45 லட்சத்துக்கு குழந்தைகள்!
குஜராத்தைச் சேர்ந்த குழந்தை கடத்தல் தொழில்அதிபரை மும்பை போலீஸ் அதிரடியாகக் கைது செய்துள்ளது. இவர் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ளார். ராஜுபாய் கம்லேவாலா என்ற பெயர் கொண்ட அவர், 2007லிருந்து ‘இத்தொழிலில்’ ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் ரூ.45 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 11 - 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிவைத்து பெற்றோர்களிடம் விலை பேசி வாங்கி வெளிநாடுகளுக்கு விற்றுள்ளார் என்கிறது போலீஸ் வட்டாரம். அமெரிக்கர்களிடம் லிஸ்ட்டைப் பெற்று குழந்தைகளை விலை பேசி வாங்குவது ராஜுபாய் குழுவின் முதல்பணி. பின்னர் பாஸ்போர்ட்டுகளை வாடகைக்கு எடுத்து அதிலிருக்கும் போட்டோவுக்கு ஒற்றுமையாக உள்ள குழந்தைகளின் போட்டோக்களை ஒட்டி அமெரிக்காவுக்கு கடத்துவது இரண்டாவது பணி.
இக்குழுவை தன் சலூன் நண்பர் கொடுத்த தகவல் அடிப்படையில் நடிகை ப்ரீத்தி சூட் அம்பலப்படுத்தினார். கைதான ராஜுபாய் குழுவினர் இந்தியச் சட்டம் 373 பிரிவு 34ன் கீழ் குழந்தைகள் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
நற்குடிமகன் விருது!
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அனைவருக்கும் ஆசைதான். ஆனால், போலீசின் டார்ச்சர்களும், இழுத்தடிப்பு களுமே மக்களை பெருமளவு பயமுறுத்தி வருகின்றன. இப்பயத்தைக் களைய இந்திய அரசு விபத்தில் உதவுபவர்களை ஊக்கப்படுத்த நற்குடிமகன் விருதை (ஜீவன் ரக்ஷா பதக்) வழங்க ஆலோசித்து வருகிறது.
விபத்து ஏற்பட்டு ஒருமணிநேரத்திற்குள் - கோல்டன் நேரத்தில் - பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தால் 50 சதவிகித உயிர்களைக் காப்பாற்றமுடியும். கடந்தாண்டில் மட்டும் 1.46 லட்சம் உயிர்கள் சாலை விபத்துகளால் பறிபோயுள்ளன.“விபத்துகளில் உயிர்களைக் காப்பாற்றுபவர்களுக்கு தேசியளவிலான விருதளிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து ஒப்புதல் பெற்றுள்ளோம்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நபர்களுக்கு லீகல் பிரச்னை இருக்காது” என நம்பிக்கை தருகிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. சுரங்கம், நீர், நெருப்பு ஆகியவற்றில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுபவர்களுக்கு ரக்ஷா பதக் என்னும் விருதை இந்திய அரசு வழங்குகிறது. இதில் சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் என மூன்று பிரிவுகள் உண்டு.
ஜாலி திருட்டு!
தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் விஷால். இவர் துக்ளாபாத் அருகே போட்டோ எடுத்துக் கொண்டிருந்த மாடல் போட்டோகிராபரை தன் நண்பர்களுடன் சேர்ந்து வம்புக்கு இழுத்து அவரைத் தாக்கி கேமராவை அபேஸ் செய்துவிட்டார். ஆனால், ஓடும்போது போலீசிடம் சிக்கிக் கொண்டார். விசாரணையின்போது அந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது நண்பர்களுக்கு ஜாலி பார்ட்டி வைக்க இப்படி அடிக்கடி விஷால் திருட்டில் ஈடுபடுவாராம்!
- ரோனி
|