ஜெயதேவர்
சென்ற இதழில்... அரசரின் பராமரிப்பில் ஜெயதேவர், தன் மனைவியுடன் அரண்மனையில் இருந்தார். அப்போது ``கீத கோவிந்தம்’’ எனும் நூலை எழுதத் தொடங்கினார், என்பது வரை பார்த்தோம். இனி இந்த இதழில்...தெய்வீகக் காதல் இலக்கியமாகக் ``கீத கோவிந்தம்’’ என்ற நூலைப் படைக்கத் தொடங்கிய அந்நூலில், எட்டு எட்டு வரிகள்கொண்ட பாடல்களாகப் படைத்தார். அவை ‘அஷ்ட பதிகள்’ என அழைக்கப்பட்டன.  புதுப்புது கற்பனைகளாக பாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் ஜெயதேவர். ‘சாரு சீலே! ப்ரியே சாரு சீலே!’ என்ற பாடலை எழுதத் துவங்கினார், ஜெயதேவர். தான் எழுதப்போகும் பாடலுக்கான நிகழ்வை, அப்படியே மனக் கண்களில் கற்பனைசெய்து பார்த்தார். அவரை அறியாமலே அந்தக் கற்பனைக்காட்சி விரிந்தது.
‘‘ராதே! விரகதாபத்தால் தவித்துக்கொண்டிருக்கும் என் தலையின் மீது, பனிமலர் போன்ற குளுமையான உன் தாமரைக் கால்களை வைப்பாயாக!’’ என்று கண்ணன் சொல்வதாக எழுதிவிட்டார். தன்னை மறந்த நிலையில் எழுதிய ஜெயதேவர், சற்று நேரத்தில், தன் நிலைக்குத் திரும்பினார்; தான் எழுதியிருந்ததைப் பார்த்தார்; திடுக்கிட்டார்.
‘‘பகவானின் தலையில் போய் ராதை கால்களை வைப்பதாவது! பகவானே! பாவம் செய்துவிட்டேன். பெரும்பாவம் செய்துவிட்டேன்’’ என்று நினைத்து, தான் எழுதிய அந்த ஏட்டைக்கிழித்துப் போட்டார். இருந்தாலும் மனம் அமைதியடையவில்லை அவருக்கு. ஆன்மா, பரமான்மாவோடு சேரத்துடிக்கும் நிலைகளைக் கற்பனை நயங்களோடு பாடல்களாக வடிக்கக் கருதிய ஜெயதேவருக்கு, கவிஞரான தான் எழுதியதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. தான் எழுதிய பாடல் வரிகளின் அமைப்பிலும் நயங்களிலும் அவர் மயங்கியிருந்தார். அதே சமயம், ‘‘தெய்வீக இலக்கியத்தில் அப்படிப்பட்ட வரிகள் இடம்பெறலாமா?’’ என்ற சந்தேகமும் ஜெயதேவருக்குத் தோன்றியது. அவ்வாறு மாறிமாறிப் பலவிதமான எண்ணங்களில் சிக்கித் தவித்த ஜெயதேவர், கடைசியில், தான் கிழித்த ஓலைகளை எடுத்து ஓர் ஓரமாக வைத்துவிட்டுப் போனார்.
ஜெயதேவர் என்னதான் மாறிமாறி நினைத்துக் குழம்பினாலும், பகவானுக் கென்று ஒன்று இருக்கு மல்லவா? தெய்வம் தன் செயலைக் காட்டத் தொடங்கியது. வழக்கப்படி அன்று ஜெயதேவர் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்.
ஜெயதேவரின் மனைவி பத்மாவதி, எண்ணெய்க் கிண்ணத்தைக் கொண்டுவந்து கணவர் அருகில் வைத்துவிட்டு, சமையல் வேலையைக் கவனிக்கப் போனாள். பகவானின் லீலை ஆரம்பமானது. சற்று நேரத்தில், சமையல் வேலையைக் கவனிக்கப் போன பத்மாவதி, ஏதோ ஓசை கேட்டு சமையலறையை விட்டு வெளியே வந்து பார்த்தால்... எண்ணெய் தேய்த்த உடம்போடு, கண்களைக் கசக்கிக் கொண்டு, ஜெயதேவர் நின்று கொண்டிருந்தார். ‘‘பத்மாவதி! காலையில் எழுதிய ஓலைகளையும் எழுத்தாணியையும் எடுத்து வா!’’ என்றார் ஜெயதேவர். பத்மாவதியும் அவ்வாறே கொண்டு வந்து வைத்தாள்.
ஜெயதேவர் தொடர்ந்தார்; ‘‘பத்மாவதி! ஓர் அழகான கற்பனை. கண்ணன் செய்த செயல் ஒன்றை இப்போது எழுதாவிட்டால், பின்னர் மறந்து போய் விடும்.
அதற்காகத்தான் அதை எழுதிவிடலாம் என்று, குளிக்காமல்கூட வந்தேன்’’ என்று சொல்லி, ஓலையில் ஏதோ எழுதி வைத்துவிட்டுச் சென்றார். சற்று நேரமானது. கணவரின் செயலை நினைத்தபடியே சமையல் வேலையை முடித்தாள் பத்மாவதி. அதே வேளையில் ஜெயதேவர் குளித்துவிட்டுத் திரும்பினார். பூஜை அறைக்குள் நுழைந்து முறைப்படிச் செய்யவேண்டிய பூஜைகளைச் செய்து முடித்தார். அதன்பின் மனைவியை அழைத்த ஜெயதேவர், ‘‘பத்மாவதி! ஓலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் கொண்டுவா!’’ என்றார்.‘‘கொஞ்ச நேரத்திற்கு முன்தானே, ஏடு களில் ஏதோ எழுதினார்! இப்போது மறு படியும் ஓலைகளையும் எழுத்தாணியையும் கொண்டுவரச் சொல்கிறாரே!’’ என்று எண்ணியபடியே போன பத்மாவதி, ஜெயதேவர் சொன்னதைச் செய்தாள். ஜெயதேவர் ஏடுகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்;
படித்துக்கொண்டு வந்தவரின் கண்கள் விரியத் தொடங்கின; புருவங்கள் மெள்ளமெள்ள சுருங்கத் தொடங்கின. காரணம், தான் எழுதியது தவறு - அபசாரம் என்று கருதிய அதே தகவல்கள், ஒரு புதிய ஓலையில் மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்தன; அதைக் கண்டதால்தான் ஜெயதேவர் அதிர்ந்தார்; ஆச்சரியப்பட்டார்! உடனே மனைவியை அழைத்து, ‘‘அம்மா! இந்த ஏடுகளில் நீ ஏதாவது எழுதினாயா?’’ எனக்கேட்டார். பத்மாவதி மறுத்தாள்;
‘‘நான் எதுவும் எழுதவில்லை. குளிக்கப் போன நீங்கள்தான் குளிக்காமல் எண்ணெய் உடம்போடு திரும்பி வந்து, ஏடுகளையும் எழுத்தாணியையும் கொண்டுவரச் சொல்லி ஏதோ எழுதினீர்கள். அதற்குள்ளாகவா மறந்துவிட்டீர்கள்?’’ எனக் கேட்டாள். ஜெயதேவரின் சந்தேகம் அதிகமானது; ‘‘நானா? எண்ணெய்க்கையோடு வந்து எழுதினேனா?’’ எனக் கேட்டார். அதை நிச்சயப்படுத்தினாள் பத்மாவதி;
``நீங்கள்தான்! நீங்களே..தான் வந்து, எண்ணெய்க் கையோடு ஏட்டில் எழுதினீர்கள். இதோ பாருங்கள்! நீங்கள் வந்து எழுதிய ஏட்டில் எண்ணெய்க்கறை இருக்கிறது’’ என்று சுட்டிக் காட்டினாள். ஜெயதேவர் பார்த்தார். அவர் சந்தேகப்பட்ட ஓலையில், எண்ணெய்க்கறை இருந்தது; ஒன்றும் புரியவில்லை; நிஷ்டையில் அமர்ந்தார், ஜெயதேவர்.
நடந்த நிகழ்ச்சிகளின் உண்மை விளங்கியது. கண்ணனே தன் வடிவில் வந்து, எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற உண்மை தெரிந்தது. புல்லரித்தது அவருக்கு; அதே சமயம், ``என் வீட்டிற்கு வந்த அந்தக் கண்ணனை என்னால் தரிசிக்க முடியவில்லையே!’’ என்ற எண்ணமும் ஏக்கமும் அதிகரித்தன. மனைவியின் பக்கம் திரும்பினார்; பிரமிப்பும் திகைப்பும் உண்டாயின; ``தியானம், நிஷ்டை, பூஜை, தவம் எனும் பலவற்றையும் பல காலம் செய்தும், என்னால் காண முடியாத கண்ணனை, கணவனுக்குத் தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்டிருந்த பத்மாவதி, தரிசித்துவிட்டாளே! பெரும் புண்ணியமும் பாக்கியமும் கொண்டவள் இவள்! இப்படிப்பட்ட புண்ணியவதியை மணந்த எனக்கும் பெருமையாக இருக்கிறது’’ என்று நினைத்த ஜெயதேவர், தன் மனைவியின் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டார்;
``ஜெய் பத்மாவதி! ஜெய் ஜெயதேவ கவி! பத்மாவதியின் கணவனான நான் வென்றேன்!’’ என்று கூவிப் பத்மாவதியைப் புகழ்ந்தார். இப்படிப்பட்ட இல்வாழ்வில், அன்பிலும் பக்தியிலும் இன்பத்திலும் வாழ்ந்து வந்தார் ஜெயதேவர். அவர் உள்ளத்தில் இருந்த பக்திவெள்ளம், அப்படியே கவிதைகளாகப் பெருகின. ஜெயதேவரின் அப்பாடல்கள் எல்லா இடங்களிலும் பரவின. அவ்வாறு புகழ் பரவப்பரவ ஜெயதேவர்,
``நாம் எழுதும் பாடல்களில் எந்தவிதமான குற்றங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது’’ என்று எண்ணி, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டார். நாளாகநாளாக ஜெயதேவரின் மனம் வேறு விதமாகவும் சிந்திக்கத் தொடங்கியது; ``பக்தி, அன்பின் ஆழம், கற்பனைச் செறிவு என அனைத்தும் நிறைந்த இப்பாடல்களைத் தெய்வமே ஏற்றாலும், இலக்கியத்தில் திறமைசாலியான புலவர்கள் ஏற்பார்களா?
``என் தலையில் உன் கால்களை வை!’’ எனப்பகவான் சொன்னதாக எழுதி இருக்கிறேனே! நான் எழுதியது சரியா? தவறா? இதற்குமுன் எந்தக் கவிஞராவது எந்தத் தெய்வீக நூல்களிலாவது இவ்வாறு எழுதி இருக்கிறார்களா? ``ம்... இதை ஆராய்ந்து தெரிந்த பிறகுதான், தொடர்ந்து எழுத வேண்டும்’’ என முடிவு செய்தார், ஜெயதேவர்.
ஆனால், அதற்குள் ஜெயதேவரின் தெய்வப்பாடல்கள் எல்லாம் வடநாட்டு ஆலயங்கள் அனைத்திலும் இசையோடு ஒலிக்கப்பட்டு பிரபலமாகின. குறிப்பாக, ஜெகன்னாதர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தில்,தெய்வத்தின் முன்னால் ஏராளமான அடியார்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்.
ஜெயதேவர், தன் தெய்வீகப் பாடல்கள் பிழையின்றி அமைய வேண்டும் என்ற விருப்பத்தோடு, திருத்தல யாத்திரை செய்யப் புறப்பட்டார். மனைவி பத்மாவதியும் அவருடன் புறப்பட்டாள். அந்தத் தகவலை அறிந்தார் மன்னர்; ஜெயதேவரின் சீடராக, பக்தராக, நண்பராக எனப் பல விதங்களிலும் பழகிய மன்னருக்கு, ஜெயதேவரை விட்டுப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. ஆகவே, அவரும் ஜெயதேவருடன் திருத்தல யாத்திரைக்குச் செல்லத் தயாரானார்.
மன்னர் புறப்படப் போகிறார் என்பது தெரிந்தவுடன், அரச குடும்பம் உட்படப் பலரும் புறப்பட்டார்கள். அப்போது அமைச்சர்கள் சிலர், ஜெயதேவரை நெருங்கி, ``சுவாமி! ரத, கஜ(யானை), துரகங்களும் (குதிரை), பல்லாக்குகளும் இருக்கும்போது, நீங்கள் கால்நடையாகத்தான் திருத்தல யாத்திரை செய்ய வேண்டுமா?’’ எனக் கேட்டார்கள்.
ஜெயதேவர் அமைதியாகப் பதில் சொன்னார்;``அமைச்சரே! புண்ணியத் தலங்களுக்கும், புண்ணியத் தீர்த்தங்களுக்கும், யாத்திரையாகப் போகும்போது, நடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால்தான் பலன் உண்டாகும். ``மன்னரின் கொலுமண்டபத்திற்குச் செல்லும் குடிமகன் அவை அடக்கத்துடன் நடந்து செல்வது, நடைமுறை வழக்கமாக இருக்கிறதல்லவா? அப்படி இருக்கும்போது, தெய்வதரிசனத்திற்கும், மகான்களின் தரிசனத்திற்கும் நடந்து செல்வதே மிகவும் சிறந்தது’’ எனப் பதில் சொன்னார் ஜெயதேவர்.
பிறகென்ன? அனைவருமாக நடந்தே சென்று காசியை அடைந்தார்கள். அங்கு போனதும் ஜெயதேவர், காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டார். பற்பல அறிஞர்கள் அங்கே கூடியிருந்தார்கள்.
அவர்களை நெருங்கிய ஜெயதேவர், நடந்தவைகளை எல்லாம் சொல்லி, ``புலவர்களே! கண்ணன் திருமுடி மீது ராதையின் கால்களை வைக்கும்படி வேண்டுவதாக எழுதிவிட்டேன். பிறகு அது தவறாகத் தோன்றியது.
இதற்கு முன்னால் யாராவது அவ்வாறு எழுதி இருக்கிறார்களா? ஆதாரம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்!’’ என வேண்டினார். யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. அன்றிரவு! ஜெயதேவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கனவில் காசி விஸ்வநாதர் எழுந்தருளினார்;
``ஜெயதேவா! நீ என்மீது ஐந்து அஷ்டகங்களை இயற்றினால், உன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன் நான்’’ என்று சொல்லி மறைந்தார். கனவு கலைந்ததும் கண் விழித்தெழுந்த ஜெயதேவர், மறுநாள் பொழுது விடிவதற்குள் நீராடி, செய்ய வேண்டிய வழிபாடுகளை முடித்தார்.
கனவில் வந்து காசி விஸ்வநாதர் சொன்னபடி காசி விஸ்வநாதர் மீது ஐந்து அஷ்டகங்கள் எழுதினார். அவர் எழுதி முடித்த அதே வேளையில், காசி விஸ்வநாதர், ஒரு புலவரைப் போல வடிவம் கொண்டு, சீடர்கள் பலர் சுற்றிவர, ஜெயதேவர் இருந்த மடத்திற்கு வந்தார். வாசலில் காவலில் இருந்தவரிடம்,``சந்தேக நிவர்த்தி செய்ய பண்டிதர் வந்திருப்பதாக ஜெயதேவரிடம் போய்ச் சொல்லுங்கள்!’’ என்றார். வாசல் காவலாளி உள்ளே ஓடினார்; ஜெயதேவரிடம், ``சுவாமி! சந்தேக நிவர்த்தி செய்ய ஒரு பண்டிதர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். நீங்கள் விரைவாக வந்து, அவரைச் சந்திக்க வேண்டும்’’ என்றார்.
(விஜயம் தொடரும்)
V.R.சுந்தரி
|