மூங்கில் படிகள்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஃபர்னிச்சர் டிசைனர் செவ் பியான்ச்சி. மூங்கில்களில் எளிதாக மடக்கும் வசதி கொண்ட மாடிப்படிகளை அமைப்பதில் வல்லவர் இவர். புறாக்கூண்டு போன்ற சின்னச் சின்ன வீடுகளில் கூட மாடிப்படிகளை அமைத்துள்ளார். தனது கைவண்ணத்தை ‘Design Insider’ என்ற யூ டியூப் சேனலில், ‘Compact Furniture For Small Apartments’ என்ற தலைப்பில் வீடியோவாகத் தட்டிவிட, ஜெட் வேகத்தில் வைரலாகி வருகிறது அந்தப் பதிவு.
சிப்ஸ் ஏக்கம்
விளம்பர படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் தமன்னா. ஸ்பாட்டில் நடக்கும் ஜாலியான சம்பவங்களை அவ்வப்போது பகிர்ந்து லைக்குகளை அள்ளுகிறார். அப்படியான ஒரு சம்பவம் இது. மேக்கப் பிரேக்கின்போது சால்ட் பொடேடோ சிப்ஸை தமன்னாவின் அருகில் வேண்டுமென்றே வைத்துவிட்டனர். தமன்னாவின் ஃபேவரிட் ஸ்நேக்ஸ் அது. ஆனால், டயட்டில் இருப்பதால் அவரால் அதை தொடக்கூட முடியவில்லை.
சிப்ஸ் ஏக்கத்தை மொபைலில் ஷூட் செய்து, ‘ஒய் திஸ் கொலைவெறி’ என ஜாலி கமென்ட் அடித்து இன்ஸ்டாவில் ஏற்றிவிட்டார் தமன்னா. அப்புறமென்ன? ஒரே நாளில் ஐந்து லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
சவுண்ட் பார்
இது சவுண்ட் பார்களின் காலம். இடத்தை அடைக்காமல், பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத் தோன்றுவதால் ஸ்பீக்கர்களின் இடத்தை சுலபமாகப் பிடித்துவிட்டது சவுண்ட் பார். வீட்டுக்குள்ளேயே திரையரங்க அனுபவத்தைக் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. சமீபத்தில் ‘சோனி’ நிறுவனம் ‘5.1 சேனல் சவுண்ட் பார்’களை அறிமுகப்படுத்தியது. 1000 வாட்ஸ் அவுட்புட் சவுண்ட், ப்ளூடூத், 20 செ.மீ நீளம் கொண்ட இதன் விலை ரூ.29,990 முதல் ரூ.37,990 வரை.
ஆபத்தான நோய்
‘‘எய்ட்ஸைப் போல உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக மாறிவருகிறது ‘ஹெபடிடிஸ் சி’ எனும் கல்லீரல் தொற்று நோய்...’’ என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். இந்நோய்க்கு மூல காரணம் வைரஸ் கிருமிகள். உலகளவில் வருடத்துக்கு 15 லட்சம் பேர் இந்நோயினால் மரணமடைகிறார்கள். இந்தியாவில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது கடினம். நோய் முற்றிய பிறகே பலருக்கு ‘ஹெபடிடிஸ் சி’ இருப்பது தெரியவருகிறது. மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக இருக்கும் இதைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளில் துரிதமாகக் களம் இறங்கியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
வட கரோலினாவைச் சேர்ந்த ஏஞ்சலினா, வார விடுமுறையைக் கொண்டாட அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள நண்பரின் வீட்டுக்கு விசிட் அடித்தார். அந்த வீட்டுக்கு வெளியே ஏதோ விநோதமான சத்தம். பதறிப்போன ஏஞ்சலினா வெளியே வர, அருகிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த ‘ஹமோக்’கில் ஹாயாக உறங்கிக்கொண்டிருந்தது ஒரு கரடி. அரிய இச்சம்பவத்தை துணிச்சலுடன் வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, ஏஞ்சலினா பக்கத்தில் ‘வாவ்’கள் குவிகின்றன.
-குங்குமம் டீம்
|