வித்தியாசமான கிருஷ்ணன் கோயில்
பூரி ஜெகநாதர் கோயிலைப் போல் ஒரிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேஷ்வரம், நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட நகரம். இந்த நகரத்தைப் பற்றி பேசினாலே உடனே லிங்கராஜர் கோயில்தான் நினைவுக்கு வரும்.  அதே போல், பூரி ஜெகநாதர்கோயிலும் நினைவில் வந்துபோகும். ஆனால், பலரும் அறியப்படாத புவனேஷ்வரத்தில் ஆனந்த வாசுதேவா கோயில் ஒன்றும் இருக்கிறது. ஆனந்த வாசுதேவா கோயிலுக்கும், பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.
பல வேற்றுமைகளும் உண்டு. பூரியில் கர்ப்பகிரகத்தில் எப்படி, பாலபத்ரர் என்ற பலராமர், கிருஷ்ணன் என்ற ஜெகநாதர் மற்றும் அவரின் சகோதரி சுபத்ரா ஆகியோர் காட்சி தருகின்றார்களோ. அப்படி, இந்த புவனேஷ்வர் ஆனந்த வாசுதேவா கோயிலிலும், இவர்கள்தான் கர்ப்பகிரகத்தில் காட்சி தருகின்றார்கள். 
பூரி கோயிலில், சிலைகள் மரத்தால் செய்யப்பட்டு, முழுமை இல்லாமல் நிறுத்தப் பட்டவை என்றும், அதன் பின் கூடுதல் அலங்காரங்கள் மூலம் அவற்றிற்கு முழுமை தந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.  ஆனால், ஆனந்த வாசுதேவா கோயிலில், சற்று வித்தியாசமாக மூவரும் கருப்புக் கல்லால் செய்யப்பட்டு, முழுமையாக காட்சித்தருகிறார்கள்.பூரியில், தெய்வங்களின் வடிவமைப்பு வேறு, இந்த திருத்தலத்தின் வடிவமைப்பு வேறு. அவை எப்படி என கர்ப்பக்கிரக தரிசனத்தின்போது அறிந்து கொள்வோம். 56 நிவேதனப் பிரசாதங்கள்
பூரிஸ்தலத்தை சங்குஸ்தலம் என கூறுவர். ஆனந்த வாசுதேவா கோயிலை, ``யோசக்ரஸ்தலம்’’ என அழைக்கின்றனர். பூரிஸ்தலம் போன்றே, இங்கும் 56 பிரசாதங்கள் செய்யப்பட்டு, பல நேரங்களில் நிவே தனம் செய்து, வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விற்பர். பூரி சமையற்கூடத்தில் சுமார் 400 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
விறகு அடுப்பில் பானைகளை வைத்து திகுதிகுவென எரிய விட்டு, பல வகையான பதார்த்தங்களை செய்வர். அதே பாணியில்தான், ஆனந்த வாசுதேவா கோயிலிலும், சுமார் 200 நபர்கள் பணிபுரிகின்றனர். கோயிலின் குறிப்பிட்ட வாசலில் நின்றாலே, குறைந்த விலையில் பிடித்த பதார்த்தங்களை வாங்கிச் சாப்பிட்டுவிடலாம். ஆர்டரும் செய்யலாம்
மேலும், உங்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷங்களுக்கு, ஆனந்த வாசுதேவா கோயில் கவுண்டரில் பணம் கட்டி பிரசாதங்களை பெற்றுச் செல்லலாம். அதே போல், தற்போது ஆன்லைன் பிரபலம் என்பதால், ஆன்லைனிலும் ஆர்டர்கள் செய்து, பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆர்டர் செய்த அன்றே வீடு தேடி வரும்.
டெலிவரி இலவசம். அது மட்டுமா! இந்த கோயிலில் பஞ்சாமிருதமும் ஸ்பெஷலாய் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதனையும் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் ஏராளம். புதுப்பித்த ராணி
இந்த கோயில் 13ம் நூற்றாண்டில் கங்கா வம்சத்தை சேர்ந்த ராணி சந்திரிகாவால் கட்டப்பட்டது. 17ம் நூற்றாண்டில் மராட்டி யர்கள் இதனை புதுப்பித்து கட்டியுள்ளனர். பிந்து சரோவரின் கிழக்குக் கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. முதலில் இங்கு ஒரு விஷ்ணு ஆலயம் இருந்துள்ளது. காலத்தால் அது பாழ்பட்ட போது, ராணி இந்த கோயிலை எழுப்பியுள்ளார்.
கோயில் கலிங்கா கட்டடக் கலை பாணியில் எழுந்துள்ளது. அசப்பில் லிங்கராஜர் கோயில் போலவே இருந்தாலும், சற்று வித்தியாசம் உண்டு. லிங்கராஜர் கோயிலில் சிவன் - பார்வதி சார்ந்த சிற்பங்களை காணலாம். இங்கோ, கோபுரம் உட்பட பல இடங்களில் வைணவம் சார்ந்த சிலைகளை ஏராளமாய் காணலாம். ஏழு தலை நாகம்
அசப்பில் பூரி கோயிலை, தூரத்திலிருந்து பார்ப்பது போல் இருக்கிறது. கோயில் நான்கு அடுக்காக அமைந்துள்ளது. இங்கும் பிரதான வாயிலை சிங்கவாயில் என அழைக்கப்படுகிறது. அடுத்து கர்ப்ப கிரகத்தினுள் பார்க்கிறோம்.
ஏழுதலை நாகம் குடை பிடிக்க பலராமர் அதன் அடியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அடுத்து கிருஷ்ணன், இங்கு வித்தியாசமாய் சூலாயுதம், சக்கரம், தாமரை மற்றும் சங்குடன் உள்ளார். அடுத்து சுபத்ரா, ஒரு கையில் பானை மற்றும் மறு கையில் தாமரைவைத்துள்ளார். கழுத்தில் மற்றும் கைகளில் நகைகள் அணிந்துள்ளார். பூரி கோயிலைப் போல் பிரமாண்டம் இங்கு கிடையாது. ஆனால், அங்கு உள்ள சாநித்தியம் அப்படியே இங்கும் இருப்பதை பக்தர்கள் உணர்வதால் ஏராளமானோர் குவிகின்றனர். மேலும், இங்கு கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆகையால் அன்றைய தினத்தில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
* எப்படி செல்வது?
புவனேஷ்வர் ரயில் நிலையத்திலிருந்து 4.5 கி.மீ., தூரம் பயணித்தால் இந்த கோயிலை அடைந்துவிடலாம். கோயில் காலை 6.00 மணி முதல் இரவு 7.30 வரை திறந்திருக்கும். தொடர்புக்கு:-91-8249311974.
ராஜிராதா
|