டபுள் ஆக்‌ஷன் விக்ரம்!



சாமி ஸ்கொயர் அதகளம்

‘‘டப்பிங் அப்பவே ‘சாமி ஸ்கொயர்’ முழுப் படத்தையும் விக்ரம் சார் பார்த்துட்டார். அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘ஃபுல் கல்யாண மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு. பெஸ்ட் ஃபேமிலி என்டர்டெயினர்’னு சர்டிஃபிகேட் கொடுத்தார். ரசிகர்களும் அதை வழிமொழிய காத்திருக்கோம்...’’ நள்ளிரவில் எடிட் ஷூட்டில் அமர்ந்தபடி எனர்ஜி குறையாமல் உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் ஹரி.

‘‘சுவாரஸ்யமான இன்ஸிடென்ட். எது தெரியுமா? ‘சாமி’ உருவானது. என் முதல் படமான ‘தமிழ்’ ரிலீஸ் ஆனதும் ‘நல்ல படம்’னு எல்லா மீடியாவும் சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. அப்ப விக்ரம் சார், ‘உங்க படத்தைப் பார்க்க விரும்பறேன்’னு போன் செஞ்சார். உடனே ஒரு ப்ரிவ்யூ தியேட்டர்ல அவருக்குப் போட்டுக் காட்டினோம். ரொம்ப இம்ப்ரஸ் ஆகி, ‘இதே மாதிரி ஒரு நல்ல கதை சொல்லுங்க’னு கேட்டார்.

அப்ப கேமராமேன் ப்ரியன் சாரும் கூட இருந்தார்.‘இப்பவே ஒன் லைன் சொல்றேன்’னு அவுட்லைன் சொன்னேன். ‘ஒரு நல்ல போலீஸ்காரன் லஞ்சம் வாங்கறான். லஞ்சம் வாங்கறவன் எப்படி நல்ல போலீஸா இருக்க முடியும்..? இதான் கதை...’அவர் பதில் சொல்லாம வீட்டுக்கு கிளம்பிட்டார். அடுத்த நாள் ‘கவிதாலயா’ல அவர் சொல்லி ‘சாமி’ கன்ஃபார்ம் ஆச்சு. பட்டி தொட்டி எல்லாம் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்த படம் அது.

முடிவுல ‘சாமியின் வேட்டை தொடரும்’னு கார்ட் போட்டிருப்போம். அப்பவே செகண்ட் பார்ட்டுக்கான கதை யை ரெடி பண்ணிட்டேன். அப்புறம் அந்தக் கதை வேறு எங்கெங்கோ பிரிஞ்சு போச்சு. அது வேற விஷயம்.‘சாமி’க்கு அப்புறம் ‘அருள்’. இதுவும் பேசப்பட்டது. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ மாதிரி படங்கள் அவருக்கு செட் ஆகாது. ஸோ, நல்ல கமர்ஷியலுக்காக காத்திருந்தோம். இப்ப எல்லாமே கைகூடி யிருக்கு. பல வருஷங்களுக்குப் பிறகு நாங்க இணையற படம். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்னு நம்பறோம்...’’ கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டுகிறார் ஹரி.

‘சாமி ஸ்கொயர்’ என்ன கதை?

‘சாமி’யோட தொடர்ச்சிதான். பெருமாள்பிச்சை குடும்பத்துக்கும் ஆறுச்சாமி குடும்பத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதுக்குள்ள அசத்தலான ஒரு போலீஸ் கதையும் இருக்கு. முதல்பாகத்துல பெருமாள் பிச்சை (கோட்டா சீனிவாசராவ்) இறந்து போயிருப்பார். ஆனா, இதுலயும் அவர் நடிச்சிருக்கார்! அது எப்படி என்பது சஸ்பென்ஸ்.

விக்ரம் சாருக்கு இதுல டபுள் ஆக்‌ஷன். கலக்கியிருக்கார். பாபிசிம்ஹா, ராவணன் பிச்சையா மிரட்டியிருக்கார். அவருக்கும் நாலஞ்சு கெட்டப்ஸ் இருக்கு. அதுல ஒரு கெட்டப்புக்காக ஆறு மாசம் தாடி வளர்த்து தோற்றத்துல வித்தியாசம் காட்டியிருக்கார். அவரை வில்லன்னு சொல்ல மாட்டேன். ஹீரோவுக்கு டஃப் கொடுக்க ஒருத்தர் வேணுமில்லையா... இந்தக் கதைல பாபி சிம்ஹா அதை செய்திருக்கார்.

முதல் பாகத்துல நடிச்ச பலர் இதுலயும் நடிக்கிறாங்க. காரைக்குடில ஒரு பாடலை ரீகிரியேட் பண்ணினது மாதிரி நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. ஒரு பாடலை உக்ரைன்ல ஷூட் பண்ணியிருக்கோம். லொகேஷன்ஸ் ஃப்ரெஷ்ஷா இருக்கும். விக்ரம் சாரும், கீர்த்தி சுரேஷும் ஒரிஜினலா பாடின ஸாங் அது. என் படத்துல எப்பவும் ஓபனிங்ல ஒரு குத்து ஸாங் வைச்சுடுவேன். முதல் முறையா ஒரு மெலடி நாட்டுப்புறப்பாடலை இதுல டிரை பண்ணியிருக்கோம். தேவி பிரசாத் ரசிக்க வைச்சிருக்கார்.

கீர்த்தி சுரேஷ் மாடர்னா தெரியறாங்க...

கதைக்கு அப்படி தேவைப்பட்டது. லண்டன்ல படிச்ச பெண். அதனால ஆரம்பத்துல மாடர்ன் ப்ளஸ் ஸ்டைலிஷா ஒரு ஹீரோயினை செலக்ட் பண்ற ஐடியா இருந்தது. அப்புறம் நம்ம நேட்டிவிட்டியோட இருக்கிற பெண்ணை ஸ்டைலா மாத்தினா என்னனு தோணுச்சு. இதுக்கு அப்புறம்தான் கீர்த்தி சுரேஷ் கதைக்குள்ள வந்தாங்க.

லண்டன்ல படிச்சுட்டு தில்லில இருந்து திருநெல்வேலி வரை டிராவல் பண்ற பெண்ணா பிரமாதப்படுத்தி இருக்காங்க. அவங்களுக்கும் சூரிக்குமான காம்பினேஷன்ல காமெடில பிச்சு உதறியிருக்காங்க. ஐஸ்வர்யா ராஜேஷும் ஸ்கோர் செய்திருக்காங்க. எமோஷனல் ஆக்‌ஷன் ஏரியால முத்திரை பதிச்சிருக்காங்க.

‘ஆறு’, ‘தாமிரபரணி’,‘வேங்கை’னு நிறைய படங்கள்ல பாடல்கள் எழுதியிருக்கீங்க... பாடலாசிரியர் ஹரி எப்படி இருக்கார்..?

நீங்க வேற... பாடலாசிரியர் ஆகணும்னு ஆசை இல்ல. நல்ல பாடலாசிரியரை எழுத வைக்கணும்னுதான் ஆசை! மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட சில சூழல்கள்ல டம்மி வரிகள் எழுதிக் கொடுப்பேன். ‘இதுவே நல்லா இருக்கு. இன்னும் ரெண்டு வரி எழுதினா முழு பாட்டாகிடும்... கம்ப்ளீட் பண்ணிக் கொடுங்க’னு சொல்வாங்க. அப்படி எழுதினது தான் அதெல்லாம். மேக்ஸிமம் பிட் ஸாங்ஸ்தான். நைட்டே ரிக்கார்டிங் முடிச்சாகணும் என்கிற சூழல்ல பாடலாசிரியர்களைப் பிடிக்க முடியாமப் போறப்ப எழுதியிருக்கேன்.

சில சமயம் நாம நினைச்சது வரணும்னு வேற வழியில்லாம பாடலாசிரியராகவும் மாறியிருக்கேன். ‘தாமிரபரணி’ல ‘தாலியே தேவையில்ல...’ பாட்டை பலர் எழுதினாங்க. என் மனசுல இருந்தது அந்த வரிகள்ல இல்ல. அதனால நானே அதை எழுதினேன்.

ஒளிப்பதிவாளர் ப்ரியனின் இழப்பு..?

ரொம்ப பெரிய இழப்பா உணர்றேன். ஒரு சகோதரனை இழந்த மாதிரி இருக்கு. மீளவே பல வாரங்களாச்சு. ரொம்ப நல்ல மனிதர். எனக்கு சீனியர். சேரன் சாரோட ‘தேசிய கீதம்’ல ஒரு பாடலை தில்லில ஷூட் பண்ணினோம். அப்ப முதல் அவர் பழக்கம். இப்ப ‘சாமி ஸ்கொயர்’ல ஒர்க் பண்ற வெங்கடேஷ் சார்தான் என் முதல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டியது.

அப்ப அவர் சரண் சார் கூட ‘ஜெமினி’ல பிசியா இருந்ததால ப்ரியன் சார் ‘தமிழ்’ல ஒர்க் பண்ணினார். அப்புறம் வெங்கடேஷ் சார் வேற வேற கமிட்மென்ட்ஸ்ல பிசியானதுனால ப்ரியன் சார் கூடவே டிராவல் செஞ்சேன். கடவுள் புண்ணியத்துல நாங்களும் பிசியாவே இருந்தோம். கிட்டத்தட்ட 15 படங்கள் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கோம். வெளில இருந்து பார்க்கிறவங்க எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கும்போலனு நினைச்சுப்பாங்க.
உண்மை அது இல்ல! ஸ்பாட்ல நாங்க அண்டர்ஸ்டாண்டிங் இல்லாமதான் இருந்திருக்கோம். உடன்பாடில்லைனா பயங்கரமா கோபப்பட்டு சண்டை போடுவார். இதையெல்லாம் மீறித்தான் நாங்க ஒண்ணா டிராவல் செஞ்சோம். ஏன்னா, அவுட்புட் நல்லா வரணும்னுதான் ரெண்டு பேருமே கோபப்பட்டு கத்தியிருக்கோம்னு எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அவர் கூட சண்டையே போடலைனா இத்தனை படங்கள் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்க மாட்டேன்னு நினைக்கறேன். இப்ப ரொம்பவே அவரை மிஸ் பண்றேன். த்ரிஷா ஏன் இந்தப் படத்துல நடிக்கலை..? தெரியல!

- மை.பாரதிராஜா