ஏசியை குறைக்கும் அரசு!டீசல், பெட்ரோல், ஜிஎஸ்டி என மக்களின் தினசரி வாழ்வையே  கைப்பிடிக்குள் கொண்டுவந்த இந்திய அரசு, இப்போது நம் வீட்டு  வரவேற்பறைக்குள்ளும் நுழைந்து ஏசியை குறைக்கவிருக்கிறது! மின்சார சிக்கனத்துக்காக இனி இந்தியாவில் விற்கும் ஏசிகள் அனைத்தும் அதிகபட்சம்  24 - 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் மட்டுமே இயங்கும்!

இது தொடர்பான அறிவிப்பை மின் வாரியங்களுக்கும், மின் சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அரசு அனுப்பிவிட்டது. ஏசியில் ஒவ்வொரு டிகிரி  செல்ஷியஸ் வெப்ப நிலையை உயர்த்தும்போதும் 6% மின்சாரம் செலவாகிறதாம். பெரும்பாலும் ஹோட்டல்கள், ஆபீஸ்களில் 18 - 21 டிகிரி  செல்ஷியல் மட்டுமே வைக்கிறார்களாம். இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரவே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்!

மரக்கன்றுகளே வரதட்சணை!

தங்கம், பைக் என வரதட்சணை பெயரில் சிலர் கொள்ளையடிக்கும் காலத்தில் ‘மரக்கன்றுகளே போதும்’ என ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஒடிஷா  ஆசிரியர் ஒருவர். கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ்கந்தா பிஸ்வால், தன் திருமணத்துக்கு கேட்ட வரதட்சணை என்ன தெரியுமா? 1001  மரக்கன்றுகள்!

சௌதாகுலட்டா கிராமத்தைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான பிஸ்வால், பள்ளி ஆசிரியை ராஸ்மிரேகா பைடாலை அண்மையில் திருமணம்  செய்துகொண்ட நிகழ்வில்தான் மேற்சொன்ன நெகிழ்ச்சி சம்பவம். இயற்கைச் சூழலைக் காக்கும் விதமாக பழமரக் கன்றுகளை உறவினர்களுக்கு  வழங்கிய பிஸ்வால், திருமணத்தில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும்விதமாக டிஜே இசை நிகழ்வையும், பட்டாசுகளை வெடிப்பதையும்  தவிர்த்திருக்கிறார்!

செய்யாத தவறுக்கு 14 ஆண்டு சிறை!

தில்லி, ரோஹ்டக், சோனேபட், காசியாபாத் ஆகிய இடங்களில் 1996 - 97ம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தவறுதலாக  குற்றவாளியாக்கப்பட்ட ஆமிர்கான் 14 ஆண்டுகள் சிறைவாசம் கழித்து மீண்டிருக்கிறார். ‘‘ஆலியாவின் காதல்தான் கொடுஞ்சிறை அனுபவத்திலிருந்து  என்னைக் காப்பாற்றியது.

ஏறத்தாழ ஷாரூக் - ப்ரீத்திஜிந்தாவின் ‘வீர் ஸரா’ திரைப்படம் போன்றதுதான் எங்கள் காதல் கதையும்!’’ என்கிறார் ஆமிர்.  இவருக்கு ஆதரவாக 2015ம் ஆண்டு களமிறங்கிய தேசிய மனித உரிமைக் கமிஷன் இவருக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சத்தை அரசிடம் போராடி பெற்றுக்  கொடுத்துள்ளது. 18 வயதில் கைது செய்யப்பட்டவர், 32 வயதில் விடுதலையாகி தனக்காகவே காத்திருந்த ஆலியாவை மணந்திருக்கிறார்!

இந்தியா ரொம்ப பிஸி!

ஐடி துறையினர் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டும் விடுமுறை எடுக்க முடியாதபடி பிஸிதான். ட்வென்ட்டி 20, ஒருநாள், டெஸ்ட் என அடுத்த  ஐந்தாண்டுகளுக்கு பம்பரமாக சுழலப் போகிறது விராட் கோலி படை. 2023 வரை இந்தியா 51 டெஸ்ட் போட்டிகள், 83 ஒருநாள் போட்டிகள், 69  ட்வென்ட்டி 20 போட்டிகள்... என மொத்தம் 203 போட்டிகளில் அடித்து விளையாடப் போகிறது.

போதாதா? உலகளவில் பிஸியாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கே முதலிடம். அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத்  தீவுகளும் (186), இங்கிலாந்தும் (175) உள்ளன. ஆனால், டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலிடமும், ட்வென்ட்டி 20 போட்டியில் கரீபியன் பிரதர்ஸ்  முதலிடமும் வகிக்கின்றனர்.   

சொகுசுக்காக அழிக்கப்படும் மரங்கள்!

தில்லியில் அரங்கேறும் காற்று மாசு விவகாரம், உலகளாவிய சூழலியல் தளங்களில் முக்கிய செய்தியானது. இதில் பலரும் அறியாத விஷயம்,  மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் 16 ஆயிரத்து 500 மரங்கள், குடியிருப்பு வசதிக்காக அநியாயமாக வெட்டப்பட்டு வரும் அவலம். சரோஜினி நகர்,  நௌரோஜி நகர், நேதாஜி நகர், தியாக்ராஜ் நகர், மொகமத்பூர், கஸ்தூர்பா நகர், ஸ்ரீனிவாஸ்புரி ஆகிய இடங்களிலுள்ள மரங்களை வெட்ட வனத்துறை  அனுமதி கொடுத்ததால் விளைந்த விபரீதம் இது.

‘‘குடியிருப்பு வசதிக்காக என்று கூறி மரங்களை வெட்டினால் இப்பகுதிகளிலுள்ள குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் பாதிக்கப்படமாட்டார்களா?’’ என  கேள்வி எழுப்புகிறார் மரங்களைக் காக்க போராடிவரும் ‘ஜட்கா.ஆர்க்’ வலைத்தள நிறுவனரான சிக்லா குமார். ஒரு மரம் வெட்டப்பட்டால் பத்து  மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது வனத்துறையின் விதி. 1500 மரங்கள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில் மற்றவற்றைக் காப்பாற்ற ‘ஜட்கா.ஆர்க்’  பிரசாரம் செய்து வருகிறது.

நியூஸ்‌ ரீடரை அழவைத்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தன் நாட்டில் குவியும் சட்டத்துக்குப் புறம்பான அகதிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் zero-tolerance  என்னும் கொள்கை மூலம் ஆவணங்களில்லாத பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து தனித்தனி முகாம்களில் அடைத்து வருகிறது  அமெரிக்கா. இதுகுறித்து அதிபரின் மனைவி மெலனியா ட்ரம்ப், அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அகதி குழந்தைகளின் முகாம் குறித்த செய்தியை ஒளிபரப்பிய ‘எம்எஸ்என்பிசி’ சேனலில் அச்செய்தியை வாசிக்கும்போதே கதறி அழுத  நியூஸ் ரீடர் ரேச்சல் மேடோவின் செய்கை உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. லைவில் செய்தியைப் படித்தவுடன் நம்பவே  முடியவில்லை என்று பேசிய ரேச்சல் கண்கள் கசிய அதிர்ச்சியில் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டார். ‘‘செய்தி வாசிப்பதே என் வேலை. தவறுக்கு  மன்னித்துவிடுங்கள்!’’ என ரேச்சல் கேட்டது மக்களின் மனதைத் தொட இணையத்தில் வைரலாகி வருகிறது அவரது செய்தி வீடியோ.

தொகுப்பு: ரோனி