அறிந்ததற்கும் அறியாததற்கும் உள்ளே விளிம்பில்தான் நான் நடந்துகிட்டே இருக்கேன்...



- நா.கதிர்வேலன்

சற்றைக்கு முன் ஜன்னல் சட்டமிட்ட வானில் பறந்து கொண்டிருந்த பறவை எங்கே? அது சற்றைக்கு முன் பறந்து கொண்டிருந்தது - என்ற கவிதையில் தமிழில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் கவிஞர் ஆனந்த். அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாத அவரது கவிதைகள் தருவது அமைதியும் ஆழமும். விட்டு விடுதலையாகி நிற்கிற மனநிலை அவரது தனி முத்திரை. உண்மையை ஊடுருவி பாசாங்குகளைத் தாண்டிப் பார்க்கும் கலை அவருடையது. மனித இருத்தலுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று தேடுவதுதான் அவரது படைப்பின் சாரம். அகம், புறம் பேதமில்லாத ஆனந்திடம் நடந்தது இந்த உரையாடல்.

உங்கள் கவிதைகளில் மிகை உணர்ச்சி, உணர்வுப் போராட்டம் அறவே இல்லை. நிகழ் கணங்களின் நீள் வெளியாகவும் கவிதைகள் விரிகிறது... எனக்கு இந்த வாழ்க்கையே பிரமாண்டமா இருக்கு. வாழ்க்கையில் புரிந்தது, தெளிந்தது, தெரிந்தது சிறு வட்டமா இருக்கு. அதுவும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கு. அறிந்ததற்கும் அறியாததற்கும் உள்ளே விளிம்பில்தான் நான் நடந்துகிட்டே இருக்கேன். சாதாரண வாழ்க்கையே மர்மம் நிறைந்ததாக இருக்கு. அதில் ஒரு கணத்தை Explore செய்ய ஒரு லைஃப்டைம் வேணும். சாதாரண வாழ்க்கையே அறியாத ஒன்றாக இருக்கு. அதுக்குள்ளேயே தேடிக்கிட்டே போகலாம்.

தேடல்னு சொல்வார்களே, நான் அதைச் சொல்லலை. இப்ப தேடல்ங்கிறது ஸ்டேட்டஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு தேடலும் கிடையாது. இதில் சில கணங்களே எழுதிப் பாருன்னு சொல்லுது. நான் யோசிக்கிற ஆளும் இல்லை. சிந்தனைவாதியும் இல்லை. அப்படியும் குறைவாக வந்ததுதான் என் கவிதைகள். தனிமையை உங்கள் கவிதைகள் அருமையா சித்தரிக்குது...Lonelinessனு ஒரு வார்த்தை இருக்கு. அது வேதனையான விஷயம். புத்தர் மாதிரியானவர்களால் மட்டுமே ஞானம் சாத்தியம்னு சொல்வார்கள். ஆனால், நாம் பார்த்த வாழ்க்கையைத்தான் அவரும் பார்த்தார். அவர் ஆழத்திற்குப் போய்ப் பார்த்திருக்கார். நாம் போகலை. நினைச்சால் போயிடலாம். அவர் எங்கே போய் பார்த்தாரோ, அதை நாம் பார்க்க முடியாது என்பது கிடையாது.

நாம் அதற்கான கவனத்தைச் செலுத்தினால், புத்தர் என்ன கண்டுபிடிச்சாரோ அதை நாமும் கண்டுபிடிக்கலாம். அவர் பெரிய கிரேட் எல்லாம் இல்லை. நான் அவரைத் தாழ்த்தலை; அவரைத் தூக்கி பீடத்தில் வைக்க வேண்டாம். ஆனால், நம்மையும் தாழ்த்திக்க வேண்டாம். அவருக்கும் நமக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இந்த ஞானத்தேடல் இப்ப பொய்யான கருத்துருவாக ஆகிவிட்டது. ஆனால், தனிமை அழகான விஷயம். தனிமையில் எண்ணிறந்த மர்மங்களின் திரை விலகுது. ஏதோவொன்று புலப்படுது... நாம் எல்லோருமே தனியாகத்தான் இருக்கோம். நினைவுகள்தான் நிறையப்பேர் கூடவே இருக்காங்கன்னு சொல்லுது.

நம்மகிட்டே நமக்கான தனிமை நிலை எப்பவும் இருக்கு. நினைவுகள்தான் உண்மையான அழகான, ஆழமான தனிமையை சிதைக்குது. மெமரி பண்ணுகிற அட்டகாசம்தான் நிறைய. தனிமை நல்லது. அண்மையில் நீங்கள் தத்துவ நாவல் எழுதிக் கொண்டிருப்பதாக அறிகிறோம். அதை எங்களுக்கு அறிமுகப்படுத்துவீர்களா? தத்துவப் பிரதியாகவும் அதைப் படிக்க முடியும். எத்தனையோ வேதனைகளும், சந்தோஷங்களும், குழப்பங்களும் இதுவரை எனக்கு நடந்து வந்திருக்கு. இந்த நாவல் எழுத ஆரம்பிச்சு 15 வருஷங்களாச்சு. இந்த ஜனவரிக்கு வந்திடணும்னு முடிவுக்கு வந்திருக்கிறேன். பார்க்கலாம். நாலு வருஷம் ஒரு எழுத்துகூட எழுதாமல் இருந்திருக்கேன். திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ எழுதத் தூண்டி எழுதுவேன்.

இந்த நாலு வருஷத்தில் சில வாழ்க்கை அனுபவங்கள் நடந்திருக்கு. அதில் சில கிரகிப்பு வந்திருக்கு. கற்றுக்கொண்டு இருந்திருக்கேன். அந்த learning இல்லாமல் அந்த இடத்தை நான் கடந்திருக்க முடியாது. அந்த நாவல் வளரணும்னா நான் வளர்ந்தாகணும். அந்த நாவல் என்னை வளரச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கு. நீ வளர்ந்தால்தான் என்னை எழுத முடியும்னு சொல்லி, காத்திருக்க தயார்னு நாலு வருஷங்களா அந்த நாவலும் காத்திருக்கு. இந்த 15 வருடங்களில் நாவல் எவ்வளவு வளர்ந்திருக்கோ, நான் அவ்வளவு வளர்ந்திருக்கேன். இப்போதைக்கு ‘சுற்றுவெளிப் பாதை’னு தலைப்பு வைச்சிருக்கேன். ‘தேடியதும் தொடக்கத்திற்கு திரும்பியதும்’னு ஒரு உபதலைப்பும் இருக்கு.

அண்மையில் வெளிவந்த இளவரசி கவிதைகள் அற்புதமானவை. அந்த இளவரசி யார் எனச் சொல்ல முடியுமா? எனக்குள், நமக்குள் உறைந்திருக்கும் பெண்மையின் சாந்நித்தியம்தான் இளவரசி. பாறையை மெல்லத் துளைத்து ஊடுருவி உள் நுழைந்துவிடும் வேர் நுனியின் மென்மையான வலிமை; அனைத்து நதிகளையும், தனக்குள் வாங்கிக் கொண்டு, மறுபடியும், மேகமென மேலே அனுப்பி, மழையாய் மீண்டும் கைக்கொள்ளும் கடல்; காலப்போக்கில் மலைகளைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிடும் காற்று; பன்னெடுங்காலம் ஓடிப் பள்ளத்தாக்குகளை உருவாக்கி பூமியின் முகத்தையே மாற்றிவிடும் நீரோட்டம்;

உள்ளதை இல்லாததாக்கிவிடும், இருப்பதை வேறொன்றாக மாற்றிவிடும் நெருப்பு; திடம் மாறாமல் தன்னில் இடுவதை வளர்த்தெடுத்துக் கொடுக்கும் நிலம்; அனைத்தையும் தன்னுள் வைத்திருக்கும் ஆகாயம்; அந்த ஆகாயத்தையும் தாங்கி நிற்கும் காலவெளி. எல்லாம் பெண்மைதான். அனைத்தும் எனக்கு என் இளவரசிதான். என் இளவரசி ஓர் ஆள் இல்லை. அவள் உயிர்சக்தி; அடிப்படைத் தத்துவம். என் இளவரசிக்கு பல முகங்கள் உண்டு. உக்கிரம் தகிக்கும் முகம்; சாந்தமும் கருணையும் கசிந்துருகும் முகம்; சில நேரம் கேலியும் கிண்டலும் கண்களில் நர்த்தனமாடும் முகம்; பேரன்பு, பெரும் அமைதி என பல ரகங்களைக் காட்டுவதும் அவள் முகமே. நானும் அவள்தான். நீங்களும் அவள்தான்.

பார்வைக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு பற்றி... பார்வை வெளிச்சம் தர, பிரக்ஞை அனுபவத்தின் கோடுகளை வரைகிறது. அக்கோடுகளுக்கேற்ப அனுபவக் கூறுகளை அமைக்கிறது. மனிதன் ஓர் அனுபவத்தை அடைய, அதுவே கவிதையின் தொடக்கப்புள்ளி அல்லது மையம். கவிதை ஒரு பரிமாண அனுபவம். கவிதையென்பதைப் புரிந்து கொள்ளத் துவங்குவதற்கு முன்பாக மொழி, ஓசை போன்றவை கவிதையில்லை என்ற தெளிவு அவசியமாகிறது. கவிதை ஓர் உள்ளார்ந்த, முழு மனிதப் பிரக்ஞையின் இயக்கம். ஆழமும், வீச்சும் வெளிப்படும் பல கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும் படிமங்கள் காலதேச கலாச்சார எல்லைகளைத் தாண்டி உருவமும் பொருளும் கொள்வதும் இதனாலேயே.

ஆனந்தின் படைப்புகள்
கவிதை: அவரவர் கைமணல் (ஆனந்த் - தேவதச்சன்); காலடியில் ஆகாயம்; அளவில்லாத மலர்; இளவரசி கவிதைகள்.
குறுநாவல்கள் : வேர்நுனிகள்; இரண்டு சிகரங்களுக்கு கீழ்; நான் காணாமல் போகும் கதை.
கட்டுரைத் தொகுப்பு : கவிதை என்னும் வாள்வீச்சு; காலவெளிக்காடு.
மொழிபெயர்ப்பு : அறியப்படாத தீவு; மிஸ்டர் ஜுல்ஸுடன் ஒரு நாள்; ‘க’.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்