‘‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!’’



குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம் - 9.3.2025

‘‘வேழமுடைத்து மலைநாடு’’ என்று ஔவையாரால் பாராட்டப் பெற்ற சேர நாட்டினைச் சேர மன்னர்கள் தமிழகத்தின் தலைமை வேந்தர்களாகத் திகழ்ந்து ஆட்சிபுரிந்து வந்தார்கள். அங்ஙனம் ஆட்சி புரிந்து அச்சேர மன்னர் மரபில் திடவிரதன் என்பவன் அன்புக்கும் அருளுக்கும் இருப்பிடமானவனாக தோன்றினான். அந்த வேந்தர்பிரான் கொல்லிநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்தாள். அச்சேர மன்னன் திருமகள் நாதனாகிய திருமாலிடத்து அன்புடையோனாய், வீரமும் கொடையும் ஒருங்கமைந்தவனாக
விளங்கினான்.

அந்த வேந்தனுக்கு கடலினின்று உதயமாகும் இளம்பரிதி எனக் குலசேகரர் உதித்தார். குலசேகர் கொல்லி நகரில் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) பராபவ ஆண்டு மாசித்திங்கள் வளர்பிறையில் அமைந்த துவாதசி திதியில் வெள்ளிக்கிழமையன்று புனர்பூச நட்சத்திரத்தில் கௌஸ்துபத்தின் அம்சமாய் திடவிரத மன்னருக்குப் புதல்வராய் திருஅவதாரம் செய்தார் என்பதை

‘கும்பேபுநர்வ ஸௌளஜாதம் கேரளே சோள பட்டனே
கௌஸ்து பாம்ஸம் தரா தீஸம் குலசேகர மாஸ்ரயே!’’

 - என்று ஸ்லோகத்தாலும், ‘‘வாழி திருநாமம் தனில் மாசிதனில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே!’’ என்ற பாடல் வரிகளாலும் அறியலாம்.கேரள தேசம் தன்னைக் கொல்லிப் பகுதியிலிருந்து (கரூர்) சென்று அரசாண்டவர் குலசேகரன் பெருமானின் பெருங்கருணையாலே ‘குலசேகர ஆழ்வார்’ ஆனார். எம்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு ஆழ்வார் ஆன பின் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமான் மீது அவர் பாடிய, ‘‘மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!’’ என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றதாகும்.

குலசேகரர் தமது தந்தையாருக்குப் பின் நாட்டின் ஆட்சிமுறையை ஏற்றுச்சிறந்த முறையில் செங்கோலோச்சினார். இவரது சிறப்பில் பொறாமை கொண்ட சோழனும் பாண்டியனும் ஒன்று கூடி போர் தொடுத்தனர். அவர்களைக் குலசேகரர் வென்று தமிழகத்தின் சக்ரவர்த்தியாய் விளங்கினார்.இதை, ‘‘கொல்லி நகர்க் கிறை கூடல் கோமான்’’, ‘‘கொல்லிக்காவலன் மாலடி முடிமேல் கோலமாம் குலசேகரன்!’’ என்று ஆறு, ஏழாம் திருமொழியினால் காணலாம்.

பாண்டிய மன்னன், குலசேகரரது ஆண்மையின் திறத்தை வியந்து, தன் செல்வப்புதல்வியை அவருக்கு மணம் செய்து கொடுத்தான். குலசேகருக்குள்ள அகப்பற்று, புறப்பற்றினை நீக்கி, வைகுந்தநாதன் அவருக்கு ‘‘மயர்வற மதிநலம்’’ அருளி, தனது ‘‘உயர்வற உயர்நலம்’’ உடைய வடிவத்தை உணரும்படி கடைக்கணித்தருளினார். 

இதனால் அவர் திருமால் தரிசனம் கண்டு களிக்கும் நான் என்றோ என ஏங்கி நின்றார். இதனையே இவர் பாடும் திருமொழியிலும் நினைவில் கூறுகின்றார். பின்னர், திருமாலின் நினைவில் ஈடுபட்ட குலசேகரது மனம், அவனது எழில் மிக்க கதையைக் கேட்பதில் மிகவும் விருப்பம் கொண்டது. எனவே, அவர் வைணவப் பெரியாரிடத்தில் மிகவும் ஈடுபாடும், பேரன்பு உடையவராகவும் இருந்தார்.

ஒரு சமயம், வைணவப் பெரியாரும் ராம காதையை கேட்டத்தில் விருப்பம் கொண்டார். நாள்தோறும் இராமகாதையைக் கேட்பார். அப்பெரியாரும் ராமனது வரலாற்றை ஆதி முதல் அழகாக எடுத்துக்கூறி வந்தார். அவ்வரலாற்றை குலசேகரர் நாள்தோறும் மெய் மறந்து கேட்டு வந்தார். ராமனின் வரலாற்றோடு ஒன்றியிருந்தார். ராம-ராவண யுத்தம் நடந்தபோது, ராமனைக்கொல்ல ராவணன் முயன்றான் என்று கதையைத் தொடர்ந்து கூறிய பெரியார் சொல்லிய காலத்து, குலசேகர ஆழ்வார் மெய் மறந்து கேட்டவராய். 

இவை நிகழ்கால நிகழ்ச்சி என்ற எண்ணத்தவராய், தம் படைத்தலைவர்களை அழைப்பித்து, படைகளைத் திரட்டிக் கொண்டு வரும்படி கூறியதோடு, தாமும் போர்க்கோலம் கொண்டு நின்றார். அரசரின் மனநிலையை அறிந்து திடுக்கிட்ட அமைச்சர், கதை கூறுபவரை அழைத்து ‘போரில் ராமன் வெற்றி பெற்றதாக கூறிக் கதயை முடிக்கும் படி சொல்லி அறிவுறுத்த, அவரும் அப்படியே செய்தார்.

குலசேகரர் மனநிலை தெளியப் பெற்றவராய்ப் படைகைத் திருப்பிப் பெற ஆணையிட்டு விட்டு அரண்மனை ஏகினார்.  வைணவ அடியார்களிடத்தில் மன்னர் வைத்திருந்த அதீதமான தொடர்பு அமைச்சருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.அரசரின் மனநிலை வைணவ பக்தர்களின் சேர்க்கையால் கலங்குதல் கண்டு, அவர்களின் நட்பை அழிக்க அமைச்சர்கள் திட்டம் வகுத்து. 

குலசேகரர் பூஜை செய்யும் பெருமானிடத்துள்ள நவமணி மாலையை எடுத்து மறைத்து வைத்தனர். அரசன் வினவிய போது அமைச்சர்கள் அரசனிடம், ‘அதை வைணவர்கள் தாம் எடுத்திருக்க வேண்டும்’ என்று கூற குலசேகரர் அமைச்சர்களின் கூற்றை மறுத்தவராய், ஒரு குடத்தில் நல்ல பாம்பு ஒன்றையிட்டுக் கொண்டு வரச் செய்தார்.

அங்ஙனமே பாம்பு குடத்தே அடைபட்டு வந்ததும் குலசேகரர், ‘‘வைணவர்கள் எடுத்திரார்கள் என்பது உண்மையாயின் இப்பாம்பு என்னைத் தீண்டாது ஆகக!’’ எனக் கூறிக் குடத்தினுட் கையை விட, பாம்பு தீண்டாமலே இருந்தது. 

குலசேகரர் குடத்தினின்று தம் கையை எடுத்ததும், அப்பாம்பு குடத்தினின்று வெளிவந்து, குலசேகரரை வணங்கிப் படம் எடுத்தாடியது. பின்பு, குலசேகரர் அப்பாம்பிற்கு யாதும் தீங்கு செய்யாமல் அதன் இடத்தில் கொண்டு போய் விடும்படி அதனைக் கொணர்ந்த பணியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.

அமைச்சர்கள் அரசனிடம் தாங்கள் செய்த பிழையைக் கூறி மன்னிக்குமாறு அரசனின் பாதமலர்களை வணங்கினார்கள். மனம் மிக வருந்திய அரசன், ‘‘இவ்வுலக வாழ்வில் எனது மனம் ஈடுபடாமல் உள்ளது. இவ்வரசும் பதவியும் எனக்கு வேண்டாம்!’’ என்று ரைத்துத் தமது மூத்த மகனுக்கு முடி சூட்டி விட்டு, மைந்தர்களுக்கெல்லாம் கூறவேண்டிய அரசியல் அறங்கள் அனைத்தும் அறிவித்து, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, திருமாலின் அடியவர்களுடன் சேர்ந்து கொண்டு இறைவனைப் பாடியபடி திருத்தலங்கள் திருச்சித்திரக்கூடம், திருவித்துவக்கோடு, திருவேங்கடம் திருவயோத்தி, திருப்பாற்கடல் ஆகிய திருத்தலங்கள் சென்று வழிபட்டார்.

திருவேங்கடத்தான் மீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்ட குலசேகரர், திருவேங்கட மாமலையில் பிறக்க விரும்புவதை எப்படி எப்படியெல்லாம் கோத்துக் கோத்துச் சொல்கிறார் பாருங்கள்.

‘‘வேங்கடத்துக் கோனேரி வாழும்
குருகாய் பிறப்பேனே!’’
‘‘திருவேங்கடச் சுனையில் மீனாய்
பிறக்கும் விதி உடையேன் ஆவனே!’’
‘‘சுடர் ஆழி வேங்கடக் கோன் தானுமிழும்
பொன்ட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே!’’
‘‘வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச்
செண்பகமாய் நிற்கும் திருஉடையேன் ஆவேனே!’’
‘‘திருவேங்கட மலை மேல் நெறியாய் கிடக்கும்
நிலை உடையேன் ஆவேனே!’’

- என்றெல்லாம் ஆசைப்பட்டு திருவேங்கட மலையில் எந்தவொரு வடிவெடுத்தாவது எம்பெருமானுடன் இருந்து ஒவ்வொரு நாளும் சேவிக்கும். பேறு பெற வேண்டும் என்று எண்ணியவர், கடைசியாகச் சொல்கிறார். ‘‘அப்படியெல்லாம் இருப்பதை விட, வேத சொரூபனாய் திகழும் திருவேங்கடவனது திவ்ய சந்நதியின் முன் எம்பெருமானின் பேரில் பேரன்பும் பக்தியும் கொண்டு விளங்கும் எண்ணற்ற அடியார்களும், வானுலக தேவர்களும். 

அரம்பையரும் காத்துக்கிடக்க பல பிறவிகள் எடுத்து மண்டிக் கிடக்கும் வல்வினைகள் எல்லாம் தீர்க்கும் திருமாலின் சந்நதி வாசற்படியில்ஒரு கல்லாய் கிடந்து நாள்தோறும் அவரது பவள வாய்கண்டு இன்புற்றிருக்கு பெரும்பேறு ஒன்றே போதும்’’ என்று எண்ணிய படியே குலசேகரர் இப்படிப் பாடுகிறார்.

‘‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!’’

- என்ற பாடலுக்கிணங்க, இன்றும் எல்லா வைணவத் திருத்தலங்களிலும் மூலவர், உற்சவர் சந்நதிகளின் முன் உள்ள நிலைப்படியை ‘‘குலசேகரப் படி’’ என்றே கூறுகிறார்கள். அப்படியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள். ஆழ்வார்கள் அபிலாஷைப்படி அவர் அடியார்கள் கிடந்தியங்கும் படியாய் உள்ளதாய் ஒரு மரபு.

ஆண்டாள், துலுக்க நாச்சியார் போன்று குலசேகர ஆழ்வாரின் மகளும் அரசங்கன் மீது ஆறாக்காதல் கொண்டு ‘சேர வல்லி நாயகி’ என்னும் பெயரோடு தனது வாழ்நாள் முழுவதையும் திருவரங்கத்திலேயே கழித்தாள்.

‘‘இருள் இரிய சுடர்மணிகள் இமைக்கும் நெற்றியுடைய அரவ அரசப் பெருஞ்சோதியாகிய அனந்தன் மீது திருவரங்கில் பொன்னித் திரைக் கையால் கை வருட பள்ளி கொண்ட கருமணியை கோமளத்தை என்று என் கண்கள் சேவிக்கும் பாக்கியம் பெறுமோ’’ என குலசேகர ஆழ்வார் எண்ணியெணி வருந்துகிறார்.

‘‘திருவரங்கத்தில் கழுதை மேய்த்துப் பிழைப்பை நடத்தியாவது அனுதினமும் பெரிய பெருமாள் தாயார் சேவையைக் கண்டு வாழ்நாளைச் செலவழியுங்கள். குலசேகரப் பெருமாள் காண ஏங்கும் பெரிய பெருமாளை நான் ஒவ்வொரு நாளும் சேவிக்கும் பேறு பெற்றுள்ளேன். நாமும் அவன் பவளவாய் கண்டு.

உய்வோமாக!’’ என்கிறார் மணவாள மாமுனிகள்.குலசேகர ஆழ்வார், இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் பேரன் புடையவர் ஆதலினால் இவரைப் ‘பெருமாள்’ என்றும் வைணவப் பெரியோர்கள் கூறலாயினர். இவர் அருளிய திருமொழிகளின் தொகைக்கு ‘‘பெருமாள் திருமொழி’’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இவர் அருளியவை பத்துத் திருமொழிகள் இரண்டு, ஐந்து, ஆறு ஆகிய திருமொழிகள் பத்துப் பாசுரங்களைக் கொண்டவை. மூன்றாம் திருமொழி ஒன்பது பாசுரங்கள் உடையது. ஏனைத் திருமொழிகள் ஒவ்வொன்றும் பதினொரு பாசுரங்கள் கொண்டவை. ஆக இவர் அருளிய பாசுரங்களின் தொகை நூற்று ஐந்தாகும்.வருகிற 9-3-2025-ம் நாள் புனர்பூசம் திருநட்சத்திர நாளில் எல்லா வைணவத் திருத்தலங்களிலும் குலசேகர ஆழ்வாருக்கு குருபூஜையும் விசேஷ வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறும்.

ஆர்.சந்திரிகா