ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 47

“மதமே கூடாது என்று சொன்னால் அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் ஒன்று சேர, மற்றொரு மதம் உருவாகும் வாய்ப்பிருக்கிறதே..?” என்கிறார் இராசேந்திரசோழன். “இந்து மதத்திற்கு மாற்றாக புத்த மதம் இருந்திருந்தால் அது இத்தனை ஆண்டுகளில் இந்தியா முழுக்கவே பரவி இருக்காதா?” எனக் கேட்கிறார். இன்றைய இந்தியாவில், குறிப்பாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக்குப் பிறகும், அவரால் இப்படி எழுத முடிவது வியப்பளிக்கிறது. ‘‘இந்து மதம் பிரச்னையில்லை. இந்துத்துவவாதிகளே பிரச்னை!’’ என்கிறார். “தலித் விடுதலை என்பது சனாதன தர்மத்துக்கு வெளியே இல்லை. உள்ளேதான் இருக்கிறது.

வெளியே போய் மல்லுக்கட்டுவதைவிட உள்ளே இருந்து தூய்மை செய்யலாமே...” என்கிறார். இந்து மதத்தை தூய்மைப்படுத்துவதோ இன்னபிற மதங்களைத் தழுவிக்கொள்வதோ அவரவர் விருப்பம் சார்ந்தது. அம்பேத்கர், தான் கண்டடைந்த வழியைக் காட்டியிருக்கிறார். அதில் ஏற்பும் இருக்கலாம். மறுப்பும் இருக்கலாம். இராசேந்திரசோழன் தம் கருத்தை ஏற்கும்படியான விதத்தில் விவாதிக்கிறார். ஆனால், நிகழும் சமூக அவலத்தை முன்வைத்து யோசிக்கும்பொழுது எல்லா விவாதங்களும் அடிபட்டுப்போகிறது.

முற்று முழுக்க சாதிய சமூகமாக மாறிவிட்ட இந்தியச் சூழலில், சாதிக்கான மாற்றைத் தேடுவதே வீண் வேலை என்பதுதான் அவர் சொல்ல வருவது. மார்க்சியத்தைக் கற்றறிந்த அவர் முன்வைக்கும் வாதங்கள் மண்ணுக்கு ஏற்றவையாக இல்லை என்று தள்ளிவிட வேண்டியதில்லை. இன்னும் சிலகாலம் கழித்து அவரே வேறு ஒரு மாற்றைச் சொல்லக்கூடும். “அம்பேத்கரின் சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்குவதா, அவரது கருத்துகளுக்கே மறுப்பா என்கிற உணர்ச்சி வசப்படல்களுக்கு ஆளாகாமல் நிதானத்துடனும் பொறுப்புடனும் நூலை விவாதித்துச் செயல்படும்படி...” முன்னுரையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவர் என்ன வேண்டுகோளை வைத்தாலும் மதமாற்றமே தீர்வு என எண்ணுபவர்கள் அல்லது புரிந்துகொண்டவர்கள் உணர்ச்சிவசப்படாதிருக்க வாய்ப்பில்லை. மிக எளிதாக இராசேந்திரசோழனை அவர்கள் கூண்டிலேற்றலாம். ஒரு தலித்தாக இருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் இந்து மதத்தின் நெருக்கடிகளை உணரமுடியும். போகிற போக்கில் சாதி சமத்துவத்தை பேசிவிட முடியாதே. வேதங்களிலும் சாத்திரங்களிலும் சொல்லப்பட்டதைத்தான் இந்துத்துவவாதிகள் கையிலெடுக்கிறார்கள். அப்படியிருக்க, இந்துமதத்தைவிட்டு ஏன் வெளியேற வேண்டும் என்பது தப்பிக்க நினைப்பவனை தலையைப் பிடித்து முக்கி மீண்டும் தண்ணீரிலேயே மூழ்கடிப்பதற்குச் சமம் என்றே கருதுவார்கள்.

இராசேந்திரசோழனைப் பொறுத்தவரை விவாதங்களுக்கான வித்தை ஊன்றுவதையே தன் வேலையாகக் கொண்டவர். மறுப்பும் ஏற்பும் எப்படியானாலும் அதை நிதானமாக எதிர்கொள்ளப் பழகியவர். தன்னுடைய வாதமே சரியென்று பக்கவாதமோ முடக்குவாதமோ செய்பவர் அல்ல அவர். ஏற்புடையதெனில் தம் கருத்தே ஆனாலும் திரும்பப்பெற்றுக்கொள்வார். ‘தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி’ என்னும் அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ‘மண்மொழி’ என்னும் தமிழ்த்தேசிய விழிப்புணர்வு இதழை தற்போது நடத்தி வருகிறார். ‘பகுத்தறிவின் மூட நம்பிக்கைகள்’ என்னும் தலைப்பில் அவ்விதழ் வெளியிட்டுள்ள சிறு கையேட்டை சில நாட்களுக்கு முன் வாசிக்க நேர்ந்தது.

சாங்கியன் என்னும் பெயரில் வெளிவந்துள்ள அச்சிறு கையேடு, ‘இந்துமதத்திலுள்ள மூடநம்பிக்கைகளை விமர்சிப்பவர்கள் ஏன் ஏனைய மதங்களிலுள்ள மூடநம்பிக்கைகளை விமர்சிப்பதில்லை’ என்கிறது. ‘மூடநம்பிக்கை எல்லா மதத்திலும் இருக்கின்றபொழுது இந்துமதத்தை மட்டும் குறிவைத்துத் தாக்குவது, குழப்பத்தை விளைவிப்பதாக’க் கூறுகிறது. ‘சந்தர்ப்பவாத நாற்காலிக் கட்சிகள், எந்தப் பிரச்னையிலும் அடியோட்டமாக எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல் மேலோட்டமான படாடோபமான போலித்தனமான காரியங்களில் ஈடுபடுவதாக’க் குற்றம் சாட்டுகிறது.

‘எது மேலோட்டம், எது அடியோட்டம் என்பதை பகுத்தறிவின் துணையுடன் பார்க்கவேண்டுமே அல்லாது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்னும் நிலை மாற்றங்களுக்கு உதவாது’ என அச்சிறு வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இராசேந்திரசோழனின் கதைகளில் வரும் பெண்கள் சமகால பெண்களைப் போல புரட்சியோ கலகமோ செய்பவர்கள் இல்லை. கணவனே மாதர் சங்கக் கூட்டங்களுக்கு அனுப்பினாலும் அங்கேயும் செல்ல அவர்களுக்கு நகை நட்டு தேவைப்படுகிறது. ஊர்வலத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளும் மாதர் சங்க உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் கழுத்து நிரம்ப போட்டுவரும் நகைகளைக் கண்டு தனக்கு ஏன் இதெல்லாம் கிடைக்கவில்லை என ஏங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், அவருடைய கட்டுரைகளோ பெண்கள் சமூகம் மதிப்பீடுகள் குறித்து விவாதிக்கின்றன. பெண்ணுக்கான பொருளியல் சுதந்திரத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகின்றன. எது சர்வாதிகாரம், எது ஜனநாயகம் என்பதை பெண்களின் கண்கொண்டு பார்க்கின்றன. புரட்சி, முற்போக்கு என்பதெல்லாம் தொழிற்சங்க அரங்கில் ஊக்கத்தொகை, பஞ்சப்படி சார்ந்து சுருங்கிப் போகிறதே தவிர, மற்றபடி பாலுறவு சார்ந்த, பெண் சார்ந்த சிந்தனைகளில் இவர்களிடம் எவ்வித முற்போக்கும் புரட்சியும் இல்லை என்கிறார் பொது சமூகத்திடமிருந்து கற்பிதங்களை உள்வாங்கிக்கொண்ட புரட்சிக்காரர்கள், தன்னளவில் செய்துகொள்ள வேண்டிய சோதனைகள் எவை எவை என்பதையும் அந்நூலில் குறித்திருக்கிறார்.

பண்பாட்டு கட்டமைப்பையே அசைத்துவிடும் ஆபத்து நிறைந்ததாக அக்கட்டுரைகளை சிலர் கருதலாம். ஆனால், அவருடைய விருப்பமே அதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. “இந்தியா என்பது தேசமே அல்ல. அது பல தேசங்களின் ஒன்றியம்...’’ என்பதை சின்னவயதில் அவர் பேசக் கேட்டிருக்கிறேன். ‘‘பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையே நாம் கோருவது” என, அவர் அடித்தொண்டை வறள முழங்கிய காலங்களாக தொண்ணூறுகள் இருந்தன. “மாநில சுயாட்சி, முதலாளி வர்க்கத்தை காக்கும் பாசிச அரசு...” என அவர் அப்போது உதிர்த்த சொற்களின் அர்த்தங்கள் எல்லாம் இப்போதுதான் புரிகின்றன.

இருபத்தைந்து வயதில் எழுதத் தொடங்கியவர் எழுபதுகளின் பிற்பகுதிவரை என்னென்ன எழுதியிருக்கிறார் என்பதை ஆய்ந்துசொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால், அவர் எழுதியதை எல்லாம் ஆவேசத்தோடு படித்து வந்திருக்கிறேன். மாறுபாடுடைய கருத்துகளை அவர் எழுதினாலும் கூட அதை அக்கறையோடு புரிந்துகொள்ள ஆர்வப்பட்டு ஆகர்ஷித்திருக்கிறேன். கற்பனைகளில் சஞ்சரிப்பவனே எழுத்தாளன் என்னும் பிம்பத்தை உடைத்தெறிந்த எத்தனையோபேரில் அவரும் ஒருவர். என் வருத்தம், அவர் படைப்பிலக்கியத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதுதான்.

வாசகனை நேரே நிறுத்தி கதை சொல்லும் அவருடைய பாணி தனித்துவமானது. காட்சிபூர்வமான விவரணைகளை எந்த இடத்திலும் அவர் தவிர்ப்பதில்லை. உரையாடலை மிகுதியாகப் பயன்படுத்தினாலும்கூட தேவைக்கு அதிகமாக அக்கதாபாத்திரங்கள் பேசுவதில்லை. உட்கார்ந்து ஒரே மூச்சில் எழுதப்பட்ட கதைகளைப் போலவே எல்லாமும் இருக்கின்றன. ஆவேசப் பெருக்கோடு படைப்பை அணுகக்கூடிய தருணங்களை அவருடைய படைப்புகள் நமக்கு வழங்குகின்றன. இவ்வளவு நேர்த்தியான கதைசொல்லி எழுபத்தி ஏழு சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது என் வருத்தம் மட்டுமல்ல, அவரை வாசித்த அனைவரின் வருத்தமும் அதுவாகத்தானிருக்கும்.

கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் படைப்பாளன், படைப்பிலக்கியத்திலிருந்து வெகுதூரம் விலகி சென்றுவிடக்கூடிய அபாயத்தின் சாட்சியாக அவர் இருக்கிறார். என்றாலும், வெறுமனே அவர் பொழுதைப் போக்கிக்கொண்டிராமல் இயங்கியிருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட சமூகப் பொறுப்பிலிருந்தும் சமூக அக்கறையிலிருந்தும் நொடிப்பொழுதுகூட அவர் சும்மா இருக்க எண்ணவில்லை என்பதையே அவருடைய எழுத்துகள் சொல்கின்றன. மிகக் குறிப்பாக என்னைக் கவர்ந்த அவருடைய முக்கியமான நூல், ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா’ என்பது. அந்நூலில் அவர் அடுக்கி அடுக்கி கருத்துகளை விவாதிக்கும் விதம் அற்புதமானது.

“புரட்சிக்குப் பிறகான பாட்டாளி வர்க்கம் இடைக்காலத்தில் சர்வாதிகாரத்தை தன் பாதையாகக் கொள்ளலாமே தவிர அதுவே நிலையாகிவிடக் கூடாது. அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல புரட்சியின் வேலை. எனவே, முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்...” என்றிருப்பார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் கூற்றுக்களிலிருந்தே அவ்விவாதத்தை அவர் நடத்திச்செல்வது ஆரோக்கியமான புரிதலை நமக்குள் ஏற்படுத்தும். “சமூகத்தின்மேல் இதுவரை செல்வாக்கு செலுத்திவந்துள்ள தத்துவங்களில் மனித குலத்தை வதைக்கும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் அடிமைத்தளைகளிலிருந்தும் விடுவிக்க அறிவியல் பூர்வமாக வழிகாட்டும் ஒரே மகத்தான தத்துவம் மார்க்சியம் மட்டுமே” என்றிருப்பார். 

சோவியத்தின் வீழ்ச்சியை மார்க்சியத்தின் வீழ்ச்சியாகச் சொல்பவர்கள் உண்டு. அப்படிச் சொல்கிறவர்களை மார்க்சிய விரோதிகளாகப் பார்க்காமல் அவர்கள் புரிதலில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்யும் விதத்தில்தான் அந்நூலை எழுதியிருப்பார். ஒரு படைப்பாளனுக்கு பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது இப்போது ஒரு பிரச்னையே இல்லை என்ற நிலையில்தான் இராசேந்திரசோழனின் படைப்புகள் அதிகமும் கவனம் பெறுகின்றன. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுச் சூழலை பத்து பத்து ஆண்டுகளாகப் பிரித்துக்கொண்டால் எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்களில் பலர் இன்று என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

வெவ்வேறு சிந்தனைப்போக்குடைய அவர்கள் கட்சி அரசியலிலும் கள செயல்பாட்டிலும் ஈடுபாடு காட்டியதால் தங்கள் படைப்பின் ஆதார சுருதிகளை இழந்தவர்களானார்கள். எண்பது, தொண்ணூறுகளில் எழுத வந்தவர்கள் தத்துவங்களிலிருந்து விலகி தன்னுணர்வுகளில் விழுந்தார்கள். இரண்டாயிரத்தை சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் எங்கே விழுவது எனத் தெரியாத இடத்திலெல்லாம் விழுந்துகொண்டிருக்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பின் சந்தைகள் பெருகிவிட்டன. வணிகமும் நுகர்வும் மலிந்துவிட்டன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் தெரியாமல் இந்த வணிகத்திலும் நுகர்விலும் படைப்புலகமும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

எழுத்து என்பது காகிதத்திலிருந்து கணினிக்கு இடம்பெயர்ந்தது போலவே சிந்தனைகளும் அவசரகால சந்தைக்கு சரக்குகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. வாழ்க்கையை கற்பனை மயமான புத்தகங்களில் படித்து பிரேமை கொண்டிருந்த ஒரு சமூகம், கள எதார்த்தத்தை இப்போதுதான் சந்திக்கிறது. இந்தச் சந்திப்பில் எழுதினால் என்ன வரும், எவ்வளவு தேறும் என்பது பிரதான கேள்வியாக வைக்கப்படுகிறது. எதையும் தருவதல்ல எழுத்து, எல்லாவற்றையும் சிந்திப்பதற்கான சக்தியை ஏற்படுத்துவதே எழுத்தின் அடிப்படை. எப்படி சொல்கிறீர்கள் என்றால், ஒரே ஒரு வாக்கியத்தில் விடையளிக்கலாம். எல்லோரும் இராசேந்திரசோழனின் நூல்களை ஒரே ஒருமுறை வாசியுங்கள். அவரை எனக்குத் தெரியும் என்பதால் அல்ல. எல்லோரையும் அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதால்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்