இமைக்கா நொடிகள்தொடர் கொலைகள் செய்து கவனம் பெறுபவனைத் தேடிக் கண்டுபிடித்து பழி வாங்குவதே ‘இமைக்கா நொடிகள்’.ஒரு சமயம் நகரத்தில் அடுத்தடுத்து குரூரமான கொலைகள் நடந்து, குற்றவாளியைப் பிடித்து விட்டதாக அறிவிக்கிறார்கள். பின்பு அதே ரீதியிலான கொலைகள் நடந்து நகருக்கும், போலீசுக்கும் தொடர் சோதனை - நிந்தனை.

சிபிஐ அதிகாரி நயன்தாரா தலைமையில் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தோல்வியே கைவசம். இந்த தொடர் ஓட்டத்தில் நயன்தாராவின் தம்பி அதர்வாவும் உள்ளே வந்துவிட, அவரது காதலியும் கொலைகாரனின் கைப்பிடிக்குள் சிக்க, அதர்வாவும் களமிறங்குகிறார். அடுத்தடுத்து சவால் விடும் கொலை காரனை அக்காவும், தம்பியும் பிடித்தார்களா, யூகிக்க முடியாதபடி நடந்த கொலைகள் முடிவுக்கு வந்ததா என்பதே பகடை உருட்டி விளையாடும் மீதி திரைக்கதை.

கொஞ்சம் புதிய களம், அவ்வளவாக கணிக்கமுடியாத திரைக்கதை என நின்று நிலைபெற்று விளையாடியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. மனதில் கனன்று கொண்டிருக்கும் கோபத்தையும், அதிகாரியாகக் காட்டும் கறார் தன்மையையும் அருமையாகக் காட்டியிருக்கிறார் நயன். கொலைகாரனின் ஆட்டத்தை நிறுத்த, நயன் மேற்கொள்ளும் உத்திகளில் படம் பயணமாவதால் விறுவிறுப்பிற்கு ஏற்ற பவர் ப்ளே ஏரியா அமைந்துவிட்டது.

அதையே  உள்வாங்குவதால், நயன் வரும் நிமிடங்களில் திரைக்கதை சூடுபிடிக்கிறது. விறைப்பும், முறைப்புமாக கேரக்டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுக்கிறார்.அதர்வா - ராஷி கண்ணா காதல், விசாரணைக் காட்சிகளுக்கு இடையூறு. ஆனாலும் ரசிக்க வைக்கிறது. மூக்கு சிவக்க கோபப்பட்டு மோதுவதிலும், அக்காவிடம் பிரியம் காட்டுவதிலும் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார் அதர்வா.

படத்தின் பெரிய கண்டுபிடிப்பு அனுராக் காஷ்யப். பர்ஃபெக்ட் ஃபிட். ஹீரோ போல் படத்தில் நிறைந்திருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியை சிதைப்பதிலும்; எந்தப் பதற்றமும் இல்லாமல், சிரித்த முகத்தில் வஞ்சகம் காட்டுவதிலும்; நயனின் கண்களில் கையைவிட்டு ஆட்டும் பக்கா வில்லன்.

கொஞ்ச நேரமே வந்தாலும் விஜய் சேதுபதி மனம் திருடுகிறார். பாடல்களில் குறிப்பிட  முடியாமல் போனாலும், பின்னணியில் பதற்றம் ஏற்றுகிறார் ஹிப் ஹாப் தமிழா. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு, த்ரில்லர் கதைக்குத் தேவையான அச்சம் கூட்டுகிறது. பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் கூடுதல் சிறப்பு. போலீஸ் ஒரே செட்டாகத் துரத்த, சைக்கிளில் அதர்வா பறந்து தப்பிப்பது காமெடி.

படத்தின் மெகா நீளளளளம் சலிப்பு. இவ்வளவு கூடுதல் திருப்பங்கள் தேவைதானா? லாஜிக்கை மறந்தே விட்டார்கள். ஒவ்வொரு வருக்கும் முன்கதைச் சுருக்கம் ஏனோ! நீளத்தைக் குறைத்து, மற்ற ஏரியாக்களில் கவனம் திருப்பியிருந்தால் ‘இமைக்கா நொடிகள்’ இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

- குங்குமம் விமர்சனக்குழு