நறையூர் நின்ற நம்பி
6.1.2025 - கல் கருட சேவை
கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் உள்ளது, திருநறையூர் என்ற திவ்யதேசம். திருநறையூர் என்றால் இன்றைக்கு யாருக்கும் தெரியாது. கும்பகோணம் திருவாரூர் பேருந்தில் ஏறி, நாச்சியார் கோவில் ஒரு டிக்கெட் என்றால் அரைமணி நேரத்தில் கோயில் வாசலில் இறங்கிவிடலாம். உப்பிலியப்பன் கோயிலில் (திருவிண்ணகர்) இருந்தும் போகலாம். இங்கே உள்ள பெருமாள் திருநாமம், திருநறையூர் நம்பி.
 தாயார் பெயர் வஞ்ஜூளவல்லி. தமிழில் நம்பிக்கை நாச்சியார். மேதாவி என்ற முனிவரின் வளர்ப்புப் பெண் வஞ்ஜூளவல்லி தாயார். வஞ்ஜூள மரத்தடியில் கிடைத்த குழந்தை. (வஞ்ஜூளவல்லி பெயரைச் சொல்லிப் பாருங்கள்: கம்பனின் பஞ்சு ஒளிர் பாடலின் சந்தம் தெரியும்) வஞ்ஜூளவல்லி பருவகாலம் வந்தபோது, எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாஸூதேவன் என (வியூக நிலைகள்) ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு, கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்ஜூளவல்லி கைப்பிடிக்க, கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில், ஐவர் ஒருவராகி வஞ்ஜூளவல்லியை கரம் பிடித்து திருமண கோலத்தில் காட்சி தந்தார்.
இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார். பகவான் தனது நிலையில், அதாவது சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஆகியோர் உருவங்களில் இங்கே பிராட்டியை திருமணம் செய்துகொள்கிறார். திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் “மன்னும் மணிமாடக் கோயில்” என்று இத்தலத்தைப் புகழ்கிறார். இத்தலத்தில் இன்னொரு சிறப்பு, கருவறைக்கு மேலே அமைந்துள்ள விமானம்.
கோபுரம் போலவே இருக்கும். ஐந்தாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணான் சோழனால் கட்டப்பட்டது. இது ஒரு மாடக்கோயில் (யானை ஏற முடியாத கோயில்). இந்த கோயில், 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, தூண் மண்டபம் உள்ளது.
அதனை அடுத்து படிகளில் ஏறிச் சென்று மூலவர் கருவறையை அடையலாம். மூலவர் சந்நதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும், ஐந்து பிரகாரங்களையும் கொண்ட அற்புத ஆலயம் இது. இந்த கோயிலில் மூலவர் சீனிவாசப் பெருமாள், தாயார் வஞ்ஜூளவல்லியுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அதனால் இக்கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நதி கிடையாது. இவ்வூரிலே பிராட்டிக்குத்தான் முதலிடம். அபிஷேக, ஆராதனைகள் என அனைத்திலும் தாயாருக்கே முதலிடம் தரப்படுகிறது. உற்சவ காலங்களில், திருவீதி வலத்தில், முதலில் அன்ன வாகனத்தில் பிராட்டி செல்ல, பின்னால் கருட வாகனத்தில் பெருமான் உலா வருவார். ஊரே நாச்சியார்கோவில்தான்: (பெருமாள் கோயில் அல்லவே!)
எல்லாவற்றையும் விடப் பெருஞ்சிறப்பு, இத்தலத்தில்தான் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு சமாச்ரயனம் (பஞ்ச சம்ஸ்காரம்) எனும் வைணவ தீட்சைச் சடங்கைச் செய்து வைக்கிறார். எனவே திருமங்கை ஆழ்வாருக்கு நேர் ஆசாரியன் (குரு) இவர்.
அதனால்தான் ஒன்றல்ல; இரண்டல்ல; 110 பாசுரங்களை அள்ளிப் பொழிகிறார் ஆழ்வார்! அவ்வளவு காதல் இந்தத் திருநறையூர் நம்பி மீது. நம்பி என்றாலே உபகாரம் செய்தவன் என்று பொருள். அரங்கனுக்கு கொடுத்ததைவிட இங்கே அதிகம். இதிலே ஓர் அற்புதப் பாசுரம்; ``பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் செந்தாமரைமேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தாவண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (6.7:8)’’ தாமரை மேல் அமர்ந்த நான்முகனோடு சிவனும் இருப்பது போன்ற பெருமை படைத்த மறையோர்கள்கூடி உன்னைத் துதித்து வாழும் படியான திருநறையூர் என்ற திருத்தலத்திலே நின்ற வண்ணம் காட்சியளிக்கும் நம்பியே! நீ துவாபர யுகத்திலே கண்ணனாய் அவதரித்தாய். பந்து பிடித்து விளையாடும் அழகிய விரல்களையுடைய பாஞ்சாலியின் கூந்தலை முடிக்கப் பாரதப் போரிலே சங்கநாதம் செய்தாய். இவ்வளவுதான் பொருள். திருமங்கையாழ்வார் பாசுரத்தைச் செய்கின்ற போது ஒரு வழக்கம் உண்டு.
ஒரு பாதியில் திருத்தலத்தின் பெருமை தன் பார்வையில் பதிவு செய்வார். அடுத்த பாதியில் அத்தலத்து எம்பெருமானின் பெருமையை புராண இதிகாசத்து நிகழ்வோடு இணைத்துச் சொல்வார்.
இந்தப் பாசுரத்தில் கவனிக்க வேண்டிய பகுதி முதல் பாதி. பாஞ்சாலி கூந்தல் முடிக்க உதவ வேண்டும். அதற்காக தனது வில்லையோ அம்பையோ எடுக்கவில்லை. பாஞ்ச சன்யம் என்கிற சங்கை, வாயில் வைத்தான். பாரதப் போர் முடிந்தது. பாஞ்சாலியின் துயரமும் தீர்ந்தது. அடியவரை எந்த விலை கொடுத்தும் காக்கின்றவன் கண்ணன்.
திரௌபதியை அழைக்க துச்சாதனன் வருகிறான். அவனிடத்திலே தன்னிலையை கல் மனதும் உருகும்படி சொல்கிறாள் திரௌபதி!துச்சாதனனா கேட்பான்? பெருமூடனான அவன், அவள் அங்கம் நடுங்க, உயிர் கலங்கக் கூந்தலைப் பற்றித் தரதரவென இழுத்து வருகிறான். நெட்டை மரங்களாக நின்று புலம்பும் கூட்டம்.
நீதி தெரிந்தோர் வாயடைத்து நிற்க, வீராதிவீரர்கள் அவமானத்தில் தலைகவிழ்ந்து இருக்க, விதியோ கணவரே! என்று அழுகிறாள் பாஞ்சாலி. ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம் புனல் சோர, அளகம் சோர, வேறான துகில் தகைந்த கை சோர, மெய்சோர, வேறொன்றும் கூறாது கோவிந்தா! கோவிந்தா!! என்று கதறுகிறாள்.
தேக பந்துக்கள் காப்பாற்றவில்லை. ஆத்ம பந்து ஓடோடி வருகிறான். புடவையை இழுத்த துச்சாதனன் கை சலித்துப் போகிறான். நல்லோர்கள் தவம் வளர்ந்ததுபோலே பல்வேறு ஆடைகள் கண்ணன் அருளால் வளர்ந்து பாஞ்சாலியின் மானத்தைக் காக்கின்றன.
(எத்தனையோ அவதாரம் எடுத்த கண்ணன் திரௌபதிக்காக புடவையாகவும் அவதாரம் எடுத்தானாம்)அன்று திரௌபதி மானத்தைக் காத்த கண்ணன், பின்னால் அவள் செய்த சபதத்தையும் காக்கிறான். பாரத வெற்றி பாண்டவர்களால் பெற்றது அல்ல: பசுந்துளப மாலை அணிந்த பரந்தாமனால் பெற்றது. ஸ்ரீ வசன பூஷணம் என்றொரு அருமையான நூல். பிள்ளை உலகாரியர் செய்தது. வைணவத் தத்துவங்களை அறிய விரும்புவோர்க்கான ரகசிய நூல் இது. “கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஸரணாகதம்” என்று திரௌபதி கிருஷ்ணனைச் சரணம் புகுந்துவிட்ட பின்பு, அவளைக் காக்க ஓடுகிறான். இன்னொன்று இதில் விசேஷம்.
கண்ணனுக்கு முதலிலே கோபம் வருவது, துரியோதனாதியர் பக்கலில் அல்ல: பாண்டவர்கள் பக்கமே ஆகும்! காரணம், அருகிலிருக்கிறார்கள் அவர்கள்.
திரௌபதியின் மானத்தைக் காக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்களும் வேடிக்கைத் தானே பார்த்தார்கள். மனைவி என்பது இருக்கட்டும். ஒரு பெண்ணை நடுச்சபையிலே அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லையே! இப்படி ஒரு அடியார் துன்பப்பட அதைப் பார்த்து நிற்கின்ற பாவிகளை என்செய்வது என்றுதான் கிருஷ்ணன் கருதுகிறான். ஸ்ரீவசனபூஷண சூத்திரம் இது``பாண்டவர்களையும் நிரஸிக்க ப்ராப்தமாயிருக்க (தண்டனை தருவதாக இருந்தும் தராமல் விட்டது) வைத்தது, த்ரௌ பதியுடைய மங்கள
சூத்திரத்துக்காக. பாஞ்சாலியின் தாலிக் கொடிக்காக பாண்டவர்களைவிட்டு வைத்தானாம் கண்ணன்’’. அடியார்களை பிறர் அவமானப்படுத்தக் கண்டால், துணிவும் சக்தியும் இருப்பின் விலக்கவேண்டும்.
சக்தி இல்லாது இருப்பின், ஐயோ என்ற பரிதாபப்பட்டு கண் மறையப் போக வேண்டும். இந்த இரண்டும் பாண்டவர்களிடம் இல்லை. இருப்பினும் பாஞ்சாலியின் பக்திக்காகத் தப்பித்தார்கள். இது மட்டுமா? தூது நடக்கிறான். பாண்டவர்களை நம்பிப் பயனில்லை எனக் கருதுகிறாள் பாஞ்சாலி! கண்ணன் தூது செல்ல முடிவு செய்த பின் திரௌபதியை பார்க்கிறான். திரௌபதி கண்ணனிடம் கேட்கிறாள்; ``நீ தூது செல்கிறாய்! ஐந்து ஊரைக் கேட்கப் போகிறாய்! ஒருக்கால் அவர்கள் தந்துவிட்டால்...?’’ ``தந்துவிட்டால்...?’’``கண்ணா! தெரியாமல்தான் பேசு கிறாயா? அடியார் உள்ளம் அறியும் அண்ணலே! அன்று விரித்த அரும்கூந்தல் வல்வினையேன் என்று முடிப்பது இனி?’’
``கவலைப்படாதே திரௌபதி! தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது போய் மீள்வேன்.
அதன்பின் நல்லவளே! உன் பைங்கூந்தல் நானே முடிக்கிறேன்’’ ``இங்கே வில்லியின் பாடலையும் பார்க்கவேண்டும். பெண் நீர்மை குன்றாதப் பெருந்திருவின் செங்கமலக் கண்ணீர் துடைத்து இரு தன் கண்ணில் கருணை எனும் தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான் சாற்றுகின்ற மண், நீர், அனல், அணிலம், வான் வடிவு, ஆம் மாமாயன்’’ என்பார் வில்லி. அந்த மாமாயன் யார் தெரியுமா? நந்தாவண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பி. எப்பேர்ப்பட்ட தெய்வம் அவன்! அர்ச்சுனனுக்காக தேரோட்டுகின்றானே!
``நான் சண்டை செய்ய மாட்டேன்!’’ என்று வில்லையும் அம்பையும் போட்டுவிட்டுப் போன அர்ச்சுனன் பின்சென்று அவனுக்கு கீதோபதேசம் செய்து, பாரதப் போரை எப்படியெல்லாம் சமாளித்து வெற்றி பெற வைக்கிறான்? எல்லாம் எதற்காக? அர்ச்சுனனுக்குத் தூத்ய சாரத்தியங்கள் (தேர் ஓட்டி) பண்ணிற்றும், பிரபத்தி உபதேசம் (கீதை) பண்ணிற்றும் இவளுக்காக (அடியாராகிய திரௌபதிக்காக) என்பது ஸ்ரீவசனபூஷண சூத்திரம். பஞ்சபாண்டவர்களைக் காத்தது அடியார் என்பதற்காக அல்ல. அடியாரோடு சம்பந்தமுடையவர்கள் என்பதற்காக என்பதுதான் இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதுதான் பாசுரத்தின் சாரமான செய்தி. ஆழ்வாரின் அடுத்த வரியைப் பாருங்கள்;
``கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்’’
கந்து ஆர் களிறு என்றால், மதநீரின் மணம் பொருந்திய யானைகள். கழல் மன்னர் எனில் - அதில் ஏறி கம்பீரமாகப் போரில் துரியோதனனுக்காக கலந்து கொண்ட பகதத்தத்தன், ஜெயத்ரதன் முதலிய வீரர்கள். பீஷ்மர், துரோணர், கர்ணன், கிருபர், அசுவத்தாமன் என அணிவகுத்து நிற்கின்றவர்கள் கலங்கிப் போகுமாறு கண்ணன் போர் செய்யவில்லை.
அவன் தன் சங்கில் வாய் வைத்தான்! பாஞ்ச சன்னியம் என்ற சங்கில் வாய்வைத்து யுத்த பூமியே அதிர ஒலி செய்தான். துரியோதனாதியர் நெஞ்சம் மட்டுமல்ல; அங்கே சஞ்சயன் மூலம் போர் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் நெஞ்சமும் பிளவுபடும்படியாக ஒலித்தது கண்ணனின் சங்கம்! “ஸ கோஷோ தார்த்தராஷ்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்” (கண்ணனின் சங்கின் ஒலி திருதராஷ்ட்ர புத்திரர்களின் இதயங்களைப் பிளந்தது) என்பது வியாசர் காட்டும் சித்திரம்.
சங்கு ஒலியிலேயே அவர்கள் மாண்டனர். பின் நடந்தது பெரும் யுத்தமல்ல. வெறும் யுத்தம். சங்கு ஊதிவிட்டான் என்றாலே முடித்துவிட்டான் என்றல்லவா பொருள்.
அதைச் சூசகமாக வைத்து திருமங்கையாழ்வார் காட்டுகிறார். இந்தப் பாசுரத்திலே தன்னைச்சரண் என்று வந்தடைந்தவர்களை தன்கௌரவம் கருதாது இறங்கி வந்து அருள்புரியும் அந்த இறையருளின் எளிய நிலையை திருமங்கையாழ்வார் சொல்லுகின்றார். திருநறையூர் செல்லும்போது இந்த பாசுரத்தையும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துயரமும் அவன் சங்கின் ஒலியில் மறையும். 1. எங்கே கோயில் உள்ளது?: கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
2. முக்தி தரும் 12 தலங்களுள், 11வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில்.
3. இவ்வூரில் வாழ்ந்த ஒரு பக்தருக்கு 108 திவ்ய தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது. ஆனால் முடியவில்லை. 108 எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும் இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார்.
இந்த பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில் வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்ரகங்களைக் கொடுத்ததாகவும், நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து பூஜித்த இவைகளை, தமது அந்திம காலத்தில் இத்தலத்தில் ஒப்படைத்ததாகவும் கூறுவர். இந்த 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம். 4. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற முப்பெரும் தேவியரில் நீளாதேவிக்கு பிரதானமான தலம் இது.
5. திருமங்கையாழ்வார் தன்னுடைய மடல் பிரபந்தத்தை இந்தப் பெருமாள் மீதுதான் செய்தார்.
6. திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்ற பெயரையும் சேர்த்து அழைக்கும் சிறப்பு இந்தத் தலத்துக்கு உண்டு.
7. தினந்தோறும் திருமணக் கோலத்தில் பிரம்மனால் பூஜிக்கப்படும் தலம் இது என்று புராணங்கள் கூறுகின்றன.
8. சிவபெருமானுக்கு 70 திருக்கோயில்களை எழுப்பிய கோச்செங்கண் என்னும் சோழ மன்னன் தனது வெற்றிக்காக இத்திருத்தலத்தை கட்டினார்.
9. வியூக வாசுதேவனாக இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் தனது ஐந்து நிலைகளில் உண்டான சக்தியை தேவிக்கு அளித்து ஸ்ரீநிவாசன் என்னும் திருநாமத்தோடு தேவியே திருமண கோலத்தில் ஏற்றுக் கொண்டார்.
10. பூஜை நேரம்: தோசை தளிகை - காலை 8:00. கலாசாந்தி - காலை 9:00. உச்சிகாலம் - பிற்பகல் 12:30. திருமால் வடை - மாலை 6:00. சாயரட்சை - இரவு 7:30. அர்த்தஜாமம் - இரவு 9:00
11. நாச்சியார் கோவில் குத்துவிளக்கு மிகவும் புகழ் பெற்றது.
நாச்சியார் கோயில் கல் கருடன்
கல் கருடனுக்கு சிறப்புமிக்க தலம். இவருக்கு தனிச் சந்நதி உண்டு. இங்கு மூலவரும் இவர்தான், உற்சவரும் இவர்தான். மிகச் சிறந்த வரப்பிரசாதி. ஆண்டுக்கு இருமுறை (மார்கழி, பங்குனி) நடக்கும் கல் கருட சேவை பிரசித்தம். பெரிய திருவடி தரிசனம் என்றும் இதனைக் குறிப்பிடுவர். வாகன மண்டபத்திற்குப் புறப்படும் சமயம், இவர் திருப்பாதங்களை நால்வர் தாங்கிவருவாராம். 4பேர் தூக்கும் கருடனை, 8 பேர், 16 பேர், 32 பேர் என்று தூக்கிக் கொண்டே வருவார்கள்.
காரணம் தூக்கத் தூக்க எடை இரட்டிப் பாகிக் கொண்டே போகுமாம். இறுதியாக 128 பேர் இந்த கல் கருடரை சுமந்து செல்வார்கள். சந்நதியை விட்டு வெளியே வரும் போது, எப்படி கல் கருடரின் எடை படிப்படியாக அதிகரிக்கிறதோ, அதே போல் சந்நதிக்கு திரும்பும் போது, கல் கருடரின் எடை படிப்படியாக குறையும், அதிசயம் நடக்கிறது. கல் கருட சேவையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலில் கூடுவார்கள். இங்குள்ள கருட ஆழ்வார், தனிச் சிறப்பு மிக்கவர். ஒரு சமயம், ஒரு ஊரில் ஒரு சிற்பி ஆகம விதிகளுக்கு உட்பட்ட முறையில் ஒரு கருடனை செதுக்கி வந்தார். சிற்பம் முடியும் தருவாயில் கருடனுக்கு இரண்டு புறமும் இரண்டு சிறகுகளைச் செதுக்கி, அதற்குப் பிராணபிதிஷ்டை செய்தாராம். உடனே உயிர்பெற்ற கருடன், மேல்நோக்கிப் பறக்க ஆரம்பிக்கவே, இதைக் கண்டு அச்சமுற்ற சிற்பி, தம் கையில் இருந்த கல் உளியை எடுத்து கருடன் மேல் எறிந்தாராம். மூக்கில் அடிபட்டதால் அந்தக் கருடன் இந்த நாச்சியார் கோவிலில் இறங்கி விட்டாராம்.
அதன்பின்பும் உயிர்பெற்று எம்பெருமானின் திருவருளால் இத்தலத்திலேயே அமர்ந்து தம்மை வேண்டினோர் அனைவருக்கும் இங்கிருந்தே அருள் பாலித்து வருகிறார். இவர், இத்தலத்தின் மூலஸ்தானத்திற்கு அருகேயுள்ள மகாமண்டபத்தில் சாளக்கிராம வடிவத்தில் நீள்சிறகும், நீளமுடியும், நீண்டு வளர்ந்த திருமேனியுடன் கம்பீரத்தோற்றத்தில் எழுந்தருளியுள்ளார். இவர் எழுந்தருளியுள்ள இடம் 10/½ சதுரஅடி இந்தக் கருடன் மீது பறைவையேறும் பரம புருஷனான எம்பெருமான் திருவீதி கண்டருள்வது நாச்சியார் கோவில் கருட சேவை.
இங்கு பெருமாளுக்குத் திருவாராதனம் முடிந்ததும், ஆறு வேளைக்கு அமுத கலசம் சமர்ப்பிக்கப்படுகிறது. அமுத கலசம் எனப்படும், மோதகம் (கொழுக்கட்டை) இவருக்கு மிகவும் பிடித்தமானது. எனவே இவரை “மோதக மோதகர்” என்றும் சொல்லுவார்கள்.
முனைவர் ஸ்ரீராம்
|