ஜாதி ஸ்டேட்டஸ் லொட்டு லொடுக்குனு எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற!



நடிகர் டேனியலின் லவ் ஸ்டோரி

அட்டகாசமாக சிரிக்கிறார்கள் நடிகர் டேனியல் ஆனி போப்பும் அவரது காதல் மனைவி டேனிஷாவும்.  ‘‘ஆக்சுவலி எங்களை சேர்த்து வைச்சது யார் தெரியுமா..? மனசுல என்னவெல்லாம் தோணுது..? ஃப்ரெண்ட்ஸ்? இல்ல. பழக்கம்? நோ. அப்புறம்? மார்க் ஸூக்கர்பெர்க் அண்ணன்தான்! ஆமா பாஸ்! ஃபேஸ்புக்தான் எங்க காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம்!’’ டேனிஷாவை இறுக்கமாக அணைத்தபடியே கண்சிமிட்டுகிறார் டேனியல்.

சரி... யார் முதலில் காதலைச் சொன்னது என்றால்... சட்டென்று கையை உயர்த்தி ‘எஸ் சார்’ என்கிறார் டேனியல்!

‘‘சந்தேகமே வேண்டாம். நானேதான்! ஃபேஸ்புக்குல ஒரு பெண் நட்பானா உடனே ‘ஹாய்’னு இன்பாக்ஸ்ல மெசேஜ் அனுப்பி கடலை போட தயாரா இருக்கறது பசங்கதானே! இதுக்கெல்லாம் வெட்கமே படமாட்டோம்! மானம் மரியாதையைப் பார்த்தா கடலையை வறுக்க முடியுமா?!
தவிர நம்ம குடும்பத்துலயும் ரொம்ப நாளா வெறும் டிகாக்ஷன்தான் இருக்கு! கசப்பாவே குடிச்சுட்டு இருக்க போரடிச்சுது. கொஞ்சம் பால் கலந்து குடிச்சா என்னனு யோசிச்சேன்!

உண்மையை சொல்லணும்னா பெரும்பாலான பசங்க மாதிரி எனக்கும் காதல்ல நம்பிக்கை எல்லாம் இல்ல..! ஆ... அடிக்காத டேனிஷா. இப்ப அப்படியில்ல! முன்னாடி அப்படி இருந்தேன்னு சொல்ல வர்றேன்! அப்பா... என்னா அடி!என்ன சொல்லிட்டு இருந்தேன்..? யெஸ். கடலை. முதல்ல சாட்ல ‘ஹாய்’ சொன்னேன். பதிலுக்கு இவங்களும் ‘ஹாய்’ சொன்னதும் மனசெல்லாம் பட்டர்ஃப்ளைஸ் பறந்தது. மெல்ல பேச ஆரம்பிச்சோம். அப்புறம் அதிகமா சாட் பண்ணத் தொடங்கினோம்.

‘டங்’குனு மனசுல காதல் மணி ஒலிச்சதும் பட்டுனு ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன்! உடனே டக்குனு அண்டா நிறைய இந்தம்மா அல்வாவை கிண்டி கொடுத்துட்டாங்க!’’ என்ற டேனியல் சட்டென்று டேனிஷாவின் கன்னத்தைக் கிள்ளினார்.

‘‘பின்ன என்ன பாஸ்... பொதுவா பசங்க லவ் யூ சொன்னா பொண்ணுங்க என்ன பண்ணணும்? ‘உங்களை என் ஃபிரண்டாதான் பார்த்தேன், எனக்கு லவ்லாம் இல்லை’ன்னு சொல்லணும். அதிகபட்சம், ‘எங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்க... என் பேக்ரவுண்டுக்கு நீ செட் ஆக மாட்டே’ன்னு பயம் காட்டலாம்.

இதுதானே உலக நியதி! ஆனா, டேனிஷா வீசினாங்க பாருங்க ஒரு குண்டு...’’ வாய்கொள்ளாத சிரிப்புடன் சொன்ன டேனியல் சில விநாடிகள் ‘பாஸ்’ கொடுத்துவிட்டு அதே குண்டை நம் மீது வீசினார்!‘‘‘கல்யாணம் பண்ற ஐடியா இருந்தா சொல்லு. லவ் பண்ணலாம்.

இல்லைனா பை பை சொல்லிக்கலாம்’னு அசால்ட்டா சொல்லிட்டாங்க! எனக்கு செம ஷாக். காதலே நமக்கெல்லாம் பெரிய விஷயம். இதுல கல்யாணமானு யோசிச்சேன். அப்புறம் நமக்கும் வாழ்க்கைக் கதவு ஓபன் ஆக ஆரம்பிச்சிடுச்சுனு சந்தோஷமாகி கமிட் ஆனேன்.

அந்த லவ்... இந்த லவ் எல்லாம் இல்ல! அஞ்சு வருஷ லவ்! அப்படிக் காதலிச்சோம்! இப்ப வரை காதலிச்சுட்டும் இருக்கோம்! டேனிஷாவுக்கு டிரெடிஷனல் பரிசுனா ரொம்பப் பிடிக்கும். அதை மனசுல வெச்சு பார்த்துப் பார்த்து ஒரு குங்குமச் சிமிழை வாங்கிக் கொடுத்தேன். முதல்ல ‘இது என்ன’னு கேட்டாங்க.

‘கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்கல்லாம் குங்குமம் வைப்பாங்க. அதான் இது’னு சொன்னேன். ‘ஹை...’னு துள்ளிக் குதிச்சாங்க. இவங்க அப்பா வாங்கிக் கொடுத்த முத்து மாலை ஒண்ணு அறுந்திடுச்சு. ரொம்ப நாள் அதை சும்மாவே வைச்சிருந்தாங்க. அதை அவங்களுக்கே தெரியாம எடுத்து ரெடி பண்ணி பிறந்தநாள் பரிசா கொடுத்தேன்!

டேனிஷா எனக்குக் கொடுத்த பரிசுக்கு கணக்கே இல்ல. அடி உதைகளை சொல்லலை பாஸ்... அதை எல்லாம் கணக்கே வைச்சுக்க முடியாது! மத்தபடி ஏராளமான கிஃப்ட் கொடுத்திருக்காங்க. அதுல மறக்க முடியாதது எங்கப்பா போட்டோவை ஃப்ரேம் பண்ணிக் கொடுத்தது! இவங்க முழுக்க முழுக்க அமெரிக்கால வாழ்ந்த பொண்ணு. படிப்புக்காகவும் சேனல்ல இன்டர்ன் பண்ணவும்தான் சென்னை வந்திருந்தாங்க. அதனால நம்ம இந்திய முறைகள் எல்லாமே அவங்களுக்கு புதுசு.

எங்க வீட்ல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. அவங்க வீட்ல இன்னமும் பிரச்னை போயிட்டுதான் இருக்கு! எப்படியாவது அதை சரி செய்யணும்!ராணி மாதிரி வாழ்ந்த பொண்ணு என்னையும் என் காதலையும் நம்பி வந்திருக்காங்க. அவங்க அப்பா அளவுக்கு இல்லைனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஒரு நல்ல வீடு, வசதினு செஞ்சு கொடுக்கணும்...’’ எமோஷனலான டேனியலை உங்களுக்குள் சண்டையே வராதா என்று கேட்டு திசை திருப்பினோம்.

‘‘சரியா போச்சு. உலகத்துல யாராலயும் எங்க அளவுக்கு சண்டை போட முடியாது. அப்படி அடிச்சுப்போம்! உதாரணத்துக்கு ‘வீட்டை இப்ப யார் சுத்தம் செய்யறது?’னு கேள்வி வந்த அடுத்த செகண்ட், ரணகளமாகும்!டேனிஷாவுக்கு சமைக்கத் தெரியாது. என் சமையல்தான். நான் சமைக்கிற பிரான் பிரியாணிக்கு டேனிஷா அடிமை! எவ்வளவு சண்டை போட்டாலும் அதை மறந்து சிரிச்சுடுவோம்!

இந்த பிரேக்கப் அது இதுனு மத்தவங்க சொல்லும்போது ‘பாவிகளா’னு தூக்கி வாரிப்போடும். இன்னைக்கு வெறுமனே ஏதோ ஒரு தேவைக்கான ரிலேஷன்ஷிப்பாதான் காதைலயே பார்க்கறாங்க. காதல்,  மனசு சார்ந்த விஷயம். இதுல தெளிவா இருந்துட்டா போதும். ‘ரைட்... ரைட்’னு கைகோர்த்துகிட்டு போயிகிட்டே இருக்கலாம்!’’ என டேனியல் சொல்லி முடித்ததும் அவர் கன்னத்தில் முத்தமிட்டார் டேனிஷா!       
                  
ஷாலினி நியூட்டன்