தெளிவு பெறுஓம்
பூஜையில் மணி எப்படி அடிக்க வேண்டும். அதற்கு விதி இருக்கிறதா? - சங்கர்,திருச்சி.
 சாஸ்திர விதி இல்லாத விஷயங்களே இல்லை.மணியை அடிக்கும் போது அதில் இருந்து எழும் ஒலி, ஓம் என்ற தெய்வீக ஒலியை உருவாக்குகிறது. இந்த ஒலி அந்த இடம் முழுவதும் நேர்மறை அதிர்வலைகள் உருவாக்குகிறது .மணியை எப்போதும் ஒரே மாதிரி அடிக்கக் கூடாது மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அர்க்ய பாத்யாதிகள் சமர்ப்பிக்கப்படும் போது மெதுவாக அடிக்க வேண்டும்.
‘கண, கண’வென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக ஒலித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம். ஆலயத்தில் கோவில் மணி ஒலிக்கும் போது நம்முடைய கவனம், சிந்தனை ஆகியவை வேறு பக்கம் செல்லாமல் தடுக்கும். ஒரு அதிர்ச்சி உணர்வை அளித்து, நம்மை நிகழ்காலத் துடன் ஒன்றி இருக்க செய்யும் ஆற்றல் மணி ஓசைக்கு உண்டு. கோவில் மணியானது காதுகளுக்கு இதமான உணர்வை தந்து, மனதையும் ஆன்மாவையும் அமைதி பெற செய்கிறது.
? அபிஷேகப் பொருட்களுக்கு வரிசைக்கிரம நியதி உண்டா? - விஸ்வநாதர், கருர்.
உண்டு. இது சைவத்திலும் வைணவத்திலும் மாறும். சைவத்தில் வைதீகமாகச் செய்யும்போது சந்தனத்தைலம் பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், பழரசம், கரும்புச்சாறு, இளநீர், சந்தனம் என்று அபிஷேகம் செய்வார்கள். வைணவத்தில் இந்த வரிசை மாறும். அதிலும் பாஞ்சராத்ர ஆகம வரிசைக்கும், வைகானச மறைக்கும் வேறுபாடு இருக்கும்.
 ? நாம் பெற வேண்டிய செல்வங்கள் என்னென்ன? - ப்ரியா, சென்னை
பணம் ஒரு செல்வம். சமூக மதிப்பு இன்னொரு செல்வம். மூன்றாவதாக நேரம் அதாவது நாம் சுதந்திரமாக இருக்கக்கூடிய நேரம் நம்முடைய இஷ்டத்துக்கு நாம் வாழக்கூடிய நேரம், எந்த நிர்பந்தமும் இல்லாத நேரம், ஒரு செல்வம். நான்காவதாக நம்முடைய உடல் ஆரோக்கியம் ஒரு செல்வம். பெரும்பாலும் சமூக மதிப்பு மற்றும் கை நிறைய பணம் என்பதற்காக அடுத்த இரண்டு செல்வங்களை நாம் இழந்து விடுகின்றோம். அதில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
? பேசும் வார்த்தைகளில் பலர் கவனம் இல்லாமல் பேசுகிறார்களே? தேவையா? - காயத்திரி, ராமநாபுரம்.
உண்மைதான்.பல பேர் கவனம் இல்லாமல் தான் தோன்றிய வார்த்தைகளை எல்லாம் சொல்லி விடுகிறார்கள் அப்படிச் சொல்வதை விட பேசாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளை யாராலும் தொட முடியாது. ஆனால் வார்த்தைகள் மற்றவர்களைத் தொடும். மயக்கும். மயங்க வைக்கும் .சமயத்தில் பிரச்னையிலும் சிக்க வைக்கும்.எனவே தான் சொல்லாடலில் கவனம் என்றார்கள்.
 ? எழுத்துக்கும் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்? -அருள் குமரன், சேலம்.
எழுத்து அர்த்தம் மாறாது. பேச்சு அர்த்தம் மாறும். நோ என்கிற வார்த்தையை நாம் வெறும் உச்சரிப்பில் சொன்னால் அது சொல்லும் இடத்தை வைத்து பொருள் மாறும். அதுவும் நேர் எதிர்ப் பொருளைத் தரும். நோ(KNOW) என்றால் தெரியும் என்று அர்த்தம். தெரியாது(NO) என்றும் அர்த்தம்.
? மனித குலத்தில் உள்ள மகத்தான பிரச்னை எது? - கௌசல்யா, விழுப்புரம்.
எல்லோரும் மற்ற மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்கிறார்கள். சரியான மனிதர்களைத் தேடுகின்றார்கள். பண்புள்ள மனிதர்களைத் தேடுகின்றார்கள். ஆனால், தாங்கள் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பதோ முயற்சிப்பதோ இல்லை. அல்லது இப்படியும் சொல்லலாம். தாங்கள் மட்டும்தான் சரியான மனிதர்களாக பண்புள்ள மனிதர்களாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர்ந்து விட்டால் மனித குல வாழ்வின் பல சிக்கல்கள் தீர்ந்து விடும்.
? சங்கு சக்கரங்களோடு எங்கேயாவது ஆஞ்சநேயர் இருக்கிறாரா? - ராமசுந்தரன், மதுரை.
ஏன் இல்லை சோளிங்கபுரத்தில் மூலவர் யோக ஆஞ்ச நேயராக நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாகக் காட்சியளிக்கிறார்.
? விடா முயற்சிக்கு எதை உதாரணம் சொல்லலாம்? - கேசவன், சென்னை.
ஆறு. ஆறு எவ்வளவு பெரிய பாறையையும் அறுத்து விடும். அதற்குக் காரணம் அதனுடைய சக்தி அல்ல. விடா முயற்சி ஆங்கிலத்தில் PERSISTENCE என்பார்கள்.
? மரியாதை என்பதற்கு என்ன அடையாளம்? - பவித்ரா, சேலம்.
ஒருவர் மரியாதை தருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளம் மற்றவர்கள் பேசுவதை கவனிப்பது தான் அதைவிட ஒரு மரியாதையை யாராலும் தர முடியாது.
? அடுத்த தலை முறை சரியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? - வி.செல்லதுரை, நாமக்கல்.
குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். அன்போடு வளர்க்க வேண்டும். பண்போடு வளர்க்க வேண்டும். தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டும். மரங்களும் மழலைகளும் இந்த விஷயத்தில் ஒன்றுதான். சரியாக வளர்ந்துவிட்டால் தலைமுறை தலைமுறையாக நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கும் பயன்படும்.
? பகவான் கிருஷ்ணன் கீதை சொன்னான் என்று கேள்விப் படுகிறோம். ராமனும் கீதை சொன்னதாக ச் சொல்கிறார்களே? - சீதாதேவி, சென்னை.
அப்படி ஒரு செய்தி உண்டு. சித்ரகூடத்தில் பரதனுக்கு எதிரில் பரமாத்மா சொன்ன பதினெட்டு ஸ்லோகங்கள் ராமகீதை.
? ஒரு விஷயத்தை நாம் சரியாக புரிந்துகொண்டோம் என்பதற்கு அடையாளம் என்ன? - பாண்டியன், மதுரை.
யாரால்தான் புரிந்துகொண்ட விஷயத்தை குழப்பம் இல்லாமல் சரியாகச் சொல்லத் தெரிகிறதோ அவர்கள் அந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள் என்று பொருள். சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களால், சரியாக விளக்கவும் முடியாது. குறிப்பாக ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
? உறவுகள் இப்போது எப்படி இருக்கின்றன? - பி.தருன், சென்னை.
ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பெரும் பணக்காரர்கள் நமக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், நேற்றுவரை நம்மோடு இருந்த நம்முடைய உறவினர் ஒருவர் நல்ல நிலைமைக்கு உயர்ந்து விட்டால் நாம் அவரை விரும்புவோமா என்று சிந்தித்துப் பாருங்கள். இது ஒரு முரண்பாடு. உறவுகள் இந்த முரண்பாடுகளோடுதான் இருக்கின்றன. தானும் நன்றாகத்தானே இருக்கிறோம் என்று துரியோதனன் நினைக்கவில்லையே... பாண்டவர்களின் வாழ்வல்லவா அவனை நிம்மதியில்லாமல் பாடாய்ப்படுத்தியது.
? நிறைய சொத்து சேர்ப்பதால் என்ன பலன்? - திருகுமரன், தேனி.
100 இட்லி இருந்தாலும் நாலு அல்லது ஐந்து இட்லி தான் சாப்பிட முடியும். எத்தனை சொத்து இருந்தாலும் அது ஒரு தனி நபருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படும். அசையும் சொத்தாக இருந்தாலும் சொத்தாக இருந்தாலும் உடம்பு அசையும் வரைதான். அதுவும் ஓரளவுக்குத்தான். யாருக்கும் உபயோகமில்லாத செல்வம் நிறைய இருக்கிறது. என்ன பயன்?
? நான் உதவி கேட்கின்றபொழுது சில பேர் மறுத்துவிடுகின்றார்களே? - யாழினி, திருச்சி.
உண்மைதான். எல்லோருக்கும் எல்லோரும் உதவி செய்துவிடமாட்டார்கள். அதிலும் பல உள் விஷயங்கள் உண்டு. ஆனால் ஒருவர் உதவி செய்யவில்லையே என்று நீங்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம். உண்மையில் அவர் உங்களுக்கு உதவி செய்ய மறுப்பதன் மூலம் உதவி செய்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். காரணம், அவருடைய உதவியால் முடித்துக் கொள்ள வேண்டிய காரியத்தை அவர் மறுத்ததால் நீங்களே செய்து முடித்திருப்பீர்கள். அந்த ஆற்றலை மறைமுகமாக தந்தவர் அல்லவா அவர்.
? நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வழி? - வே.ராமசுப்பு, திருமங்கலம்.
பொருட்களை பயன்படுத்துங்கள். மனிதர்களை நேசியுங்கள். இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. மனிதர்களை பயன்படுத்தி உயிரற்ற பொருட்களை நேசிக்கிறார்கள்.
? கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார்களே? - சுப்ரமணியன்,கோவை.
அது ஒரு மோசமான உளவியல். ஏற்கனவே. நடந்துபோன விஷயங்களைப்பற்றி திரும்பத் திரும்பப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை. நம்முடைய பிறப்பும் நம்முடைய கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளும் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம். இப்போதைக்கு ஆரம்பிப்போம். தோற்றம் எப்படி இருந்தாலும் முடிவை மாற்றுவது எப்பொழுதும் நம் கையில்தானே இருக்கிறது.
? எதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது? - தாசபிரகாஷ், சென்னை.
சோம்பேறித்தனம், கோபம், அச்சம், தன்முனைப்பு, பொறாமை, சந்தேகம், இவற்றுக்கெல்லாம் இடம் தரக்கூடாது. சோம்பல் நம்முடைய எதிர்கால விருப்பத்தை கெடுத்துவிடும். கோபம் நம்முடைய அறிவை சிதைத்து விடும் அச்சம் நமது கனவை கலைத்து விடும். தன்முனைப்பு நம்முடைய வளர்ச்சியைத் தடுத்து விடும். பொறாமை நம்முடைய அமைதியைத் குலைத்து விடும். சந்தேகம் நம்முடைய தன்னம்பிக்கையைத் தவிடு பொடியாக்கி விடும்.
? உடலும் மனமும் அமைதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்? - அம்பிகா, தாமபரம்.
பிடிக்காத விஷயத்தைக் கண்டு கொள்ளாதீர்கள். வேண்டாத விஷயத்தில் கவனம் செலுத்தாதீர்கள். தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள். இந்த மூன்றையும் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
? நெல்லி மரம் என்ன சிறப்பு? - கனேசன்மூர்த்தி, திருநெல்வேலி.
நெல்லியை பூஜையில் வைத்து வழிபடுவதால் குடும் பத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், அதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது. எவ்வித தீய சக்திகளும் நெல்லி மரத்தை அணுகமுடியாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மைச்சுற்றி உண்டாக்கக்கூடியது.துவாதசி பாரணையில் அவசியம் நெல்லியை சேர்க்க வேண்டும்.
? கல்வி என்பது என்ன? - தீபிகா, சென்னை.
புத்தகத்தில் உள்ள தகவல்களை மூளையில் நிரப்பிக் கொள்வதுதான் கல்வி என்று நினைக்கிறார்கள். நம் உள்ளத்தில் உள்ள உணர்ச்சியை ஒழுங்குபடுத்துவதும், நமக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய அறிவை கூர்மைப்படுத்துவதும் தான் கல்வி. ஒவ்வொரு வருக்கும் ஒரு அறிவுக்கனல் இருக்கிறது அது மறைந்து இருக் கிறது. அந்தக் கனலை கிண்டி நெருப்பாக மாற்றி, சக்தியாகச் செய்வது தான் கல்வி. இதைத்தான் பாரதி “அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்” என்று பாடினார்.
? தோல்விக்குக் காரணம் ஜாதகம் சரியில்லாததா? - நடராஜன், திருச்சி.
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கிரகங்கள் நம்முடைய செயல்பாட்டை கைபிடித்து தடுத்து விடுவதில்லை. தோல்வி வந்த உடனேயே, அதை யார் தலை மீதாவது போட வேண்டும். அவர்கள் கேள்வியும் கேட்கக் கூடாது என்றால் கையில் ஜாதகம் இருக்கிறது.
அதன் தலையில் போட்டு விடலாம். தோல்வி வந்த உடனேயே, உங்கள் கட்டம் சரியில்லை என்று சொல்லாதீர்கள். உங்கள் திட்டம் சரியில்லை என்று சொல்லுங்கள். அந்த உணர்வு இருந்து தொடர் முயற்சி இருந்தாலே, நமக்கு தோல்விகள் வராது. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி கூலி தரும் அல்லவா... வள்ளுவர் இதைத்தானே சொல்லுகின்றார்.
தேஜஸ்வி
|