மோடி கேர் திட்டம் நீடிக்குமா ?



தேசத்தின் வளர்ச்சியைப் பொருளாதார வளர்ச்சியே தீர்மானிக்கிறது எனக் கொண்டால் அந்தப் பொருளாதாரம் வளர்வதற்கான மூலதனங்களில் மக்களும் ஒரு பகுதி என்றாகிறது. எனவே, ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்கள் அவசியம் என்பது அடிப்படையாகிறது.  மக்களின் நல்வாழ்வின் மீது அல்லாது தேசியத்தின் மூலதனத்தை இழப்பதைப் பற்றிய பதற்றங்களே இன்றைய மக்கள் நலத்திட்டங்களாக உள்ளன என்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள். எது எப்படியோ...

நவீன அரசுகள் குறைந்தபட்சம் இப்படியான நோக்கிலாவது மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வருகிறார்களே என்று ஆறுதல் கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். அப்படி மத்திய பாஜக அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்த திட்டம்தான் ஆயுஷ்மான் பாரத். இதை, ‘மோடி கேர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். தமிழகத்தில் கலைஞர் அவர்கள் ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டுவந்தபோது ‘எதற்கு எல்லாவற்றுக்கும் இலவசம்?’, ‘காப்பீட்டுத் துறையில் ஊழல் நிகழ்வதற்கான ஏற்பாடு இது’ என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தவர்கள் இன்று இந்த மோடி கேர் திட்டத்தை ‘மோடி அரசின் மாபெரும் சாதனை இது.

மனிதநேயம் மிக்க நடவடிக்கை’ என்று வாயார வாழ்த்துகிறார்கள்! எல்லாம் சரி, இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் எப்படி இயங்கப் போகிறது? இதன் சிக்கல்கள் என்னென்ன? இந்திய அரசு நிஜமாகவே இதற்குத் தயாராக இருக்கின்றதா? சமீபத்தில் உலக வங்கி ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன்படி, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மருத்துவ செலவீனம் என்பது வெறும் நான்கு சதவீதத்துக்கும் குறைவே. இதுவே அமெரிக்காவில் பதினேழு சதவீதமாக இருக்கிறது.

உலக அளவில் எடுத்துக்கொண்டால்கூட அது பத்து சதவீதம் வரை இருக்கிறது என்கிறது இந்தப் புள்ளிவிவரம். இதிலிருந்து நமது மருத்துவ உற்பத்தி மற்றும் நுகர்வு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அறியலாம். நம் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் பதினைந்து சதவீதம்பேர்தான் காப்பீடு செய்துள்ளார்கள். அப்படி செய்திருந்தாலுமே கூட நம் நாட்டில் நிகழும் மொத்த மருத்துவ செலவீனத்தின் சுமார் 94% தனிநபர்கள் தங்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்துத் தருவதுதான் என்கிறார்கள்.

மருத்துவத்துக்காக கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் மட்டுமே நம் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கும். இப்படியான சூழலில்தான் பிரதமரின் இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அத்தியாவசியத் தேவையை நாம் பார்க்க வேண்டும். தொடர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது இரண்டாம் மற்றும் மூன்றாவது நிலையில் பலருக்கும் பணம் இருப்பதில்லை. இச்சூழல்தான் கடன் என்ற விஷவலையின் நுழைவாயிலாக இருக்கிறது.

இத்திட்டம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வதாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து லட்சம் வரை காப்பீடு வழங்குவது இத்திட்டத்தின் படி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் பத்து கோடி குடும்பங்கள் பயனடையும் என்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வோர் உறுப்பினருக்குமே பலனளிக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா முழுதும் பட்டியலிடப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்துவக் காப்பீட்டு சேவையைப் பெற முடியும். கட்டணம், காகிதக் குறிப்புகள் எதுவுமே இல்லாமல் தேவையான மருத்துவ வசதியை உடனடியாகப் பெறுவதே இதன் இலக்கு என்று சொல்லப்படுகிறது. ஆதார் உட்பட எந்தவிதமான அரசு அடையாள அட்டை இல்லையென்றாலும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு பெற முடியும்.

அரசாங்க சுகாதார மையங்களை மேம்படுத்தி அடிப்படை மருத்துவ வசதிகளை அளிப்பது என்ற வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ இதற்கு முன்னர் இருந்த ‘ராஷ்டிரீய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா’ போன்ற திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது. காப்பீட்டுத் தொகையும் முப்பதாயிரத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மொத்த நடவடிக்கையையும் கணிணிமயமாக்கவும் திட்டமிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த மக்கள்தொகையில் 40% பேர் பயனடைய வேண்டும் என அரசாங்கம் இலக்கு வைத்திருக்கிறது. இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும் இந்தத் திட்டத்தை எப்படித் தொடர்ந்து நடத்துவது என்பது இதிலுள்ள முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று. இது அரசின் நிதிச் சுமையை மேலும் அதிகமாக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். நேரடி பணப்பலன் பரிமாற்றத்திலிருந்து சேமிக்கப்பட்ட தொண்ணூறாயிரம் கோடிகள் இருப்பதாகவும் அதிலிருந்து இதற்கான நிதியைத் தரமுடியுமெனவும் அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், இந்தப் பணம் ஏற்கெனவே அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிதிக் கணக்கீடுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. இன்னொருபுறம் இந்தத் திட்டத்தின் மொத்த நிதிச் சுமையில் சுமார் 40%த்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என்கிறார்கள். மாநில அரசுகள் இதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான மூலாதார வளங்களை மத்திய அரசிடமே கேட்கும். இதனால் மத்திய அரசு மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டி இருக்கும்.

மேலும், அளவுக்கு அதிகமாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கொண்டுள்ள வட மாநிலம், வட கிழக்கு மாநில அரசுகளை இது மேலும் பாதிக்கும். அந்தவகையில் இறுதியாக ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்படப் போகிறவர்கள் அந்த எளிய மக்களாகவே இருப்பார்கள். நம் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் அப்படி ஒன்றும் சிறப்பானவை அல்ல. ஓரளவு தென்னிந்தியாவில் அவை குறிப்பிடும்படியாக உள்ளன. வட இந்தியாவில் குஜராத், மகாராஷ்ட்ரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பரவாயில்லை. பிற மாநிலங்களில் நிலைமை மோசம். இங்கு எல்லாம் இத்திட்டம் எப்படி அமலாகும் என்றே யாருக்கும் புரியவில்லை.

தவிர, நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 28% பேர் நகரங்களில் வாழ்கிறார்கள் என்று கொண்டால், நம்மிடம் உள்ள மருத்துவர்களில் 80% பேர் நகரங்களில் வாழ்கிறார்கள். அதாவது, மருத்துவர்கள் நகரங்களில் அதிகமாகவும் கிராமங்களில் குறைவாகவும் உள்ளார்கள். மக்களோ இதற்கு நேர் எதிரான இடங்களில் இருக்கிறார்கள். இந்த முரண்பாடு மிக முக்கியமானது. பல கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இல்லை. இங்கு, ஆயிரம் பேருக்கு 0.9 படுக்கைகள் என்ற நிலைதான் உள்ளது. இதுவே வளர்ந்த நாடுகளில் 6.5 ஆக இருக்கிறது.

அதுபோல், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 0.6 மருத்துவர்களும், வளர்ந்த நாடுகளில் அதே அளவு மக்களுக்கு மூன்று மருத்துவர்களும் உள்ளார்கள். வெறும் 37% மக்களுக்குத்தான் ஐந்து கி.மீ தூரத்துக்குள் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி கொண்ட மருத்துமனைகள் உள்ளன. 68% மக்களுக்குத்தான் ஐந்து கிமீ தூரத்திற்குள் வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனைகள் உள்ளன. இந்தியாவில் 2015ல் கூட 15% குழந்தைகளுக்கு அடிப்படை தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை என யுனெஸ்கோ சொல்லியுள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

அரசங்க மருத்துவ சேவைகள் இல்லாத ஊர்களில் தனியார் மருத்துவமனைகளே ஆபத்பாந்தவர்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவத்துறையே நன்கு உள்கட்டமைப்பு கொண்டிருக்கிறது என்பதால் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனையுடன் போட்டி போட வேண்டிய நிலையிலேயே உள்ளன.
தரம், வழங்கப்படும் சிகிச்சையின் வேகம் ஆகியவற்றில் நம் அரசு மருத்துவமனைகளில் சிக்கலே இல்லை.

நோயாளிகள் நடத்தப்படும் விதம் மற்றும் கையாளப்படும் அணுகுமுறைகளிலேயே நம் சிக்கல் உள்ளது. ஆனால், பல மாநிலங்களில் இதன் தரமே மிக மோசமானதாக உள்ளது. இங்கு ஊழலும் அதிகம். அதைக் கண்காணிப்பதற்கான முறையான அமைப்புகளும் இல்லை. இப்படியான சூழலில் இங்கு இந்த ஆயுஷ்மான் திட்டம் அமலாக்கப்படுகிறது.  ஒட்டுமொத்த அமைப்பிலும் இத்தனை குறைகளோடு இந்தத் திட்டம் எப்படி செயல்படும்? புரியவில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். புரிய வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.                            

- இளங்கோ கிருஷ்ணன்