அலங்காநல்லூரில் ஒரே நாளில் 15 காளைகளை அடக்கிய வீரத் தமிழர்!



கிராமங்கள் பயிர்களை மட்டும் விதைப்பதில்லை. வீரத்தையும் சேர்த்தே விளைவிக்கின்றன. தமிழர்களின் பாரம்பரியம் சார்ந்த வீர விளையாட்டுகள் எல்லாம் தொடங்கிய இடங்கள் கிராமங்களே! அந்த வகையில் ஈரம் + வீரம் கலந்த கிராமம்தான் அலங்காநல்லூர். அதிக அறிமுகம் தேவைப்படுமா அந்த ஊருக்கு?! ஜல்லிக்கட்டு என்றாலே பட்டிதொட்டியெங்கும் இப்படிச் சொல்வது கூட தவறுதான்... உலகமெங்கும் உச்சரிக்கிற பெயர்தானே அலங்காநல்லூர்!

பொங்கல் விழாவில் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் இங்கு கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பசுமை படர்ந்த சூழலுடன் காட்சியளிக்கும் அலங்காநல்லூரில், கடந்த ஜனவரி 17ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில், 15 காளைகளை அடக்கியிருக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்குமார்.  பச்சைப்பிள்ளை மாதிரி யதார்த்த பேச்சு. சாதாரண வீடு. அப்பா கண்ணன் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. அம்மா சுந்தரி. சகோதர, சகோதரி அடங்கிய எளிமையான குடும்பம்.

மர அறுவை மில்லில் பணியாற்றிக்கொண்டே சரக்கு வாகன டிரைவராகவும் இருக்கிறார் ரஞ்சித்குமார் ‘‘சின்ன வயசுல இருந்தே ஜல்லிக்கட்டு பிடிக்கும். அப்பா, அண்ணன் ரெண்டு பேருமே மாடுபிடி வீரங்கதான்! 15 வயசுல இருந்தே காளை பிடிக்கிற பயிற்சிக்கு போயிட்டு வர்றேன். பொதுவா இங்க காளைதான் பெரும்பாலும் வளர்க்கிறாங்க. எங்க வீட்லயும் வளர்க்கிறோம். அலங்காநல்லூர்ல மட்டும் 200 காளைகள் வளர்க்கப்படுது.

ஆக, காளைகள் கூட விளையாடியே பழக்கமாயிருச்சு. யாருமே அவங்கவங்க வளர்க்குற காளையை பிடிக்க மாட்டோம். வெளிக்காளைகளை அடக்கித்தான் பழகுவோம். எனக்கு எங்க ஊர்க்காரர் ரமேஷ்தான் பயிற்சி கொடுத்தார். பயிற்சியே ஒரு ஜல்லிக்கட்டு மாதிரிதான் இருக்கும். காளையை பெரிய வடத்துல கட்டி விளையாட விடுவோம். நேருக்கு நேரா ஒருத்தர் நிற்பாரு. அவரைப் பார்த்து காளை சீறி வந்து மோதும்போது, கட்டாயம் அவருக்கு ரத்தக்காயம் ஏற்படும்!

அப்ப, ‘நம்ம நண்பனை காளை குத்திருச்சு... இதை அடக்கி ஆளணும்டா...’ என்ற உத்வேகம் வரும். அப்புறம் என்ன... திமிலை இறுக்கி, காளையை அடக்கி வீரத்தை வெளிக்காட்டுவோம். களத்துல ரத்தம் சிந்தாம யாருமே காளையை அடக்க முடியாது! 18 வயசுதான் போட்டிக்கு தகுதி பெறும் வயசு. அதுக்கு இளம் வயசுல இருந்தே பயிற்சி பெற்றால்தான் முடியும். முதல்ல காளைக் கன்றோடு பயிற்சி எடுத்து படிப்படியா காளையோடு மோதுவோம். அடிபட்டு, காயம்பட்டுத்தான் கத்துக்கவே முடியும்!’’ கம்பீரமாக அறிவிக்கும் ரஞ்சித்குமார், ரேஷன் கார்டில்தான் காளைகளின் பெயர் இருக்காதே தவிர மற்றபடி அதுவும் எங்கள் பிள்ளைகள்தான் என்கிறார்.

‘‘நாலு பல்லு முளைச்சா போதும். ஜல்லிக்கட்டுக்கு தயாராக்கிடலாம். உடல் திறனை பொறுத்து களமிறக்கலாம்! காலைல எழுந்ததும் நம்மளை மாதிரியே அதுகளையும் நடைப்பயிற்சிக்கு 2 கி.மீ. வரை கூட்டிட்டு போவோம். அப்புறம் வாரத்துக்கு 2 தடவை ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி தருவோம். அப்படியே நாங்களும் நீந்திக்குவோம். களத்துல மூச்சு இரைக்காம இருக்கதான் இந்தப் பயிற்சி! கூடவே மண் குத்தும் பயிற்சியும் கொடுப்போம்!

இப்படி பயிற்சி எடுக்கறதால காளைக்கு நல்லா பசி எடுக்கும். சாதாரணமா ஒரு நாளைக்கு ஒரு கிலோ பருத்தி விதைகளை காளைகளுக்கு கொடுப்போம். ஜல்லிக்கட்டு நெருங்க நெருங்க ஒரு நாளைக்கு 2 கிலோ, 3 கிலோ வரை பருத்தி விதைகளை வைப்போம். இது இல்லாம கோதுமைத் தவிடு, அரிசி குருணையும் தருவோம். வசதிக்கேத்த மாதிரி பாதாம், பிஸ்தா அரைச்சு தரலாம்.

எங்களுக்குக் கூட பழைய கஞ்சிதான் இருக்கும். ஆனா, காளைக்கு கட்டாயம் தரமான தீவனம்தான் தருவோம். நாங்க சாதாரணமா வீட்ல சமைக்கிறதை சாப்பிடுவோம். ஸ்பெஷலா எதுவுமே எடுத்துக்கிறதில்லை...’’ என்ற ரஞ்சித்குமார், போட்டிக்கு வரும் அனைத்து காளைகளையும் அடக்க வேண்டும் என்றுதான் எல்லா வீரர்களுக்கும் தோன்றும் என்கிறார்.  

‘‘இந்தக் காளையை அடக்க முடியுமான்னு யோசிச்சா அடக்க முடியாது! காயங்களும் கடுமையாக இருக்கும். அலங்காநல்லூர்ல கூட வர்ற காளைகளை எல்லாம் அடக்கிக்கிட்டே இருந்தேன். கணக்கு எல்லாம் வச்சுக்கவே இல்லை. காளைக்கு அடங்காம ஓடணுங்கிற எண்ணம் மட்டுமே இருந்தது...’’ சிரித்தபடி சொல்பவர் இந்த ஆண்டு 15 காளைகளை அடக்கி கார் ஒன்றை பரிசாகப் பெற்றிருக்கிறார்!

‘‘இதுக்காக செல்போன்லயும், நேர்லயும் பாராட்டுகள் குவியுது. கடந்த 2 வருஷங்களா பல போட்டிகள்ல பங்கெடுத்தாலும், என் சொந்த மண்ணான அலங்காநல்லூர்ல நான் களம் இறங்கின முதல் ஜல்லிக்கட்டு இதுதான்!’’ நெகிழும் ரஞ்சித்குமார் தமிழகமே ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போராடியதை நினைத்து கசிகிறார். ‘‘அந்தப் போராட்டத்தை என்னால மறக்கவே முடியாது. அலங்காநல்லூர்ல போராட்டம் நடத்துன கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் எங்க அப்பாதான் முதல்ல பிஸ்கட், தண்ணீர் சாப்பிடக் கொடுத்தாரு.

‘இந்த போராட்டம் வெல்லும். எங்க மண்ணுல ஜல்லிக்கட்டு நடக்கும்’னு உறுதியா நம்புனோம். அப்படியே நடந்திருச்சு. இன்னும் வழக்கு இருக்குன்னு சொல்றாங்க. நம்ம அரசாங்கம்தான் இதுக்கு ஏதாவது செஞ்சு, தொடர்ந்து நடக்க வழி வகுக்கணும். ஜல்லிக்கட்டு இல்லாம பொங்கல் விழாவை எல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியாது...’’ அழுத்தம்திருத்தமாக சொல்லும் ரஞ்சித்குமாருக்கு வயது ஜஸ்ட் 22தான்!        
     
- எஸ். அறிவழகன்