இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல... இந்திய சினிமாவுக்கே புதுசு!



‘டுலெட்’ செழியன்

சந்தோஷமாக இருக்கிறார் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் செழியன். இதற்கு முன்னர் இதுமாதிரி நடந்திருக்கவில்லை. இந்திய வரலாற்றிலேயே 100க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்ற திரைப்படமாகவும், 30க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற திரைப்படமாகவும் இமாலய சாதனை புரிந்த ஒரே திரைப்படம் ‘டுலெட்’தான். படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்த வேளையில் செழியனிடம் நடந்தது உரையாடல்.
‘டுலெட்’ எப்படி வந்திருக்கிறது?

மனசுக்கு நெருங்கிய விதத்தில் அமைந்திருக்கிறது. படம் எடுக்கலாம் என முடிவானபோது எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்று மட்டும்தான் நினைத்தேன். ‘ஒரு கதைக்கான சூழலை உருவாக்குங்கள். அதில் உங்கள் கதாபாத்திரங்களை உலவவிடுங்கள். பிறகு அவர்களே என்ன செய்கிறார்களோ அதைப் பார்த்து எழுதுங்கள்’ என்று நாவல் எழுதுவது குறித்து ஒரு மேற்கோள் இருக்கிறது. சினிமாவுக்கும் அதுதான்.

நாமாக எதையும் திணிக்காமல் இயல்பாக அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தால் போதும் என்று நினைத்தேன். அதையே செய்தும் இருக்கிறேன். படத்திற்கான சிரமங்கள், யத்தனிப்புகள்.. முடிவாக படம் உருவானது எப்படி?

2007ல் திடீரென சென்னையின் முகம் மாறுகிறது. ஐடி துறையின் வளர்ச்சியால் ரியல் எஸ்டேட் துறையும் பெருமளவு வளர்ச்சியடைகிறது. வீடு காலி செய்யவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு சென்னையின் தெருக்களில் அலையும்போது இதையே படமாக எடுத்தால் என்ன என்பதுதான் முதல் விதை.

பிறகு அதை ஒரு கதையாக எழுதி வைத்து விட்டேன். எந்தக் காலத்திலும் நல்ல சினிமாவுக்கு ஒரு தயாரிப்பாளரைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம். எனக்கும் அந்தச் சிரமம் இருந்தது. இந்தக் கதையில் கொஞ்சம் சமரசம் செய்திருந்தால் பெரிய நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்திருப்பார்கள்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. நினைத்ததை நினைத்த மாதிரியே எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். காலம் கடந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் என் மனைவி பிரேமா ‘நாமே எடுத்தால் என்ன’ என்று கேட்டதும் ஒரு வெளிச்சம் வந்தது.‘தாராளமாக எடுக்கலாம் சார்’ என்று தயாரிப்பு மேலாளர் சுப்பு உடன் வந்தார். ‘பாத்துக்கலாம்...’ என்று சுதீர் செந்தில் இணைந்தார். எடிட்டர் கர்பிரசாத்திடம் கதை சொன்னேன், ‘பண்ணலாம்’ என்றார். உடன் இருந்த நண்பர்களை இணைத்துக்கொண்டு களம் இறங்கிவிட்டோம்.

படத்தை முடித்துக்கொண்டு வர ஒவ்வொரு நிலையிலும் போராட்டம் இருந்தது. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் எழுதியதை சமரசம் இல்லாமல் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஒரு நல்ல கவிதை ஒரு கவிஞனைத்தேடி தன்னைத் தானே எழுதிக் கொள்கிறது என்று சொல்வார்கள். தமிழ் வணிகச்சூழலில் ஒரு படம் எடுப்பதில் இருக்கும் சிரமங்கள் உங்களுக்குத் தெரியும். எடுத்தாலும் அதை ரிலீஸ் செய்வது அதைவிடவும் சிரமம்.

இத்தனைக்கும் இடையில் ஒரு படம் எடுக்கப்பட்டு இத்தனை விருதுகள் பெற்று தியேட்டருக்கும் வருகிறது என்றால் ‘டுலெட்’டை நான் எடுத்ததாக நினைக்கவில்லை. அது என்னைத் தேர்ந்தெடுத்து தன்னைத்தானே எடுத்துக்கொண்டது என்றுதான் நினைக்கிறேன்.

வெளிநாடுகளில் இவ்வளவு தூரம் பாராட்டு பெற்றிருக்கிறது. அதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்?
படம் எடுத்து முடித்ததும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தோம். அதுதான் நாங்கள் செய்த முயற்சி. விதைகளை விதைத்துவிட்டு காத்திருக்கிற விவசாயியின் மனநிலைதான்.

கொல்கத்தா திரைப்பட விழாவில் பெற்ற ‘இந்தியாவிலேயே சிறந்த படம்’ என்ற விருதுதான் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது. எந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல், விருது கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பதை யோசிக்காமல் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தோம்.
வெளிநாடுகளுக்கு இதன் நிமித்தம் சென்றபோது கிடைத்த அனுபவங்கள், எண்ணங்கள் என்ன?

கடந்த 15 வருடங்களாக உலகத் திரைப்பட விழாக்களையும், அதில் திரையிடப்படுகிற படங்களையும் கவனிப்பதோடு, என்ன மாதிரியான படங்கள் உலகம் முழுக்க எடுக்கப்படுகின்றன... ஒவ்வொரு வருடமும்  கதை சொல்லும் முறையும், திரைப்பட மொழியும் எப்படி மாறுகிறது என்பதையும் கவனித்து வந்திருக்கிறேன்.

இந்தப் பயிற்சி ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்பது நெடுநாள் கனவு. அந்தக் கனவின் தீவிரம் காரணமாக இருக்கலாம். சரியான பாதையில் செல்லும்போது மைல் கற்களில் செல்ல வேண்டிய தூரத்தின் அளவு எண்களில் இருப்பதைப் போலத்தான் விருதுகளின் எண்ணிக்கையையும் பார்க்கிறேன்.

இன்னும் போக வேண்டிய தூரம் தொலைவில் இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மொழி தெரியாத உலகப்படங்களின் மத்தியில் ‘டுலெட்’ இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அங்கு வருபவர்களுக்கு, ‘ஓர் இந்திய இயக்குநர்’ என்றுதான் என்னை அறிமுகம் செய்து வைப்பார்கள்.

‘டுலெட்’ என்கிற ஒரு படம் உலகில் பல்வேறு ஆளுமைகளைச் சந்திக்கவும், பல்வேறு நாடுகளுக்கு என்னைப் பயணிக்கவும் வைத்துவிட்டது. அங்கு என்னைப் பாராட்டுகிறவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை, ‘இது நேர்மையான சினிமா’ என்பதுதான். நேர்மையாக ஒரு வேலையைச் செய்தால் உலகம் கொண்டாடும் என்பதுதான் இதன் பொருள். பொதுவாக இந்திய சினிமாக்கள் என்றால் இந்தி சினிமாதான் என வெளிநாடுகளில் கருது
கிறார்கள். இது மாறவேண்டும் என்றால் தமிழில் நிறைய படைப்பாளிகள் வரவேண்டும்.    

சர்வதேச அளவில் இப்படி ஒரு விஷயம் செய்ய முடியும் என்பதைத் தெரிந்த இயக்குநர்கள், திரைப்பட நண்பர்களிடம் கடந்த பத்து வருடங்களாகச் சொல்லி வந்திருக்கிறேன். எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால், இதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. நாம் எடுக்கும்போது இப்படி ஒரு சினிமாவை எடுப்போம் என நினைப்பேன். அதையும் நம் மக்கள் செய்து காட்டினால்தான் நம்புவார்கள்.

இப்போது நம்புவார்கள் என நினைக்கிறேன். நம்மிடம் திறமை இருக்கிறது. நம்பிக்கையும் தைரியமும் மட்டும் குறைவாக இருக்கிறது. ‘டுலெட்’ பெற்ற சர்வதேச கவனம் தமிழ்ச் சினிமாவில் பெரிய நம்பிக்கையைப் பெறும். இது அடுத்தடுத்த வருடங்களில் சர்வதேச அரங்கில் பிரதிபலிக்கும்.அடுத்த முயற்சி..?

வணிக சினிமா, ஆர்ட் சினிமா என நான் பார்க்கவில்லை. நல்ல சினிமா, கெட்ட சினிமா என ரெண்டுதான் இருப்பதாக நம்புகிறேன். திரைக்கதை தயாராக இருக்கிறது. மூன்று நாடுகளை தயாரிப்பில் இணைத்து ஒரு படம் எடுப்பதற்கான முயற்சி நடக்கிறது. நல்ல சினிமாக்களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்