எனக்குப் பிடிச்ச ஹீரோ சூர்யா!
awesome அனுஷ்கா!
ஒரு படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படம்... அதுதான் அனுஷ்கா ஸ்டைல். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் ஷூட்டிங் பரபரக்கிறது. ‘பாகுபலி 2’க்காக ஐதராபாத்... சூர்யாவின் ‘எஸ்3’க்காக தூத்துக்குடி என பறந்து பறந்து நடிக்கிறார் அனுஷ்!
 ‘‘நடிக்க வந்த புதுசுல எனக்கு இண்டஸ்ட்ரி பத்தி எதுவும் தெரியாது. எப்படிப்பட்ட படங்களை செலக்ட் பண்ணணும்னு எந்த ஐடியாவும் இல்லாமதான் ஒரு வருஷம், ஒன்றரை வருஷமா படங்கள் பண்ணியிருப்பேன். ‘அருந்ததி’க்கு அப்புறம்தான் சினிமா பத்தி கத்துக்க ஆரம்பிச்சேன். எதைப் பண்ணினா சரியா இருக்கும்? எதைத் தவிர்க்கணும்? எதை ஏற்கணும்னு எல்லாம் தெரிய ஆரம்பிச்சது அப்போதான்.
‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’, ‘இஞ்சி இடுப்பழகி’ படங்களெல்லாம் ஷூட்டிங் ரொம்ப டைம் எடுத்துச்சு. உடம்பு கூட்டி, குறைக்கறதுனு நிறைய மெனக்கெட்டாலும் கதையையும் கேரக்டரையும் விரும்பி பண்றேன். எண்ணிக்கை முக்கியமில்லனு உணர்ந்திருக்கேன்.
 ஆக்ட்டிங், டான்ஸ் பொறுத்தவரை எல்லாம் கத்துக்கிட்டேன்னு சொல்ல முடியாது. வர்ற ஸ்கிரிப்ட்கள் அதைக் கத்துக் கொடுத்துக்கிட்டே இருக்கு. இந்த சினிமாவாலதான் வளர்ந்தேன். பெரிய இயக்குநர்கள் படங்கள் கிடைச்சிருக்கு. நல்ல ஸ்க்ரிப்ட் அமைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கேன்!’’
‘‘நினைச்சா குண்டாகிடுறீங்க... இப்போ செம ஸ்லிம்மா இருக்கீங்க... உங்க டயட் சீக்ரெட் என்ன?’’‘‘ஆரோக்கியமான உணவு முறைகள்தான் எப்பவும் என்னோட சாய்ஸ். சரிவிகித புரோட்டீன் இருக்கற மாதிரி பார்த்துக்குவேன். ஷூட்டிங் இருந்தாலும், இல்லை என்றாலும் தினமும் ரெண்டு தடவை எக்சர்சைஸ். கார்போஹைட்ரேட் உணவுகள் எடுக்கும்போது கொஞ்சம் கவனமா இருப்பேன். அடிக்கடி தண்ணீர் குடிப்பேன்! அதுவும் இந்த சம்மர்ல தண்ணீர்தான் அமிர்தம்!’’‘‘தெலுங்கில் நீங்கதான் லேடி சூப்பர் ஸ்டார்னு பேசிக்கறாங்களே..?’’
‘‘அதெல்லாம் பெரிய வார்த்தைங்க. இங்கே அதுக்குத் தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. எல்லாருமே ‘அனுஷ்கா’னு என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுறதையே விரும்புறேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே என்னை ‘ஸ்வீட்டி’ன்னு கூப்பிடுவாங்க. பட்டமெல்லாம் வேணாங்க!’’ ‘‘ ‘சிங்கம் 3’..?’’
‘‘ ‘சிங்கம்’ சீரிஸ்ல மூணு பார்ட்டுமே சூப்பர்ப். ஹரி சார், சூர்யாவோட வொர்க் பண்றது இனிமையான அனுபவம். சூர்யாகாரு எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ. ஹார்டு வொர்க்கர். ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’னு நிறைய ஹெவி சப்ஜெக்ட்ஸ் பண்ணிட்டேன். டூயட் பாடி ஆடுற கேரக்டர்கள் பண்ணி ரொம்ப நாளாச்சு. மாடர்ன் காஸ்ட்யூம், டான்ஸ் எல்லாம் ‘சிங்கம் 3’ல இருக்கும்னு நினைக்கறேன். ‘சிங்கம் 3’லயாவது உங்களுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் நடக்குமானு நிறைய பேர் கேக்குறாங்க. அதை ஹரி சார்தான் சொல்லணும்!’’
‘‘அனுஷ்கா மாதிரி ஆகணும்னு நினைக்கற ஹீரோயின்களுக்கு உங்க அட்வைஸ்?’’‘‘அச்சச்சோ... நோ அட்வைஸ். நானும் வளர்ந்து வர்ற நடிகைதான். பொதுவா படங்கள் பார்க்கவே எனக்கு டைம் கிடைக்கறதில்ல. அப்படியே பார்த்தாலும் ஃபிரெஞ்சு, ஈரானிய, ஆங்கிலப் படங்கள்தான் பார்க்குறேன். அந்த அனுபவங்கள்தான் நம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகுது.
‘அருந்ததி’ பண்ணிட்டு அடுத்து, ‘வானம்’ பண்ணும்போது நிறைய பேர் ‘அப்படி ஒரு கேரக்டர் பண்ணிட்டு இப்போ விலைமாது கேரக்டர்ல நடிக்கணுமா? வேண்டாம்... ரிஸ்க்’னு சொன்னாங்க. ஆனா, ‘வானம்’ பார்த்துட்டு பாராட்டாதவங்களே இல்ல. அடுத்தடுத்து நான் ஸ்கோர் பண்றதுக்கான படங்கள் அமைஞ்சது. இதுக்கெல்லாம் காரணம் கடவுளோட அருள்தான்!’’‘‘ ‘தோழா’வில் கெஸ்ட் ரோல்..?’’‘‘ஆமா. நாகார்ஜுன் சார் கேட்டதால நடிச்சிருக்கேன். சின்ன போர்ஷன்தான்!’’ ‘‘ ‘பாகுபலி 2’..?’’
‘‘ ‘பாகுபலி’ ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தோம். ஆனா, இவ்வளவு பெரிய ஹிட்டை யாரும் எதிர்பார்க்கல. முதல் பார்ட்ல எனக்கு முக்கியத்துவம் இருக்காதுனு முதல்லயே ராஜமௌலி சொல்லியிருந்தார். ரெண்டாவது பார்ட் ஷூட்டிங் போகுது. அதைப் பத்தி சொன்னா ராஜமௌலி திட்டுவார். அதுக்கான சந்தர்ப்பம் வரும்... நிறைய பேசலாம்!’’
- மை.பாரதிராஜா
|