விண் மேவும் புலவர்
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக; இனி எனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே தொன்னூறாவது அந்தாதி “ஆதியாக”

இப்பாடலானது அகப் பூசை என்ற ஆகம நெறியை சூட்டி, அதன் பயனை நமக்கு அறிவிக்கிறது. இறைவனுக்கு உருவங்கள் அமைத்து கோயிலிலேயும், வீடுகளிலேயும் பூசனை செய்யும் முறையைப் பற்றி பேசுகிறது.
நல்ல பக்குவம் பெற்றவர்கள் பூசைப் பொருட்கள் முதலியவை இல்லாமல் எண்ணங்களையே பொருள்களாகவும் இதயத்தையே கோயிலாகவும் கொண்டு பூசிப்பர். இந்த பூசனை முறை சிவ ஆகமங்களுள் யோகபாதத்துள் சிவ மானஸ பூசை என்ற பூசனை முறையில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி விளக்குகிறது இப்பாடல். இனி பாடலுக்குள் நுழைவோம். “அந்தாதி பொருட்சொல்வரிசை” வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
 இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம். “வருந்தாவகை என்மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள்”
அகத்தில் தியானிப்பது நான்கு வகையாக உள்ளது. முதலில் புறத்தில் நடக்கும் பூசனையை கண்களைமூடி உடல் அசையாது மனதிற்குள்ளே தனது கற்பனையால் ஒவ்வொன்றாய் தியானிப்பது.
இரண்டாவது அகிம்சை, இந்திரிய நிக்கரஹம், க்ஷமா, ஞான, தபஸ் என்ற உயர்ந்த ஆன்ம குணங்களை சாத்திரங்களின் வழி பின்பற்றுவது ஒரு பூசனை முறையாகும். அந்த குணங்களுக்கு தடை வரும் போது தனது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு தனது வழுவாமையை மிகவும் உறுதியாக பின்பற்றுவார்கள். மனோதிடம் உடையவரே இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வர். இதை ஆசார பூஜை என்பர்.
மூன்றாவதாக வழிபடும் இறைவனை தகப்பனாகவோ, மகனாகவோ, குருவாகவோ தியானித்து அதையே நடைமுறையில் பின்பற்றுவர் இதை பாவநா பூஜை என்பர்.
நான்காவதாக ஜபத்தை மட்டும் உபதேசம் பெற்று தொடர்ந்து அதை ஜெபித்துக் கொண்டே இருப்பவர்கள். இதை ஜெப யக்ஞம் என்பர்.
இந்த நால்வகை பூசனையையுமே செய்பவர்கள் சமய தொடர்பான புறச் சின்னங்கள் இன்றி ரகசியமாகவே இந்த பூசனை முறையை பின்பற்றுவர். நான்கு முறைகளையும் பின்பற்றி முக்தி அடைந்தவர்கள் பற்றி சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். அதை அறிந்து கொள்வதென்பது இந்த வரியை புரிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக அமையும்.
தின்னனூரில் எழுந்தருளியுள்ள ‘ஹிருதயாலயேஸ்வரர்’ ஆலயத்தில் இறைவனை வழிபடும் தின்னன் என்பவர் தன் மனதாலே இறைவனுக்கு கோயில் அமைத்து வழிபட்டவர். திருநீல கண்டத்துக் குயவனார் இறைவன் மேல் சத்தியம் பூண்டு தன் மனைவியிடம் கூட பிரம்மச் சரிய விரதம் பூண்டு இறையருள் பெற்றவர்.
திருஞானசம்பந்தர் இறைவனை தகப்பனாகவே கருதி, “எனதுறை தனதுறையாக” என்ற அளவிற்கு ஒரு சிறிதும் மாறு படாதவர். வாழ்ந்து இறையடி சேர்ந்தார். இந்த வழியை சத்புத்திர மார்க்கம் என்பர். வைணவத்தில் யசோதை கண்ணனை தன் மகனாக கருதினாள் அதன் வழியே முக்தியை பெற்றாள் அதுபோல என உணர்க. ருத்ரபசுபதி நாயனார் என்பவர் ருத்ர மந்திரத்தை உபயோகமாக பெற்று இறைநிலை அடைந்தார் இதை சூட்டும் வகையிலேதான் “வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள்” என்கிறார். “பழைய இருப்பிடமாக”என்பதனால் மனதில் மேற்கண்ட சிவமானஸ பூஜை, தபஸ், மார்க்கம், ஜெபயக்ஞம் என்ற நான்கு பூசனை முறைகளை பின்பற்றி தனது மனதையே பூசைக்கான இடமாகவும், நினைவையே பூசைக்கான பொருளாகவும், தொடர்ந்த பயிற்சியையே பூஜை, யாகம், அதனால் தோன்றும் அனுபவத்தையே ஞான அனுபவம் என்கிறார்கள். இதையே அபிராமி பட்டர் “பழைய இருப்பிடமாக” என்கிறார்.
“இனி எனக்குப் பொருந்தாது ஒருபொருள் இல்லை” மானஸ, மந்திர புஷ்ப, மார்க்க, மந்த்ரயக்ஞய, மஹௌஷதி என்ற ஐந்து ‘ம’ என்னும் எழுத்தை முதலாக கொண்டது. சைவத்தில் பின்பற்றப்படும் நான்கு நெறிகளை போலவே சக்தி வழிபாட்டு நெறியை பின் பற்றுபவர்களை பஞ்சமகாரம் என்பர்.
அவர்கள் தன் உடலை அல்லது தன் குருவை, உயிருள்ள மகளிர், பசு, குழந்தை, பாம்பு இவற்றையே கடவுளாக வணங்குவர். இதை சாக்தம் மஹௌஷதி என்கிறது. சைவத்தில் இல்லாத சாக்தத்தில் உள்ள தனிச் சிறப்பான மானச பூஜை முறை இது. இப்படி பூசனை செய்வதால் லோகவசியம் என்ற உலகத்தில் உள்ள அனைத்தும் உபாசகனின் ஆளுகைக்கு உட்பட்டு உபாசகனுக்கு எதிராக எதுவும் செயல்படாது நிற்கும் பண்பு உடையதாக ஆகும். இதையே அபிராமி பட்டர் “இனி எனக்கு பொருந்தாது ஒரு பொருள் இல்லை” என்கிறார். “விண்மேவும் புலவருக்கு விருந்தாக” இந்த சொல்லினால் மதுரையில் நடந்த தலபுராண குறிப்பை உணர்த்தி பஞ்ச மகார பூசனையில் வெற்றி பெற்றதற்கான சான்று பறைகிறார். மதுரையில் நக்கீரர் என்று ஒரு புலவர் இருந்தார். அவர் தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். அவர் தனது குருவையே இறைவனாக நினைத்து வழிபாடு செய்தார். இறைவனே குருவாக வரவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். சிவபெருமான் அவருக்கு அருள எண்ணினார்.
ஒரு சமயம் பாண்டிய மன்னருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது மகளிரின் கூந்தலுக்கு மனம் உண்டா இல்லையா என்று. அப்பொழுது தமிழ் சங்க தலைவராக இருந்தவர் நக்கீரர். மன்னரின் சந்தேகத்தை தனது பாட்டால் தீர்ப்பவருக்கு பரிசளிப்பதாக முடிவு செய்து பறை அறிவித்தனர். அதை அறிந்த பக்திமானான தருமி என்ற புலவர் இறைவனிடம் வேண்ட அதற்கு சிவபெருமான் புலவர் போல் தோன்றி தருமிக்கு அருள்புரிய தனது கைப்பட கூந்தலுக்கு மணம் உண்டு என்ற பொருள்பட கவிதை எழுதிக் கொடுத்தார். நக்கீரர் அதை தவறு என மறுத்தார். சிவபெருமானே அவரை மறுத்து வாதாடினார்.
தன் கொள்கையில் உறுதி பெற்ற நக்கீரர் பாடலில் தவறு கூறியதால் கோபமுற்ற சிவபெருமான் நக்கீரரை நெற்றிக் கண்களால் எரித்தார். இதையே சாக்த மதம் நெற்றிக்கண்ணால் தீக்சையளித்து நக்கீரரின் அறியாமையைப் போக்கி தமிழ் அறிவித்து அருள் செய்தார் என்கிறது. தருமிக்கு பாடலுக்காக பரிசு அறிவித்த பொற்காசை தரச் செய்து வறுமையை நீக்கினார். இந்த தலபுராண செய்தியையே பட்டர் “விண் மேவும் புலவருக்கு விருந்தாக” என்று வரியால் குறிப்பிடுகிறார்.
பூவுலகத்தில் வாழும் புலவர்களை நீக்கி “விண் மேவும் புலவர்” என்று நக்கீரனுக்கு அருளிய சிவபெருமானை குறிப்பிடுகிறார். “விருந்தாக” என்பதற்கு புதிதாக என்பது பொருள். புதிய கருத்தை அருளச் செய்ததால் ‘’விருந்தாக’’ என்றார். இந்த திருவிளையாடலை சுட்டிக் காட்டுவதால் அபிராமிபட்டர், தான் அறிவிக்க விரும்பும் கருத்து மஹௌஷதி என்று தன் குருவையே தெய்வமாக கருதி வழிபட்டு பேறு பெற்றார். அவருக்கு குருவாகவே சிவபெருமான் வந்தார் என்பதை சான்றாக சுட்டிக்காட்டவே விண் மேவும் புலவருக்கு விருந்தாக” என்கிறார்.
“வேலை மருந்தானதைநல்கும் மெல்லியலே”இந்த வரியில் ஆன்ம நோயை நீக்கி அருளும் வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகியாக உள்ள உமையம்மை வரலாற்று பதிவை நமக்கு விளக்குகிறார். பிறவிப்பிணி நீக்க மருந்தை நல்கும் மருந்துவச்சியாக, மருந்தாக, ஆரோக்கியமாக, முக்கியாக, உமையம்மையே இருக்கிறாள். அதை சற்று விரிவாக இங்கே காண்போம். சிவபெருமான் அங்காரகனுக்கு மருத்துவராக வந்து நோய் தீர்த்தருளிய தலம்.
இங்கு உமையம்மை தைலாம்பிகை என்ற பெயரில் மருத்துவச்சியாக எழுந்தருளியுள்ளாள். இது உலகியல் நோய் என்றாலும் உயிருக்கு உரிய நோயாகிய பிறவிப்பிணியையும் தீர்த்து அருள்பவள். ஆன்மாக்களுக்கு பிறவி என்னும் பிணியானது உடலோடு சேர்ந்தே தன்னுணர்வு பெறமுடியும். உடல் இல்லாமல் உயிர் தனித்து தன் உணர்வு பெறுவது இயலாது. இந்த உடலையே சிவபெருமான் உமையினால் படைத்து ஆன்மாக்களுக்கு அளித்து அவற்றைக் கொண்டு ஆன்மாக்கள் தன்னுணர்வு பெற உதவுகிறார்.
யாக்கையை பெறுவதனால் அந்த யாக்கையானது தொடர்ந்து உயிரோடு ஒன்றி நிற்க இயலாது. இறந்து விடும் இதனால் ஆன்மாக்கள் இறைவனிடம் இருந்து யாக்கையை பெறுவது பிறப்பு என்றும், யாக்கையை விடுவது இறப்பு என்றும் இந்த இரண்டில் எல்லா ஆன்மாக்களுக்கும் இந்த உடலானது தன் உணர்வை தந்தாலும், அது பிரிந்தாலும், இழந்தாலும் துன்புறுகிறது.
மேலும், உடல் இல்லை என்றாலும் ஆன்மாவினால் தன் உணர்வு பெற முடியவில்லை. இதுவே ஆன்மாவின் வியாதி இந்த ஆன்ம வியாதிக்கு மருந்து அதனிடத்தில் தோன்றும் போதே தோன்றிய சகஜ மலம் என்ற அறியாமையாகிற ஆணவமலம். இதுதான் வியாதியை தோற்றுவிக்க காரணமாகும். இந்த ஆணவ மலத்தை போக்கினால் தான் ஆன்மாக்கள் உடல் இன்றி தன் உணர்வு பெற முடியும். இந்த ஆணவ மலத்தை போக்கவும் உயிர்களின் நோயை போக்கும் பொருட்டும் உமாதேவி தையல்நாயகியாய் வடிவு கொண்டு தைல பாத்திரமும், சஞ்சீவியும், வில்வ மரத்தடியில் மண்ணும், கொண்டு தம்முடன் இறைவன் எழுந்தருளி மருத்துவச்சியாய் இருந்து அருள் செய்ததையே “வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே” என்கிறார். “வேலை” என்பதற்குசெயல் திறன் என்பது பொருள். ஆன்மாவானது உடல் இல்லை என்றால் செயலற்று ஜடம் போல் இருக்கும்.
உடலை பெற்றவுடன் செயலாக்கத் திறன் பெறும் அதன்மூலம் ஆணவமலம் குறைந்து அறிவு பெருகும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு அறிவு விதமாக வளர்ந்து ஆறறிவு பொருந்திய மானுட யாக்கையை பெறும்.
அதற்கு அடுத்த பிறவியில் மரணமும் தரக்கூடிய தன்னை பற்றி சிந்திக்கக் கூடிய ஆத்ம ஞானத்தை முதன் முதலில் அறியும் பிறவி மானுடப் பிறவி. அந்த பிறவியை சரியாக பயன்படுத்தினால் முக்தி அடையலாம். சொர்க்கத்திற்கு செல்லலாம். மீண்டும் பிறக்காமல் சொர்க்கத்தை அடையாமல் மோட்சத்தை அடைய விரும்புகிறார்பட்டர். அந்த மோட்சத்தின் சிறப்பு என்னவென்றால், ஆணவ மலத்தின் வலியை குன்றச் செய்யும் ஞானத்தையே உடலின்றி ஆன்மாக்களுக்கு தன்னுணர்வு அளித்து உடலின்றி செயல்திறனும் வழங்கி இருந்த இடத்திலேயே பிறவித் துன்பம் நீக்கி அதனால் இறப்பையும் போக்கி மகிழ்ச்சியுடன் சலிப்புற்று இருக்க ஆணவ மலத்தை குன்ற செய்யும் உமையம்மையையே “வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே” என்கிறார்.
“அந்தமாக”“வருந்தாவகை என் மனத்தா மரையினில் வந்து புகுந்து இருந்தாள்” என்பதனால் உமையம்மையின் பஞ்சமகார சாத்வீக பூசையையும், “பழைய இருப்பிடமாக” என்பதனால் பஞ்சமகார பூசனையின் வழி உபாசகனுக்குள் தோன்றும் ஞானத்தையும், “இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை” என்பதனால் ஞானத்தினால் ஏற்படும் லோக வசியத்தையும், “விண் மேவும் புலவருக்கு விருந்தாக” என்பதனால் மதுரை திருவிளையாடலில் வழி, தான் சொன்ன கருத்திற்கு சான்றாகவும், “வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே” என்பதனால் ஆன்மாக்கள் முக்தி நிலையில் பெறும் அனுபவத்தையும், சாத்தியப்படுத்தி காட்டுகிறார் பட்டர். வாழும்போதே சஹஜ சமாதி, விதேக முக்தி என்று சாஸ்திரம் கூறுகிற கலைச்சொல் விளக்கத்தையே இப்பாடலானது அறிவிக்கிறது. அதையே அறிய முயல்வோம்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்
|