வந்தாச்சு குழந்தை வளர்ப்பு Apps!



- ச.அன்பரசு

பாட்டிகள் தாலாட்டுப் பாட, தாத்தாக்கள் தூக்கிக் கொஞ்ச, ஊரே உறவாய் சூழ்ந்திருக்க, பாராட்டி, சீராட்டி, செல்லம் கொஞ்சி குழந்தைகள் வளர்ந்தது எல்லாம் அந்தக் காலம். நியூக்கிளியர் குடும்பங்கள் பெருகிப்போன நவீன காலத்தில் குழந்தைகளுக்கு அருகில் அம்மாவையும் அப்பாவையும் தவிர யாருமே இல்லை. திடீரென நள்ளிரவில் குழந்தை அழுதால் என்ன செய்ய வேண்டும்? குழந்தையை எப்படிப் பராமரிக்க வேண்டும்? என்பதை எல்லாம் சொல்லித்தர யாரும் இல்லாததால் இன்றைய இளம் அம்மாக்கள் பாடுதான் திண்டாட்டமாய் இருக்கிறது. ‘எது எதற்கோ app இருக்கு, இதற்கு இருந்தால் நல்லா இருக்குமே...’ என தவிக்கும் அன்னையருக்காகவே இதோ, அம்மாக்களுக்கான ஸ்பெஷல் apps வந்துள்ளன.

இவற்றில் நர்ச்சுரே, ஸென்பேரண்ட் இரண்டும் முக்கியமானவை. 2014ம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்ட நர்ச்சுரே இணையதளம் குழந்தை வளர்ப்பு குறித்த A to Z தகவல்களை உலகில் உள்ள 30 நாடுகளின் தாய்மார்களுக்கும் தினசரி தெரிவிக்கின்றன. ‘‘பிரசவ காலத்திலிருந்து குழந்தைப் பிறப்பு, பராமரிப்பு எனப் பல்வேறு விவரங்களைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம்...’’ என குட்டி இன்ட்ரோவில் தன் நிறுவனத்தின் வெற்றியை சிம்பிளாக கூறுகிறார் நர்ச்சுரே நிறுவன இயக்குநரான துஷார்
ஸ்ரீவஸ்தவா. ஸென் பேரண்ட் ஆப்ஸும் இந்தக் களத்தில் முக்கியமான ஒன்று. ‘‘இன்று வேலைகளுக்காக நகரம் நோக்கி வருபவர்களுக்குப் பெற்றோர்களின் ஆலோசனைகள் கிடைப்பதில்லை.

குழந்தைகளைப் பராமரிப்பதற்கான நேரமும், அலுவலகப் பரபரப்புகளுக்கு இடையே மிகக் குறைவுதான் என்பதால் பெற்றோர் இருக்கும் நேரத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டியுள்ளது...’’ என பிராக்டிகலாக பேசுகிறார் ஸென் பேரண்ட் நிறுவனர் சுமித் தார். பெங்களூரைச் சேர்ந்த ஸென் பேரண்ட் நிறுவனம் பெற்றோர்களுக்கு குழந்தையின் செயல்பாட்டை கண்காணித்து அலர்ட் செய்யும் வகையில் ஸ்மார்ட் வாட்ச்களையே முதலில் உருவாக்கினர். ஆனால், அதன் பிறகு செய்த ஆய்வில் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழிகாட்டுதல்தான் எமர்ஜென்சி தேவை என்பதை உணர்ந்து அதற்கான சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். ‘‘அலுவலக வேலைகளை டயரியில் குறித்து வைத்துச் செய்வது போல குழந்தைகளை திட்டமிட்டு எல்லாம் வளர்க்க முடியாது.

இதில் உங்கள் மனைவியின் ஆதரவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது...’’ எனப் பொறுப்பாக பேசும் ஸ்ரீவஸ்தவாவின் நர்ச்சுரே ஆப்பில், பெண்களின் பிரசவ காலம் முதல் குழந்தையின் எட்டு வயது வரை பயன்படும் பராமரிப்பு டிப்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. யார் வேண்டுமானாலும் இதைப் படித்துப் பயன்பெறலாம். வெறுமனே தகவல்கள் மட்டும் இல்லை. சாட் ரூம் வசதியும் உண்டு. இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பெற்றோர்களுடன் கலந்துரையாடலாம். இதன் மூலம் இருவருமே பரஸ்பரம் பயன்பெறுகிறார்கள். இந்த வசதி இந்த ஆப்பின் மிகப்பெரிய பிளஸ். இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய ஸென்பேரண்ட் நிறுவனம், தன் புதுமை வசதிகளால் ஐந்து கோடி பெற்றோர்களை எட்டியிருக்கிறது.

ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் வாரந்தோறும் குழந்தைகள் பராமரிப்பு வழிமுறைகளைத் தயாரித்து அனுப்புவதோடு, ஆரோக்கிய கட்டுரைகளும் இதில் ஏராளம் தாராளம். ஸென்பேரண்ட் ஆப்பில், வசந்தா அத்தை உள்ளிட்ட பல்வேறு கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வழங்கும் காமெடி கலந்த வழிகாட்டுதல்கள் வாசிப்பவர்களை வசியப்படுத்துபவை. ‘‘இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர்களுக்கே உரிய சவால்கள் உள்ளன. அவற்றை அவர்களே தீர்ப்பார்கள். அவை வாசிப்பவர்களுடைய வாழ்க்கைப் பிரச்னைகளோடு ஒன்றிணையும்போது அவர்கள் இதனைத் தொடர்ந்து படிப்பார்கள்...’’ எனத் தன் நிறுவனத்தின் சக்சஸ் ஃபார்முலாவைப் பேசுகிறார் சுமித் தார். மேலும், இந்த ஆப்பில் பல்வேறு வீடியோக்கள், முக்கியமான பொக்கிஷத் தருணங்களையும் பதிவு செய்ய முடியும். டெக்னாலஜி வழிகாட்டுதல் குழந்தை வளர்ப்பில் உதவினாலும் குழந்தையின் குணநலன்களுக்கு என்ன செய்வது? அதற்கு சாட்ரூம் உள்ளிட்ட பல்வேறு பெற்றோர்களின் ஆலோசனைகள் உதவக்கூடும். தொழில்நுட்பம் ஒரு முக்கிய கருவியாகச் செயல்பட்டு உலகில் உள்ள பல்வேறு பெற்றோர்களின் மரபான அறிவையும் இணைக்கிறது என்பதுதான் இதில் ஸ்பெஷல்.


டேட்டாஸ்

இந்தியாவில் உயரும் மக்கள் தொகை (2050) : 160 கோடி (2011ல் 120 கோடி).
குழந்தை பிறப்பு விகிதம் (1971 - 2013) : 55% குறைவு
குழந்தை இறப்பு விகிதம் (1000 குழந்தைகளுக்கு) : 129 (1971), 40 (2013)
மக்கள்தொகை கொள்கை 2000 படி குழந்தை பிறப்பு அளவு இலக்கு 2.1%
அதிக குழந்தை பிறப்பு மாநிலங்கள் : பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்.
குறைந்த குழந்தை பிறப்பு மாநிலங்கள்: மேற்கு வங்கம், தில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு.