மடை



- உமாமகேஸ்வரி

‘‘பார்... பார் கண்ணாடி மழை...’’ மழையின் கண்ணாடிகளை முந்தானையில் பிடிக்க ஓட்டமாக ஓடி வந்தாள் சின்னக்கா; நெற்றியில் இட்ட விபூதி குங்குமம் கரைந்தோட, நீலத் தாவணி உடலோடு ஒட்ட நின்றாள்; உள்ளிருந்து ஷிவானியும் மீண்டும் வந்துவிட்டாள்; நிலையருகே நின்று மழை பார்த்தனர் பரவசமாகி. ஒரு மூன்று நான்கு நிமிஷம்தான். சட்டென நின்று வானம் பளிச்சென்று நிம்மதி நீலம் கொண்டது; சின்னக்காவின் தாவணி நிறத்தில் நிர்மல நீலம். ‘‘ம்ம் முடிஞ்சது வா. போலாம் வா...’’முணுமுணுத்தாள் ‘‘நீதானே என் காதல் வேதம், பாதம் உன் பாதம்...’’‘‘யாருக்கா அது?’’ குறும்பான கேள்வி.‘‘யே, போடா, சும்மாடா...’’ என்று செல்லத் தட்டு தட்டினாள்.

அவள் தாவணி மாற்றி உள்ளே போனதும், இவள் அலைபேசியைக் கையில் வைத்துக்கொண்டாள். ‘‘வேணாம். இது என்னது?’’ ‘‘விளையாடுறேன் அக்கா...’’ அவள் நிமிரவேயில்லை. ‘‘வேணான்டா. வா கதை பேசலாம்; இந்த செல்போன் வெளிச்சம் கண்ணில் கருவளையம் கட்டும்...’’ அக்கா அக்கறையாய்ச் சொன்னபடியே அதை வாங்கி டிவி மேல் வைத்தாள். அவளுடைய கன்னத்தை வருடியபடியே கதை சொல்ல ஆரம்பித்தாள். ஒரு மகாராஜா, அவருடைய மகள், அவளுடைய அழகு, அவளைக் காதலிக்கும் ஓர் ஏழை இளைஞன் என்று போன கதை... யார் இதில் பாவம் என்று கேட்டது வேதாளம். ‘‘யார் பாவம் இவங்க மூணு பேரில்?’’‘‘எல்லோருமே பாவந்தான்...’’ பதில் தரக் குழம்பினாள்.

‘‘அய்யோ! பாவம் அந்த மகாராஜாதான் விக்கிரமாதித்யன் சரியாகப் பதில் தர, வேதாளம் மீண்டும் முருங்கையிலேற... கதையும் முடிஞ்சதாம்; கத்திரிக்கா காய்ச்சதாம்...’’ சிரிப்பு அள்ளியது ஷிவானியை. அவளிடம் சொல்ல ஆயிரமாயிரம் கதைகள் இருந்தன; குள்ளர்கள், அரக்கர்கள், அழகி கள், சிறுமிகள், இளவரசர்கள், பாடகர்கள், சிங்கம், முயல் குட்டிகள், பிளிறும் யானைகள், கானகங்கள் பூக்கும் கணக்கற்ற கதைகள். கேட்டுக்கொண்டே கண் கிறங்கி உறங்குவாள் ஷிவானி; அக்கா போய்விடக் கூடாது என்று தாவணி நுனியை ஆள்காட்டி விரலில் சுற்றி இருப்பாள்.

அவள் உறக்கம் கலையாமல் பையப் பதறாமல் விடுவித்துப் போவாள்; ஒரு தரம் அவள் சிணுங்கவும், அம்மா வேறொரு தாவணியைக்கையில் கொண்டு வந்தாள்; ஷிவானி பிடித்திருந்த தாவணி அவள் கையிலேயே இருக்க விட்டுவிட்டு, இவள் வேறு ஒன்றை மாற்றினாள். பள்ளிவிட்டு வருகையில் ‘‘அம்மா...’’ என்ற அழைப்பிற்குப் பதில் ‘‘சின்னக்கா...’’ என்று கத்திக் கொண்டே வந்தாள் ஷிவானி. பசித்தால் சின்னக்கா; தூக்கம் வந்தால் சின்னக்கா; தலை பின்ன சின்னக்கா... புதிய உடையில் பின்புறக் கொக்கி போடவும் அக்காதான். அம்மாவின் அழைப்பைப் புறந்தள்ளி எப்போதும் ‘அக்கா, அக்கா, அக்கா’ அம்மா தீபமேற்றி அமர்ந்து விடுவாள் கோபம் ஜொலிக்க.

அன்றைய காலை பளீரெனெப் புலர்ந்து வாசலுக்குள் வந்தது. பால்காரரின் சைக்கிள் மணி, கோலங்களில் படாமல் வைக்கப்படும் செய்தித்தாள் எனக் காலையின் இடையில் அம்மாவோடு பேசும் ஒரு பெண் குரல்; ஷிவானி கொட்டாவியோடு எழுந்தாள்; அக்கா அவளுடைய ப்ரஷ்ஷில் பற்பசையைப் பிதுக்கி வைத்திருந்தாள் தயாராக. ஷிவானி நுரை பொங்கப் பல் தேய்த்தாள்; பேச்சுத் தொடர்கிறது போல. ‘‘சின்னக்கா...’’ என்ற அவள் அழைப்பிற்குப் பதில் இல்லை; அவள் தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கினாள். இது புதிதான ஒரு பழக்கம்; எதற்கெடுத்தாலும் தோள் உயர, கைகள் விரிய, உதடு பிதுக்கும் செயல்.

‘‘சின்னக்காவுக்குக் கல்யாணம்; அவங்க அம்மாதான் வந்திருந்தாங்க...’’ அம்மா சொல்வதைக் கவனமாகத் தலையசைப்புகளோடு கேட்டுக்கொண்டாள். அம்மா கொசுவத்தைச் சரி செய்தபடியே பேசினார். சின்னக்காவை சாயங்காலம் பார்க்க முடிந்தது. வெட்கத்தில் பூரித்த கன்னங்களுடன். ‘‘ஊருக்குப் போறீங்களா?’’ ேகட்க நினைத்தவள் கேள்வியை விழுங்கினாள். ‘‘நாளை கிளம்புறேன்...’’ என்று அவளே சொன்னாள் கனவில் செருகும் கண்களோடு. ‘வசீகரா...’வும் ‘செந்தூரா...’வும் அன்று அவள் வாயிலிருந்து புறப்பட்டு வீட்டை வலம் வந்தது. பாடிக்கொண்டே தன் பையை அடுக்கித் தயாரானாள்.

பிறகு, வெகு நாட்களாயின. கதை கேட்கும் பழக்கம் மறந்தது. ‘‘நீயே உரித்துச் சாப்பிடப் பழகு...’’ அம்மா வைத்த அவித்த கடலையைச் சாப்பிடாமல் தள்ளிவைத்து, ‘‘சின்னக்கா’’ என்று மனதுக்குள் ஏங்கினாள். ‘‘சாப்பிடு நீயே, சின்னக் குழந்தையா?’’ முன்னே வைக்கப்பட்ட சாதத் தட்டை வெறுமனே பிசைந்துவிட்டு எழ யத்தனித்தவளுக்கு அம்மா அலுத்தபடி ஊட்டுவார்கள். அம்மாவோடு யாரோ பேசக் கேட்டது. பழைய குரல்தான்; எழுந்திருக்கச் சோம்பல்பட்டு கட்டிலில் கிடந்த கரடியைக் கட்டிக்கொண்டாள். ‘‘ஷிவானி...’’

‘‘என்னம்மா? தூங்குறேன்மா...’’ கூர்மையான குரலில் சொன்னாள். அவளுக்குக் கொஞ்சம் எரிச்சலாகவும் நிறைய சோம்பலாகவும் இருந்தது. மேலும், காலம் மாற்றியிருக்கக் கூடிய சின்னக்காவின் பிம்பத்தைப் பார்க்க, சந்திக்க, சற்றுப் பயமாகவும்கூட. ‘‘ஒரே ஒரு நிமிஷம் பாப்பா, கீழே வாயேன், யார் வந்திருக்காங்கன்னு பாரு...’’ அம்மாவின் கெஞ்சல் நீண்டது. ‘‘வரேன்மா...’’ சொல்லிவிட்டு தன்னைக் கண்ணாடியில் சரி பார்த்தாள். இரட்டைப் பின்னல்களில் ஒன்றை முன்னால் இடது தோளிலும் மற்றொன்றை பின் முதுகிலும் போட்டுக்கொண்டாள். அம்மாவும், சின்னக்காவும் பேசும் குரல்கள்.

‘‘நல்லபடியா அவங்க குடும்பத்திற்கேற்ற பொண்ணாக நடந்துக்க... சரியா? எப்பவும் சிரிச்ச முகத்தோட பளிச்னு குளிச்சு சேலை உடுத்தி இருக்கணும்... நீ நல்ல பொண்ணு. உனக்கு ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சொல்றேன்...’’ ‘‘சரிங்கம்மா...’’ ‘‘பண விஷயங்களை உன் மாமியார், மாமனாரிடம் விட்டுடு. நீ உனக்கு வேண்டியதை மாப்பிள்ளைகிட்ட கேட்டு வாங்கிக்க...’’ ‘‘சரிம்மா...’’அம்மாவும், சின்னக்காவும் அருகருகே உட்கார்ந்திருந்தார்கள். புதிய பளபளக்கும் செங்கல் நிறப் புடவை. கருப்பு ஜரிகை பார்டர். புடவையில் ஜிகுஜிகு ஜிகினாக்கள். கிளம்பும்போது அதிசந்தோஷமாக இது போலப் பளபளக்கும் புடவையை முதல் முறையாக உடுத்தி இருந்தாள்.

சின்னக்கா முடியை அழகாக விரித்து விட்டிருந்தாள். இப்போதும் அதே போல் விரித்த கூந்தல்தான். அதில் மல்லிகைச் சரம். எப்போதுமே ஃபேர் அண்ட் லவ்லி போட்டுத்தான் பவுடர் போடுவது அவள் வழக்கம். ‘‘நல்லா அடர்த்தியா ரெண்டு இஞ்ச்சிக்கு பவுடர்... அவ இஷ்டம் அவ போட்டுக்கிறா...’’ அம்மா சிரிப்பாள்சின்னக்காவின் முகத்தில் ஓர் அழகிய அயர்வு பூசியிருந்தது. ஐந்து மாதம் இருக்கலாம் அவளைப் பார்த்து. தூரத்திலிருந்தே தலையசைத்து ‘‘ஹாய், சின்னக்கா...’’ என்றபடி அம்மாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள்.‘‘குட்டிமா...’’ என்று எழுந்ேதாடி வந்தாள் சின்னக்கா. தன்னை அணைக்க நீண்ட அவள் கைகளை நிதானமாக விலக்கிவிட்டு தன் கையில் இருந்த அலைபேசியை ஆட்காட்டி விரலால் தட்டினாள்.

இவள் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டாள். ‘‘குட்டிமா என்னைய மறந்துட்டியா?’’ ஏங்கியிருந்தது சின்னக்காவின் குரல். ‘‘இல்லை...’’ வெற்றுத் தலையசைப்பு. ‘‘அம்மா, என் கம்ப்யூட்டர் காசு ஏத்தியாச்சா..?’’ அவள் ஹாலில் மூலையில் இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாள். ‘‘நேத்தே போட்டாச்சுடா; சொன்னாரு கஜேந்திர மாமா...’’ ‘‘ஏன் அதில்லாம முடியாதா? எப்பப் பாரு கம்ப்யூட்டர்; அப்புறம் இந்த மொபைல். இவகூட பேசினா என்ன, உன்னைய பார்க்கத்தானே வந்திருக்கா...’’ ஷிவானி குவிந்த உதடுகளோடு தன் கம்ப்யூட்டரைத் தட்டிக்கொண்டு இருந்தாள். ‘‘வேலைதான்மா பார்க்குறேன் இதில்; என்ன பேசணும்?’’ என்றாள். விரல்கள் தட்டச்சுப் பலகையில்; கை மவுஸை நகர்த்தியபடி. கண் தன் அலைபேசி மீது.

‘‘இப்படியேதான் சதா சர்வ காலமும்...’’ - அம்மா. ‘‘அது பார்க்கட்டும்மா பார்க்கட்டும்...’’ என்றாள் சின்னக்கா பரிவோடு. ‘‘குட்டிமா, பலகாரம் ஏதாவது பண்ணட்டுமா?’’ ‘‘இப்பவெல்லாம் அவ அது ஒண்ணும் சாப்பிடறதில்லை; அவங்கப்பா வாங்கி வந்த பீட்ஸா, பர்கர் இதான்; ஃப்ரிஜ்ஜிலேயே வச்சு, வச்சு... அது நல்லதில்லனு சொன்னா... அப்ப சாண்ட்விச்... இதேதான்...’’‘‘உடம்பப் பார்த்தா நறுங்கிப் போயிருக்கா...’’ ‘‘ஆமா, ஒண்ணும் சாப்பிடறதே இல்லை...’’ ‘‘எப்பப் பார்த்தாலும் என்னை ஏதாவது சொல்லுங்க...’’ கோபம் மின்னும் முகம் ஷிவானிக்கு. ‘‘கேப்பரொட்டி போடவா செல்லம்? உளுந்த வடை?’’ பக்கத்தில் வந்து கெஞ்சினாள் சின்னக்கா.

‘‘அவிங்க எல்லாம் இப்ப கட்லெட். எங்க போனாலும் முதல்ல ஆர்டர் பண்ணுவது கட்லெட்தான். அப்புறம் ப்ளாக் கரண்டாமே அந்த ஐஸ்க்ரீம்...’’ அம்மா கோபமாகச் சொன்னாள். அவள் பேசாமல் கம்ப்யூட்டரைப் பார்த்தபடியே ‘‘ஓ... காட்!’’ என்றாள். ‘‘பார்த்தியா, இப்படியேதான்...’’ ‘‘சரி விடுங்கம்மா அவளை...’’ அடுப்படிக்குள் நுழைந்தார்கள் இருவரும். அம்மா கையில் இருந்த தேங்காய் மூடியை வாங்கி சின்னக்கா துருவ ஆரம்பித்தாள். அவள் முகத்தில் இருந்த  அயர்ச்சி புதுமணப் பெண்ணினுடையதுதான்; ஆனால், ஏதோ ஒன்று குறைகிறதே என்ன? அம்மாவுக்குப் புரியவில்லை.

‘‘என்னத்துக்குமா என்னைய அப்புடிப் பார்க்குறீக, சீல சரியாக் கட்டலையா?’’ ‘‘அதெல்லாம் ரொம்ப நல்லா கட்டியிருக்க. ஆனா... சரி சரி, வேலையப் பார்ப்போம்...’’ அவள் தேங்காயைத் துருவி முடித்து, காய்களை நறுக்கத் தொடங்கினாள். ‘‘வேல பார்க்கிறவங்க எப்பமா வருவாக?’’ ‘‘ஆடியசைஞ்சு பதினோரு மணி ஆயிடும்; ஒப்புக்கு அப்படியும் இப்படியும் லேசா செஞ்சுட்டு ஓடுறதிலேயே குறியாயிருக்கும்; எப்பப் பாரு ஓங்கி ஓங்கிப் பேசும். எனக்கு படபடனு வந்திடுது. இதில் அதோட மக ஒண்ணு வரும்; ரெண்டு பேரும் சேர்த்து தெலுங்கிலயே பேசுவாங்க. எனக்கென்னமோ என்னையத் திட்டுறாப்பில இருக்கும்...’’

‘‘நானே வரட்டுமா?’’ ‘‘எங்கிருந்து, மணிக்காரப்பட்டியில் இருந்தா...’’ ‘‘சும்மாரு, நான் சமாளிக்கிறேன்...’’ என்றபடி ‘‘குடு, நானும் நின்னுகிட்டே காய் வெட்டுறேன்...’’ ‘‘முகம் சோர்ந்திருக்கே, ஏன்?’’ அவள் புன்னகைத்து, அரிவாள் மணையைத் தூக்கி எழுந்தாள். ‘‘விசேஷமா?’’ சந்தேகமான கேள்வி. ‘‘அடிப்பாவி! முதல்லயே சொல்லக்கூடாதா, வேல செய்ய விட்டுட்டேனே...’’ ‘‘இதெல்லாம் ஒரு வேலையா, எங்க ஊரில் வயுத்தில பிள்ளையோட கள எடுப்பாக, புளித் தட்டுவாக...’’ என்றாள் சின்னக்கா; அம்மா சிரித்தாள். இப்போது அவளிடம் இருந்த குறையை அம்மா கண்டுகொண்டாள்.

‘‘என்ன இது பாட்டு கூத்து ஒண்ணியுங்காணோம். ஒரே கப்சிப்...’’ ‘‘ஆமா, அவுகளுக்கு பாட்டெல்லாம் புடிக்காது; பாடினாலும் பிடிக்காது; அதான்...’’ தலையைக் குனிந்து கொண்டாள். ஷிவானியின் காதிலும் இது விழுந்தது. அவள் கணினியை அணைத்தாள்; விரைவாக அடுப்படிக்குள் வந்தாள்; அம்மாவும், சின்னக்காவும் பட்டாசாலைக்கு நடந்தார்கள்; அவள் சின்னக்காவின் பக்கத்தில் போய் நின்றுகொண்டாள். ‘‘அதுக்குள்ளியுமா...’’  என்ற அம்மா, உள்ளே ஓடி தன் சேலை அடுக்கைத்  துழாவினாள். சின்னக்கா தயங்கினாற்போல் அவள் கையைப் பற்றிக்கொண்டாள்; மடை திறந்தாற்போல ‘‘கொழுக்கட்டை வேணுமா, புட்டு, மருதாணி வச்சுவிடவா...’’ என்று பேசினாள். அவள் சிரித்தாள் ‘களுக்’கென்று.

பள்ளத்தில் கனவு கார்!
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியிலுள்ள ஹார்பின் நகர சாலையில் ஜாலி சவாரி செய்த ஒருவரின் கார் திடீரென சாலை நடுவில் உருவான 3 மீ. அகல பள்ளத்தில் விழுந்தது. ஓனர் மீட்கப்பட்டாலும் குழியில் விழுந்தது 7 லட்சம் டாலர் மதிப்புள்ள ரோல்ஸ்‌ராய்ஸ் கார் என்பதால் பரிதாபங்களை அள்ளி ஹிட் அடித்துள்ளது, வீடியோ!

கின்னஸ் கேரட்!
அமெரிக்காவின் மின்னசோட்டாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் க்வாலி, தன் ஆட்ஸெகோ பண்ணையில் 10 கி.கி அசுர கேரட்டை விளைவித்து கின்னஸ் ரெக்கார்ட் தட்டியுள்ளார். உலகப்புகழ் கேரட் உருவாக காரணம் மண், தட்பவெப்பநிலை, விதை ஆகியவையே என குளோபல் ஊடகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார் கிறிஸ்டோபர்.

மெர்சல் வாம்பயர்!
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் நகரில் திடீர் பரபரப்பு. கஃபே, சாலைகளில் மக்களுக்கு கொடுத்த போஸ்ட்கார்டில் சிரித்த வாம்பயர்தான் காரணம். அம்ப்ரோஸ் லைட் என்ற வலைப்பூ எழுத்தாளர் டேனியல் ஹெட்டிக்ஸ்தான் ஷாக் விளம்பரத்திற்கு கர்த்தா. மக்கள் ஓட்டுப்போட... ரெஜிஸ்டர் செய்ய விழிப்புணர்வு விளம்பரமாம் இது.


காருக்குள் ஹல்க்!
அமெரிக்காவின் வாஷிங்டனில் தனியாக நின்றிருந்த காரில் இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன. ஸ்பாட்டுக்கு வந்த பாஸ்கோ போலீசுக்கு கிடைத்த ஒரே க்ளூ ஹல்க் கைகள். அதை வைத்தே காருக்கு அருகிலுள்ள இரு வீடுகளைத் தள்ளி திருடிய காரை தன் பெயரில் மாற்றிக்கொண்டிருந்த திருடனை பிடித்துவிட்டனர்.