பெட்ரோல், டீசல் விலை ஏற்ற (கடுப்பு) யோஜனாக்கள்



செய்தி

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வினால் ஏற்படும் கடுப்பை உணர்த்துவதற்காக, கடலூர் மற்றும் விருதுநகரில் நடந்த திருமண விழாக்களில், மணமக்களுக்கு நண்பர்கள் நாலு லிட்டர் பெட்ரோல் மற்றும் காஸ் சிலிண்டரை பரிசாக வழங்கினார்கள்! இதுபோல் வேறு எப்படி எல்லாம் கடுப்பைக் காண்பிக்கலாம்..? சில யோஜனைகள்!  

ருண யோஜனா

வசதி படைத்த பெரும் செல்வந்தர்கள் விமானம் போன்ற தங்கள் வாகனங்களை இயக்க ‘பெடீ’ (பெட்ரோல் டீசல்) லோன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும்! வாங்கிய கடனை திருப்பிக் கட்டுவதில் இவர்களுக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால் அதே விமானங்கள் மூலம் கடனாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அங்கு செட்டில் ஆகிவிடும் திரில்லர் கதைகள் அரங்கேறும்.

இவை ப்ரேக்கிங் நியூஸாகி பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பைக் கூட்டும்! வங்கிகளின் இழப்பைச் சரிக்கட்ட நிலுவை  இரு(வெறு)ப்பு கட்டணம், கடன் மறப்பு கட்டணம் போன்ற கட்டண திட்டங்கள் பொதுமக்கள் தலையில் கட்டப்படும். வசதி படைத்தவர்களின் வாராக் கடன் சம்பந்தப்பட்ட திட்டம் என்பதால் இத்திட்டத்துக்கு ‘ருண யோஜனா’ என்று பெயர் சூட்டலாம்!

பாஜியா யோஜனா

எட்ட முடியாத காஸ் விலை ஏற்றத்தால் ஆதிகால மனிதர்கள் போல் சமைப்பதற்கு தீ மூட்ட சிக்கி முக்கி கற்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்பதால் அந்தக் கற்களுக்கு ஆன்லைன் ஆர்டர்கள் குவியும்! அதிலும் அதிர்ஷ்டக் கற்களை சப்ளை செய்வதாக விளம்பரம் செய்து கல்லா கட்ட ஒரு கூட்டம் காத்து நிற்கும். மணல் கடத்தல் போல், கூழாங்கற்கள் கடத்தல் அதிகமாகி அவை சகாரா பாலைவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும்! கூழாங்கற்கள் தட்டுப்பாட்டால் வேகவைக்கப்படாத பச்சைக் காய்கறிகளை அப்படியே உண்ணும் பழக்கத்தை பரப்பும் திட்டம் அறிவிக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ‘பாஜியா யோஜனா’ என்று பெயர் சூட்டி மகிழலாம்!

கபடா யோஜனா

தங்கம் விலை போல் பெட்ரோல் விலையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நாள்தோறும் மாறுபடுவதால் பெட்ரோல் இனி திரவத் தங்கம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் ரூல் போடலாம். அதனால், இனி பெட்ரோல் பங்குகள், ‘திரவத் தங்க மாளிகைகள்’ என்று அழைக்கப்படும்! ஒருகிராம், நாலு கிராம், எட்டு கிராம் என்ற அளவு குடுவைகளில் திரவத் தங்கம் விற்பனையாகும்! எட்டு கிராம் குடுவை ஒரு சவரன் என்று அழைக்கப்படும்!

பெட்ரோல் வாங்குபவர்களிடம் சேதாரம், செய்கூலி ஆகிய இழப்புகள்(!) வசூலிக்கப்பட்டு கடுப்பு கூட்டப்படும்! அந்தக் கடுப்பைக் குறைக்க பெட்ரோல் வாங்குபவர்களுக்கு கண்ணீரைத் துடைத்துக் கொள்ள மானிய விலையில் ஒரு கர்சீப்புடன் நகைக் கடை போல் காலி பர்ஸ் பரிசாக வழங்கப்படும்! இந்தத் திட்டத்துக்கு ‘கபடா யோஜனா’ என்று பெயர் சூட்டி மகிழலாம்!

காம் யோஜனா

பெரும் செல்வந்தவர்கள் மட்டும்தான் பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்பதால் மற்றவர்கள் தங்கள் சொந்தக் காலை, விடியற்காலையில் நம்பியாக வேண்டும்! அதாவது விடியற்காலை நான்கு மணிக்கே விழித்து தயாராகி, அலுவலகத்துக்கு நடையைக் கட்ட வேண்டியிருக்கும்! இதனால் திருவிழாக் கூட்டம் போல் வீதிகள் ஜனத்திரளால் நிரம்பி ஜேஜே என்றிருக்கும்.

கூட்ட நெரிசலைச் சமாளிக்க பத்து வழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்படும்! வழி நெடுகிலும் டிஃபன் மற்றும் பக்கோடா கடைகள் முளைத்து சிறு வியாபாரம் பெருகும். கடைகளுக்கான லைசென்ஸ் வழங்குவதில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! எனவே ‘காம் யோஜனா’ என இத்திட்டத்துக்கு பெயர் சூட்டி மகிழலாம்!           
 
- எஸ்.ராமன்