COFFEE TABLE



ஸ்பீக்கர் போர்டு இல்லாத போன்!

வால்யூம் பட்டன், ஸ்பீக்கர் போர்டு இல்லாத ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ‘விவோ’ நிறுவனம். பயனாளிகள் போனின் திரையிலேயே வால்யூம் உட்பட அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடலின் பெயர் ‘விவோ அபெக்ஸ்’. 5ஜி நெட்வொர்க், 128 ஜிபி ஸ்டோரேஜுடன் மினுமினுக்கும் இந்த போனின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

பிகினி அழகி!

தென் பசிபிக் தீவுகளுக்கு ரிலாக்ஸ் ட்ரிப் அடித்திருக்கும் இலி, அங்கே செம கூல் காஸ்ட்யூம்களில் க்ளிக்கியதை இன்ஸ்டாவில் தட்டி வருகிறார்.
லட்சக்கணக்கில் லைக்குகள் குவிவது ஒரு பக்கமிருந்தாலும், யாருடன் சென்றிருக்கிறீர்கள்..? பழைய உடற்கட்டைக் கொண்டு வந்துவிட்டீர்கள்... கீப் இட் அப்... போன்ற கமெண்ட்களும் பரபரக்கின்றன.

ஸ்பைடர்மேன் ஊழியர்!

பிரேசிலில் உள்ள ஒரு வங்கி. பரபரப்பான காலை வேளை. நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டிருக்க, ஸ்பைடர்மேன் உடையணிந்த ஒருவர் உள்ளே நுழைந்தார்.வங்கி ஊழியர்கள் உட்பட அனைவரின் கவனமும் அவர் மீது திரும்ப, அவரும் வங்கி ஊழியர்தான் என்று தெரிய வந்தது!

நேராக ஸ்பைடர்மேனின் உடையிலேயே தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து வாடிக்கையாளர்களை கவனிக்கத் தொடங்கினார்.எல்லோருக்கும் ஆச்சர்யம். அந்த ஊழியரின் கடைசி வேலை நாள் அது. அடுத்த நாளில் இருந்து அவர் வேறு ஒரு நிறுவனத்துக்குச் செல்கிறார். தனது கடைசி நாளை சக ஊழியர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்றுதான் ஸ்பைடர்மேன் வேடத்தில் வந்தாராம்!

இனி வங்கி ஊழியர்கள் மட்டுமல்ல; வேறு யாருமே அவரை மறக்கமுடியாது. ஆம்; வாடிக்கையாளர் ஒருவர் அவரை வீடியோவாக்கி இணையத்தில் பதிவேற்றிவிட்டார். கூகுளில் போய் ஸ்பைடர்மேன் என்று தட்டினால் அந்த ஊழியரின் வீடியோவும் வரிசையில் நிற்கிறது!

ஊழலில்லாத தேசங்கள்!

‘ஊழலில்லாத 180 நாடுகளின் பட்டியலில் 3 புள்ளிகள் அதிகமாகப் பெற்று 78வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா!சீனா 87வது இடத்திலும், பாகிஸ்தான் 117வது இடத்திலும் உள்ளன...’ என்கிறது சமீபத்திய ஆய்வு.‘ஊழலற்ற நாடுகள் வரிசையில் முதல் பத்து இடத்துக்குள் அமெரிக்கா வரவில்லை.

இது உலகளவில் பல தாக்கங்களை உண்டாக்கும்...’ என எச்சரிக்கும் அந்த ஆய்வு, ‘இந்தியாவைப் பொறுத்தளவில் ஊழலை ஒழிப்பதற்காக போட்ட திட்டங்களான லோக்பால், கருப்புப்பண ஒழிப்பு, நாணய மதிப்பு இழப்பு போன்றவை பெரிய அளவுக்கு வேலை செய்யவில்லை...’ என சுட்டிக் காட்டுகிறது.

ஆன்மிக பால்!

இமயமலைக்குச் சென்றுவிட்டு திரும்பியதும் அமலாபாலிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். ‘‘யெஸ்... ஃப்ரெண்ட்ஸ் சொல்லித்தான் இமயமலைக்குப் போனேன். எந்த அடையாளமும் இல்லாம நான் நானாக இருந்த நேரங்கள் அது...’’ சிலிர்க்கிறார் பால்.

இப்போது திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாரைத் தரிசித்து வந்திருக்கிறார். ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என பூரிப்பவர் அந்த ஆன்மிக தருணங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட்டுள்ளார். அப்புறமென்ன, ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்துவிட்டன!

குங்குமம் டீம்