உள்நாட்டு இந்திய அகதிகள்!



குஜராத்தில் பணிபுரிந்து வந்த பீகார் தொழிலாளி, பதினான்கு மாத குழந்தையை வல்லுறவு செய்து போலீசில் பிடிபட்டார். உடனே அம்மாநிலமெங்கும் வசிக்கும் பீகார், உ.பி உள்ளிட்ட பிறமாநில தொழிலாளர் மீது தீவிர தாக்குதல் தொடங்கியது. இதனையடுத்து பிற மாநில தொழிலாளர்களை வெளியேறச் சொல்லி அம்மாநில காவல்துறை வற்புறுத்தி வருகிறது. வேறுவழியில்லாமல் மேசனா, காந்திநகர், சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் 1,500க்கும் மேற்பட்ட பீகார், உ.பி மாநில தொழிலாளர்கள் சம்பள பாக்கியைக்கூட வாங்காமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.

‘‘தாக்கூர் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கள் தொழிற்சாலைப் பகுதியிலுள்ள தொழிலாளர்களை அடித்து விரட்டினர். என் மொழி, மாநிலத்தை மிரட்டிக் கேட்டவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டனர்...” என்கிறார் முகமது கரீம். மொத்தத்தில் பிறமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியைக் குறிவைத்து கல்லெறிவது, கத்திக்குத்து, கொலைமிரட்டல் ஆகியவற்றை செய்யும் சமூகவிரோத இயக்கங்களின் செயல்பாடுகள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

டாக்டர்களுக்கு கையெழுத்து வகுப்பு!

அண்மையில் அலகாபாத் நீதிமன்றம் மோசமான கையெழுத்துக்காக மூன்று மருத்துவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
இதன் அப்டேட்டாக இந்தூரிலுள்ள எம்ஜிஎம் மருத்துவக்கல்லூரி, மாணவர்களின் கையெழுத்திற்காக தனி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது! “மருத்துவர்களின் மோசமான கையெழுத்து இத்துறையில் நீண்ட காலமாகவே பிரச்னையாக உள்ளது. வருங்காலத்தில் இது தொடரக்கூடாது என்பதற்காகவே கையெழுத்து வகுப்புகளைத் தொடங்கி யுள்ளோம்...” என்கிறார் கல்லூரி டீனான மரு.ஜோதி பிந்தால்.

இந்திய அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் டாக்டர்களின் கையெழுத்து புரியாவிட்டால் நோயாளிகளுக்கு காப்பீடு கிடைக்காது என்பது முக்கியமான விதி. 2015ம் ஆண்டு சுகாதாரத்துறை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுதவேண்டும் என அறிவுறுத்தியது. இப்போது பிரிஸ்கிரிப்ஷனை டிஜிட்டல் முறையில் நோயாளிக்கு பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்திய கிராமங்களுக்கு உதவும் சீனா!  

உத்தரகாண்டின் தார்சுலா பகுதியிலுள்ள புண்டி, கன்ஜி, குடி, நபால்சு, நபி, ரோன்காங், கார்பியாங் ஆகிய ஏழு கிராம மக்களும் சீனாவிலிருந்து நேபாளம் வழியாக வரும் அரிசி, எண்ணெய், உப்பு, கோதுமை ஆகியவற்றை நம்பியே வாழ்கின்றனர். “மாதம்தோறும் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமையை இந்திய அரசு வழங்குகிறது. சாலை வசதிகள் சரியாக இல்லாததால் இப்பொருட்கள் எங்களுக்கு வந்துசேர அதிக காலதாமதமாகிறது. இதனால் வேறுவழியின்றி நேபாளத்தின் டிங்கர், சாங்குரு ஆகிய இடங்களிலிருந்து உணவுப்பொருட்களை அதிகவிலைக்கு வாங்குகிறோம்...” என்கிறார் நபி கிராமத்தவரான அசோக் நபியல்.  


தொகுப்பு: ரோனி