்தப் புகைப்படம் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டிருக்கலாம். ஏன்னா, ஃப்ளாரன்ஸ் 1919ல் இந்தியாவிலிருந்து கிளம்பிவிட்டார்.

தாய்மொழிப் படிப்பும் அவசியமானதால் 1947ம் வருஷம் தமிழ் வழிக் கல்வியும் தொடங்கப்பட்டது. பின்னர், இரண்டுவழிக்கல்வியிலும் பாடங்கள் போதிக்கப்பட்டன. எல்லாமே சைகை மொழியில் கற்றுத் தரப்பட்டன. இங்கே லேத், ஃபிட்டர் படிப்பு முடித்தவர்களுக்கு அசோக் லேலண்டில் வேலை கிடைச்சது.  

நிறைய மாணவர்களுக்குக் காது கேட்காததாலே வாய் பேச முடியறதில்லை. அதனால, இவங்களைப் பேச வைக்கலாம்னு லிப் ரீடிங் முறையில் சொல்லித் தரப்பட்டது. பின்னர், மாணவர்கள் அதிகரிக்க 1962ம் வருஷம் இப்போதிருக்கும் வகுப்பறைகள் திறக்கப்பட்டன. அப்ப மெட்ராஸ் கவர்னராக  இருந்த பிஷ்ணுராம் மேதி உள்ளிட்ட பலரும் வகுப்பறைகள் கட்ட நன்கொடைகள் கொடுத்தாங்க. 1971ம் வருஷம் மாணவர் விடுதியும், 1975ம் வருஷம் மாணவிகள் விடுதியும் கட்டப்பட்டன.

இங்கே ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் இருந்தது. சைகை மொழி நிறைய பேருக்குத் தெரியாது. அதனால், இந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர சைகை மொழிக்கான ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனா, 1980ம் வருஷம் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனம் லிட்டில் ஃப்ளவர் பள்ளிக்கு மாறிடுச்சு.இதுக்கிடையில, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வந்ததால் இங்கிருந்த தொழில்கல்விக்கான பயிற்சிக்கூடம் சாந்தோம் அருகே மாறிச்சு. அதுவரை சாந்தோம் அருகேயிருந்த மாணவர் விடுதி இங்கிருந்து செயல்படத் தொடங்கிச்சு.  

இங்கே மாணவர்கள் தங்கியிருந்து படிப்பாங்க. பயிற்சிக்கு சாந்தோம் போயிட்டு வருவாங்க. பிறகு, தொழில் பயிற்சிக்கூடமும் நிறுத்தப்பட்டு, கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டது. இதனால, இங்கிருந்து வெளியேறும் குழந்தைகள் எந்த கைத்தொழிலும் படிக்காததால் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க...’’ என வருத்தம் தெரிவித்தவர், மீண்டும் தொழில்கல்வி ஆரம்பிக்கப்பட்டதை உற்சாகமாகப் பகிர்ந்தார்.

‘‘பொதுவா, இந்தக் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையால் எந்தஒரு விஷயத்துக்கு–்ம் ஆவேசமாகிடுவாங்க. யாரோடும் ஒட்டாமல் தனிச்சு இருப்பாங்க. சில குழந்தைகள் சமூக விரோதச் செயல்கள்ல கூட ஈடுபடுவாங்க. வாழ்க்கை மேல நம்பிக்கையில்லாம அப்படி யாரும் போயிடக்கூடாதுனுதான் தொழில்கல்வியே கற்றுத் தந்தோம்.

அது நின்றதுக்குப் பிறகு ரொம்ப சிரமம் ஏற்பட்டுச்சு. அதனால, கடந்த 2015ம் வருஷத்துல இருந்து மீண்டும் தொழில்கல்வியைத் தொடங்கியிருக்கோம். இதுக்குக் காரணம், மயிலாப்பூர் துணை கமிஷனரா இருந்த பாலகிருஷ்ணன் சார்தான்.

ஏன்னா, போலீஸிலிருந்து இங்கே திருடிட்டான் சார்… அங்கே பிடிச்சோம் சார்னு நிறைய கேஸ்கள் வந்துச்சு. அவங்ககிட்ட பேச முடியாம போலீஸ் எங்கள அணுகுவாங்க.

‘சாப்பாட்டுக் கஷ்டத்தாலதான் சார் இப்படி திருட ஆரம்பிக்கிறாங்க’னு அவர்கிட்ட சொன்னேன். ‘மறுபடியும், தொழில்கல்வி ெகாடுங்களேன்’னுஅவர் உத்வேகம் அளிச்சார். உடனே, மெட்ராஸ் டையோசீஸன் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபனும் பயிற்சிக்கு ஒப்புதல் தந்தார். தச்சு வேலை, தையல், பேக்கரி, அழகுக்கலை, மாடித்தோட்டம்னு பயிற்சிகளை ஆரம்பிச்சோம். இதுல பேக்கரிக்கு மட்டும் ஒருவருட கோர்ஸ். மற்றதெல்லாம் ஆறுமாசம், மூணு மாசம்தான்.

அப்புறம், கடைகள்ல கம்ப்யூட்டர் பில்லிங் போட ஆட்கள் தேவைங்கிறது தெரிஞ்சு அதற்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த மூணு வருஷத்துல 220 பேருக்கு வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கோம்!

பள்ளி தவிர்த்து, வெளியிலிருந்த வந்த சில மாற்றுத்திறனாளிகளும் ‘எங்களுக்கும் கற்றுக் கொடுங்க’னு கேட்டாங்க. இப்படியாக அறுபது பேர் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வர்றாங்க. சிலர் இங்கே தங்கியும் பயிற்சி எடுக்குறாங்க. அவங்களுக்கும் உணவுல இருந்து தங்கிப் படிக்கிறது வரை எல்லாமே இலவசமாக செய்றோம். இதுக்காக ஏழு ஆசிரியர்கள் இருக்காங்க. இவங்க, அந்தந்த ஏரியாக்களுக்கே போய் மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, அவங்களுக்கு இங்கே பயிற்சியளித்து, வேலைவாய்ப்பு  நிறுவனங்களுடன் பேசுறது வரை எல்லாப் பணிகளையும் செய்வாங்க. ஹெல்ப் டிரஸ்ட்னு ஒரு அமைப்புடன் இணைஞ்சு இதை நாங்க மேற்கொண்டு வர்றோம்.

இது அரசு உதவி பெறும் பள்ளி. சிஎஸ்ஐயின் கீழ் நிர்வாகம் நடத்தப்பட்டு வருது. மொத்தம் 200 குழந்தைகள் படிக்கிறாங்க. தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தானு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குழந்தைகள் படிக்கிறாங்க. இவங்களுக்காக 37 ஆசிரியர்கள் பணியாற்றி வர்றாங்க. இங்க படிப்பை முடிக்கிற குழந்தைகளை மேல்படிப்புக்காக எம்ஜிஆர் ஜானகி அம்மாள், சத்யபாமா உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு அனுப்புறோம்.

இப்படி ஒருசில கல்லூரிகள் மட்டும்தான் இந்தக் குழந்தைகளுக்கான கற்றல்முறையை வைச்சிருக்காங்க. அதனால், அங்கே சேர்த்துவிடுறோம். அரசு வேலைக்குப் போகவும் இந்தக் குழந்தைகளுக்கு வாய்ப்பு இருக்கு. எம்எல்ஏ நடராஜ் சார் குரூப் 1 தேர்வுக்குப் பயிற்சி அளிக்கிறார். இங்கிருந்து நிறைய குழந்தைகள் படிக்கிறாங்க.

விரைவில் NFDC யுடன் இணைஞ்சு போட்டோகிராபி, எடிட்டிங் கோர்ஸும் நடத்தப் போறோம். தவிர, சோலார், அயனிங் உள்ளிட்ட பயிற்சிகளும் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்!’’ உற்சாகத்துடன் சொல்கிறார் ஜேம்ஸ் ஆல்பர்ட்!                  

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா