Pets Market..!



அறிந்த இடம் அறியாத விஷயம்

அதிகாலை ஆறு மணி.  பிராட்வே சாலையின் முனைப்பகுதி. ‘‘பறவைகள் எல்லாம் விற்பாங்கல்ல அந்த மார்க்கெட் எங்க இருக்கு?’’ வாயில் பீடியை இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு ரிக்‌ஷாக்காரரிடம் இடம் தெரியாமல் கேட்டோம். ‘‘அப்டியே நேரா போயின்னே இரு. கூட்டமா இருக்கும். பார்த்தா தெரியும்...’’ அரை கிலோமீட்டர் தொலைவில் அவர் சொன்னது போலவே கூட்டம். சாலையின் இருபுறமும் டுவீலர்களால் நிரப்பப்பட்டிருந்தன. ஐம்பது மீட்டரே உள்ள குறுகிய தெரு. அதற்குள் ஐந்தாயிரம் மனிதத் தலைகளும், ஆயிரம் செல்லப்பிராணிகளும் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன. கொஞ்சம் பதட்டம் தொற்றினாலும் பெட்ஸ் மார்க்கெட்டில் அதெல்லாம் பெரிதாக தெரிவதே இல்லை. மாறாக, வியப்பும் விறுவிறுப்பும்தான் கூடுகிறது.

சென்னையைச் சேர்ந்தவர்களும், சுற்றியுள்ள மற்ற ஊர்க்காரர்களும் தங்கள் செல்லப்பிராணிகளை விற்கவோ அல்லது வாங்கவோ இந்தச் சந்தைக்கு காலம் காலமாக வந்து செல்கின்றனர். வியாபாரிகள் பலரும் கடை விரிக்காமல் நின்றபடியே வியாபாரத்தை முடித்துவிட்டு நகர்வது சிறப்பு. சட்டக்கல்லூரியின் எதிரே செல்லும் பிராட்வே சாலையிலுள்ள மண்ணடியில் இருக்கிறது அம்மன்கோயில் தெரு. இதை மஸ்கான் சாவடி என்று அழைக்கிறார்கள். இந்தத் ெதருதான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையும் செல்லப்பிராணிகளின் சந்தையாக
அரிதாரம் பூசிக்கொள்கிறது.

ஆங்கிலேயர்களின் காலத்தில் தொடங்கியதாகச் சொல்லப்படும் இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் தானாகவே கூடிக் கலைகிறது. வாசலிலேயே, ‘ஹட்ச் டாக்’ எனப்படும் ‘பக்’ இன நாய்க்குட்டி ஒன்றைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார் ஒருவர். தவிர, கூடைக்குள்ளும் இரண்டு நாய்க்குட்டிகளை வைத்திருக்கிறார். அவரிடம் வந்த ஒருவர் நாய்க்குட்டியை வாங்கித் தடவிப் பார்த்தபடியே, ‘‘எவ்வளவு?’’ என்கிறார். ‘‘8000 ரூபாய்!’’ ‘‘பார்த்து சொல்லுண்ணா...’’ ‘‘ஆண்குட்டி பாஸ். 25 நாள்தான் ஆகுது...’’ அந்த வாடிக்கையாளர் வேண்டாமென நாய்க்குட்டியைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார். இவரின் அருகில் கொஞ்சம் பெரிய சைஸ் ராட்வீலர் நாய் ஒன்றை 20 ஆயிரம் ரூபாய் என்கிறார் இன்னொருவர்.

அதைப் பார்த்துவிட்டு எல்லோரும் நகர்கிறார்கள். அடுத்து, வலதுபக்கத்தில் உள்ள கூண்டுகள் முழுவதும் விதவிதமான வண்ணங்களில் லவ்பேர்ட்ஸ். நம்மால் எந்த இனம் என அடையாளம் கண்டறியவே முடியவில்லை. ஆனால், வளர்ப்பவர்களுக்கு எந்த இனம், எவ்வளவு விலை இருக்கும், எப்படி வாங்க வேண்டும் என எல்லாமும் தெரிந்திருக்கிறது. ‘‘சொல்லுங்க...’’ என வார்த்தைகளில் பேரம் நடந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகில் சென்றோம். ‘‘2300 ரூபா...’’ என்கிறார் வியாபாரி. ஆனால், வாங்க நினைப்பவர், ‘‘ரெண்டு ரூபா...’’ என்கிறார். ‘‘கொண்டு வர்ற செலவு. பெட்ரோல்னு இருக்கு. கிடைக்கிறதே ஐம்பது, நூறுதான். சரி, ரெண்டாயிரத்து நூறா கொடுங்க...’’ என பேரம் நீள்கிறது. கடைசியில், வாடிக்கையாளருக்காக இறங்கி வந்து இரண்டு லவ் பேர்ட்ஸ்களை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார் அந்த வியாபாரி.

இவர்களின் அருகில் செல்லங்களுக்கான கூண்டுகள் மற்றும் உணவுகளை விற்கும் வியாபாரிகள் அமர்ந்திருக்கிறார்கள். சிறியதில் தொடங்கி பெரியது வரை கூண்டுகள் ஒவ்வொன்றும் கனஜோராக இருக்கின்றன. ஓட்டைகளோடு இருக்கும் மண்பானை சட்டிக் கூடுகளையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இதனுடன் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை பாக்கெட் போட்டு வைத்திருக்கிறார்கள். ‘கீச் கீச்’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினோம். கூண்டில் லவ்பேர்ட்ஸை விற்பனைக்காக ஒருவர் எடுத்துச் செல்கிறார். மீண்டும், ‘கீச் கீச்’ சத்தம். இப்போது ஒரு கூட்டத்தினுள் இருந்து வருகிறது. எட்டிப் பார்த்தோம். ‘Guinea pig’! அதாவது கினி எலிகள். கலர் கலராக இருக்கின்றன.

இதன் முகம் பார்க்க பன்றி போல் இருப்பதாலோ என்னவோ இந்தக் குட்டி எலிகளை ‘பிக்’ என்கிறார்கள். நாம் பார்த்தவரை இந்த எலியை யாரும் வாங்க முன்வரவில்லை. குழந்தைகளுடன் வந்தவர்கள் இந்த எலியை வேடிக்கைப் பார்த்து வியந்தபடியே நடந்தனர். அடுத்து, ஒரு பெண் கையில் பிளாஸ்டிக் கூடையுடன் நின்றிருந்தார். அதன் உள்ளே மூன்று லேப்ரடார் நாய்க்குட்டிகள். பெண்களும் இந்தச் சந்தையில் வியாபாரிகளாக வலம் வருகிறார்கள். அதேபோல் வாடிக்கையாளர்களாகவும் நிறைய பெண்களைப் பார்க்க முடிகிறது. சிலர் கணவன் - மனைவி - குழந்தைகள் சகிதம் குடும்பமாக வந்திருந்தனர். அந்தப் பெண்ணிடம், ‘‘எவ்வளவு?’’ என ஒருவர் கேட்டார்.

‘‘5500 ரூபாய்!’’  ‘‘4 ஆயிரம்...’’ என்கிறார் வாங்குபவர். ‘‘இல்ல, கட்டாது...’’ அதற்கு அந்த நபர், ‘‘பொட்ட குட்டிதானே?’’ என்று சொன்னதும், ‘‘அதனாலதான் இந்த விலை. ஆண் குட்டி, எட்டாயிரம்ண்ணா...’’ என்கிறார் பதிலுக்கு. நடுநடுவில் சிலர் பைகளை விற்றபடி இருக்கின்றனர். வளர்ப்புப் பிராணிகளை வாங்குபவர்களுக்கு ஏதுவாக இந்தப் பைகள் இருக்கின்றன. 20 ரூபாய் எனக் கூவுபவர்கள் பேரத்தில் 15 ரூபாய்க்கு படிந்து விடுகிறார்கள். இதற்கிடையில் ஜவுளிக்கடையில் தரும் கட்டைப் பைகளை வியாபாரத்திற்காக குப்பைத் தொட்டியின் அருகில் ஒருவர் போட்டிருந்தார். அந்தப் பைகள் அத்தனை அழுக்கு. பிராணிகள் கொண்டு போகத்தானே எனச் சாதாரணமாக நினைத்துவிட்டார் போல!

ஆனால், பலரும் தங்கள் செல்லங்களை அழுக்குப் பையில் கொண்டு போகாமல் புதுப் பைகளையே நாடுகின்றனர். அடுத்ததாக புறா. இங்கே புறா விற்பனையாளர்கள்தான் அதிகம். சிலர் வரிசையாக இரண்டு கைகளிலும் புறாக்களை ஏந்தியபடி நிற்பதைப் பார்க்கும்போது, ஏதோ ஓவியம் வரைபவர்களுக்கு போஸ் தருவது போல வித்தியாசமாக இருக்கிறது. வெள்ளைப்புறா, மாடப்புறா என பல வெரைட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. ஒரு புறாவின் விலையைக் கேட்டு ஆடிப்போனோம். ‘‘2 ஆயிரம்!’’ என்றார் அந்த வியாபாரி. வளர்ப்பவர்களுக்கு புறாவின் தரம் தெரிகிறது. முதலில், அந்தப் புறாவின் கழுத்துப் பகுதியை தொட்டுப் பார்க்கின்றனர்.

பிறகு, கண்களை உற்று நோக்குகின்றனர். இந்தப் பிராசஸ் முடிந்த பிறகே விலைக்குள் வருகின்றனர். இதில், ஆஸ்திரேலியன் வகை வெள்ளை நிற புறா ஒன்றின் விலையும் தாறுமாறாக எகிறியது. இந்தக் களேபரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்த விளம்பரம் நம் கண்ணில் தென்பட்டது. கடக்நாத் கோழி எனப்படும் கருங்கோழி ஒன்றை சைக்கிள் மேலே கூண்டு வைத்து அதன் மேலே நிறுத்தியிருந்தார் ஒருவர். கீழே அதன் முட்டைகளும், விளம்பரமும். ‘‘இந்த கடக்நாத் கோழிகள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பழங்குடிகள் வளர்ப்பவை. இதன் முட்டைகள் ஆண்மை வீரியத்திற்கு நல்லது.

நரம்புத் தளர்ச்சியை நீக்கும். இதன் கறியைச் சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்!’’ என்றது விளம்பரம். அந்தக் கருங்கோழியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே பிரியாணி வாடை மூக்கைத் துளைத்தது. காலை ஏழு மணிக்கு எப்படி இப்படியொரு வாசம்? திரும்பினால், ஒரு ஓரமாக அண்டாவை ‘டப் டப்’ என அடித்தபடி பிரியாணியை விற்றுக்கொண்டிருந்தது ஒரு தம்பதி. இந்தக் கூட்டத்திற்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட பிரியாணி போல. சிலர் பிரியாணியை ருசித்துக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
அடுத்து, வாத்துகளை மட்டுமே குட்டியானை வண்டியில் வைத்தபடி நின்றிருந்தது ஒரு கூட்டம். அவர்களுக்கு அருகில் வாத்து, வான்கோழி, நாட்டுக்கோழிகளை வைத்தபடி பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

நாட்டுக்கோழிகள் சைஸ் வாரியான விலையில் தனித்தனியாகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் வான்கோழியும், வாத்துகளும் கட்டப்பட்டிருந்தன. பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்த இதன் உரிமையாளர் பாண்டியனிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். ‘‘இந்த சந்தை எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது. எப்ப ஆரம்பிச்சாங்கனு ெதரியலை. நான் எட்டு வருஷங்களா வந்திட்டு இருக்கேன்...’’ என்றவர் அருகிலுள்ள திருவொற்றியூரில் இருந்து வருகிறராம். ‘‘திருவொற்றியூர்ல இருந்தாலும் எங்க பண்ணை ஓசூர் பக்கம் இருக்கு. அங்கதான் இந்தக் கோழிகள் எல்லாம் வளர்க்கிறோம். வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்ைதக்குப் போவோம்.

ரெண்டு நாள் கழிச்சு இங்க வந்திடுவோம். ஒரு நாள் நிறைய விற்பனையாகும். இன்னொரு வாரம் டல்லா இருக்கும். இதுல எவ்வளவு வருமானம் கிடைக்கும்னு உறுதியா சொல்லமுடியாது...’’ என்றார். இவர்களைத் தொடர்ந்து சிலர் ஆட்டுக்குட்டிகளோடு நிற்கிறார்கள். குட்டிவிலை 8 ஆயிரம் ரூபாய் என்கிறார் ஒருவர். இன்னொருவர் குள்ள செம்மறியாடு ஒன்றை அருகிலேயே கட்டிப் போட்டு அதன் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். விசாரிப்பவர்களுக்கு மட்டும் விலை சொன்னபடி இருக்கிறார். ஆட்டை பார்த்துவிட்டு நடந்தால், வரிசையாக சேவல்களை கையில் வைத்தபடி அலைந்துகொண்டிருந்தனர் பலர்.

இந்தத் ெதருவின் இடையிலேயே சின்னதாக ஒரு தெரு பிரிகிறது. இதன் ஆரம்பத்திலிருந்து சேவல் விற்பவர்களின் கூட்டம்தான். பெரும்பாலும் இளைஞர்கள். விதவிதமான ஹேர்ஸ்டைலுடன் திரிகிறார்கள். அவர்களின் அத்தனை பேர் கையிலும் சேவல். ‘‘ஏய், என்னப்பா இந்தப் பக்கம்?’’ என்கிறான் இளைஞன் ஒருவன். ‘‘சாவ வந்தேன்!’’ என்றான் அந்த இளைஞன் பதிலுக்கு. அதாவது சேவல் பார்க்க வந்ததைத்தான் இப்படி ஷாட்கட்டில் சொல்கிறார்கள். சேவலை தனுஷ் மாடுலேஷனில் ‘‘சாவ...’’ என்றே ெசால்கிறார்கள் இங்குள்ளவர்கள். அனைத்தும் சண்டை சேவல்கள். ‘‘எவ்வளவு?’’ என விசாரித்தார் ஒருவர்.

‘‘ரெண்டு எண்ணூறு...’’ என்கிறான் அந்த இளைஞன். ‘‘அங்க ஆயிரத்து 500 சொன்னே...’’  ‘‘இல்ல. ரெண்டு முந்நூறா கொடுண்ணா. பணத்தேவையா இருக்கு...’’ என்றான் அந்த இளைஞன். ஆனால், பேரம் முடியாமல் ஒதுங்கிவிட்டார் அவர். இந்தச் சேவல் கூட்டத்தின் நடுவில் கலர் கோழி குஞ்சுகளை அட்டைப் பெட்டிக்குள் போட்டபடி இருந்தார் ஒருவர். கலர் குஞ்சுகள் ஒன்று பத்து ரூபாய் எனவும், இரண்டு சாதாரண நாட்டுக்கோழிக் குஞ்சுகள் ஐம்பது ரூபாய் என்றும் விற்பனை நடந்தது. இதை குழந்தைகள் ஆசையாக வாங்குவதைப் பார்க்க முடிந்தது. இதனருகில் முயல் குட்டிகள் ஒன்று 450 ரூபாய் என விற்பனை செய்தார் ஒருவர். இதோடு சந்தை முடியும் இடம் வருகிறது. இதன்பிறகு, சிக்கன் மார்க்கெட் ெமாத்தக் கடைகள் வருகின்றன. மீண்டும் பின்னோக்கி நடந்தோம்.

அப்போது வாசலில் நின்றிருக்கும் போலீசார் மைக் மூலம் ‘வண்டியை ஓரமாக நிறுத்தும்படியும், பர்ஸ் பத்திரம்’ என்றும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். காலை எட்டு மணி. வியாபாரம் இன்னும் சூடுபிடிக்கிறது. சில சிறுவர்கள் கலர் மீன்களை விற்பனைக்கு வைத்துள்ளதைப் பார்த்தோம். இதில் ஸ்பைடர், கோல்டன் ஃபிஷ் எனப் பல வெரைட்டிகள். ஜோடி 50, 100 என வெரைட்டிக்குத் தகுந்தாற்போல் விற்பனை செய்கின்றனர். தவிர, கடல் மீன் விற்பனையும், காய்கறி கடைகளும் இடை இடையில் இருக்கின்றன. இந்த சந்தைக்கு குழந்தைகள் அதிகமாக வருவதால் அவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் தங்கள் செல்லப்பிராணிகளை இங்கே விற்கலாம். மதியம் 11 மணிக்கு படிப்படியாக மக்கள் வருகை குறைகிறது. 12 மணிக்கு மேல் வெறிச்சோடி விடுகிறது இந்த சந்தை.