தாமஸ் மன்றோ சிலை!



சென்னை தீவுத்திடல் என்றதுமே பொருட்காட்சிதான் நினைவுக்கு வரும். ஆனால், அந்தத் திடலுக்கு நடுவே மவுண்ட் ரோடில் ஒரு குதிரையின் மீது  கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த ஆங்கிலேயர் பற்றி யோசித்திருப்போமா?

மோசமாகவும், கடுமையாகவும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர் என்றே படித்து வந்திருந்த நமக்கு, சில நம்பிக்கை தந்த ஆட்சியாளர்களும் இங்கே  இருந்தனர் என்பதை தாமஸ் மன்றோவின் அந்தச் சிலையைப் பார்ப்பதன் மூலமே அறிய முடியும். விவசாயத்தில் ‘ரயத்வாரி’ சீர்திருத்த முறையைக்  கொண்டு வந்து விவசாயிகளின் கடவுளானவர் மன்றோ. ஐரோப்பிய அதிகாரிகளை விட உள்ளூர் மக்களே நிர்வாகத்தில் அதிகமிருக்க வேண்டுமென  விரும்பியவர். பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு செய்த மோசடிகளையும், கொடுமைகளையும் நேரடியாகக் கேட்டார்.

‘‘உள்ளூர் மக்களை முக்கியமான அலுவலகங்களிலிருந்து விலக்கிவிட்டு ‘Paternal Government’ என எந்த அடிப்படையில் சொல்ல முடியும்?  நாளை பிரிட்டனை இன்னொரு வெளிநாட்டுச் சக்தி கட்டுப்படுத்தி, மக்களை அரசிடம் இருந்து விலக்கி வைத்தாலோ, ஒவ்வொரு சூழ்நிலையிலும்  நம்பிக்கையற்றவர்களாக ஆக்கினாலோ, அவர்களை இரண்டு தலைமுறைகளானாலும் காப்பாற்ற முடியாது. நீங்கள் இந்தியாவை இங்கிலாந்தாகவோ,  ஸ்காட்லாந்தாகவோ மாற்ற இயலாது. நீங்கள் இந்த இடத்தைவிட்டுச் செல்லத்தான் வேண்டும். இந்தியர்கள் தாங்களாகவே இந்த நாட்டை ஆண்டு  கொள்வார்கள்...’’ என தன்னுடைய அலுவலகக் குறிப்பில் குறிப்பிடுகிறார் மன்றோ.

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் 1761ம் ஆண்டு பிறந்த தாமஸ் மன்றோ, சாதாரண சிப்பாயாகத்தான் கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்தார்.  குழந்தையிலேயே அம்மை நோய் தாக்கியதால், அவரின் முகம் முழுவதும் தழும்புகள் இருந்தன. செவித்திறனும் குறைவு. தந்தை அலெக்சாண்டர்  மன்றோ, ஒரு வணிகர். தாய் மார்கரெட் ஸ்டார்க். நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் எனப் பெரிய குடும்பம். ஆரம்பத்தில் மன்றோவின்  தந்தைக்கு அவர் ராணுவ வேலையில் சேர விருப்பம் இருக்கவில்லை. திடீரென அவரின் வணிகம் நலிவடைய வழியில்லாமல் மன்றோவின்  ஆசைக்கு பச்சைக்கொடி காட்டினார். இப்படியாகவே 1780ல் மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தார்.

அப்போது இரண்டாம் மைசூர் போர் உச்சத்தில் இருந்தது. திப்புவுடனான போரில் தீவிரம் காட்டிய மன்றோ, 1790ல் நடந்த மூன்றாம் மைசூர் போர்  வரை தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் ராணுவத்திலே இருந்தார். அந்தப் போரின் முடிவில் திப்புசுல்தான் மகன்கள் பிணைக் கைதிகளாகப்  பிடிபட்டதும் அவர்களிடமிருந்து பல்வேறு பகுதிகள் ஆங்கிலேயர்கள் வசம் வந்தன. அந்தப் பகுதிகளைக் கவனிக்க நான்கு ராணுவ அதிகாரிகள் சிவில்  பணிக்கு மாற்றப்பட்டனர். அப்படியாக, ‘பாராமகால்’ பகுதிக்கு வருவாய் ஆய்வாளராக வந்தார் மன்றோ. சேலம், தர்மபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர்  உள்ளிட்ட பகுதிகள் ‘பாராமகால்’ எனப்பட்டன. இந்தியில் ‘பாரா’ என்றால் பனிரெண்டு.

அந்தப் பகுதிகளிலிருந்த பனிரெண்டு அரண்மனைகளைக் குறிப்பிட்டு பாராமகால் பகுதிகள் என்றனர். இங்கேதான் விவசாயிகளிடம் இருந்து  சுரண்டப்படும் நிலத்தீர்வை பற்றி அறிந்தார். விவசாயிகளிடம் இருந்து ஜமீன்தார்கள் வரி வசூலித்து அதில் ஒரு பகுதியை மட்டும் அரசுக்கு அளித்து  வந்தனர். இதனால், விவசாயிகள் நசுக்கப்பட்டதுடன், அரசுக்கும் வரி வருவாய் குறைவதைக் கண்டறிந்தார். நிறைய இடங்களில் குதிரைப் பயணம்  செய்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டவர் அதை மாற்ற விரும்பி ‘ரயத்வாரி’ முறையை அறிமுகப்படுத்தி னார். பின்னர், இது மெட்ராஸ்  மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ‘‘இதன்படி அரசு அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து வரி வசூலித்தனர்.

ஜமீன்தார்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. நிலங்களைப் பதிவு செய்யும் ஒவ்வொரு விவசாயியும் நில உரிமையாளராக  அங்கீகரிக்கப்பட்டனர். அவர்கள் நிலத்தை குத்தகைக்கு விடவோ, விற்கவோ, மாற்றவோ, அடமானம் வைக்கவோ, பரிசாகக் கொடுக்கவோ முழுச்  சுதந்திரம் பெற்றனர். விதிக்கப்படும் வரியைச் செலுத்தி வரும் வரை, அவரை நிலத்திலிருந்து அரசு வெளியேற்ற முடியாது. சாதகமற்ற சூழலிலும்,  விளைச்சல் குறைவான காலத்திலும் நிலத்தீர்வை குறைத்துக் கொள்ளப்பட்டது...’’ என, ‘Rulers of India, Sir Thomas Munro’ நூலில்  குறிப்பிடுகிறார் பள்ளிகளுக்கான ஆய்வாளராக இருந்த ஜான் பிராட்ஷா. இதனால், விவசாயிகள் மன்றோவைக் கொண்டாடினர்.

ஆந்திரா மக்கள் தங்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு, ‘மன்றோலப்பா’ எனப் பெயர் சூட்டி அழகு பார்த்தனர். 1792 - 99 வரை பாராமகாலில்  பணியாற்றிவர், பிறகு தெற்கு கன்னடப் பகுதிக்கு கலெக்டராக மாற்றப்பட்டார். பின்னர், நிஜாம் ஆட்சி பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விட்டுக்  கொடுத்த (Ceded Districts) மாவட்டங்களுக்கு முதன்மை கலெக்டராக அனுப்பப்பட்டார். இதில், கடப்பா, பெல்லாரி, கர்நூல், அனந்தப்பூர் உள்ளிட்ட  இடங்கள் அடங்கும். 1800 - 1807 வரை இங்கு மக்களோடு மக்களாகி, பல இடங்களுக்கும் பயணப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்தார். ‘‘‘ஓர் அரசு  அதிகாரி தனது அலுவலக ரீதியான பயணத்தின்போது எவரிடமும் உணவோ, பொருட்களோ, பரிசோ வாங்கக் கூடாது.

அது முறைகேடான செயல்’ என்று கூறிய மன்றோ, தனது பயணத்தில் கிராமத்து விவசாயி வீட்டில் குடித்த பாலுக்குக்கூட பணம்  கொடுத்திருக்கிறார்...’’ என ‘எனது இந்தியா’ நூலில் எழுதியுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இதன்பிறகு, சொந்த ஊருக்குத் திரும்பியவரை ஆறு  ஆண்டுகள் கழித்து கிழக்கிந்தியக் கம்பெனி மீண்டும் அழைத்தது. இம்முறை நீதி நிர்வாக முறைகளில் சீர்திருத்தம் கொண்டு வர சிறப்பு ஆணையம்  அமைத்து, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், 1814ல் மீண்டும் மெட்ராஸ் வந்து சேர்ந்தார். இந்தச் சிறப்பு ஆணையம் ஆட்சி முறையில்  பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன்படி, மீண்டும் கிராம ஊழியர்கள் நகர் காவலில் நியமிக்கப்பட்டனர்.

கிராமத் தலைவருக்கு சிறிய வழக்குகளைத் தீர்க்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்திய நீதிபதிகளின் அதிகாரத்தை அதிகரித்து, நியாய மன்றங்களின்  நடைமுறை விதிகளை எளிமைப்படுத்தினர். மட்டுமல்ல. இந்தியர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு அவர்களை அதிகப்படியாக நிர்வாகத்துறையில்  ஈடுபடுத்தினார் மன்றோ. இதன்பிறகு 1820ல் மெட்ராஸ் மாகாண கவர்னராக நியமிக்கப்பட்டார். இப்போது கல்வி முறையில் சீர்திருத்தங்களைக்  கொண்டு வந்தார். முதலில், உள்ளூர் பள்ளிகள் பற்றி ஒரு விசாரணைக் குழுவை ஏற்படுத்தினார். அப்போது மாகாணத்தில் 1 கோடியே 20 லட்சம்  மக்களுக்கு 12 ஆயிரத்து 500 உள்ளூர் பள்ளிகளே இருந்தன. இதில், 750 பள்ளிகள் வேதப் பாடசாலைகள்.

மீதி உள்ளவை ஆரம்பப் பாடசாலைகள். இந்நிலையில் கல்வியின் தரத்தை உயர்த்த ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். தவிர,  மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும், மாவட்ட கலெக்டர் இருக்கும் இடங்களில் இரண்டு முதன்மை பள்ளிகளும்  ஏற்படுத்தப்பட்டன. இதில், ஒரு பள்ளி இந்துக்களுக்கும், ஒரு பள்ளி முஸ்லீம்களுக்கும் பிரிக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் ஆங்கிலம், இலக்கணம்,  கணிதம், புவியியலுடன் தமிழ், ெதலுங்கு, அரபிக், சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது. பிறகு, தாசில்தார் உள்ள இடங்களில் ஒரு சாதாரண பள்ளி  அமைக்கப்பட்டது. இங்கு தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.

இப்படி, மெட்ராஸில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியே பின்னாளில் மெட்ராஸ் உயர் பள்ளியாக மாறி, மாநிலக் கல்லூரியாக உயர்ந்தது.  பின்னர், மன்றோ ஒரு பொது கல்விக் குழுவை நியமித்து, மாகாணத்தின் கல்வி நிலை பற்றியும், அதனை அவ்வப்போது சீர்திருத்தம் செய்வது  பற்றியும் விவாதிப்பதைக் கடமையாக்கினார். இந்தக் குழு மாகாண மக்களின் மொழி பற்றியும், சட்டம் குறித்தும் இளம் சிவில் அதிகாரிகளுக்குக்  கற்பித்து அவர்களைப் பரிசோதிக்கவும் செய்தது. இந்நிலையில், மன்றோவின் மனைவிக்கும் மகனுக்கும் உடல் நலமில்லாமல் போக இருவரையும்  இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு கம்பெனியிடம் தன்னை விடுவிக்கும்படி கேட்டார்.

அப்போது மன்றோவின் வயது 66. ஆனால், கம்பெனி அவர் பதவி விலகுவதைத் துளியும் விரும்பவில்லை. இதனால் வருத்தமுற்ற மன்றோ, தனக்குப்  பிடித்தமான Ceded மாவட்டங்களுக்குப் பயணமானார். அவர் போகும் முன்பே அங்கு காலரா நோய் பரவியிருந்தது. போக வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்ட போதும், நோய் தாக்கிய மக்களைப் பார்த்தே ஆவேன் எனப் பிடிவாதமாகச் சென்றார். பட்டிகொண்டா பகுதியில் அவர் இருந்த போது  காலராவால் தாக்கப்பட, 1827ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இரவு 9.30க்கு மன்றோ காலமானார்.

அவரின் உடல் ‘கூட்டி’ என்ற இடத்திலுள்ள ஆங்கிலேயர்களின் கல்லறையில் புதைக்கப்பட்டது. இந்தச் செய்தி ஜூலை 9ம் தேதி மெட்ராஸ் மக்களின்  காதுகளை எட்ட மிகுந்த துயருற்றனர். உடனடியாக அனைத்து இன மக்களும் ஒன்று கூடி அவருக்குச் சிலை அமைப்பதென முடிவு செய்தனர்.  குதிரையிலேயே பயணித்து மக்களின் குறைகளைக் களையும் அவருக்கு, குதிரையில் அமர்ந்தபடியே இருக்கும் சிலை செய்யப்பட்டது. இதை சர்  பிரான்சிஸ் சாண்டரி என்கிற ஆங்கிலேயச் சிற்பி வடிவமைத்தார்.

இந்த வெண்கலச் சிலை அடிப்பகுதி, மன்றோ உருவம், குதிரை சிலை என மூன்றாகப் பிரித்து கப்பலில் அனுப்பப் பட்டது. 1839ம் ஆண்டு அக்டோபர்  23ம் தேதி இந்தச் சிலை தீவுத்திடலில் திறக்கப்பட்டது. இதற்கிடையே 1831ம் ஆண்டு அவர் உடலின் மிச்சப் பகுதி மெட்ராஸுக்கு கொண்டு வரப்பட்டு  கோட்டையிலுள்ள புனித மேரி சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட மன்றோ, இன்றைய அதிகாரிகளுக்கு  ஒரு எடுத்துக்காட்டாக நிற்கிறார்!

ராகவேந்திரரும், மன்றோவும்

பெல்லாரி கலெக்டராக 1800ம் ஆண்டு இருந்த மன்றோ மந்த்ராலயா மடம் மற்றும் அந்தக் கிராமத்திற்கு வரி வசூலிக்க பணிக்கப்பட்டார். ஆனால்,  அவருக்குக் கீழ் இருந்த அதிகாரிகள் யாரும் அங்கே போக மறுத்துவிட்டனர். இதனால், நேரடியாக அங்கு சென்றவர், தன் ஷூவையும், தொப்பியையும்  கழற்றிவிட்டு மடத்திற்குள் போனார். அங்கே ராகவேந்திரரின் நினைவிடம் முன்பு நின்று அவரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர்,  மடத்தினரிடமும், கிராமத்தினரிடமும் எந்த வரியும் வசூலிக்க வேண்டியதில்லை என எழுதி அனுப்பி உள்ளார். இது மெட்ராஸ் அரசு கெஜெட்டில்  இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
ஓவியம்: ராஜா