இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 17

காலை கனமாக ஒரு டிபன். மதியம் கன ஜோராக விருந்து (நமக்கு வெறும் சாப்பாடெல்லாம் சரிப்பட்டு வராது. தினமுமே விருந்து தரத்தில் இருந்தாக வேண்டும்). ராத்திரியென்றால் கொஞ்சம் சுமாரான டிபன் போதும். இடைப்பட்ட பொழுதில் இருவேளை நொறுக்கு அவசியம். இப்படியாக உடலையும் உயிரையும் ஐந்து வேளை தின்று தீர்த்து வளர்த்துக் கொண்டிருந்தவன் நான். என்னால் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியுமா? சந்தேகம் வலுவாகவே இருந்தது. சரி ஒருநாள் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று நினைத்தேன்.

அன்றைய தினத்துக்கு முதல் நாள் உடலைக் கொஞ்சம் சுத்திகரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு லோட்டா நிறைய கீரை ஸ்மூத்தி குடித்தேன். இந்த ஸ்மூத்தி விவகாரத்தை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? என்னவாவது ஒரு கீரையுடன் பூண்டு, புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை என்று கிடைக்கிற இலை தழைகளையெல்லாம் போட்டு பச்சையாக அரைத்து அப்படியே கல்ப்பாக அடித்துவிட வேண்டியது. இதனைச் செய்வதன் மூலம் என்ன நிகழ்கிறது என்றால், வெளியேறாமல் குடலுக்குள் தேங்கிக் கிடக்கும் அழுக்கெல்லாம் மொத்தமாக வெளியேறிவிடும். கிட்டத்தட்ட இது ஓர் இயற்கை எனிமா.

இதைத் தவிரவும் கீரை ஸ்மூத்தியால் வேறு சில பலன்கள் உண்டு. அதில் முதன்மையானது, நமது உள் உறுப்புகளை சர்வீஸ் செய்து வாட்டர் வாஷ் செய்து எடுத்தாற்போல் ஆக்குவது. சட்டென்று ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். உச்சந்தலை சூடெல்லாம் குறையும். ஒருநாள் இந்த ஸ்மூத்தியைக் குடித்துவிட்டால் மறுநாள் உடம்பானது என்ன மாதிரியான பரீட்சைக்கும் எளிதில் தயாராகிவிடும். ஆக, நான் தயார். குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு என் உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டேன். திட்டப்படி மறுநாள் இரவு எட்டு மணிக்குத்தான் அடுத்த உணவு.

விரதம் இருக்கிறேன் பேர்வழியென்று நாளெல்லாம் அமைதியாக ஓரிடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியாது. வழக்கமான வேலைகளும் நடக்க வேண்டும். அதே சமயம் சோர்வடைந்துவிடவும் கூடாது. முடியுமா இது? மடிந்தது! அன்று காலை கண் விழித்ததில் இருந்து இரவு எட்டு மணி வரை தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தேன். எப்படியும் ஆறு லிட்டர் நீர் இருக்கும். நாம் சாப்பிடாமல் இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும் வரை லேசாகப் பசிப்பது போலவே இருந்தது. குறிப்பாகக் காலை பதினொரு மணி முதல் ஒரு மணி வரை ரொம்பப் படுத்தியெடுத்தது. அதன்பின் அந்த உணர்வில்லை. பரபரவென்று என் வேலைகளைப் பார்த்தேன்.

வழக்கம்போல் மதியம் இரண்டு மணிக்குப் படுத்துவிட்டேன். சாப்பிடாமல் படுத்தால் தூக்கம் வராது என்று ஒரு பாட்டிக் கதை சொல்லுவார்கள். எனக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எப்போதும்போல் நிம்மதியாகவே தூங்கினேன். மாலை ஆறு மணிக்கு எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு எழுத உட்கார்ந்து இரவு எட்டரை வரை இடைவிடாமல் எழுதினேன். ஜனநாயகக் கடமையை எல்லாம் ஆற்று ஆற்றென்று ஆற்றி முடித்துவிட்டு உணவு உண்ண அமர்ந்தேன். சுமார் முன்னூறு கிராம் பனீர். வெங்காயம் தக்காளி குடைமிளகாயெல்லாம் போட்டு நெய் விட்டு வதக்கியது. அதோடு கால் கிலோ வெண்டைக்காய் பொரியல். ஐம்பது கிராம் வெண்ணெய். பத்தாத குறைக்கு ஒரு சீஸ் க்யூப். நூறு மில்லி தயிர்.

உண்டு முடித்தபோது கிர்ரென்றது. எழுந்துகொள்ள ஓரிரு நிமிடங்கள் பிடித்தன. சுமார் பத்திருபது நிமிடங்களில் உறங்கியும் விட்டேன். சரியான தூக்கம்! மறுநாள் காலை எழுந்தபோது கவனமாக வயிற்றை உற்றுக் கவனித்தேன். அது காலியாக இல்லை என்று உணர முடிந்தது. சட்டென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு நடக்கப் போனேன். ஒரு மணி நேரம் உற்சாகமான நடைப்பயிற்சி. நடக்கிறபோது புத்தகம் படிப்பது என் வழக்கங்களுள் ஒன்று. சிலநாள் பாட்டு கேட்டபடி நடப்பேன். சில நாள் படித்தபடி நடப்பேன். வெகுசில தினங்கள் மட்டுமே ஒன்றுமில்லாமல் வெறுமனே யோசித்தபடி நடப்பது. என் கருத்தில், பாட்டுக் கேட்டபடி நடப்பதைக் காட்டிலும் புத்தகம் படித்தபடி நடப்பது சிறப்பானது. எதிரே மோதுவதற்கு எருமைகள் இல்லாத பிராந்தியமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டும் முக்கியம்.

இதில் என்ன லாபம் என்றால் மனமும் உடலும் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்கும். பொதுவாக மூளை உழைப்பின்போது உடலுழைப்பு இராது. உடல் உழைப்பின்போது மூளைக்கு நாம் வேலை தருவதில்லை. படித்தபடி நடக்கிறபோது இந்த இரண்டும் ஒருங்கே நடைபெறுவதால், வழக்கமான நடை அனுபவம் தருகிற புத்துணர்ச்சியைக் காட்டிலும் இது சற்றுக் கூடுதலாக இருக்கும் இன்றைக்கும் இருபத்தி நான்கு மணி நேர விரதம் என்று வீட்டுக்குப் போனதும் அறிவித்தேன். ஒரு காப்பியாவது சாப்பிடக்கூடாதா என்று மனைவி கேட்டபோது மறுத்துவிட்டேன். தண்ணீர் மட்டும். முடியுமா? முடிந்தது.

முதல் நாள் காலை 11 மணிக்குப் பசிக்கிற மாதிரி இருந்தது என்று சொன்னேன் அல்லவா? அந்த இரண்டாம் நாள் அந்த உணர்ச்சி இல்லை. மாறாக முதல் தினத்தைக் காட்டிலும் உற்சாகமாக இருந்தேன். அன்றெல்லாம் ஐந்து லிட்டர் தண்ணீர் அருந்தியிருப்பேன். ஆனால், மாலை ஆறு மணிவாக்கில் அன்று வயிறானது தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. அது பசிதான். ஆனால், வேறு விதமாக இருந்தது. வயிற்றுக்குள் கடமுடாவென்று பலத்த சத்தம். எழுந்து நின்றால் கால்கள் உதறின. சாப்பிட்டுவிடலாமா என்று ஒரு யோசனை. கட்டக்கடைசிப் பொழுதில் விரதத்தைக் கெடுப்பதா என்று கூடவே ஒரு எதிர் யோசனை.

பொதுவாக சாப்பாட்டு விஷயத்தில் நான் இம்மாதிரியான பரிசோதனைகள் எதையும் அதற்குமுன் செய்ததில்லை. உணவு விஷயத்தில் நான் செய்கிற ஒரே பரிசோதனை, விதவிதமாக உண்டு பார்ப்பது மட்டுமே. எனவே இந்த அனுபவம் புதிதாக இருந்தது. எப்படியோ தாக்குப் பிடித்து எட்டு மணியைத் தொட்டேன். ஆ, உணவு! அன்றைக்கு கத்திரிக்காய் பொரியல். பனீரை உப்புமா போல் சமைத்திருந்தது. ஒரு தீவிரவாதியைப் போல் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டுப் படுத்தேன். மறுநாள் காலை எழுந்து எடை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எண்ணி இரண்டே நாள். இரண்டே முக்கால் கிலோ குறைந்திருந்தேன்!

(தொடரும்)

- பா.ராகவன்

பாலக் பனீர்

செய்வது எப்படி?
ஒரு கட்டு பாலக் கீரை. 200 கிராம் பனீர். இரண்டு தக்காளிப் பழம். ஒரு வெங்காயம். ஒரு இஞ்ச் இஞ்சி. நாலு பல் பூண்டு. கொஞ்சம் கொத்துமல்லி. நெய். ஃப்ரெஷ் க்ரீம். முடிந்தது. கீரையை ஆய்ந்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காய வகையறாக்களை நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெந்த கீரையை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். கீரை அரைத்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டுகளைப் போட்டுத் தனியே அரைக்கவும். அடுப்பில் வாணலி. அதில் கொஞ்சம் நெய். நெய் உருகி வாசனை வந்ததும் வெங்காய பேஸ்ட்டைப் போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளித் துண்டுகள், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கல். பதம் வந்ததும் இரண்டு ஏலக்காயைத் தட்டிப் போடுங்கள்.

சும்மா கும்மென்று மணமடிக்கும். இதுதான் சமயம். அரைத்து வைத்திருக்கும் கீரையை இதில் கொட்டி உப்பு, மிளகாய்த் தூள் போட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றத் தொடங்கி, இந்தக் கீரை கோல்கேட் பேஸ்ட் பதத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும் நேரத்தில் நறுக்கிய பனீர் துண்டுகளைப் போட்டு வேகவிடுங்கள். இரண்டு நிமிடம் போதும். கொத்துமல்லியைக் கசக்கிப் போட்டு, மேலுக்கு ஒரு ஸ்பூன் நெய் விட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் திறந்தால் அருமையான பாலக் பனீர் தயார்!