நிஜமான காஷ்மீரில் நிஜமாகவே எடுக்கப்பட்ட தமிழ்ப் படம்!‘‘எனக்கும் சினிமாவுக்குமான காதல் எப்பவும் உணர்வுபூர்வமான விளையாட்டு. இன்னிக்கு தமிழ் சினிமா பாக்கிறவங்களோட ரசனை பெரிய  உயரத்துக்கு வந்திருக்கு. புதுசா இருந்தாலும் திறமையானவர்களைக் கொண்டாடுறாங்க. சரக்கு இல்லேன்னா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்  நிராகரிக்கிறாங்க. நல்ல கதைகளும், புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரியானவர்களுக்கு மூலதனம்.  புதுசா பண்ணினா மரியாதை கிடைக்கும், வரவேற்பு இருக்கும்னு நம்பிக்கையோட ‘சாலை’ படத்தை எடுத்திருக்கோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார்  இயக்குநர் சார்லஸ். ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் கருத்தால் கவர்ந்தவர்.

எப்படியிருக்கும் ‘சாலை’?


கதைக்கு தேவைப்பட்ட ஒரே இடம் காஷ்மீர். கனவு மாதிரி அப்படியே பனியா கொட்டுற இடம் தேவைப்பட்டது. பெரிய பரப்பு எப்பவும் படத்தில்  இருந்துகிட்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ள கதை. ஒரு த்ரில்லருக்கு அந்தப் பனியே ஒரு கேரக்டராக நிக்கும். பொதுவாக கோடையில் பனி  குறைந்து, பூக்கள் மலர்ந்து, குளிர் மட்டுப்பட்டு... அதுதான் அங்கே சுற்றுலாவுக்கான அழகான பொழுது. படத்தை நானே தயாரிப்பதால் நினைச்சபடி  எடுக்க முடிந்தது.

ஆனால், நாங்க காஷ்மீர் போனது நல்ல குளிர்காலத்துல. அட்வென்ச்சர் டிரிப் மாதிரி ஆகிவிட்டது. ஒரு நல்ல சைக்கலாஜிக்கல் த்ரில்லர் தமிழில்  வந்து எவ்வளவு நாளாச்சுன்னு யோசிச்சுப் பாருங்க. பொதுவா த்ரில்லர்னா பயமுறுத்தும். பதறிப் பதறி நடுங்க வைக்கும். அப்படி இல்லாம, மெதுவாக  ஆரம்பித்து இறுதியில் உங்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விடையளிக்கும். முதல் பாதி முழுக்க அடுக்கடுக்கா வந்து விழுகிற முடிச்சுகள்... அடுத்த  பாதி அவை அவிழ்கிற விதம்... நிறைய உளவியலைச் சேர்த்து சொல்றோம்.

காஷ்மீரில் படமெடுப்பதும், அங்கே கதையைக் கையாள்வதும் எப்படியிருந்தது..?

படத்தில் ஒரு நல்ல சோஷியல் மெசேஜ் இருக்கு. ஐ.ஐ.டி.யில் படிச்ச பையன் தன் கேரியர் பற்றி முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி ஏகாந்தமா ஒரு  பயணம் போயிட்டு வரணும்னு நினைக்கிறான். அப்படி தேர்ந்தெடுக்கிற இடம்தான் காஷ்மீர். அங்கே அவனை மாதிரியே இருக்கிற இன்னொருத்தன்.  ஒரு கட்டத்தில் இவனுக்கே அவன் யாருன்னு தெரிய வேண்டிய நிர்ப்பந்தம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் எல்லாமே புரிந்து, காட்சிகளின் திரை விலகி,  உண்மை புலப்படுகிறது. காஷ்மீரில் படம் எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. எம்ஜிஆர், சிவாஜி காலத்தோடு காஷ்மீரில் படமெடுக்கிற காலம்  நிறைவெய்திவிட்டது. இப்பொழுது இந்திப் படங்களைக் கூட அங்கே எடுப்பதில்லை.

காஷ்மீர் என நாம் நம்பி பார்ப்பதெல்லாம் ஜம்மு, லடாக் பகுதிகள்தான். ஆனால், அதை விடவும் காஷ்மீரின் உள்பகுதி வசீகரமானது. எந்தக்  கோணத்தில் கேமராவை வைத்தாலும் பனித்தூவல்களின் அழகு சொல்லி மாளாது. பனிப்புயல்களைக் கடந்து படப்பிடிப்பு நடந்தது. ஒரு நல்ல  காட்சியை, தால் ஏரியில் படமாக்கிக் கொண்டிருக்கும் பொழுது படகு மூழ்கியது. கேமரா ஏரியின் ஆழத்துக்குப் போய் உறங்கிவிட்டது. குழுவினர்களில்  இரண்டு பேருக்கு மட்டுமே நீச்சல் தெரியும். உடனே பக்கத்தில் வந்த படகுக்காரர் தண்ணீரில் குதித்து எல்லோரையும் கரை சேர்த்தார்.

ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கிளம்பிவிடலாம் என்றபோது படக்குழுவினர் என்னை ஆசுவாசப்படுத்தினார்கள். இப்போது காட்சிகளைப் பார்க்கும்போது,  பட்ட கஷ்டங்கள் எல்லாம் வெயில் கண்ட பனி போல் மறைந்து விடுகிறது. மற்றபடி அங்கே இருக்கிற ராணுவத்தின் கண்காணிப்பு, தீவிரவாதிகள்  அதை மீறிச் செயல்படும் விதம் எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த ஷூட்டிங் நடந்தது. தமிழ் மக்களுக்கு ஒரு புது விஷயம், அனுபவப் பரப்பு  கிடைக்க எல்லா இடைஞ்சல்களையும் தாங்கி, தாண்டி வந்தோம்.

இவ்வளவு தூரம் வந்து தங்கி நடித்தவர்கள் யார்?


‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ என்ற படத்தில் நடித்த விஷ்வாதான் ஹீரோ. அவர் எப்போதும் அதிக நேரம் இரவு விழித்திருந்து, காலையில் பின் தூங்கி  எழுவார். அவரை அழைத்துப்போய் எடுப்பதற்குள் சிரமப்பட்டோம். இரண்டு வேடங்களில் நடிக்கிற பெரு வாய்ப்பை அவர் அப்படித்தான்  உதாசீனப்படுத்தினார். என்ன செய்வது, ஹீரோ ஆயிற்றே... அவர் வரும்வரை காத்திருந்துதான் படமாக்கினோம். நாங்கள் குழுவாகப் போகும்போது  ராணுவம் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது. படத்தை நியூ ஜெர்ஸி திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தோம். அவர்கள் இவருக்கு சிறந்த நடிகர்  பட்டம் கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இடையூறு செய்திருந்தாலும், அதைஅவருக்குத் தெரிவித்தோம். ‘ஏதோ மன நிலையில்  உங்கள் ஷூட்டிங்கிற்கு வர முடியவில்லை. மன்னித்துவிடுங்கள். இனிமேல் அந்தத் தவறு நடக்காது...’ என்றார். க்ரிஷா என்ற அருமையான பெண்தான்  ஹீரோயின். ‘கோலி சோடா 2’ வில் ஒரு கதாநாயகியாக வந்தார். விஷ்வாவிற்கு நேர் எதிரிடையாக அவ்வளவு கொடும்பனியில் கஷ்டப்பட்டாலும்  இஷ்டப்பட்டு நடித்தார்.

பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது...


வேதிசங்கர்தான் மியூசிக். முந்தைய என் படத்துக்கும் அவர்தான் இசை. பாடல்கள் மூன்று, தக்க தருணங்களில் வந்திருக்கிறது. கேமராமேன்  பாலமுருகனின் வேலை இதில் மெச்சத்தக்கது. இவ்வளவு கடுங்குளிரிலும் படத்துக்கான ஒளிப்பதிவை கச்சிதமாகச் செய்வது சாதாரண வேலையல்ல.  காஷ்மீர் வந்து சென்றவர்களுக்கு இதன் அர்த்தம் புரிபடும். வீண் பரபரப்பைத் தராமல், அமைதியாக உச்ச கணத்துக்கு அழைத்துச் செல்லும் கதை  அமைப்பு நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு புதிதானது. நல்ல ஒரு படைப்புக்கான உத்தரவாதத்தை உங்களுக்குக் கையளிக்கிறேன்.

                                      
-நா.கதிர்வேலன்