நம்பர் 1 காரணம்!
நா.முத்துக்குமாரின் நினைவில் நிற்கும் ‘அஞ்சு ரூபா டாக்டர்’, எங்களின் பழைய நினைவுகளையும் கிளறிவிட்டார். ஜீவனுள்ள குறும்படம் பார்த்த உணர்வு! - மனோகர், மேட்டுப்பாளையம்.
 காஷ்மீரின் உண்மை முகம் ஜெயமோகன் மூலம் வெளிப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இவற்றை எல்லாம் வட இந்திய ஊடகங்கள் விருப்பு வெறுப்பின்றி வெளியிட முன்வர வேண்டும்! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
‘மரங்களின் தாய்’ வட்டமலை பாக்கியம்மாளை வாழ்த்தி வணங்கத் தோன்றுகிறது. அரசும் தொண்டு நிறுவனங்களும் இவரின் சமூக அக்கறைக்கு துணை நிற்க வேண்டும்! - எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.
கால்நடைகளுக்கு மறுவாழ்வு அளித்து வரும் சாதனாவின் சாதனை அளப்பரியது. எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைக்கும் அவர் ஒரு தெய்வமாகவே பரிமளிக்கிறார்! - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.
உதிர்ந்த தலைமுடியைக் கொண்டு சவுரி செய்யலாம், விக் செய்யலாம்... ஆனால் ஒரு ‘கோட்’ செய்து போட்டுக்கொண்டு நிற்கும் அர்டான்ஸா, டெர்ரர் பெண்மணிதான்! - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
நயன்தாரா நம்பர் ஒன்னாக வலம் வரக் காரணம் என்ன என்று ‘அவசிய’ ஆராய்ச்சி செய்து, ஐந்து பக்கங்களை நயன்தாரா ஸ்டில்களால் நனைத்துவிட்டீர்களே! இப்போது புரிகிறது... நீங்கள் எப்படி நம்பர் ஒன்னாக வலம் வருகிறீர்கள் என்று! - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
சேவை வரி என்ற பெயரில் அப்பாவி மக்களின் கழுத்தை பெரிய வடத்தால் இறுக்குவது, மத்திய அரசின் மாற்றாந்தாய்ப் போக்கைத்தான் பிரதிபலிக்கிறது! - இராம.கண்ணன், திருநெல்வேலி.
கோவை சரளாவின் ‘சினேகிதனை...’யும் ‘என்ற கோவாலு...’வையும் மறக்க முடியுமா? அந்த நடிப்பு ராட்சஸிக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால், நஷ்டம் சினிமாவுக்குத்தான்! - சிவமைந்தன், சென்னை - 78.
ஆஸ்கர் விழாவில் ப்ரியங்கா சோப்ரா காஸ்ட்யூம் எங்களைக் கிறங்கடித்து விட்டது! அந்த வைரக் கம்மல், வைர மோதிரங்களின் மதிப்பு ஒரு கோடியா? மயக்கமே வந்துவிட்டது! - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
‘ஆறாது சினம்’ படத்தை நன்கு ரசித்து, ‘கணிதன்’ படத்தை நன்றாகக் கணித்து விமர்சனம் எழுதியிருந்த விதம் சூப்பர் ப்ரோ! - த.சத்தியநாராயணன்,சென்னை-38.
|