வாழ்வில் அனைத்திற்கும் அஹோபிலம் நரசிம்மர்
திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் ஒன்று. ஏனைய அவதாரங்களைவிட பார்ப்பதற்கு நடுக்கத்தையும் அச்சத்தையும் விளைவிக்கும் பயங்கர அவதாரம். தனது தூய பக்தனின் பக்திக்காக இரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்து அவனது உடலைக் கிழித்து உதிரம் பருகும் நிலையில் பார்ப்போர் அஞ்சி நிலை குலையச் செய்யும் அவதாரம்.  ஏன் இந்த மூர்த்தி கண்டோர் அஞ்சும் வண்ணம்தான் இருக்க வேண்டுமா? சாந்த மூர்த்தியாய் விளங்கக்கூடாதா? ஆம் அவ்வாறு சாந்த மூர்த்தியாய்-அவரது மடியில் திருமகளை அமர்த்தி-லட்சுமி நரசிம்மனாகக் கண்டிருக்கிறார்கள். வைணவ அடியார்கள். பல பிரார்த்தனைத் தலங்களுள் திருக்கடிகை என்னும் சோளிங்கபுரத்திற்கு தனித்தொரு பெருமையுண்டு.  கண்கண்ட தெய்வமாய், காக்கும் தெய்வமாய், நம்மை அரவணைக்கும் தெய்வமாம் திருமால் நரசிங்கப் பெருமானாய் திருக்கடிகை மலைமிசை திருக்கோயில் கொண்டு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருள்புரியும் தன்மையே தனித் தொன்றாகும்.
திருக்கடிகை என்னும் வைணவத் திருத்தலம் வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா வட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் இத்தலம் ஒன்றே ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் உடையது. இதன் இப்போதைய பெயர் சோளிங்கர் அல்லது சோளிங்கபுரம் என்பதாம். இத்திருத்தலம் சிங்கவேள் குன்றம் என்றும் அஹோபிலம் என்றும் அழைக்கப்பெறுகின்றது.
இது சென்னை-பெங்களூரு இரயில் மார்க்கத்தில் அரக்கோணத்திலிருந்து மேற்கே 27 கி.மீட்டர் தொலைவிலும், சென்னை-திருப்பதி இரயில் மார்க்கத்தில் திருத்தணி இரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீட்டர் மேற்கிலும் அமைந்துள்ளது.
சென்னை, வேலூர், சித்தூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.இங்கேயுள்ள கோயிலில் அஹோபில, வராஹ, மாலோல, யோகாநந்த, பாவந, காரஞ்ச, சத்ரவட, பார்க்கவ, ஜூவால நரசிம்மன் என்று ஒன்பது நரசிம்மர் கோயில்கள் உண்டு. மலை மீதும் மலை அடிவாரத்திலுமாக ஒன்பது நரசிம்மர் சந்நதிகள் இருக்கின்றன.
கீழ் அஹோபிலத்தில் மூலவர் பிரகலாதன், லட்சுமி நரசிம்மன் வீற்றிருந்த திருக்கோலம். உத்ஸவர்மாலோல நரசிம்மர். தாயார் அம்ருதவல்லி, செஞ்சு தீர்த்தங்கள். விமானம் குகை விமானம். முதல் அழகிய சிங்கர்க்கு யோக ரூபத்தில் லட்சுமி நரசிம்மன் நேரிடையாக தரிசனம் தந்த இடம்.மேல் அஹோபில மடம் பத்து கிலோ மீட்டர் மலைமேல் பயணம் செய்தால் அடைந்துவிடலாம்.
இது ஒரு குடைவரை கோயில். மூலவர் அஹோபில நரசிம்மர். தாயார் லட்சுமி தீர்த்தம் பவ நாசினி-விமானம் குகை விமானம். பிரகலாதனுக்கு பிரத்யட்சம் ஆன தலம். பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்த அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த ‘அஹோபிலம்’ மிக முக்கியமான புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். இங்கு அருள்புரியும் கடிகாசலப் பெருமானை, சோளிங்க புரத்தானை, சிங்கபுரத்துச் சிங்கமுகச் செவ்வேளை அஹோபிலத்து நாதனை, சாந்த மூர்த்தியாய் விளங்கும் எம்பெருமானை ‘அக்காரக்கனி’ (தித்திக்கக்கூடிய பழம்) என்று போற்றுகிறார் திருமங்கை ஆழ்வார்.
‘‘மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத் தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துயந்து போனேனே!’’ - என்று போற்றுகிறார். ‘அக்காரக்கனி’ என்றால் என்ன?
ஸ்ரீவைணவ திருக்கோயில்களில் எம்பெருமானுக்கு அமுது செய்விக்கும் திருக்கண்ணமுதில் அக்கார அடிசில் (பாயசம்) என்றொரு சிறப்பு மிக்க விசேஷப் பாயசம் உண்டு. தூய்மையான பசும்பால், வெல்லம், நெய், ஏலக்காய், குங்குமப் பூ, முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து செய்யப்படும் அக்கார அடிசில் எம்பெருமானின் திருவுள்ளத்திற்கு மிகவும் உகந்தது. இந்தப் பாயசத்தின் ருசி அதனை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
திரு சோளிங்கபுரம் ஸ்ரீயோக நரசிம்மனின் பேரழகைப் பருகிப் பருகித் திளைத்த நம்மாழ்வரும் திருமங்கை ஆழ்வாரும் இப்பெருமானின் அழகிய ருசியை அக்கார அடிசிலுக்கு இணையென ஒரு கணம் சிந்தித்த போது, அவர்கள் திருவுள்ளத்திற்குத் திருப்தி ஏற்படவில்லை.
இந்த எம்பெருமானின் திவ்ய அழகின் ருசி அக்கார அடிசிலை விட பல மடங்கும் உயர்ந்ததாக இருப்பதால், அவன் அழகை எவ்விதம் வர்ணிப்பது என்று அவர்கள் திகைத்தார்களாம். அடுத்த விநாடி, ஈரேழு பதினான்கு உலகங்களிலும் இல்லாத ஒரு கனியின் ருசியே இந்த ஸ்ரீயோக நரசிம்மனின் தரிசனம் தரும் ருசி என அவர்கள் மனத்தில் தோன்றிற்றாம். ஆதலால் அவனது திவ்விய அழகிற்கு ஒப்பிடுவதற்காக ஒரு புதிய கனியையே (சுவையில் ஈடு இணையில்லாத பழம்) தங்கள் மனத்தால் சிருஷ்டி செய்து விட்டார்கள். அதனாலே தங்கள் பாசுரங்களில் வைத்து இப்பெருமானை ‘அக்காரக்கனி’ என்று வர்ணித்து விட்டார்கள் அம்மகாபுருஷர்கள்.
அத்தகைய பெருமையும் பேரழகும் வாய்ந்த இந்த யோக நரசிம்மப் பெருமானையும், ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாரையும் தரிசிக்கப் போது பேரானந்தத்தினால் மெய் சிலிர்த்து வியர்த்து நெஞ்சமெல்லாம் குழைந்து விடுகிறது.
மனிதனுக்கு தாங்கமுடியாத துன்பம் வரும் பொழுது-தன்னிலை மறந்து ‘அம்மா’ என்று கதறுவதைப் போல-யார்-யாருக்கு என்ன துன்பம் வந்தாலும் வாய்விட்டு ‘நரசிம்மா’ என்று கூப்பிட்டால் போதும் பகவான் எந்த ரூபத்திலாவது ஓடோடி வந்து இரண்யனைக் கொன்றதுபோல் துன்பத்தைக் கொன்று பக்கபலமாக கடைசி வரையிலும் இருப்பார் எனவே ஒருமுறையேனும் அஹோபிலம் சென்று லட்சுமி நரசிங்கப் பெருமாளை மன முருக வழிபட்டால் ஆயிரமாண்டுகளுக்கு யாராலும் எவ்விதத் துன்பமும் வராமல் நரசிம்மர் காப்பாற்றுவார்!
முத்து.ரத்தினம்
|