எதார்த்தப் படங்கள் எடுப்பது சுலபம்!



இந்த வருடத்தின் ஆச்சர்ய சினிமா ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. படம் நெடுகிலும் படம் பிடித்திருந்த அழகு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு எக்கச்சக்க பெயர் சேர்த்திருக்கிறது.சினிமா வாசனையே இல்லாத நடுத்தரக் குடும்பத்திலிருந்து முளைத்து வந்தவர். தணியாத தாகம், தளராத வேகம் என தனக்கான சினிமாவைக் கற்று உயரம் தொட்டிருக்கிறார். அதிராத குரலில் தன் உள்ளங்கை ரேகையைப் பார்த்துக்கொண்டு பேசினார் ஈஸ்வர்.

‘‘தியேட்டரின் அரையிருட்டில் ஆரம்பிச்சது வெளிச்சத்துக்கான என் கனவு. தேனியிலிருந்து சினிமாவின் தாக்கம் கொண்டு வந்துவிட்டேன். பத்திரிகை நண்பர்களோடு நடிகர்களைப் படம் பிடிக்கச் செல்லும்போது படப்பிடிப்பை கூர்ந்து கவனிப்பது வழக்கம். இயக்குநர் கரு.பழனியப்பன் என் ரூம்மேட். அந்த சமயம் ‘சதுரங்கம்’ செய்துகொண்டு இருந்தார். ஒளியின் வித்தியாச அடுக்குகளைப் பார்த்துக்கொண்டு இருக்க முடிகிற வாய்ப்பு அமைந்தது.

யாரிடமும் சேர்ந்து வேலை பார்த்ததில்லை. ஒரு நல்ல ஸ்கிரிப்ட்தான் கேமராவோட தன்மையைத் தீர்மானிக்குது.அப்புறம் இயக்குநருக்கும், கேமராமேனுக்கும் மத்தியிலிருக்கிற புரிதல். உண்மையில் யதார்த்த சினிமா எடுப்பதைப்போல சுலபமான விஷயம் எதுவும் கிடையாது. உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது.

எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது.நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா.டெக்னாலஜி, ஒளிப்பதிவுக்கு நிறைய சுதந்திரங்களையும், வசதியையும் கொடுத்திருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு அலாரம் வைத்து, நான்கு மணிக்கு மலையில் பயணம் தொடங்குவோம்.

தேவாரம் மலையின் ஆரம்பத்தில் அதிகாலையில் சுடச்சுட கேசரி கிடைக்கும். அதை சாப்பிட்டு முடித்து ஆரம்பிக்கிற பயணம் மாலை கடந்துதான் முடியும்.சொல்லப்போனால் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மிக ஆழமான வேதனையின் குறிப்பு. இந்த வேதனைகளை தனிமனிதன், சமூகம் சார்ந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாது. நான் இந்த சினிமாவை நம் எல்லோருக்குமான படமாகத்தான் பார்த்தேன்.லெனினோடு பேசும்போது ‘நாம் நினைச்சு பேசுறதை அப்படியே திரையில் கொண்டு வந்துடணும்.

கொஞ்சமும் சலித்து நின்னுடக்கூடாது...’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். சொன்னது மாதிரியே துடியாக இருந்தார் லெனின். நினைச்சதை சாத்தியப்படுத்தினார். கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும். திரையிட்ட இடமெல்லாம் மக்களின் வசீகர வார்த்தைகளைக் கேட்கும்போது சந்தோஷம் மேலிடுகிறது.இது சமயம் ஒளிப்பதிவில் இருந்த ஈடுபாட்டைப் பார்த்து முதல் வாய்ப்பளித்த இயக்குநர் சுசீந்திரனை நினைத்துப் பார்க்கிறேன்.

‘அழகர்சாமியின் குதிரை’ என் நம்பிக்கையின் முதல் வெளிச்சம். பிறகு இயக்குநர்கள் ராம், பாலா என அடுத்த அடிகளைத் தொடர்ந்து வைத்தேன். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ என சில படங்களைச் செய்ய முடியாமல் காலம் அமைந்துவிட்டது இழப்புதான்.லெனின்பாரதி இந்தப் படத்தை எத்தனை தடவை மனதில் நகர்த்தியிருப்பார் என்பதை நான் அறிவேன்.

உங்க மனசுக்குள்ளே ஓடுற படத்தை ஒவ்வொரு மனசுக்குள்ளேயும் ஓட்டுற வித்தை பிடிபடுற வரைக்கும் மத்ததெல்லாம் சும்மாதான். லெனினுக்கு அந்த வித்தை கைவந்தது. சமையலில் கைப்பக்குவம் போல சினிமாவில் இந்த கலைப்பக்குவம் பழகணும். ஒரு நல்ல நம்பிக்கையைக் கொடுத்த இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதுதான் என் பெரிய மகிழ்ச்சி...‘மேற்குத் தொடர்ச்சி மலை’ மிக ஆழமான வேதனையின் குறிப்பு. இந்த வேதனைகளை தனிமனிதன், சமூகம் சார்ந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாது.

- நா.கதிர்வேலன்