punishment!
செய்தி: டிராஃபிக் போலீசுடன் தகராறு செய்த வாலிபருக்கு சம்பவம் நடந்த இடத்தில் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்தை சரிசெய்யவேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல் தண்டனையை வேறு எங்கெல்லாம் நிறைவேற்றலாம்?
காதலுக்கு மரியாதை
‘அந்தக் காலத்தில் நாங்கலாம் பெண்களை தெய்வமா மதிப்போம்...’ என அடிக்கடி ரவுசு விடும் பெருசுகளை தண்டிக்க சிறுசுகளுக்கு இருக்கும் ஒரே வழி அப்பெருசுகளின் பால்யகால நண்பர்களைச் சந்தித்து வீடியோ பேட்டி எடுப்பதுதான்!‘எங்க ஊரு ஆத்தங்கரை, ஏரிக்கரையைக் கேட்டா இவன் லீலைகளை அவுத்துவிடும். வளையல், பாவாடை தாவணி வாங்க வீட்ல இருக்கிற மல்லாக்கொட்டை பயிரை திருட்டுத்தனமா குறைஞ்ச விலைக்கு விப்பான். பொண்ணு பின்னாடி சுத்தி எட்டாவதுல ஃபெயிலானான்...’ மாதிரியான வெடிகுண்டுகளைப் பதிவு செய்து ரவுசு பெருசுக்குக் காட்டி மிரட்ட வேண்டும்!
தெய்வப்பிறவி
சதையே இல்லாத மாம்பழம் போல கதையே இல்லாத மொக்கை படங்களைத் தயாரித்து, பிரமோஷன் என்ற பெயரில் எதிர்பார்ப்புகளை எகிறவிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களைக் கதற விடும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் நடிகைகளை தண்டித்தே ஆக வேண்டும். இதற்கான தீர்ப்பு ஒன்றே ஒன்றுதான். அவர்கள் எடுத்த படத்தை அவர்களே தொடர்ந்து மூன்று ஷோ ஆடாமல் அசையாமல் அமர்ந்து பார்க்க வேண்டும். இதன்பிறகு நிச்சயம் ரசிகர்களை தெய்வப்பிறவியாக மதித்து கோயில் கட்டி கும்பிடுவார்கள்.
பாசமலர்
கல்யாணம் நிச்சயமான பிறகு லவ் டார்ச்சர் செய்யும் ரோமியோக்களை என்ன செய்யலாம்? அவன் வீட்டுக்கு திடீரென்று சென்று பெற்றோர் எதிரில் அவன் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து ரக்ஷாபந்தன் இல்லாவிட்டாலும் கையில் ராக்கி கயிற்றை இறுகக் கட்ட வேண்டும். மூச்சுக்கு முந்நூறு முறை ‘அண்ணா... அண்ணா...’ என அழைக்க வேண்டும். இதன் பிறகு கோயிலில் பிரசாதம் வாங்கக் கூட அந்த ரோமியோ கை நீட்ட மாட்டான்!
பாவமன்னிப்பு
‘இட்லி அரை அங்குலம் பெருசா இருக்கு... ஹோட்டல் சாம்பார் மாதிரி உன் சாம்பார் ருசியா இல்ல... பாட்டி வைக்கிற ரசம் நல்லா இருக்கும்... பொரியல், கூட்டு எல்லாம் ஒரே மாதிரி இருக்கு... சப்பாத்தி வட்டமா இல்ல...’என்றெல்லாம் தினமும் குறை சொல்லும் கணவனைத் தண்டிக்க அவனை காலை 5 மணிக்கு மனைவி அவன் முகத்தில் தண்ணீர் ‘அடித்து’ எழுப்பவேண்டும். சமையல் அறைக்கு அனுப்பி அக்கதவைப் பூட்ட வேண்டும்.
இதற்கு முன் சமையலறையில் ஸ்பீக்கர் பொருத்த வேண்டியது அவசியம். பின்னர் ஹாலில் இருக்கும் மைக் வழியே 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ‘சமையல் ஆச்சா..?’ எனக் கத்த வேண்டும். கையறு நிலையில் கேஸ் ஸ்டவ் முன்னால் நின்றபடி செல்ஃபி எடுத்து பாவ மன்னிப்பை கணவன் கேட்டபிறகே மனைவி மன்னிக்க வேண்டும்!
- எஸ்.ராமன்
|