விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 49

கார்க்கோடகர் தன் தலையில் கையை வைத்து அப்படியே அமர்ந்தார். ‘‘விடுங்க... காரண காரியத்தோட கிருஷ்ணன் விளக்கி இருக்கான். அதை நாம நம்பித்தான் ஆகணும். எப்படியோ நீங்க ஏமாந்துட்டீங்க... இல்ல யாரோ உங்களை ஏமாத்திட்டாங்க. இனிமே அது பத்தி யோசிச்சு பயனில்லை. இந்த கைரேகை எங்க கிடைச்சதுனு சொல்லுங்க. ஒருவேளை அதை நூல் பிடிச்சு நம்மால நகர முடியுமானு பார்க்கலாம்...’’அவர் தோளில் ஆதரவாக கைபோட்டபடி ஆதி பேசினான். அவன் கைகளைத் தட்டிவிட்டபடி கார்க்கோடகர் நிமிர்ந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ‘‘என்ன வாழ்க்கை இது... திரும்பவும் முதல்லேந்து ஆரம்பிக்கணுமா? இதுக்கா தலைமுறை தலைமுறையா போராடிட்டு இருக்கோம்?

இதுக்காகவா செத்த பிறகும் நடமாடிட்டு இருக்கேன்...’’ குரல் தழுதழுக்கவே உதட்டைக் கடித்தபடி யாரையும் பார்க்காமல் விட்டத்தை நோக்கியபடி வெறித்தார். கிருஷ்ணன் அவர் அருகில் மண்டியிட்டான். ‘‘ரிலாக்ஸ் பெரியவரே. கை ரேகைதான் சாவினு தெரிஞ்சுடுச்சு இல்லையா..? அது போதும். சொல்லுங்க... உங்களுக்கு இந்த ரேகைகள் எங்கேந்து கிடைச்சது?’’ ‘‘ஸ்ரீரங்கம் கோயில்ல...’’ எவர் முகத்தையும் பார்க்காமல் கார்க்கோடகர் பதில் அளித்தார். ‘‘கோயில்ல..? ஏன் நிறுத்திட்டீங்க... சொல்லுங்க. அங்க யார்கிட்டேந்து எடுத்தீங்க..?’’‘‘தாரா...’’ ‘‘அவ ரேகைதான் சாவினு உங்களுக்கு எப்படித் தெரியும்..?’’ கிருஷ்ணன் பட்டென்று கேட்டான்.

‘‘அவ ஜாதகம் சொன்னது...’’ ‘‘புரியலை..!’’ ‘‘சிம்பிள் கிருஷ்...’’ ஆதி இடைமறித்தான். ‘‘இன்ன நட்சத்திரம் இன்ன ராசி இன்ன லக்னம்... இந்த இந்த ராசிக் கட்டத்துல இந்த இந்த கிரகம் இருக்கிற குழந்தையோட ரேகைதான் அர்ஜுனனோட வில்லை எடுப்பதற்கான சாவினு ஏதாவது பழைய ஓலைச்சுவடில படிச்சிருப்பார். அப்படித்தானே..?’’கேட்ட ஆதியை இகழ்ச்சியுடன் கார்க்கோடகர் ஏறிட்டார். ‘‘புத்திசாலித்தனமா பேசறதா நினைச்சு என்னை கேவலப்படுத்தற இல்லையா..? உண்மைல நீ இருக்கிற ‘Intelligent Design’ அமைப்பைத்தான் கிண்டல் பண்ற. சந்தேகம் இருந்தா மாஸ்டர்னு ஒருத்தன் இருக்கானே... அவன்கிட்ட கேளு. நான் படிச்ச ஓலைச்சுவடியை பத்திரமா பாதுகாத்துட்டு வர்றது உங்க அமைப்புதான்...’’

‘‘இன்னும் என்னென்ன ரகசியத்தை எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க?’’ ‘‘ஆதி ப்ளீஸ்... அதையெல்லாம் இப்ப தெரிஞ்சுட்டு என்ன செய்யப்போற..?’’‘‘இல்ல க்ருஷ்...’’‘‘போதும் விடு. பெரியவரே... தாரா ஜாதகம் இதுக்கு சூட் ஆகுதுனு எப்படியோ கண்டுபிடிச்சுட்டுதான் அவளை டிராப் பண்ணியிருக்கீங்க. இல்லையா? சரி. எதுக்காக ஸ்ரீரங்கம் கோயிலோட ப்ளூ பிரிண்ட்டை அவ கைக்கு கிடைக்கும்படி செய்தீங்க..?’’கிருஷ்ணனின் கேள்வி அதுவரை அமைதியாக இருந்த ஐஸ்வர்யா உட்பட அங்கிருந்த மூவரையும் அசைத்தது. கார்க்கோடகர் இந்த வினாவை எதிர்பார்க்கவில்லை. முகமெல்லாம் வெளிறிப் போக பரிதாபத்துடன் கேள்வி கேட்டவனைப் பார்த்தார். ‘‘பார்த்தா போதுமா..? பதில் சொல்லுங்க...’’ ஆதி அவரை உலுக்கினான்.

‘‘ஸ்ரீரங்கம் கோயில்லதான் விஜயனோட வில் இருக்குனு...’’‘‘யார் சொன்னா..?’’ ‘‘மிரட்டாத ஆதி. பேசாம இரு. பெரியவரே நீங்க சொல்லுங்க...’’‘‘அதான் ஆதியே சொல்லிட்டானே கிருஷ்ணா... ‘ID’ அமைப்பு பாதுகாக்கிற அதே ஓலைச்சுவடிலதான் இந்தத் தகவலும் இருந்தது...’’‘‘அப்ப கமுக்கமா ரேகையை எடுத்ததோட விட்டிருக்கலாமே? ஏன் ஸ்ரீரங்கம் கோயிலோட வரைபடத்தை தாராகிட்ட கொடுக்கணும்..?’’‘‘...’’‘‘உங்களைத்தான் பெரியவரே...’’‘‘கேட்டது காதுல விழுந்தது கிருஷ்ணா... ரேகையை ஸ்ரீரங்கம் கோயில்லதான் எடுக்கணும்னு சுவடில இருந்தது. அதனாலதான் அவளை கோயிலுக்கு வரச் சொல்லி பத்மன், அனந்தன், குளிகன் உதவியோட எடுத்தேன்...’’‘‘இவங்க யாரு..?’’‘‘...’’‘‘கேட்கறான்ல... வாய்ல கொழுக்கட்டையா இருக்கு..?’’ ஆதி பற்களைக் கடித்தான்.

‘‘வேற்றுகிரக வாசிகள்...’’ திணறலுடன் கார்க்கோடகர் சொற்களை உச்சரித்தார். ‘‘உங்களை மாதிரியா..?’’ கிருஷ்ணன் நிறுத்தாமல் கேள்வியைத் தொடர்ந்தான். ‘‘ம்...’’ தலையசைத்தவர் எதையோ சொல்ல வந்து வார்த்தைகளை விழுங்கினார். ‘‘என்ன பெரியவரே... தயங்காம சொல்லுங்க...’’ மவுனமாக அதுவரை நடந்த அனைத்து உரையாடல்களையும் கேட்டு வந்த ஐஸ்வர்யா முதல்  முறையாக வாய் திறந்தாள். ‘‘ஒண்ணுமில்ல... வ..ந்..து...’’‘‘அதான் வந்தாச்சே... இந்த இடத்தை விட்டு வெளியேற முடியாம தவிக்கறோமே... இன்னும் என்ன... சொல்லித் தொலைங்க...’’ ஆதி அவர் தோளை அழுத்தினான். ‘‘அவ சாதாரணப் பெண்ணா தெரியலை...’’ எச்சிலை விழுங்கினார் கார்க்கோடகர்.

யாரு..? தாராவையா சொல்றீங்க...’’ ஐஸ்வர்யா இடைமறித்தாள். ‘‘ம்...’’ தலையசைத்தார். தூக்கிவாரிப் போட மூவரும் அவரை நெருங்கினார்கள். மூன்று முகங்களிலும் உணர்ச்சிகளின் கலவை. ‘‘எதை வைச்சு இந்த முடிவுக்கு வந்தீங்க..?’’ கிருஷ்ணன் புருவத்தை சுருக்கினான். ‘‘அவளை நான் டிராப் பண்ணினது போக... அவ நம்மை டிராப் செய்திருக்காளே... இதை வைச்சுத்தான்...’’‘‘என்ன சொல்றீங்க..?’’ ஆதி இப்படி கேட்டதும் ஆவேசத்துடன் கார்க்கோடகர் எழுந்தார். ‘‘எதுக்கெடுத்தாலும் பல்லைக் கடிச்சு முஷ்டியை இறுக்கறதுனாலதான் இன்னும் நீ அடியாளாவே இருக்க. ஒழுங்கா புத்தியோட யோசி. ஸ்ரீரங்கம் கோயில்லேந்து பாழடைஞ்ச மண்டபத்துக்குள்ள நம்மை எல்லாம் வரவைச்சது யாரு..? சொல்லுங்க... ஏன் மவுனமா இருக்கீங்க..?’’

‘‘ஹா...பி...ட்...ஸ்...’’‘‘பாரு. இந்தப் பொண்ணு சரியா சொல்லிட்டா. அந்த சித்திரக்குள்ளர்களை அனுப்பினது யாரு..?’’ மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘தாரா!’’ நெஞ்சை நிமிர்த்தினார் கார்க்கோடகர். ‘‘அவதான் திட்டம் போட்டு நம்மை இங்க லாக் செய்திருக்கா...’’ ‘‘ஏன் அப்படி செய்யணும்..?’’ ‘‘முட்டாள் ஆதி... நடந்ததை பூரா கணக்குப் போட்டு கூட்டிக் கழிச்சுப் பாரு. உண்மை கிடைக்கும்...’’ ‘‘என்ன உண்மை..?’’ ஆதியின் கேள்விக்கு தீவிர முகத்துடன் கிருஷ்ணன் விடையளித்தான். ‘‘அர்ஜுனன் வில்லை எடுக்க தாராவும் ப்ளான் செய்திருக்கானு பெரியவர் நினைக்கறார்...’’

ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும். அந்தளவுக்கு அங்கு அமைதி நிலவியது. கிருஷ்ணன்தான் அதை கலைத்தான். ‘‘ஒரு பேச்சுக்கு தாராவும் அப்படியொரு திட்டத்தோட இருந்திருக்கானே வைச்சுப்போம்... அவ விரல்தான் செயற்கையாச்சே... அப்புறம் எப்படி அதை சாவியா பயன்படுத்த முடியும்..?’’ நியாயமான அந்த வினா எல்லோரையும் யோசிக்க வைத்தது. ஐஸ்வர்யா சிரித்தாள். கிருஷ்ணன் எழுந்து நின்று அவளைப் பார்த்தான். ‘‘எதுக்கு ஐஸ் சிரிக்கற..?’’ ‘‘ஒருவேளை நம்மை எல்லாம் ஏமாத்த... போக்கு காட்டி அலையவிட... போலியான ஒரு விரலை செட்டப் செஞ்சு அந்த ரேகையை பெரியவரோட ஆட்கள்கிட்ட கொடுத்திருக்கலாமே..?’’

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்