சேவை செய்யுங்கள் குருராஜருக்கு!
ஸ்ரீராகவேந்திரஸ்வாமி ஜெயந்தி - 6.3.2025
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வரும் 6.3.2025 அன்று அவரின் ஜெயந்தி வருகின்றது. அதையொட்டி, அவர் எப்படி ஜீவசமாதியாக பிருந்தாவனத்தில் அமைந்திருந்து அருள்கிறார் என்பதனை பற்றியும், பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற ``சேவை’’ என்று சொல்லக் கூடிய பிரார்த்தனை வழிமுறை பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.ராகவேந்திரர், ஜீவசமாதி ஆகும் காலம் வருகிறது.

துங்கபத்ரா நதிக்கரை ஓரத்தில், ஆந்திரமாநிலம் மந்திராலயம் என்னும் இடத்தில், தன் குரு ராகவேந்திரஸ்வாமி ஜீவசமாதியடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார், ஸ்ரீ யோகீந்திர தீர்த்தர்.
(பூர்வாஸ்ரமத்தில், யோகீந்திரதீர்த்தருக்கு ஸ்ரீராகவேந்திரர் சித்தப்பா உறவு) பிருந்தாவனம் அமையும் இடத்தில், சுமார் 7 அடிக்கு குழிகள் வெட்டப்பட்டு, அந்த 7 அடி சுற்று முழுவதிலும் பழங்கால கான்கிரீட் கற்களால் அமைக்கப்பட்டு, இந்த 7 அடிக்குள்தான் ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி ஆகியிருக்கிறார். அவர் வந்து அமர்ந்து ஜீவசமாதி அடைவதற்கு ஏதுவாக, சில படிக்கட்டுகளையும் அமைத்திருக்கின்றார்கள்.
ஆக, அந்த படிக்கட்டுகளின் வழியாக ராகவேந்திரர், 7 அடிகள் வெட்டப்பட்ட குழிக்குள் இறங்கி, அமர்ந்துக் கொள்கிறார். தன் இருக்கண்களையும் மூடிக் கொள்கிறார். ஆழ்ந்த தியானத்திற்கு செல்கிறார்.
(இன்றளவிலும்கூட ராகவேந்திரஸ்வாமி தியானத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது) அந்த 7 அடிக்களுக்கு மேலே கூர்மப்பீடம் (கூர்மாசனம்) அமைக்கப்பட்டிருக்கிறது.அந்த கூர்மப்பீடத்திற்கு மேலே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாளக்கிராமங்களை வைத்து மூடியிருக்கிறார்கள். அதற்கு மேலேதான் நாம் அனுதினமும் கண்களால் தரிசிக்கப்படும் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனம்.
ஆதலால், நாம் கண்களால் தரிசிக்கும் பிருந்தாவனத்திற்குள், ராகவேந்திரஸ்வாமி அமர்ந்துக்கொள்ளவில்லை. மாறாக, அந்த பிருந்தாவனத்திக்கு அடியில் சுமார் 7 அடிக்குள் அவர் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்.
ஆகையால், இனி நாம் மந்திராலயத்தில் இருக்கக்கூடிய ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, பிருந்தாவனத்தை பார்த்தவுடன், அதன் அடியில் இருக்கும் ராகவேந்திரஸ்வாமியை நிச்சயமாக மானசீகமாக தியானிக்க வேண்டும். மேலும், ராகவேந்திரஸ்வாமிகளிடத்தில் ``சேவை’’ செய்து வேண்டிக் கொண்டால், மிக விரைவாக அவர், அந்த வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது ஐதீகம். அது என்ன சேவை?
நம் வாழ்வில், குழந்தை பேறு, படிப்பு, வேலை, திருமணம் இப்படி நியாயமான வேண்டுதல்களை வேண்டிக் கொண்டு, மூன்று தினங்கள், ஐந்து தினங்கள், ஒன்பது தினங்கள், பனிரெண்டு தினங்கள் ஆகிய ஏதோ ஒன்றை நமது வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து, (குறைந்தது மூன்று தினங்கள்) அந்த மூன்று நாட்களுமே சதா சர்வ காலமும் ராகவேந்திரரை நினைத்து, துதித்து, பூஜித்து வருவதே `சேவை’ என்பதாகும்.
அதை எப்படி செய்வது?
உங்களின் அருகில் உள்ள ராகவேந்திரசுவாமி மடத்திற்கு சென்று, ``நாளை முதல் மூன்று நாட்களுக்கு நான் சேவை செய்ய வேண்டுகிறேன்’’ என்று அங்கு பூஜை செய்யும் ஆச்சாரிடத்தில் தெரிவிக்கவும். அவர் சில அறிவுரைகளை கூறுவார்.
அன்றைய தினமே தேங்காய் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின், விடியற்காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்த பின்னர், மடியாக குளிக்க வேண்டும். அதாவது, நீங்கள் சேவை செய்வதற்காக உடுத்திக் கொள்ளும் வேஷ்டியை நன்கு தண்ணீரில் அலசி குளிக்க வேண்டும். வாங்கிவைத்த தேங்காயினை எடுத்துக் கொண்டு, ராகவேந்திரஸ்வாமி கோயிலுக்கு செல்லுங்கள். நமக்கு என்ன காரியங்கள் நடக்க வேண்டுமோ, அதை மனதில் நினைத்து, தேங்காயினை பூஜை செய்பவர் களிடத்தில் கொடுத்து, சங்கல்பம் செய்து கொள்ளவும். அதன் பின்னர், மடத்தில் பூஜை செய்யும் ஆச்சாரின் வழிகாட்டுதலின் பெயரில், ராகவேந்திரஸ்வாமிக்கு சேவையினை செய்யுங்கள், அதற்கு பலன் மிக விரைவில் கிட்டும். ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ...
ரா.ரெங்கராஜன்
|