வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு கைக்கொடுத்த முகநூல் தமிழ் நண்பர்கள்!
முகநூல் வெறும் வெட்டியாக அரட்டை அடிக்கத்தான் என்ற நினைப்பை அடியோடு அழித்திருக்கிறது வரலாறு காணாத கேரள வெள்ளம். இதனோடு எந்த வகையிலும் தொடர்பில்லாத தமிழகத்தைச் சேர்ந்த / தமிழில் முகநூல் பதிவுகள் எழுதும் வெளிமாநிலம் - வெளிநாடுகளில் வசிக்கும் சிலர் ஒன்றிணைந்து களப்பணி ஆற்றியுள்ளனர்.இதில் பலரும் இதற்கு முன் சந்தித்திராதவர்கள்.
முகநூல் வழியாக மட்டுமே நண்பர்களானவர்கள். ஆங்காங்கே பலரும் தேவைப்படும் பொருட்களைப் பட்டியலிட்டு அதை சேகரிக்கும் முயற்சியில் இறங்க... சென்னையைச் சேர்ந்த ஆன்மன் கேரளாவுக்குச் சென்று முகாமில் பத்து நாட்களுக்கும் மேல் தங்கி, அனுப்பப்பட்ட அனைத்து நிவாரணப் பொருட்களையும் பெற்று உரியவர்களிடம் சேர்த்திருக்கிறார்.
அவரது அனுபவங்களில் சில துளிகள்...‘இரண்டு லட்சங்களுக்கான பொருட்கள் வந்து விட்டதா?’வியப்புடன் சில நண்பர்கள் கேட்டார்கள். ஏன், வந்திருக்கக் கூடாதா என்றேன். இல்லை, இரண்டு நாட்களில் சேர்ந்து விட்டதே; அதனால் கேட்டேன் என்றார் ஒருவர். வயநாட்டிலுள்ள முண்டாரி முகாமுக்கு இதுவரை வந்த நிவாரணங்களில் நம்முடையதுதான் அதிகம்.
ஆனால், கடலில் பெருங்காயத்தைக் கரைத்த கதைதான். 1200 நபர்கள் உள்ள முகாமில் எத்தனை பொருட்கள் வந்தாலும் கரைந்து போய்விடும் என் பதுதான் எதார்த்தம். அதனால்தான் அடுத்தடுத்த உதவிகளைப் பெற்று அடுத்தகட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம். பத்து நிமிடங்கள் நிற்பதும், இருபது நிமிடங்கள் பொழிவதுமாக மழை தொடர்கிறது. நாளை மருத்துவ முகாம் நடத்துவதற்கான பணிகளில் டாக்டர் மகேஸ்வரன் மருந்துகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
19 பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து பற்றி கவலைப்பட்டார் தன்னார்வலர் சாஹிதா. மருத்துவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆவன செய்திடலாம் என்றார். பத்து வயது மதிக்கத்தக்க ஆதிஃப், இன்று பள்ளி விடுமுறை என்பதால் வேலைகள் செய்ய வந்தேன் என்கிறான். உதவும் இயல்பு தானாக வரவேண்டும் என்பதற்கு அவன் ஒரு சாட்சி. சிண்டிகேட் வங்கி அதிகாரி பிரசாந்த் ஓடி ஆடி வேலைகள் செய்துகொண்டிருக்கிறார். அவர்தான் என்னை வெள்ளம் பாதித்த இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
இடதுசாரி தோழர்களும், கவுன்சிலர்களும், அரசு அதிகாரிகளும், மாணவர்களும், தன்னார்வலர்களும் முகாமில் இருப்பவர்களை தம் சொந்தக் குடும்பத்தினர்களைப் போல் காத்து நிற்கின்றனர். ‘உயிரோடு அடித்துச் சென்ற என் கால் நடைகளின் கூக்குரல் காதுகளை விட்டு அகலவில்லை...’ என்கிறார் ஒரு பாதிக்கப்பட்ட விவசாயி. கேரள மாநிலம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் இப்படி பாதிப்பின் பிடியில் இருக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் இருந்து உதவிகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் தேவைகள் தொடர்கிறது மழையைப் போலவே. பள்ளத்தாக்குகளிலும் ஆற்றோரங்களிலும் வசித்தவர்கள் தம் தலைமுறையில் காணாத பேரழிவைச் சந்தித்துள்ளனர். கல்பெட்டாவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருச்சேர்மலா என்கிற மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கிராமங்கள் காணாமல் போய்விட்டனவாம். நல்வாய்ப்பாக மக்கள் வெளியேறியபின் நடந்திருக்கிறது அந்த நிலச்சரிவு.
இப்படியான ஈடு செய்யமுடியாத இழப்புகள் ஏராளம். ஏனோ தமிழகத்துக்கு அவ்வளவு செய்திகள் வந்து சேரவில்லை. நாம் இன்னும் பதட்டத்திற்குள்ளாகவில்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஓர் அரசு எப்படியெல்லாம் தன் மக்களுக்காக செயல்படுகிறது, அதிகாரிகள் எவ்வளவு மனமுவந்து செயலாற்றுகிறார்கள், கட்சிக்காரர்கள் எவ்வளவு தியாகத்தோடு இரவு பகல் பாராமல் மக்கள் பணி செய்கிறார்கள், சக மக்களை எப்படி மக்கள் பேணுகிறார்கள்... ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
“வெள்ள நிவாரணப் பொருட்கள்- அவசரம்” என்கிற ஒரு வாக்கியத்தைக் கண்டு வனத்துறை சோதனைச்சாவடி, எல்லைச்சோதனைச் சாவடி எல்லாம் ஒதுங்கி வழி விடுகின்றன. காவல்துறை போகலாம், போகலாமென கைசைத்து வழிவிடுகிறது. ஒரு முகாம் பற்றி தகவல் கேட்டதும் District disaster management authority (DDMA) தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய் நிலைமையை நேரடியாகக் காண்பித்து அழைத்து வருகிறது. கவுன்சிலர் தொடங்கி காவல்துறை உயர் அதிகாரி வரை நன்றி தெரிவிக்க நம் இடம் நோக்கி வருகிறார்கள்.
தங்குவதற்கான ஏற்பாடு செய்வதற்கு போட்டி போடுகிறார்கள். பேரிடருக்கு அரசும், அரசுக்குப் பேரிடரும் சவால் விட்டுக்கொள்வதைப்போல் இருக்கிறது. மழை ஓய்ந்தபாடில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு அனைவரும் பணியாற்றுகிறார்கள். நேற்று திருப்பூரிலிருந்து தோழர் யோகி செந்தில் அனுப்பி வைத்த நிவாரணப்பொருட்களை கோத்தகிரியில் தோழர் தவமுதல்வனும் இனியனும் பெற்றுக்கொண்டு அதிகாலை, முதல் பேருந்தில் கூடலூருக்கு அனுப்பிவைத்தனர்.
கூடலூரில் தோழர் ஜெகதீஸ் பெற்றுக்கொண்டு கல்பெட்டா பேருந்தில் அனுப்பி வைப்பதாக திட்டம். ஆனால், கோத்தகிரியில் புறப்பட்ட பேருந்து ஊட்டி யோடு நின்றுவிட்டது. ஊட்டி-கூடலூர் சாலையில் நிலச்சரிவு... பேருந்து போகாது என்று நடத்துனர் இனியனிடம் தெரிவித்துவிட்டார். உடனே தம்பி விஜயராஜ் சோழன், ஊட்டியில் அந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, கல்லட்டி வழியாகச் செல்லும் ஜீப்பில் ஏற்றி கூடலூர் அனுப்பி வைத்தார். அங்கிருந்து கல்பெட்டா செல்லும் பேருந்துகள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டன.
உடனே ஜகதீஸ் அழைத்தார். அங்கிருந்து சேரம்பாடிக்குப் போகும் பேருந்தில் ஏற்றி தோழர் பரமேஸ்வரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யலாம் என்றார். சேரம்பாடிக்குப் பேசினேன். தோழர் பரமேஸ்வரன் பொருட்களைப் பெற்றுக்கொண்டு காரில் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்றார். சேரம்பாடி நண்பர்கள் இணைந்து மேலும் சில நிவாரணப்பொருட்களை வாங்கிக்கொண்டு திருப்பூர் பார்சலையும் எடுத்து வந்து கல்பெட்டா சேர்ந்தார்கள். அங்கு தேவையானதைக் கொடுத்துவிட்டு மீதப்பொருட்கள் வேங்கப்பள்ளி முகாமுக்கு வேண்டும் என்றார்கள்.
இரவு பெய்த கனமழையில் வேங்கப்பள்ளி சாலை முற்றிலும் பழுதடைந்து விட்டது என்று டிஎஸ்பி தெரிவித்தார். தாசில்தாரை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். அங்கு பொருட்களை இறக்கி வைத்தோம். பின்னர் துணை ஆட்சியர் அஃப்சல்கானிடம் வேங்கப்பள்ளிக்கு டி ஷர்ட் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். உடனடியாக அதிக திறன் கொண்ட ஜீப்பை வரவழைத்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துகொடுத்தார்.
அவருக்கு நன்றியைத் தெரிவித்தபோது, நாங்கள்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார். எத்தனை நண்பர்களின் உழைப்பும் நேரமும் தேவைப்படுகிறது, ஓர் இடர்காலத்தில் செயல்படுவதற்கு! யார் சொன்னது கேரள மக்களை ஐயப்பன் கைவிட்டார் என்று? மயிலாடும்பாறையில் மழை வெள்ளத்தில் அடியோடு அடித்துச்சென்றுவிட்ட ஐந்து வீட்டு மக்களும், பழுதடைந்த நான்கு வீட்டு மக்களுமாக 34 பேர், அருகில் உள்ள நல்ல அஸ்த்திவாரமும், நல்ல கோப்பும் போடப்பட்ட ஐயப்பன் பஜனை மடத்தில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐயப்பன்தான் எங்களைக் காப்பாற்றி தங்குவதற்கு இடமும் தந்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். இன்றைய முக்கிய நிகழ்வே மருத்துவ முகாம்தான். டாக்டர் மகேஸ்வரன் நாச்சிமுத்து இன்று அதிகாலை நான்கரை மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கினார். வழி நெடுக மழை, நிலச் சரிவு, மாற்றுப்பாதை, பனிமூட்டம் என இயற்கையோடு போராடி, ஆறு இலக்க மதிப்புள்ள மருந்துகளோடு முண்டாரி முகாமுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் மருந்துகளைப் பிரித்து அடுக்கி முதலில் வந்த முதிய பாட்டிக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.
பிறகு மக்கள் வரிசை கட்டி வரவே அவர்களிடம் பொறுமையாகப் பேசி அவரே மருந்துகளை எடுத்துக் கொடுத்து சாப்பிடும் முறையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த தாசில்தார் மேடம், ‘‘மோனே எனக்கு அதிகம் பேசி பழக்கமில்லை. ஆனால், இந்த பத்து நாட்கள் இரவும் பகலுமாகப் பேசி சப்தம் வரவில்லை. டாக்டரிடம் மருந்து வாங்கிக்கொடு...’ என்றார். டாக்டர் அவருக்கு மருந்து கொடுத்தார் வெள்ளந்திச்சிரிப்போடு பெற்றுக்கொண்டார். மாலைக்குள் முகாமில் இருந்த ஏறத்தாழ உடல் நலம் குறைந்த எல்லோருக்கும் மருத்துவம் பார்த்து முடித்திருந்தார்.
‘நேரமாகிவிட்டது டாக்டர், நீங்கள் இப்போது புறப்பட்டால் தான் ஊர் போய்ச் சேர முடியும்’ என்று அவசரப்படுத்தி அனுப்பி வைத்தேன். இருநூறு பிரட் பாக்கெட்டுகள் ஒரு முகாமிற்கு வாங்கினேன், நூறுக்குத்தான் பில் வந்தது. ‘பில் தவறு’ என்றேன். கடை முதலாளி ‘ஃபிஃப்டி ஃபிஃப்டி’என்று கண்ணைச் சிமிட்டினார். வண்டி பிடித்து வருகிறேன் என்றேன். ‘வேண்டாம், நம்ம காருண்டு அதில் போய்க்கோ’ என்று அனுப்பி வைத்தார்.
‘மக்களிடம் செல்!’ என்கிற சித்தாந்தம் சாகாது...நேற்றிரவு பிஸ்கட்டுகளை வாங்கி தங்கும் விடுதியின் வரவேற்பறையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். என் அறை இரண்டாவது மாடியில் உள்ளது. அதனால் பார்சல்களைக் கீழேயே வைத்துவிட்டேன். இந்த அறை அவசரக் கோலத்தில் நானும் தோழர் சண்முகநாதனும் ஓரிரவு தங்க எடுத்தது. வாடகை 900 ரூபாய். நேற்று அவர் சென்றுவிட்டார். நான் மட்டும்தான். குறைக்க முடியுமா என்று கேட்டேன்.
முடியாது என்றுவிட்டார் மேலாளர். இவ்வளவு வாடகைக்கு நம்ம பட்ஜெட் தாங்காது என்று வேறு தங்கும் விடுதிகளில் விசாரிக்க நினைத்தேன். அதிகாலையில் எச்.ஐ.எம்.யு.பி. ஸ்கூல் முகாமுக்கு பிஸ்கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டேன். இறக்கிவிட்டு காசு வாங்க மறுத்துவிட்டார் ஆட்டோ ஓட்டும் தோழர். அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு முகாம் ஜீப்பில் டவுனுக்கு வந்தேன்.
நான்கு விடுதிகளில் விசாரித்தேன். எல்லாம் ஓவர் ரேட். ஒரு விடுதியில் 700 ரூபாய்க்கு தங்கலாம் என்றார்கள். சரி, இங்கேயே வந்துவிடலாமென முடிவெடுத்துவிட்டு காலி செய்வதற்காக விடுதிக்கு வந்தேன். வாசலிலேயே மேலாளர் நிறுத்தி, நான் கொடுத்திருந்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்தார். ஏன் என்றேன். ‘நீங்கள் எத்தனை நாள் வேண்டு மானாலும் தங்கிக் கொள்ளுங்கள். வாடகை வாங்க வேண்டாம் என்று முதலாளி சொல்லிவிட்டார்’ என்றார்.
மேலாளருக்கு போன் செய்யச்சொல்லி குறைவாகவாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். வேண்டாமென மறுத்துவிட்டார். நன்றியைத் தெரிவித்தேன். குளித்துவிட்டு காலை உணவிற்கு முதல்நாள் போன ஹோட்டலுக்குப் போனேன். சாப்பிட்டு முடித்து, பில் வரவில்லை. பில் கேட்டேன். வேண்டாம் என்று மறுத்துவிட்டார் கடை முதலாளி. நீங்கள் இங்கிருக்கும் வரை உங்களுக்கு உணவு வழங்குவது எங்கள் கடமை என்றார்!
நான்காவது படிக்கும் ஒரு குழந்தை தனது மேற்படிப்புக்காக அப்பா அம்மா தாத்தா பாட்டி கொடுத்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். அதில் ஐம்பத்து இரண்டாயிரம் இருந்ததாம். அனுப்பி வைக்கிறேன் என்றும், கேரள மக்களுக்காக தினமும் பிரார்த்திப்பதாகவும் வாட்ஸ்அப்பில் குரல் பதிவு அனுப்பி இருக்கிறார். அன்பைப் படியுங்கள் உலகம் நிலைபெறும். - ஆன்மன்
|