டுவிட்டர் அரசாங்கம் !



அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இந்திய பிரதமர் மோடி வரை அனைத்து அரசியல் தலைவர்களும் சமூகவலைத் தளங்களையே அதிகாரபூர்வ ஊடகமாக்கி நீதி வழங்கி வருவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்! பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முதல் தெலுங்கானா மாநிலத்தின் ஐடி அமைச்சரான கே.டி.ராமாராவ் வரை டுவிட்டர்களிலேயே மக்களின் குறைகளைத் தீர்த்து பிரபலமாகி வருகின்றனர்.

படிப்பு, ஆபரேஷன், சாலை, குடிநீர் என அத்தனை புகார்களையும் ஏற்று தெலுங்கானாவின் ஐடி அமைச்சர் ராமாராவ் (கே.டி.ஆர்) டுவிட்டரிலேயே தீர்வு தருகிறார். தனது டுவிட்டர் கணக்கில் ‘உங்கள் குறைகளை எனக்குத் தெரியப்படுத்தினால் அதனை உரிய அமைச்சகத்துக்கு அனுப்புகிறேன்...’ என்று அவர் கொடுத்துள்ள வாக்குறுதி பொய்யல்ல!

இந்த டுவிட்டர் முறை புதிதல்ல. 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜஹாங்கீர் காலத்தில் தங்கள் குறைகளை நேரடியாக அரசரிடம் மக்கள் தெரிவித்தனர். இம்முறைக்கு ‘தர்ஷன்’ என்று பெயர். இதன் நவீன வடிவம்தான் இன்றைய டுவிட்டர் குறை கேட்கும் முறை.‘உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் வசித்தாலும் அவர்களுக்கு ஒரு குறை என்றால் இந்திய வெளியுறவுத்துறை உதவும். 15 நிமிடங்களில் தீர்வு!’ என அமெரிக்காவில் மார்தட்டினார் இந்தியப் பிரதமர்.

ஓரளவு இதைச் செயல்படுத்தியும் வருகிறார்கள். இப்படி அமைச்சர்களே தலையிட்டு தீர்வுகள் அளிப்பது பிரமிப்பைக் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட துறைகள் சரியாகச் செயல்பட்டால் இப்படி டுவிட்டரில் குறை சொல்லும் நிலை ஏற்படாதே என சமூக ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்வியை புறக்கணிக்க முடியாது. உள்ளாட்சி முதல் நகர நிர்வாகங்களின் செயலற்ற தன்மை வரை நீக்கமற நிறைந்திருக்கும் சோம்பலைடுவிட்டர் மாற்றிவிடாது! அமைச்சர்களுக்கு இதுமாதிரியான டுவிட்டர் தீர்வு இன்ஸ்டன்ட் புகழைத் தருமே தவிர ஏழைகளுக்கு இதனால் ஒரு பலனும் இல்லை என விமர்சகர்கள் பட்டியலிடுகிறார்கள்.

“சிறிய டுவிட்டின் மூலம் மக்களின் பிரச்னைகளைத் தீர்த்துவிடுகிறேன்...’ என தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்கா H1B விசா பிரச்னைகளை இப்படி சொடக்கு போடும் நேரத்தில் தீர்வு காண முடியுமா?‘அரசியல்வாதிகள் டுவிட்டர் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பது உதவிகள் கிடைக்காத ஏழைகளுக்கல்ல; மேல்தட்டு வர்க்கத்துக்கு...’ என்று சொல்லும் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான பிரிட்டிஷ் நந்தியின் கூற்றில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

சமூகவலைத்தளங்கள் பல்லாயிரம் மக்களை இணைத்தாலும் அவை எட்ட முடியாத தொலைவில் பலகோடி மக்கள் உள்ளனர். எனவே, நேரடியாகச் சென்று குறைகளைக் கேட்பதோடு, நாளிதழ்களில் வெளியாகும் பிரச்னைகளையும், புகார்களையும் அடையாளம் காண முயற்சிப்பதே ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு!   

- ரோனி