பகவான்



செக்ஸ் குரு! 14

கல்லூரி வேலையை விடுவது அல்லது சமூகப் பிரசாரங்களில் ஈடுபடுவது; இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்கிற நெருக்கடி ரஜனீஷுக்கு உண்டானது. 1966ல் ஒரு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்தவரிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசினார். “இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொடு. காயா? பழமா?” “பழம்தான்!” என்று சொல்லிவிட்டு, அப்போதே ராஜினாமா கடிதத்தை எழுதி நீட்டினார். “நன்கு யோசித்துக் கொள். இந்த ஆசிரியப் பணியில் உலகம் முழுக்க பிரபலமாகும் அளவுக்கு உனக்கு வாய்ப்புகள் இருக்கிறது!”

“முடிவெடுத்து விட்டேன். சில ஆயிரம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட, பல கோடி மக்களுக்கு வாழ்க்கையைப்பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே என்னுடைய வாழ்க்கை!” ரஜனீஷ் ஒரு முடிவு எடுத்தால், அதில் உறுதியாக நிற்பார் என்பது துணைவேந்தருக்கும் தெரியும். “உன்னை நான் புரிந்துகொண்ட அளவுக்கு, இந்த சமூக அமைப்பு புரிந்துகொள்ளுமா என்று தெரியவில்லை. உன்னுடைய நல்ல நோக்கங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்...” என்று கூறி கைகுலுக்கி அனுப்பினார்.

தன்னுடைய கருத்துச் சுதந்திரத்துக்கு இருந்த ஒரே விலங்கும் அறுபட்டதில் ரஜனீஷுக்கு மகிழ்ச்சி. முன்பைக் காட்டிலும் தன்னுடைய சிந்தனைகளை விஸ்தாரமாக மக்கள் மத்தியில் அவரால் பதிவு செய்ய முடிந்தது. இதன் விளைவாகவே அவர் சர்ச்சைகளிலும் சிக்கினார். ‘செக்ஸ் சாமியார்’ என்று முத்திரையும் குத்தப்பட்டார். 1968ஆம் ஆண்டு. மும்பை, பாரதிய வித்யா பவனில் ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகள் பெரும்பாலும் இந்துமத சாமியார்களுக்கு எரிச்சல் ஊட்டியது.

ஆண் - பெண் இருவருக்கும் இடையிலான உடலின்ப பரிமாற்றத்தை புனிதம் என்று அவர் குறிப்பிட்டதை, பிற்போக்கான எண்ணம் கொண்ட மதப்பற்றாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடாது என்று எதிர்ப்பைக் கிளப்பினார்கள். குறிப்பாக - “உடலின்ப செயல்பாடுகளுக்கு இறைத்தன்மை உண்டு!” என்று ரஜனீஷ் - இனி ஓஷோ என்று சொல்வோமே; அவருக்குத் தான் ஞானம் கிடைத்து இருபது ஆண்டுகள் ஆகப் போகிறதே! - சொன்னதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“உடலின்பம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாக ஏற்படக்கூடிய விருப்பம். அதைக் கட்டுப்படுத்துவது என்பது இயற்கைக்கு எதிரானது. அவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிக்கும் போதுதான் தவறான செயல்பாடுகளுக்கு அது வழிவகுக்கும்...” என்பது ஓஷோவின் பாயிண்ட். ஆனால் - புலன்களைக் கட்டுப்படுத்துவதே புனிதம் என்று பிரசாரம் செய்து  கொண்டிருந்த மதப்பற்றாளர்கள், இதுநாள் வரை தாங்கள் மக்கள் மத்தியில், ‘செக்ஸ்’ தொடர்பாக ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் சுக்குநூறாக உடையுமென்று அஞ்சினார்கள்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்களை மிரட்டினார்கள். ஓஷோவின் அந்த தொடர் நிகழ்வு, இந்த சர்ச்சையால் பாதியிலேயே முடிந்தது. மதப்பற்றாளர்கள் திரண்டு வந்து, ஓஷோவை ‘திரும்பப் போ’ என்று கூச்சலிட்டார்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்த ஓஷோ, ஜபல்பூருக்குத் திரும்பினார். “இனி இம்மாதிரி வெளிப்படையாக பேசமாட்டீர்கள்தானே?” என்று ஓஷோவிடம் அவரது நலம் விரும்பிகள் சிலர் கேட்டார்கள். ஓஷோ புன்னகைத்தார். “அதே மும்பையில் பேசுவேன். மக்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள்!” என்றார்.

அடுத்த மாதமே மும்பையில் ஓஷோ பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அரங்கக் கூட்டமாக இல்லாமல் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டு, ஓஷோ பேசுவதை நேரிடையாகக் கேட்கும் வகையில் அக்கூட்டம் நடந்தது. இம்முறை ஐம்பதாயிரம் பேர் கூடி ஓஷோவின், உடலின்பம் குறித்த கருத்துகளைக் கேட்டுத் தெளிவடைந்தார்கள். “உடலின்பம் என்பது இயற்கையான, எளிமையான உணர்வு. ஓர் ஆணும், பெண்ணும் தங்களுக்கு இடையேயான அன்பை இதன் மூலமாக பரிமாறிக் கொள்கிறார்கள். உடலின்பம் ஒவ்வொருவரின் பிறப்புரிமை.

இது மூடுமந்திரமல்ல. உடலின்பத்தில் ஈடுபடும் ஒருவன், தியானத்தின் ஒரு துளியை ருசிக்கிறான். உடலின்பத்தில் ஒருவன் ஈடுபடும்போது காலத்தையும், மனதையும் கடக்கும் ஒரு நீண்ட ஆனந்தத்தை எட்டுகிறான். ஒருவனுடைய அன்றாடக் கவலைகளை குறைக்கும் முக்கியமான செயல்பாடு இது!” என்று முழங்கினார். அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால் -  ஆன்மீகப் பெரியோர்களோ பெரும் பதற்றத்துக்கு உள்ளானார்கள். இதுவரையில் தாங்கள் கட்டி வைத்த கோட்டையை, தங்கள் கண் முன்பாகவே ஓஷோ தகர்த்தெறிவதாகப் புலம்பினார்கள்.

1969ஆம் ஆண்டு பீகார் தலைநகர் பாட்னாவில் இரண்டாம் உலக இந்து சமய மாநாடு நடைபெற்றது. பூரி சங்கராச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசுவதற்காக வேண்டா வெறுப்பாக ஓஷோ அழைக்கப்பட்டிருந்தார். “மதம் என்பது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்ட வேண்டும். ஆசையைத் துறக்கச் சொல்வது அர்த்தமற்றது. அனைத்தையும் துறந்தால்தான் முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுவது தவறு.

இயல்பான வாழ்க்கையை ஒருவன் வாழ்வதின் மூலமே பேரானந்தத்தை அடைய முடியும்...” என்று ஓஷோ பேச ஆரம்பித்தபோது, ‘முற்றும் துறந்த’ சந்நியாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். “பேசியது போதும். நிறுத்து!” என்று கூச்சலிட்டார்கள். ஆனால் - கூட்டத்தில் கூடியிருந்த பார்வையாளர்களோ, “ஓஷோ. நீங்கள் பேசுங்கள்!” என்று குரல் எழுப்பினார்கள். ஓஷோ, தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களும்,

தான் சொல்ல வந்த கருத்துகளை முழுமையாகச் சொன்னார். இந்த மாநாட்டில் ஓஷோ பேசியவை, உலகம் முழுக்க விவாதத்துக்கு உள்ளாகின. அவர் சொன்னது சரியென்றும், தவறென்றும் இருதரப்பாகப் பிரிந்து பேசினார்கள். இது மட்டுமின்றி - மதம், மக்கள் தாண்டி அரசியல் கருத்துகளையும் ஓஷோ மக்களிடையே முன்வைத்தார். குறிப்பாக காந்தி, நேரு பற்றியெல்லாம் அவர் பேசியதை அப்போதைய அரசியல்வாதிகள் ரசிக்கவில்லை.

(தரிசனம் தருவார்)

காதல் ஒரு பாவமென்றால்...?

பாரதிய வித்யா பவனில், ‘செக்ஸ்’ குறித்து ‘ஓப்பனாக’ ஓஷோ பேசியபிறகு, ஒரு நடுத்தர வயது பெண் வந்து அவரிடம் சண்டை போட்டார். “எனக்கு உங்கள் மீது கோபம்தான் வருகிறது. ‘செக்ஸ்’ என்பது வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருள் கிடையாது. அது ஒரு பாவம்...” என்றார். ஓஷோ, அந்தப் பெண்ணிடம் கேட்டார். “செக்ஸை பாவம் என்று கருதினால், நீங்கள் எப்படி குழந்தைகள் பெற்றீர்கள்?

செக்ஸ் மூலமாக பிறந்த உங்கள் குழந்தைகளை எப்படி நேசிக்கிறீர்கள்? உங்களுக்கு குழந்தைகள் பிறக்கக் காரணமான உங்கள் கணவர் மீது உங்களுக்கு அன்பு இல்லையா?” அப்பெண் தெளிந்தார். அவர் மட்டுமல்ல. செக்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேசுவது தவறல்ல என்கிற மனோபாவம், மக்கள் மத்தியில் ஓஷோவால் உருவாக்கப்பட்டது.

செக்ஸ் பற்றி ஓஷோ!

உடலின்பம் குறித்து ஓஷோவின் கருத்துகள் ‘From Sex to Super  Consciousness’ என்கிற நூலாக வெளிவந்திருக்கிறது. 1968ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் அவர் நிகழ்த்திய உரைகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூலுக்குப் பிறகே அவரை ‘செக்ஸ் குரு’ என்று ஊடகங்கள் தலைப்பிட்டு அழைக்க ஆரம்பித்தன. அந்நூலில் திருமண உறவு குறித்த சர்ச்சைக்குள்ளான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக மதப்பற்றாளர்கள் எதிர்த்தார்கள்.

“உடலின்பம் என்பது அன்பின் அடிப்படையில் ஆண்  பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. ஓர் ஆண் மீது அன்பில்லாத ஒரு பெண்ணை திருமணம் என்கிற நிர்ப்பந்தத்தின் பேரில் அதில் ஈடுபட கட்டாயப்படுத்துவது என்பதை, உடலின்பத்துக்காக காசு கொடுத்து விலைமகளிடம் செல்வதற்கு ஒப்பானதாகக் கருதவேண்டியிருக்கிறது...” என்று ஓஷோ குறிப்பிடுவது, அதுநாள் வரையிலான ‘திருமணம்’ என்கிற சட்டகத்தை உடைப்பதாக அமைந்தது. “மக்கள் தாங்கள் விரும்பியவர்களுடன் உடலின்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்...” என்று ஓஷோ அறிவித்த காரணத்தால்,

அவர் ‘ஃப்ரீ-செக்ஸ்’ என்கிற மேலைநாட்டு நடைமுறையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துகிறார்; இதனால் இந்தியக் கலாச்சாரம் கெடும் என்று மதப்பற்றாளர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் - “உடலின்பத்தை ஆன்ம சக்தியாக மாற்றலாம். தந்திர சாஸ்திரம் இதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்கிறது. கோனார்க், கஜுராஹோ ஆகிய இடங்களில் சிற்பங்கள் வாயிலாக இதை நம் முன்னோர் குறியீடாகச் சொல்லியிருக்கிறார்கள். உடலின்பம் என்பது பாலுணர்வை வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல; ஆண், பெண் இருவரின் சக்தியின் வெளிப்பாடு!” என்றும் ஓஷோ சொல்கிறார்.

- யுவகிருஷ்ணா