காட்ஃபாதர்



போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 28

பாப்லோ கும்பலின் கப்பல் வழி சரக்கு போக்குவரத்து அடிக்கடி இன்னலுக்கு உள்ளானது. சொல்லி வைத்த மாதிரி ‘சரக்கு’ இருக்கும் கப்பல்கள்  நடுக்கடலில் சோதனைக்கு உள்ளாயின. கருங்காலிகள் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தாலும், யார் உள்கை என்பது புரியாமல் கார்டெல் உரிமையாளர்கள் முழி பிதுங்கிக் கொண்டிருந்தார்கள். விமான பைலட்டுகளை விலைக்கு வாங்கி, கடத்தப்படும் சரக்குகளின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. எனவேதான், சொந்தமாக விமானங்களை வாங்குவதற்கு முடிவெடுத்தார். அவருடைய போதை தீவில் நீண்ட ரன்வேயுடன் போயிங் விமானங்களே தரையிறங்கக்கூடிய வசதியோடு ஓர் ஏர்போர்ட்டே தயாராக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

முதன்முதலாக பாப்லோ எஸ்கோபார் விலை கொடுத்து வாங்கியது ஒரு piper cub-type விமானம். யாரோ ஒரு அமெரிக்க தொழிலதிபர் பயன்படுத்திவிட்டு காயலான்கடைக்கு போடுவதற்கு வைத்திருந்ததை சல்லிசான விலைக்கு வாங்கியிருந்தார். அதை ரிப்பேர் செய்து ஓட்டிக் கொண்டிருந்தார். விமானத்தில் நிறைய மாறுதல்கள் செய்து, சரக்கு அதிகளவில் ஏற்றுவதற்கான இடவசதியை ஏற்படுத்தி இருந்தார்கள். வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி மாதிரி விஷயங்களை பனாமா அரசில் பணிபுரிந்து கொண்டிருந்த அவரது அல்லக்கைகள் பார்த்துக் கொண்டார்கள்.

இதில் ஆயிரக்கணக்கான கிலோ சரக்குகளை ஏற்றி மிகவும் விரைவாக அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்ப முடிந்தது. மினி பஸ் கணக்காக ஒரே நாளில் கொலம்பியா டூ பனாமாவுக்கு நிறைய ட்ரிப்புகளையும் அடிக்க முடிந்தது. ஒரு ட்ரிப்புக்கு 1200 கிலோ வரை சரக்கு ஏற்ற முடியும். இது பழைய விமானம் என்பதால் அடிக்கடி மக்கர் செய்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு டெலிவரி நடக்கவில்லை என்றால் பாப்லோ டென்ஷனாகி விடுவார். எனவே, புது விமானத்தை வாங்க வேண்டுமென்று அவரது சகாக்கள் அவரை வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். எனவே, புது விமானங்களை வாங்க ஆரம்பித்தார். இவ்வாறாக பாப்லோவின் போதை ஏர்லைன்ஸில் மொத்தம் பதினைந்து விமானங்கள் சேர்ந்தன.

முதன்முதலாக வாங்கிய விமானத்தை காயலான்கடைக்கு போட எஸ்கோபாருக்கு மனமில்லை. இரும்பு நெஞ்சம் கொண்டவர் என்றாலும், அவருக்கு சில சென்டிமென்ட்கள் உண்டு. எனவே ஹசீண்டா நேபோல்ஸ் பகுதியில் அவர் பிரும்மாண்டமாகக் கட்டிய மாளிகையின் அலங்கார நுழைவாயிலாக இந்த விமானத்தையே பயன்படுத்தினார். உலகின் பிரசித்தி பெற்ற போதை மாஃபியாக்கள் பலரையும் அந்த மாளிகையில்தான் அவர் சந்தித்திருக்கிறார். அடிக்கடி கொலம்பியா முக்கியஸ்தர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டியும் நடக்கும். இந்த மாளிகைக்குள் நுழையும்போது, தங்கள் தலைக்கு மேல் நுழைவாயிலாக விமானம் நிற்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே போவார்கள். இன்றும்கூட ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கானோர் பாப்லோவின் இந்த முதல் விமானத்தை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

பாப்லோவின் ‘விமான சேவை’ எப்படி நடந்தது என்பதைப் பார்த்தால், கல்லில்கூட நார் உரித்துவிடும் தொழில்நேர்த்தியாளர் அவர் என்பதை உணரலாம். ஒரு விமானம் முழுக்க சரக்கு அனுப்பினால், அதை விற்று பணமாகக் கொண்டு வரும்போது பிரச்சினை ஏற்பட்டது. ஏனெனில் 1000 கிலோ சரக்கு எடுத்துச் சென்றால், அதை விற்று பெறும் டாலர் நோட்டுகள் மூவாயிரம் நாலாயிரம் கிலோவாக இருந்துதொலைத்தது. மொத்தப் பணத்தையும் கொலம்பியாவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று, நான்கு ட்ரிப் அடிக்க வேண்டும். அது வேலைக்கு ஆகாது. எனவே, இங்கிருந்து சரக்கு அனுப்பும்போதே பாதி சரக்கு, பாதி தங்கம் என்று அனுப்பத் தொடங்கினார்கள்.

பனாமாவில் தரையிறங்கி, அங்கிருக்கும் வணிகர்களிடம் நல்ல லாபத்துக்கு தங்கத்தை கைமாற்றி விட்டுவிடுவார்கள். அங்கிருந்து அமெரிக்காவுக்கு பாதி நிரம்பிய விமானம்தான் போகும். வரும்போது ஃபுல்லாக கரன்ஸி கட்டுகளை அள்ளிக்கொண்டு வரும். சாதாரணமாக ஒரு விமானத்தில் செல்லும் சரக்கின் அளவு (இன்றைய மதிப்பில்) அறுபது கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். திரும்ப வரும்போது 400, 500 கோடி ரூபாய் அளவு பணத்தை விமானம் கொண்டுவரும். இதை வாசிக்க மலைப்பாகத் தான் இருக்கும். எஸ்கோபார், அவர் வாழ்ந்த காலத்தில் உலகின் முதல் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இப்போதும் அவர் உயிரோடு இருந்திருந்தால் பில்கேட்ஸ் எல்லாம் அவருக்கு ஜுஜூபியாகத்தான் இருப்பார்.

பதினைந்து விமானங்களும் இந்த மாதிரி ஃபுல் லோடில் போக, மேலும் மேலும் சரக்கு போக்குவரத்துக்கு வாகனங்கள் தேவைப்பட்டன. ஆறு ஹெலிகாஃப்டர்களை வாங்கி ரூட்டுக்கு விட்டார். ஆட்டோ வாங்கி விட்டார் என்பதைப் போல எளிமையாகச் சொல்லுவதற்கு மன்னிக்கவும். ஏனெனில், அவர் எஸ்கோபார். ஹெலிகாப்டர்தான் வாங்குவார். இதெல்லாம் கூட அவருக்கு போதவில்லைதான். குஸ்டாவோவை வெளிநாடுகளுக்கு அனுப்பி, சரக்கு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு எதையாவது கண்டுவரச் சொன்னார். குஸ்டாவோவும் ஐரோப்பிய நாடுகளுக்கு விசிட் அடித்து, தங்களுக்கு ஏற்ற வகை விமானங்களை வாங்க காண்ட்ராக்ட் போட்டுவிட்டு வந்தார்.

அதன் அடிப்படையில் கொலம்பியாவுக்கு DC-3 ரக விமானங்கள் வந்து சேர்ந்தன. விமானப்படை கணக்காக ஃபிளைட்டுகளையும், ஹெலிகாப்டர்களையும் பாப்லோ எஸ்கோபார் வாங்கிக் குவிப்பதைக் கண்ட மற்ற கார்டெல்காரர்களும் அவரவர் சக்திக்கு ஏற்ப விமானங்களை வாங்கத் தொடங்கினார்கள். இவையெல்லாம் ஃபுல் லோடு போதையோடு அமெரிக்க விமான தளங்களில் இறங்கும்போது, அங்கிருக்கும் அதிகாரிகள் சும்மா விரல் சப்பிக் கொண்டா இருந்திருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. லஞ்சமும், ஊழலும் உலகம் பிறந்தபோதே இணைந்து பிறந்துவிட்டன என்கிற பேருண்மையை நாம் எந்த வினாடியும் மறக்கவே கூடாது.

எஸ்கோபார், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாளாமல் இன்னொரு டெக்னிக்கை கண்டுபிடித்திருந்தார். அவர் வாங்கிய விமானங்களின் இறக்கைப் பகுதியை லக்கேஜ் கேரியர்களாக உருமாற்றினார். இவற்றில் சரக்கு ஏற்றப்படும். அந்தந்த விமான நிலையங்களில் இறங்கும்போது வழக்கமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லாமல், அங்கிருந்த ஏர்போர்ட் ஊழியர்களின் உதவியோடு விமான நிலையத்துக்கு வெளியே எடுத்துச் சென்றார். நாம் மிகச் சுலபமாக இதையெல்லாம் இங்கே வாசித்துவிட்டோம். ஆனால் - நடைமுறைப்படுத்துவதற்குள் எஸ்கோபாரின் சகாக்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. விமானங்கள் பயணிக்க மொத்தம் எட்டு ரூட்டுகள் வைத்திருந்தார்கள்.

ஒரு ரூட்டில் ஏதேனும் தடங்கல் என்று தகவல் வந்தால், அடுத்தடுத்த ரூட்டுகளுக்கு மாறிவிடுவார்கள். இந்த பிராசஸில் ஈடுபட்டிருக்கும் பைலட்டுகளில் தொடங்கி மற்ற ஊழியர்கள் வரை எங்கே சரக்கு ஏற்றப்படப் போகிறது, எங்கே இறக்க வேண்டும் என்பதெல்லாம் கடைசி நிமிட உத்தரவாகத் தான் வரும். இன்னொரு வேடிக்கையான விஷயம். எஸ்கோபாரிடம் பைலட்டுகளாகப் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வியட்நாம் போரில் பங்கேற்று, அமெரிக்க வான்படையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று, நான்கு ட்ரிப்புகள் ஓட்டிக்கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக சர்வீஸ் விட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்த விமான சேவைக்கும் ஒரு கட்டத்தில் ஆப்பு விழுந்தது.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்