பகவான்-16



லட்சுமி வந்தாச்சு!

மாயோகலட்சுமியின் பெயரை குறிப்பிடாமல் ஓஷோவின் வரலாற்றை யாருமே எழுதிவிட முடியாது.1933ல் செல்வச் செழிப்பான ஜெயின் குடும்பத்தில் மும்பையில் பிறந்தவர் லட்சுமி. குடும்பத்தில் அனைவருக்குமே அரசியல் ஈடுபாடு உண்டு. காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்தார்கள். குஜராத்தில் இருக்கும் இவர்களது பூர்வீக வீட்டுக்கு காந்தி போன்ற பெரும் தலைவர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள்.

60களின் தொடக்கத்தில் ஏதோ ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோதுதான் யதேச்சையாக ஓஷோவின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் லட்சுமி.அந்தக் கூட்டத்தில் ஓஷோ, “நான் ஏன் பிறந்தேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நான் யார் என்பதும் உங்களுக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பற்றி எனக்குத் தெரியும்!” என்றார்.அந்த வார்த்தைகள் லட்சுமியை தூங்கவிடாமல் செய்தன. ஓஷோவுக்கு அவர் யாரென்று தெரிந்திருக்கிறது.ஆனால் - நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லையே என்று யோசித்தார்.

ஓஷோ மாதிரி ஒருவரால்தான் அவரவர் பிறப்பின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியுமென்று உணர்ந்தார்.ஓஷோவைப் பற்றி தன் குடும்பத்தாரிடமும் சொன்னார்.லட்சுமியின் குடும்பம் ஒருமுறை ஓஷோவைச் சந்தித்தது. மும்பைக்கு வரும்போதெல்லாம் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

தன் மீது அன்பு கொண்ட குடும்பம் என்பதால், மும்பையில் இருக்கும் போதெல்லாம் நேரம் ஒதுக்கி லட்சுமியின் வீட்டுக்குச் செல்வார் ஓஷோ.எனவே, ஓஷோவை மிக நெருக்கத்தில் சந்தித்து பேசிப்பழகி, அவருடைய சிந்தனைகளை நேரடியாகக் கற்க முடிந்தது லட்சுமியால்.
காந்தியக் குடும்பம் என்பதால் லட்சுமி  எப்போதுமே கதர் உடைதான் அணிந்திருப்பார்.ஓஷோ ஒருமுறை நாசூக்காக சொன்னார்.

“இன்னும் கையால் ராட்டை சுற்றி துணியை கைத்தறியாக உற்பத்தி செய்வது வீண்வேலை. நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. கைராட்டை சுற்றும் நெசவாளர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தால், இந்திய பஞ்சு மில்களில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். எல்லோரும் கைத்தறிதான் அணியவேண்டுமென்றால், நம்முடைய ராட்டை சுற்றும் தொழிலாளர்களால் அந்தத் தேவையை ஈடு செய்ய முடியாது என்பது ஒரு பக்கம். மறுபக்கம் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை போகும்!”

அதுநாள் வரையில் காந்தியின் வாக்கே வேதவாக்காக இருந்தது லட்சுமிக்கு. ஓஷோ இதைச் சொன்னபிறகு, ‘நவீனம் என்பது பாவமில்லை’ என்கிற மனோபாவத்துக்கு வந்தார். ‘முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்பது மாதிரி க்ளிஷேவான கருத்துகள், வாழ்க்கைக்கு உதவாது என்பதைப் புரிந்துகொண்டார்.

பல்கலைக்கழகப் பணியை விட்டபிறகு ஓஷோவுக்கு நாடெங்கும் இருந்து அழைப்புகள் வந்தன. ஓஷோவைப் போன்றே seekerகளாக தேடல்களில் இருந்தவர்கள் பல்லாயிரக் கணக்கானோர் அவரது பேச்சுகளைக் கேட்க விரும்பினார்கள்.ஓஷோவின் கூட்டங்களை முறைப்படுத்துவது, அவரைச் சந்திக்க விரும்புபவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை லட்சுமியாக விரும்பி ஏற்றுக் கொண்டார்.

இந்த காலக்கட்டத்தில் ஓஷோ, ஜபல்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மும்பையிலேயே தங்க ஆரம்பித்தார். வெளிநாட்டினர் இவரை, ‘வாழும் புத்தர்’ என்று அழைத்து, இவரது போதனைகளைக் கேட்க இந்தியாவுக்கு வந்தனர்.அதுநாள் வரை இந்தியில் பேசிக்கொண்டிருந்த ஓஷோ, வெளிநாட்டினருக்காக தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் பேச வேண்டியதாயிற்று.

மேலும் அவரது கருத்துகள் தொகுக்கப்பட்டு இந்தி, ஆங்கிலமொழிகளில் புத்தகங்களாக வெளிவரத் தொடங்கின. ‘சன்யாஸ்’ என்கிற மாதமிருமுறை ஆங்கில இதழும் ஓஷோவின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவே வெளியிடப்பட்டது.ஓஷோவைப் பின்தொடர்பவர்களால், ‘ஜீவன் ஜாக்ருதி கேந்திரா டிரஸ்ட்’ என்கிற அமைப்புநிறுவப்பட்டது. ஓஷோவின் கருத்துகளைக் பரப்புவதற்கான புத்தகங்கள், பத்திரிகை உள்ளிட்ட
செலவுகளை ஈடுகட்ட அந்த டிரஸ்ட்டுக்கு நிதி கோரப்பட்டது. இந்த டிரஸ்ட்டே பின்னாளில் பூனா நகரில் ஆசிரமமாக ஆனது.

தனி மனிதரான ஓஷோ, நிறுவனமாக மாறிய காலக்கட்டம் இதுதான்.இந்த காலக்கட்டத்தில் ஓஷோவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்தான் லட்சுமி.

ஒரு நாள் திடீரென லட்சுமி, காவி உடை அணியத் தொடங்கினார்.“ஏன்?” ஓஷோ கேட்டார்.“ஏனென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை...” என்றார் லட்சுமி.

“உனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிகிறது!” என்று புன்னகைத்தார் ஓஷோ.இது நடந்தது 1970, ஆகஸ்ட் மாதம்.“உனக்கு சன்னியாசத்தில் ஈடுபாடு இருக்கிறது. இன்று முதல் நீ சன்னியாசி!” என்று அவரது தலையில் கையை வைத்துச் சொன்னார்.
“லட்சுமியான நீ இன்று முதல் மா யோக லட்சுமி என்று அழைக்கப்படுவாய்.”

கண்ணை மூடிய லட்சுமிக்கு புருவத்தின் மத்தியில் ஜோதி தெரிந்தது. அதுநாள் வரை அவர் அறிந்திராத ஆனந்தத்தை உணர்ந்தார். கண்களில் நீர் பெருகியது.அப்படியே கைகூப்பி நின்ற நிலையில் ஓஷோவை பார்த்துக்கொண்டே இருந்தார்.“இனி விருப்பப்படுபவர்களுக்கு நாம் சன்னியாசம் வழங்கலாம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் மா யோக லட்சுமி!”மடமடவென்று காரியங்கள் நடந்தன.

அடுத்த மாதமே மணாலியில் பெரிய அளவிலான தியான முகாம் ஒன்று நடந்தது.இந்த முகாமில் ஆறு பேர் சன்னியாசம் வாங்க முன்வந்தார்கள்.
சன்னியாசம் பெற்றவர்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டினார் ஓஷோ.“சன்னியாசம் என்பது துறவறமல்ல...” என்கிற புதிய சித்தாந்தத்தையும் அந்த முகாமில் அறிவித்தார். ‘புதிய சன்னியாசிகள் சர்வதேச இயக்கம்’ என்கிற இயக்கத்தையும் தோற்றுவித்தார்.

மதங்கள் வழிகாட்டும் சன்னியாசம் என்பது, இல்வாழ்க்கையைத் துறந்து முழுக்க இறைவனை மட்டுமே நினைத்து வாழும் வாழ்க்கைமுறை.
ஓஷோவின் புதிய இயக்கம், ‘சன்னியாசம்’ என்கிற வாழ்வியல் முறைக்கே புதிய இலக்கணத்தை வகுத்தது.“இறைவனும், வாழ்க்கையும் ஒன்றே. வாழ்க்கையைத் தொலைத்தவனுக்கு, இறைதரிசனம் கிட்டவே கிட்டாது. எனவே, நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டே இறையருளைப் பெறவேண்டும்.நாம் ஒவ்வொருவருமே புத்தர்தான்.

இந்தப் புதிய சன்னியாச வாழ்க்கையில் எந்த சட்ட திட்டங்களும் எவருக்குமில்லை. அவரவர் விரும்பிய வாழ்க்கையை அவரவர் வாழலாம்.இது புதிய பிறப்பு. பழசை மறந்துவிடுங்கள்.இன்று புதிதாய் பிறந்தவர்களாய் வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்!”

ஓஷோவின் இந்த முழக்கம் அவரது இயக்கத்தில் இணைந்த சன்னியாசிகளை மட்டுமின்றி அனைத்துத் தரப்பையுமே கவரத் தவறவில்லை.அதுநாள் வரையில் குடும்பத்துக்காக தங்களுடைய சன்னியாச ஆசையை தள்ளி வைத்திருந்தவர்களெல்லாம், ஓஷோவின் புதிய சன்னியாசிகள் இயக்கத்தில் இணைய கூட்டம் கூட்டமாக வந்தார்கள். குடும்பத்துக்குள் இருந்துகொண்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே சன்னியாசியாகவும் இருக்க முடியும் என்கிற இந்த வசதி அவர்களைக் கவர்ந்து இழுத்தது.

ஓஷோவின் இயக்கத்தில் தீட்சை பெற்ற சன்னியாசிகளுக்கு புதிய பெயர் சூட்டப்படும்போது ‘சுவாமி’ என்று முடியுமாறு இருக்கும். பெண்களுக்கு பெயரின் தொடக்கத்திலேயே ‘மா’ என்பதைச் சேர்ப்பார்.பெயர் மாற்றம் தவிர்த்து, அவர்களுக்கு 108 மணிகள் கொண்ட ஒரு மாலையை வழங்குவார். அந்த மாலையின் டாலரில் ஓஷோவின் படம் இடம்பெற்றிருக்கும்.இதுதவிர்த்து காவி உடை அவர்களது அடையாளமாக அமைந்தது. சில காலத்தில் காவிக்குப் பதிலாக ஆரஞ்சு நிறத்தில் இந்த சன்னியாசிகள் உடையணிய ஆரம்பித்தனர்.

மற்றபடி சன்னியாசி ஆவதற்கு மதரீதியான சடங்குகளோ, மந்திரங்களோ இந்தப் புதிய சன்னியாசிகள் இயக்கத்தில் இல்லை.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘யார் வேண்டுமானாலும்’ சன்னியாசி ஆகலாம்.மதம், சாதி, ஏழை, பணக்காரன் என்று எவ்வித ஏற்றத்தாழ்வுமே இல்லை.அதுநாள் வரை ஓஷோவை, அவரைப் பின்தொடர்பவர்கள் ஆச்சார்யா (குரு எனப் பொருள்) என்றுதான் அழைத்து வந்தார்கள்.

புதிய சன்னியாசிகள் இயக்கம் அமைந்ததிலிருந்து ‘பகவான்’ (கடவுள் என்று அர்த்தம்) என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.உலகின் வெற்றிகரமான முதல் கார்ப்பரேட் சாமியார் ரெடியாகி விட்டார்.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்