ஓபிஎஸ், இபிஎஸ்... இருவர் கையிலும் கத்தி!



நாஞ்சில் சம்பத் சரவெடி

‘‘அரிதாரம் பூசிய அவதார புருஷர்கள் ஆளுக்கொரு பக்கம் அள்ளி விட்டுக்கொண்டிருக்கும்போது இந்த சந்தடியில் சம்பத் எதற்கு?’’ எனக் கேட்டுவிட்டு குபீரென சிரித்த நாஞ்சில் சம்பத், பேட்டிக்குத் தயாரானார். கேள்விகள் முடிவதற்கு முன்பே பதில்கள் ஏவுகணைகளாக சீறிப்பாய்ந்தன. அடுத்த அரைமணி நேரத்திற்கு அவருக்கேயுரிய எதுகை மோனை, நக்கல் நையாண்டி விளையாட்டுதான். பரபரப்பான அரசியலிலிருந்து திடீரென்று ஒதுங்கிவிட்டீர்கள். இப்போது உங்கள் காலம் எப்படி ஓடுகிறது?

இதழ் ஒன்றில் ‘ஒரு மேடைக்காதலன்’ என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறேன். அப்புறம் 1986ம் வருடத்திலிருந்து கல்லூரிகளில், கருத்தரங்குகளில், பட்டிமன்றங்களில், வழக்காடு மன்றங்களில் உரையாற்றிய இலக்கியப் பேச்சுகளைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இலக்கிய பயணத்திலேயே மிச்சமுள்ள நாட்களை நகர்த்த முடியும் என நம்புகிறேன். தராதரமும், தகுதியும் இல்லாதவர்களின் தங்குமிடமாகிப்போன அரசியலில் என் நாக்கிற்கு இனி வேலை இல்லை.

மேடைத் தமிழ் பயிற்சிப் பட்டறை என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, மேடையில் பேச ஆர்வம் உள்ள தம்பிகளுக்கு, சங்கத் தமிழ், சமயத் தமிழ், சமகாலத் தமிழ், சரித்திரத் தமிழ், தன்மானத் தமிழ் ஆகியவற்றை கற்பித்துத் தரப்போகிறேன். அரசியல், இலக்கியம், வரலாறு மூன்றையும் உள்ளடக்கி அவர்களுக்கு சென்னையில் பயிற்சியளிக்க வேண்டும். அப்படியொரு திட்டமுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது குறித்தே யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு அரசியலைக் கூர்ந்து கவனிக்கிறீர்களா?

நிச்சயமாக. ஏர் ஓட்டுவதை நிறுத்திவிட்டாலும் வயலைப் பார்க்காமல் உழவன் தூங்க முடியுமா? இங்கே ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றங்களில் இருக்கிறது. அதற்கான தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தபிறகு இந்த ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஒரு முடிவுக்கு வந்து விடும். இப்போது நடப்பது என்ன தெரியுமா..? இடைவேளையை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் இடைவேளைதான் நிரந்தரம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அறியாமை! இதை எந்தக் கோயிலில் போய் முறையிடுவது?  


இப்போதும் டி.டி.வி. தினகரனுடன் தொடர்பு உள்ளதா?

இல்லை. அம்மா முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அனைவரும் என்னிடம் ரத்த உறவு போலப் பழகியவர்கள். பாசம் காட்டியவர்கள். இப்போதும் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள். ‘வாங்களேன்’ என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். நானும் அவர்களிடம் ‘எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்... இதற்கு என்னை அனுமதியுங்கள்’ என உரிமையுடன் கேட்கிறேன்.

துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை ஒன்றரை வருடங்கள் முன்பு ரகசியமாக சந்தித்தது பற்றியும்,  இப்போதும் கடந்த செப்டம்பரில் கூட சந்திக்க தூது விட்டதாகவும் சொல்கிறாரே தினகரன்?

ஆமாம், நானும் படித்தேன். எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ, எந்த குடும்பத்தை எதிர்த்து நீதி கேட்டாரோ, அந்த குடும்பத்தின் அரசியல் அடையாளமாக இருக்கும் டி.டி.வி. தினகரனை இவர் சந்தித்தது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார் ஓ.பி.எஸ். இதன் மூலம் எவ்வளவு கீழ்த்தரமான அரசியல்வாதி அவர் என்பது ஆயிரம் வாட் வெளிச்சம் ஆகிவிட்டது.

அவரை நம்பி பயணித்த பதினோரு சட்டசபை உறுப்பினர்களும் ‘இவரும் ஒரு தலைவர்’ என தப்பிதமாகப் புரிந்துகொண்டு, இந்த மனிதரை ஏற்றுக் கொண்டவர்கள் இப்போது எந்த சுவரில் முட்டிக் கொள்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். நல்லவரும் இல்லை, நம்பிக்கைக்குரியவரும் இல்லை. எந்த பாவத்தைச் செய்வதற்கும் கூச்சப்படாத போலி பக்திமான் என்பது இப்போது தமிழ்நாட்டுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

சரி, முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியும், பன்னீர்செல்வமும் பரஸ்பரம் நம்புகிறார்களா? கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டனரா?

அவர்கள் உறவு ஒரு மாயமான்! உதட்டுச் சிரிப்போடு முடிந்துபோகும்! பழனிச்சாமி இவரைவிட சுதாரிப்பானவர். ஓ.பி.எஸ்.ஸுக்குரிய முக்கியத்து வத்தைக் கொடுக்க அவருக்கு மனமில்லை. அதேபோல் பன்னீர் பெயரைச் சொல்லி குப்பை கொட்டுபவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் ஆட்சியிலும் இல்லை, கட்சியிலும் இல்லை. அவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவர் கையிலும் கத்தி இருக்கிறது. யார் முதலில் தூங்குவார் என்று இருவருமே விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே நடந்து கொண்டிருக்க,

கீழே உள்ள இரண்டாம் மூன்றாம் கட்டத் தலைவர்கள், மந்திரிகள் நிலைமையைப் புரிந்து கொண்டு ‘புகுந்து விளையாட’ ஆரம்பித்துவிட்டனர். ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ ஆகிவிட்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்ற கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் வேலுமணி, தங்கமணி கோஷ்டி தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடக்காததுபோல ஜெயக்குமார் மீடியாவில் பேசிக்கொண்டிருக்கிறார். பொதுமேடையில் பாடிக் கொண்டிருக்கிறார். மத்திய அரசு, இவர்கள் ஆடும் வரை ஆடட்டும்... நமக்கு சலாம் போட்டால் சரி என வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டிருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிரடியாக புகார் கூறியிருக்கிறாரே..?

படித்தேன். திடுக்கிட்டேன். ஒரு கவர்னரே இப்படி பகிரங்கமாகச் சொல்லியதாக இதற்கு முன் எனக்கு நினைவில்லை. யாருடைய காலத்தில் இந்த அநியாயம் நடந்தது, எந்த குறிப்பிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இது நடந்தது... இதற்கு பொறுப்பேற்க வேண்டிய உயர்கல்வி அமைச்சர் யார்... இவை குறித்து மேதகு கவர்னர் உடனே வெள்ளையறிக்கை விடவேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் இப்போது இல்லையாமே?

ஆமாம். ஐந்து மாநிலத்தின் சட்டமன்றங்களுக்கு தேர்தலை அறிவித்த தேர்தல் கமிஷன், திருவாரூர், திருப்பரங்குன்றத்தின் தேதியைத் தள்ளிப்போட்டுவிட்டார்கள். கேட்டால், தமிழக அரசு மழைக்காலம் என்று கோரிக்கை வைத்ததாம். அதை கமிஷன் ஏற்றதாம். 2011ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சிக்காலத்திலேயே நான்கு இடைத்தேர்தல்களும் இரண்டு பொதுத்தேர்தல்களும் மழைக்காலத்தில் நடந்துள்ளன. தொகுதி வாரியாக மழைக்காலத்தில் தமிழகத்தில் நடந்த இடைத் தேர்தல்களைச் சொல்லட்டுமா? மழைக் காலமாவது... மாரிக் காலமாவது..? அதெல்லாம் சும்மா சாக்குப் போக்கு! இவர்களுக்கு இது இலையுதிர்காலம்! நடுங்குகிறார்கள். மழையைச் சொல்லி ஒதுங்குகிறார்கள்!

ரஜினி, கமல் - அரசியலில் யார் முந்துவார்கள்?

முந்துவார்களா? காணாமல் போய்விடுவார்கள்! மன்றமும், மய்யமும் எப்போது தேர்தலில் நின்றாலும் பரிதாபமாகத் தோற்கும் என்பதே ஆடை நீக்கிய அசல் உண்மை! காகிதப் பூக்கள் தானே காய்ந்து விழுந்துவிடும்! தமிழ்நாட்டை ரட்சிப்பதற்கு திரையிலிருந்து பிரம்மாக்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. ‘கட்சி தொடங்கப் போகிறேன்’ என்று அறிவித்த சூப்பர் ஸ்டார் கால்ஷீட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மன்றத்தில் இருப்பவர்கள் ‘எதற்கு இருக்கிறோம்.

இது என்ன தலைவிதி’ என நித்தம் நித்தம் நொந்து சாகிறார்கள். மய்யத்து ஆட்களோ ‘எப்படியும் தலைவர் கட்சியைக் கலைத்துவிடுவார்’ என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்! ஆக, இவர்கள் இருவரும் இல்லாத ஊருக்கு வழி காட்ட வந்தவர்கள். அவர்களுக்கு தமிழக அரசியலில் இடமில்லை என்று வரும் தேர்தல் தீர்மானித்துவிடும். இதைவிட கொடுமை, இவர்களைப்போல கோடம்பாக்கத்து குட்டிச்சுவர்கள் எல்லாம் கோபுரம் கட்டப் போவதாக கும்மாள மடிப்பதையும், குத்தாட்டம் போடுவதையும் பார்த்தால், தமிழக அரசியல் இவ்வளவு அருவருப்புக்கு ஆளாகிவிட்டதே என்று மனது வேதனைப்படுகிறது.

தமிழக பாரதிய ஜனதா நம்பிக்கையுடன் காய்களை நகர்த்துகிறதே..?

பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் கால் ஊன்றும் பேச்சுக்கே இடமில்லை. மெட்டமைத்து பொதி கழுதை பாடினாலும் பாடும். கூவம் நம் பாவத்தைப் போக்கினாலும் போக்கும். தாமரை தமிழகத்தில் மலராது. அவர்கள் கவர்ச்சியானவர்கள் தோளில் ஏறி சவாரி செய்ய, கோடம்பாக்கத்தில் அரிதாரம் பூசிய ஆட்களைத் தேடி அலைகிறார்கள். ஒருமுறை ஆர்.கே. நகரில் நின்ற கங்கை அமரன், அடுத்த முறை தயாராக இல்லை. கங்கையில் மூழ்கிச் செத்தாலும் சாவேனே தவிர, பி.ஜே.பியில் நிற்க மாட்டேன் எனச் சொல்லி விட்டார்!                 

- வி.சந்திரசேகரன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்