சிபிசிஎஸ் முறையை எதிர்க்கும் பொறியியல் மாணவர்கள் !



இன்னும் மறுகூட்டல் விவகாரமே ஓய்ந்தபாடில்லை. அதற்குள் தேர்வு முறைகளில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், பல்கலைப் பதிவாளர் குமார், ‘‘வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும்...’’ என்று தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்னை?

கடந்த 2017ம் வருடம் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முறையில் ‘சிபிசிஎஸ்’ எனும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. Choice Based Credit System எனப்படும் இந்த முறையில் மாணவர்கள் முக்கிய பாடங்கள் தவிர்த்து தாங்கள் விரும்பிய பாடத்தையும் எடுத்துப் படிக்கலாம். இதுவரை ஆசிரியர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து நகர்ந்து மாணவர்களை மையமாகக் கொண்ட பாடத்திட்டமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதில், முதல் செமஸ்டரில் தோல்வி அடையும் மாணவர்கள் உடனே இரண்டாவது செமஸ்டரில் அதை எழுத முடியாது. மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும். இதேபோல் இரண்டாவது செமஸ்டரில் தோல்வி அடையும் மாணவர்கள் நான்காவது செமஸ்டரிலேயே தேர்வெழுத முடியும்.

எஞ்சினியரிங் படிப்பில் நான்கு வருடங்களில் முதல் மூன்று வருடங்களுக்குள் தோல்வியடைய நேரிடும்போது மாணவர்களுக்குப் பெரிதாகக் கவலைகள் தோன்றாது. ஆனால், ஒரு மாணவன் முதல் ஆறு செமஸ்டர்கள் பாஸாகி ஏழாவது செமஸ்டரில் எதிர்பாராதவிதமாக தோல்வியடையும் போது அவன் ஒரு வருடம் காத்திருந்து தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதாவது, இதனால்  ஒரு வருட காலம் வேலைக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

ஏற்கனவே வேலை வாய்ப்பில்லாமல் எஞ்சினியரிங் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த முறையால் மனதளவில் மேலும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவையெல்லாம்தான் மாணவர்களைப் போராட்டக் களத்திற்குத் தள்ளியிருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் வேண்டுமென்றே தோல்வியடையச் செய்வதாக மாணவர்கள் புலம்புகின்றனர். இதனால், மறுகூட்டலுக்கு அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு கணிசமான வருமானத்தைப் பல்கலைக்கழகம் பார்க்கிறது என்ற குற்றஞ்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2017ம் வருடம் ஏப்ரலில் நடந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் நிறைய மாணவர்கள் தோல்வியடைந்தனர். இதனால், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அதில், 73 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 16 ஆயிரம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தனர். இந்த மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பெற்றதாக ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இப்போது, சிபிசிஎஸ் முறைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

ஆனால், ‘‘மாணவர்களை வேண்டுமென்றே ஃபெயில் செய்வதில்லை...’’ என்கிறார் நம்மிடம் பேசிய ஒரு எஞ்சினியரிங் கல்லூரி பேராசிரியர். ‘‘மாணவர்கள் தேர்ச்சி பெற 50 சதவீத மார்க் பெற்றாலே போதும். ஆனால், பல மாணவர்கள் அதைக்கூட எடுக்க முடியாமல் திணறுகின்றனர் என்பதே உண்மை. காரணம், ப்ளஸ் டூ வரை மதிப்பெண் சார்ந்தே படிக்கின்றனர். ஆனால், பொறியியல் படிப்பு என்பது பயன்பாடு சார்ந்தது. இங்கே நடைமுறை அறிவு முக்கியம். இதனால், முதலில் கொஞ்சம் சரிவைச் சந்தித்தாலும் பின்னர் சுதாரித்துப் பாஸாகி விடுவார்கள்.

இந்த சிபிசிஎஸ் முறை பல்வேறு வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிற ஒன்று. மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை இதில் தேர்வு செய்யலாம். உதாரணத்துக்கு, எஞ்சினியரிங் படிக்கும் ஒரு மாணவன் சுற்றுச்சூழல் கல்வியை விருப்பப் பாடமாகப் பயில முடியும். ஆனால், இதில் சில பின்னடைவுகளும் உள்ளன. குறிப்பாக, கல்லூரிகளில் விருப்பப் பாடங்களைச் சொல்லித்தரும் ஆசிரியர் உள்ளிட்ட எல்லா வசதிகளும் இருந்தால்தான் இம்முறை பயனளிக்கும். அப்படியில்லையெனில் சிரமமே.

இதனால், சில கல்லூரிகள் தங்களிடமுள்ள உட்கட்டமைப்புக்கு தகுந்த பாடத்தை மட்டுமே மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக வைத்துள்ளனர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்தாலே எல்லாப் பாடங்களிலும் எளிதாக பாஸாக முடியும்...’’ என்கிறார் அவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் பி.வி.நவநீதகிருஷ்ணன், ‘‘இந்த முறையில் சில திருத்தங்களைக் கொண்டு வரலாம்...’’ என்கிறார்.

‘‘இந்த முறை வரவேற்கத்தக்கதுதான். வளர்ந்து வரும் கல்வித் தேவைகளுக்கும், மாணவர்களின் விருப்பங்களுக்கும் இம்முறை பயனளிக்கக்கூடியதுதான். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இத்திட்டத்திலுள்ள முக்கிய அம்சம், ஒரு மாணவர் ஒரு செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தேறவில்லையென்றால் அடுத்த செமஸ்டரில் அத்தேர்வை நேராக எழுத முடியாது.

அடுத்தமுறை அந்தப் பாடம் நடத்தப்படும் போது மீண்டும் அதற்குப் பதிவு செய்து, அந்த வகுப்புகளுக்குச் சென்று, தேவையான அட்டெண்டன்ஸ் பெற்று, இன்டர்னல் தேர்வில் மதிப்பெண் ஈட்டி முடிவில் செமஸ்டர் எழுத வேண்டும். சுருக்கமாக, odd செமஸ்டரில் தோற்றவர்கள் even செமஸ்டரில் எழுத முடியாது. அதை ஏதாவதொரு odd செமஸ்டரில்தான் எழுத முடியும்! அதேபோல even செமஸ்டர்.

இதனால், தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வருடத்திற்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கிடைக்கும். அதனால், அரியர்ஸ் அதிகமாகி, அனுமதிக்கப்பட்ட எட்டு வருட காலத்திற்குள் கோர்ஸை முடிக்க முடியாமல் போகலாம். தவிர, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேல்படிப்புக்கும், வேலைக்கும் போக நினைக்கும் மாணவர்களை இது ரொம்பவே பாதிக்கும்.

ஏற்கனவே, அரியர் பாட வகுப்புகளுக்குப் போக வேண்டியதில்லை என்ற வரவேற்கத்தக்க மாற்றத்தை பல்கலைக்கழகம் செய்துள்ளது. அதைப்போல் இப்போதுள்ள பிரச்னையை சமாளிக்க, பி.இ. படிப்பின் முதலிரண்டு வருடங்களுக்குப் புதிய தேர்வு முறையையும், அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பழைய தேர்வு முறையையும் கடைப்பிடித்தாலே போதும்.


மேலும், இன்டர்னல் மதிப்பீடு புதியதாக வேண்டுபவர்களை மட்டும் இத்திட்டத்திற்கு உட்படுத்தி, மற்றவர்களைப் பழைய திட்டத்திலேயே இருக்க விடலாம்...’’ என்கிறார் பி.வி.நவநீதகிருஷ்ணன் நிறைவாக. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலை நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.  
 
- பேராச்சி கண்ணன்