நாட்டுப்பற்றா? வாடிக்கையாளரா?



ஆப்பிள் ரகசிய சர்ச்சை

14  பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதி... ‘‘அவன் பயன்படுத்திய செல்போனை பாஸ்வேர்டு இல்லாமல் திறந்து கொடு’’ என்கிறது காவல் துறை. ‘‘அதெல்லாம் முடியாது... அவன் என் வாடிக்கையாளன்.

அவன் பிரைவஸியைப் பாதுகாப்பதாக நான் உறுதி கொடுத்திருக்கிறேன்!’’ என்கிறது செல்போன் கம்பெனி. நீங்கள் யார் பக்கம் இருப்பீர்கள்? அமெரிக்காவில் இதுதான் இப்போது ஹாட் விவாதம். அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் ஒரு போன் விஷயத்தில் வேர் விட்டிருக்கிறது War!

சென்னைவாசிகள் மழை, வெள்ளத்தில் மின்சாரம் கூட இல்லாமல் தவித்தபோது அமெரிக்காவில் இப்படியொரு துயரச் சம்பவம் நடந்தேறிவிட்டது. டிசம்பர் 2ம் தேதி... சையது ரிஸ்வான் ஃபாருக் என்பவரும் அவர் மனைவியான தஸ்வீன் மாலிக் என்பவரும் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு பார்ட்டி ஹாலில் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள். அதில் 14 பேர் கொல்லப்பட்டு 22 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதன்பின் தப்பியோட முயன்ற அவர்களை விரட்டி சுட்டுக் கொன்றது அமெரிக்க போலீஸ்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த பெரிய தீவிரவாதச் செயல் இதுதான் என்கிறார்கள். ஆனால், இவர்கள் எங்கிருந்தோ பறந்து வந்த தீவிரவாதிகள் அல்ல. அமெரிக்க குடியுரிமை பெற்று வருடக்கணக்கில் அங்கேயே வாழ்ந்து வந்த பாகிஸ்தானியர்கள். அமெரிக்க சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்தவர் சையது. திடீரென்று இவர்கள் ஏன் இப்படி நடந்துகொண்டார்கள்? ஒன்றும் புரியவில்லை. இவர்கள் கையில் இருந்த ஆப்பிள் ஐபோன் 5சியைத் தவிர வேறு தடயங்கள் இல்லை.

அந்த போனும் பாஸ்வேர்டு கொண்டு பூட்டப்பட்டிருக்கிறது. நம்ம ‘சிவாஜி’ படத்தில் வருமே... ரஜினியின் லேப்டாப். அதே மாதிரி இந்த போனும் பலமுறை தவறான பாஸ்வேர்டை உள்ளிட்டால் தனக்குத்தானே நினைவுகள் அனைத்தையும் அழித்துக்கொண்டுவிடும். இந்த பாஸ்வேர்டு லாக்கை நீக்கத்தான் ஆப்பிளின் உதவியை நாடியது அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. ‘முடியாது!

நீங்கள் சொல்வதைச் செய்தால் ஆப்பிள் போன்களின் மீதுள்ள நம்பகத்தன்மை போய்விடும். ஆப்பிள் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் சுலபமாக திருடப்பட்டு விடும்’ என ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டது ஆப்பிள். நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் கூட விடப்பட்டது. ம்ஹும், இந்த நிமிடம் வரை ஆப்பிள் அசரவில்லை.

‘‘உனக்கு நாடும்  முக்கியமில்லை... நாட்டுப்பற்றும் முக்கியமில்லை... உன் வியாபாரம்தான்  முக்கியமாய்ப் போய்விட்டதா?’’ என ஆப்பிள் மீது எகிறுகிறார்கள் சிலர்.ஆனால், ‘ஆப்பிள் சொல்வது சரிதான்’ என ஆதரவுக் கொடி பிடிப்பவர்களே அதிகம். அது எப்படிய்யா சரியாகும்? இந்த வழக்கை சற்று ஆழமாகப் பார்த்தால் உங்களுக்கே அந்த நியாயம் விளங்கும்.

‘‘எஃப்.பி.ஐ எங்களிடம் ஒரு போனை மட்டும் பாஸ்வேர்டு நீக்கித் தரச் சொல்லவில்லை. அப்படி நீக்கவும் முடியாது. பாஸ்வேர்டைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டுமானால், வாடிக்கையாளரின் அனைத்து பர்சனல் தகவல்களும் அழிந்து ரீ செட் ஆகிவிடும். ஆக, இந்த பாஸ்வேர்டு பாதுகாப்பை உடைத்து உள்ளே செல்லும் ஒரு குறுக்கு வழி மென்பொருளையே உருவாக்கித் தரச் சொல்கிறது உளவுத்துறை.

அப்படி ஒன்றை உருவாக்கினால் அதை வைத்து எல்லா ஐபோன்களையும் திறந்துவிட முடியும். யாருடைய ரகசியங்களையும் திருட முடியும். தீவிரவாதிகள் கைக்கு அது போனால், ராணுவ அதிகாரிகளின் ஐபோனையே திருடி பல ரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதுதான் நாட்டுக்கு பேராபத்து!’’ என விளக்கம் தந்திருக்கிறார் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்.

‘‘இன்று உளவுத்துறை இப்படிக் கேட்கிறது. நாளை இன்னொரு அரசுத் துறை வந்து ஒருவரின் போனை ஒட்டுக்கேட்க உதவி செய்யச் சொல்லும். இப்படியே போனால் ஒருவருக்கும் பிரைவஸி இருக்காது!’’ என வெடித்திருக்கிறார் ஆப்பிளின் மென்பொருள் பிரிவுத் தலைவர் எடி க்யூ.
தொழில்ரீதியில் ஆப்பிளுடன் சண்டை பிடித்துக்கொண்டு நிற்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த விஷயத்தில் ஆப்பிளுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கின்றன. காரணம், நாளை இன்னொரு தீவிரவாதியின் போன் ஆண்ட்ராய்டாக இருந்து, இவர்களின் அண்ட்ராயர் கிழியக்கூடாதல்லவா?

இன்னொரு பக்கம் அமெரிக்க உளவுத்துறையின் வாதமும் நியாயமாகவே படுகிறது. ‘‘இந்த போனில் பல தடயங்கள் கிடைக்கலாம். அதன் வழியே வேறு பல தீவிரவாதிகள் பிடிபடலாம். நடக்கவிருக்கும் அசம்பாவிதங்கள் பலவும் தடுக்கப்படலாம். இதையெல்லாம் சாதிக்க ஆப்பிள்தான் தடையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தார் முகத்தில் நாங்கள் எப்படி விழிப்போம்!’’ என சென்டிமென்ட்டைப் பிழிந்திருக்கிறார் அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநர் ஜேம்ஸ் கோமே.

ஆனால், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள்தான். அவர்களே கூட இந்த போனை விட்டுவிட்டு வேறு தடயங்களை உளவுத்துறை தேடலாமே எனப் பேசத் துவங்கிவிட்டனர். காரணம், எது உண்மையான நாட்டுப்பற்று, எது உண்மையான பாதுகாப்பு என்பது அங்கிருக்கும் மக்களுக்குத் தெரிகிறது. குடிமக்களை விட்டுவிட்டு கொடியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நம்ம ஊரிலெல்லாம் இப்படியொரு பிரச்னை வந்தால்... கற்பனை செய்யக்கூட முடியவில்லை!

- நவநீதன்