ரயிலில் திருட்டு!



மேற்கு ரயில்வேயில் ரூ2.76 கோடி (2017 - 18) மதிப்பிலான களவுபோன பொருட்களை ரயில்வே போலீஸ் மீட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.  1.95 லட்சம் டவல்கள், 81,736 பெட்ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள் நெடுந்தூர ரயில்களில் திருடப்பட்டுள்ளன என கணக்கு கூறியுள்ளது மேற்கு ரயில்வே. கழிவறைகளில் திருடப்படும் குழாய்கள், பைப்புகள், குவளைகள் பழைய இரும்புக்கடைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுவது திருட்டு பரவலாக அதிகரிக்க முக்கிய காரணம்.

ரயில்களின் ஏசி கோச்சுகள் உட்பட பல கோச்சுகளில் இப்படி பொருட்கள் கொள்ளை போவதால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 ஆயிரம் கோடி! இவ்வாண்டில் ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இந்திய ரயில்வே பறிகொடுத்துள்ளது. மும்பை டிவிஷனில் 2016 - 17 ஆண்டில் 56 ரயில்களிலிருந்து ரூ.71.52 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன!

ரத்ததான வள்ளல்! ரத்ததான வள்ளல்!  

ஐஏஎஸ் அதிகாரியான ராஜன் சுக்லா, ரத்த தானம் அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி அரசு அதிகாரியாகத் திகழ்கிறார். 1980ம் ஆண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் அளிக்கும் இவர் கடந்த 38 ஆண்டுகளாக இப்பணியை கர்ம வீரராகச்செய்து வருகிறார். அண்மையில் தன்னுடன் ரத்த தானம் வழங்கும் ஆர்வம் கொண்ட 130 பேர்களை அழைத்துக்கொண்டு லக்னோவிலுள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தார்.

“எங்கள் குடும்பமே ரத்த தானம் அளித்துவரும் வரலாறு கொண்டது. மக்களின் உயிர்காக்க உதவுவதில் என் பெற்றோர், சகோதரர்களுக்கும் மகத்தான மனநிறைவு உள்ளது...” என்கிறார் ராஜன் சுக்லா. “ரத்தத்திலுள்ள பிளாஸ்மா, ரத்த தட்டுகள், சிவப்பணு, வெள்ளையணுக்களை பிரித்தெடுத்தால் நான்கு நோயாளிகளுக்கு உதவ முடியும்!’’ என்கிறார் மருத்துவமனை தலைவரான டாக்டர் வி.கே.சர்மா.

அகிம்சை தேர்வு

மகாராஷ்டிராவில் காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சைக்கான தேர்வை 600 கைதிகள் எழுதியுள்ளனர்! பாம்பே சர்வோதய மண்டல் என்ற அமைப்பு துலே, சந்திரபூர், அலிபாக், அகோலா ஆகிய பகுதிகளிலுள்ள சிறைக்கைதிகளுக்கு காந்தி பற்றிய தேர்வை நடத்தியது. என்ன காரணம்? “காந்தியடிகளின் அகிம்சை, லட்சியநோக்கம் நூற்றுக்கணக்கான கைதிகளின் மனதை, சிந்தனைகளை மாற்றியுள்ளது.

இத்தேர்வை இதற்காகவே கைதிகளுக்கு ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்...” என்கிறார் சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.கே. சோமையா. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்படி நான்கு ஆப்ஷன்களுடன் கேள்வித்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காந்தியின் வாழ்க்கை, அகிம்சை, லட்சியம் ஆகியவற்றின் சுருக்கம் சிறிய நூலாக கைதிகளுக்கு வாசிக்க வழங்கப்பட்டது. நம்பிக்கை முயற்சி!

- ரோனி