உள்ள(த்)தைச் சொல்கிறோம்



அனுமன் ஜெயந்தி பக்தி ஸ்பெஷல் கட்டுரைகளைக் கண்டு பூரித்து போனேன். அஷ்டமா சித்திகள் பெற்ற அனுமனின் வரலாற்றை அறிந்து வியப்புற்றேன். ஆயிரக்கணக்கான வடைமாலையை  கொண்டு காட்சி அளிக்கும் அபூர்வ அட்டைப் புகைப்படத்தை கண்டவுடன் வாக்கி எங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டேன். அரிய வரலாற்று சான்று புத்தகம்.
வாழ்த்துகள்.
 - ரீஜா மனோகரன், சூளை.

ஜடாயு பெரியப்பா, சீதையை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்த செயல் மிகவும்  உணர்ச்சிவசமாக மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. காரணம், ராமன் மீது உள்ள பக்தி ஆரும் என்பது கைகூப்பி வணங்க வைத்துவிட்டது.
 - சி.பா.சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.

அனுமன் அவதரித்த ஊர், அனுமனின் அவதார ரகசியங்கள் ஆகியவை முப்பது முத்துக்களை  உள்ளடக்கிய `சுந்தரனைத் துதிப்போம், துன்பங்கள் துடைப்போம்’ என்னும் கட்டுரை மிக  அருமை.
 - வைஷ்ணவி, அடையாறு.

பெயர் நினைத்தால் பிடித்திழுக்கும் அருணை” என்று நினைக்க முக்தியருளும் அருணாச்சலத்தை, ரமண ஜெயந்தியை முன்னிட்டுத் தொகுப்பாக்கிய விதம், இதயத்தின் இதம்! ஆன்மிகம் வாங்கிய மதிப்பெண் சதம்!  
 - எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

அஷ்டமா சித்திகள் பெற்ற அனுமன்’’  என்றும் தலையங்கம் கண்டேன். சித்திகள் பற்றி  கூறியது மெய் சிலிர்த்தது. உடலையும் மனதையும் தாண்டிய இயக்கும் ஆத்மாதான் என்று கூறியது சிறப்பிலும் சிறப்பு! அட்டைப்படம் ஆர்ப்பாட்டமாக இருந்து இதயத்தை ஈர்த்தன. அது மட்டுமல்லாமல் சூரிய ஒளி  கோபுரம் வழியாக நேராக பெருமாள் மீது விழுந்து சூரியன் பெருமாளை வணங்கிச் செல்கிறார் மெய் சிலிர்த்து.
 - வண்ணை கணேசன், சென்னை.

வடை மாலைகளின் நடுவே வனப்புடன் காட்சி தரும் அனுமனின் அட்டைப்பட தரிசனம்  பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்திவிட்டது. ‘‘செல்லப்பிள்ளை பெருமாள்’’  என்ற கட்டுரை அற்புதமாக இருந்தது. அபூர்வமான ஆலயம் மேல் கோட்டையில் இருப்பதைத் தேடிச் சென்று  எழுதிய அந்த ஆலயத்தில் மகத்துவங்கள் கூறும் சிறப்புமிக்க கட்டுரையைப் படித்ததும், அந்த ஆலயம் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது!
 - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நாங்குப்பட்டி திருப்பெருமானாடார் திருக்கோயில் விஜயநகர கட்டட, சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. லட்சுமி, சரஸ்வதி,  விநாயகர் ஆகியோரின் சிற்பங்களைக் கொண்ட மகரதோரணமும், மகரபிரணாளமும்  காண்பதற்கரியவை.
 - பஞ்சாபகேசன், திருச்சி.

அடடா, வடைமாலையா! அல்லது வடைமலையா? என்பது போல், அதற்குள் விஸ்வரூப ஆஞ்சநேயரை அட்டைப் படமாக சேவித்தது, புத்தாண்டு வாழ்த்து தரிசனமானது. ஆறாம் பக்கம்,  அழகான வெற்றிலை அலங்காரத்தில் அஞ்சனை மைந்தன், 10,17ம் பக்கங்களில் பரவச பஞ்சமுக ஆஞ்சநேயர் என அனுமன் ஜெயந்தியை அட்வான்சாகவே கொண்டாடியது,  அருள் தரும் ஆன்மிகம். சுகம்வேறு, ஆனந்தம் வேறு என்று இன்பமாய் விளக்கம் இயம்பி  இரண்டும் சித்திக்க கீதையின் பாதையே போதும் என்றது ஸ்ரீகிருஷ்ண அமுதம்.
 - அ.யாழினிபர்வதம், சென்னை.

அஷ்டமா சித்திகள் பெற்ற அனுமன் என்ற தலையங்கத்தில் பொறுப்பாசிரியர் பரிமாறியுள்ள ஆராதனை வார்த்தைகள் மூலம் பிரம்மாவின் அருளையும் புரிய முடிகிறது. அனைத்து இயக்கமும் ‘ஆத்மா’ என்ற உணர்வே சித்திகளுக்கான தடம் என்பதைப் படித்ததும், என் நெஞ்சுக்குப் படம் போட்டது போன்றுணர்ந்தேன்.
 - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

குண்டலினியை வசமாக்கும் சைலபுத்ரி துர்கா’’ என்னும் மகேஷ் எழுதிய கட்டுரை, பல காணக்கிடைக்காத தகவலாக இருந்தது. அதிலும், சிவதாண்டவமும் சைலபுத்திரி துர்கையும், பரம்பொருளின் வாம சக்தியும் சைலபுத்திரியும் ஆகிய பகுதிகள் அறிதிலும் அறியப்படாத தகவல்கள்.
 - க.வேலாயுதம், விருதுநகர்.