ராஜகோபுர மனசு
பகுதி 13
உண்மையில், சுல்தான் படைகளின் தாக்குதலை, காம்பிலிதேசம் எதிர்பார்க்கவேயில்லை. எப்போதும்போல, வழக்கமான பணிகளை அது மேற்கொண்டிருந்தது. உச்சிப் பொழுது நேரத்தில், திடீரென ஊருக்குள் நுழைந்த வடக்கத்துப் படைகளை கண்டு, யாரென்று புரியாது, கண்கள் சுருக்கி, சட்டென அடையாளம் கண்டு, மக்கள் சுதாரிப்பதற்குள், சுல்தான்
படைகள் அரக்கத்தனமாக எல்லோரையும் கொன்றது. மீறி, ஆவேசமாக எதிர்த்தவர்களையெல்லாம் தொண்டையறுத்துப் போட்டது.  குழந்தைகளோடு தப்பித்த பெண்களைப் பிடித்து, மொத்தமாக குடிசைகளில் அடைத்து தீயிட்டுக்கொளுத்தியது. தன் மக்களையெல்லாம் கொன்று, கோரத்தாண்டவம் ஆடியபடி, சுல்தான்படைகள் உள்ளே நுழைந்துவிட்டதை அறிந்த காம்பிலிதேவன், தன்படையினரோடு போருக்கு தயாரானான். கிளம்புவதற்குமுன், திரும்பி தன் மனைவியரை மௌனமாய் பார்த்து கண்களால் பேசினான். அவன் கண்கள் பேசிய எண்ணம் புரிந்த அவனது அரசியர்கள், மெல்ல தலையாட்டினர். காம்பிலிதேவனோடு கிளம்பிய மொத்தப் படைகளும் அரண்மனைக் கோட்டைக் கதவை தாண்டிய சில நிமிடங்களில், அரண்மனைக்குள்ளிருந்து கடும் நாற்றத் தொடு பெரும்புகைமண்டலம் கிளம்பின, அக்கரும்புகையோடு, அரசியர்களின் அலறல்களும், அரண்மனை பணிப் பெண்களின் கதறல்களும், போருக்கு புறப்பட்டவர்களைத் தொட்டது.
எதிரிப்படைகளிடம் சிக்கி சீரழியாதிருக்க, மொத்தபெண்களும் தங்களைத் தாங்களே தீவைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். நெருப்பு வைத்துக் கொள்ள பயந்த சில பெண்கள், கழுத்தை அறுத்துக் கொண்டும், மேல்மாடத்திலிருந்து குதித்தும், செத்துப் போனார்கள். (வரலாறு அப்படித்தான் கூறுகிறது) அத்தனையையும் நெஞ்சுபதைக்க, கண்ணீர் வழிந்தபடி திரும்பிப் பார்த்த காம்பிலிதேசத்துவீரர்கள், வெறியானார்கள்.
பேராவேசத்துடன் வடக்கத்துப் படைகளை எதிர்த்து, களத்தில் போரிட்டனர். தீயில் கருகிய தங்கள் பெண்களின் கதறல்கள், காதுகளில் மீண்டும் எதிரொலிக்க, வெறி கொண்டு தாக்கினார்கள். எதிரியானாலும் நம்பி வந்தவனை காப்பதற்காக களம் புகுந்த காம்பிலிதேவன், ஆவேசமாக சண்டையிட்டான். நாலாபக்கமும் சுழன்றுசுழன்று வாள்வீசி, தாக்கினான். அவனின் வாள்சுழற்சிக்கு முன் சுல்தான்படைகள் சற்று திணறத்தான் செய்தன.
ஆனால், விதிவலியது. வழக்கம்போல, போர்த்தர்மம் மீறி, சண்டையிட்ட சுல்தானின்படைகளிடம், காம்பிலிதேசம் போராடி வீழ்ந்தது. வெற்றியில் கொக்கரித்த வடக்கத்துப் படைகள்.
காம்பிலியின் மொத்தப்படை வீரர்களையும் கொன்று குவித்துவிட்டு, வீரமாக சண்டையிட்டு தோற்ற காம்பிலிதேவனின் தலையை வெட்டி, ஈட்டியில் சொருகி, அதோடே நகருக்குள் நுழைந்து, ஊரை சூறையாடியது. அங்கும் எதிர்பட்டோரையெல்லாம் கொன்றுவிட்டு, மொத்த ஊரையும் தீக்கிரையாக்கியது.
கோயில்களையெல்லாம் தரைமட்டமாக்கியது. மக்கள் வழிபட்ட மூலவர் சிலைகளை முச்சந்தியில் போட்டுடைத்து, சிறுநீர் கழித்து கொக்கரித்தது. தங்கள் கடவுளென, பெரும் நம்பிக்கையோடும் பக்தியோடும், வழிபட்ட சிலைகளை, மோசமாக அசிங்கப் படுத்தியதைக் கண்டு வெறியாகி, கையில் கிடைத்தையெல்லாம் கொண்டு சண்டையிட வந்த சொச்ச மக்களையும் கொன்றுபோட்டது, சுல்தான் தளபதியொருவன்.
தன்னிடம் சிக்கிய காம்பிலிதேசத்து தளபதியின் கழுத்தில் கத்தி வைத்து, பஹாவுதீன் குர்ஷாப், குடும்பத்துடன் துவாரசமுத்திரத்திற்கு தப்பிவிட்ட விவரத்தை வாங்கினான். வாங்கியகணமே அவன் கழுத்தையும் அறுத்துப் போட்டான்.
அத்தனை பேயாட்டமாடிய சுல்தானின் படைகள், அப்படியே, துவாரசமுத்திரத்திற்கு விரைந்து சென்று, அதன் வடக்குப்பக்கம் பதுங்கியிருந்த பஹாவுதீன் குர்ஷாப்பை சூழ்ந்தன. காப்பாற்றவந்த பாதுகாப்பு வீரர்களை குத்திக்கொன்ற கையோடு, பஹாவுதீன் குர்ஷாப்பை, குடும்பத்தாரோடு கைது செய்தன.
அப்படியே துவாரசமுத்திரத்திற்கு திரும்பி, அங்கு கோட்டைக் காவலுக்கு நின்ற வீரர்களையும் அம்பெய்தி கொன்று, கயிறுபோட்டு கோட்டைக்குள் மேலேறி, அடாவடியாக கிராமங்களுக்குள் நுழைந்து, ஊரைத்தீக்கிரையாக்கி கொள்ளையடித்தன. இருக்கின்ற சொச்ச வீரர்களோடு, கடுமையாக சண்டையிட்ட வேலாயுதமாறனாரின் கைகளில் சிக்காது தப்பித்தோடி, போகிறவழிகளிலெல்லாம், சொல்லமுடியாத எல்லாபாதகத்தையும் செய்துவிட்டு, கைதுசெய்த பஹாவுதீன் குர்ஷாப் மற்றும் அவன் குடும்பத்தவர்களோடு, துவாரசமுத்திரத்திலிருந்து காணாமல் போயின.
(கைது செய்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட குல்பர்க்கா ஆளுநர், விசாரணையின்றி உயிருடன் தோலுரிக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டான். உரிக்கப்பட்ட தோலுக்குள் வைக்கோல் திணிக்கப்பட்டு, எல்லோரும் பார்க்கும்படியாக பொது இடத்தில் தொங்கவிடப்பட்டது. அதோடு முடியாமல், பயங்கரகொடுமையாக செத்த உடலை கறியாகச்சமைத்து, அவனது மனைவி, மக்களை உண்ணச் சொல்லி, கொடுமைப்படுத்தியதும், இன்னுமொரு வரலாற்றுத் தகவல்)இவையெல்லாம் நடந்து முடிந்த ஒருநாள் இடைவெளியில், அமைச்சர்களோடு ஆலோசனையிலிருந்த மன்னர் வீரவல்லாளனை மொத்தத் தகவல்களும், வந்தடைந்தன. முதலில் துவாரசமுத்திரம் சூறையாடப்பட்ட கொடுமை வந்தடைந்தது. அதோடு பஹாவுதீன் குர்ஷாப், குடும்பத்தோடு கைதாகி, கொண்டு செல்லப்பட்ட தகவலும் சொல்லப்பட்டது.
அந்தத் தகவல் வந்தகையோடு, அடித்துப்பிடித்து கொண்டு வந்த வேறொரு ஒற்றன், காம்பிலிதேசம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட கோரத்தையும், காம்பிலிதேவனின் கொடூரமரணத்தையும், மொத்த அரண்மனைபெண்களும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவரத்தையும், கோயில்கள் இடிக்கப்பட்ட அத்தனைக் கொடுமைகளையும், பதைப்புடன் தெரிவித்தான்.
அரண்மனைப் பெண்கள் தீக்குளித்தகொடுமையை சொல்லும்போது மட்டும், பெண்கள் வரிசையிலிருந்த யாரோவொருத்தி விசும்பினாள். இன்னொருத்தி முகத்தில் அறைந்துகொண்டு அழுதாள். அத்தனையையும் கேட்டு மன்னர் வீரவல்லாளன் ஆவேசமாக எழுந்தார். சபையின் மேல்கூரை நோக்கி, “ஆஹ்ஹாஹா“ வெறிகொண்டு கூச்சலிட்டார். “பீமராயரே, இன்றோடு வடக்கத்தானோடான நம் கப்பத் தொகை ஒப்பந்தம் முறிகிறது.
இனிமேல் கப்பதொகையை செலுத்த வேண்டாம். இதை தகவலாகக்கூட அந்த நாய்களுக்கு தெரிவிக்காதீர்கள். ஆவதை பார்த்துக் கொள்வோம். ஒன்றைமட்டும் உறுதியாக சொல்கிறேன். இத்தனை அநியாயம் செய்த சுல்தானின் படைகளுக்கு என் கையால் முடிவுரை எழுதுவேன். என் எதிரியென்றாலும், மிக கொடூரமாக கொல்லப்பட்ட காம்பிலிதேவன் சாவுக்கு, நியாயம் செய்வேன். பிரிந்த சணல்கயிறாய் கிடக்கிற, அண்டை அரசுகள் அத்தனையையும் ஒன்றாக்கி, தேர்வடக்கயிற்றாக்கி, சுல்தானுக் கெதிரான சக்தியை பெரும்பலமாக்குவேன். இம்முறை ஹொய்சாலத்தின் வீரமெதுவென வடக்கத்தானுக்கு நான் காட்டுவேன். இது அன்றாடம் நான் வணங்கும் அண்ணாமலையானின் மீது சத்தியம்.” என உறையிலிருந்து வாளுருவி, வான்நோக்கிகாட்டி, முழக்கமிட்டார்.
மன்னரின் முழக்கத்திற்கு, உணர்ச்சி வயப்பட்ட தளபதிகள், மீசையை முறுக்கினர். அத்தனை வீரர்களும் முறுக்கேறிய கரங்கள் கொண்டு, வாளால் கேடயத்தை ஆவேசமாக தட்டியபடி, ஓசையெழுப்பினர். அங்கிருந்த எல்லோர்மனதிலும் இருந்த சுல்தானின் படைகள் மீதான மொத்த வெறுப்பும், “வாழ்க மன்னர், வெல்க ஹொய்சாலம்” என்ற சபை அதிரும் முழக்கமாக மாறியது. சபையில் சூளுரைத்த கையோடு, மன்னர் வீரவல்லாளன் சும்மாயிருக்கவில்லை.
தன் அண்டையரசுகள் அத்தனைக்கும் தூதனுப்பினார். முதல் வேலையாக, வாழ்நாள் முழுமைக்கும், தன்னை எதிர்த்தே செத்துப் போன தனது சிற்றப்பன் வீரராமனாதனின் மகன் விஸ்வநாதனுக்கு சிநேகக் கடிதம் எழுதினார். அடுத்து, எவரும் யோசிக்காத வகையில், இந்துமதத்தின் அத்தனை குருமடங்களுக்கும், மடங்களின் குருமார்களுக்கும் விண்ணப்ப ஓலையனுப்பினார்.
“இம்மண்ணின் பாரம்பரியத்தைக் காக்கவேண்டிய அவசரத்தையும், சுல்தான்படைகளை எதிர்க்கவேண்டிய அவசியத்தையும், தங்களை பின்தொடரும் மன்னர்களுக்கு வலியுறுத்தும்படி” அவர்களுக்கு எழுதினார். அது நல்லபலனை மன்னர் வீரவல்லாளனுக்கு தந்தது. அறுபதைக் கடந்த ஒரு கிழமன்னனின் பெரும் முயற்சியால், ஒன்றுபடவேண்டிய அவசியத்தை மெல்லமெல்ல புரிந்துகொண்ட தென்னகத்து மன்னர்கள், ஒவ்வொருவராக, வீரவல்லாளனோடு கைகள் கோர்த்தனர்.
“சுல்தான்படைகளை எதிர்த்துப் போரிடுகிற அரசுகளுக்கு, ஹொய்சாலத்துப்படைகளும் உதவும்” என்கிற வீரவல்லாளனின் வாக்குக்கு பின், எல்லோரும் மேலும் தைரியமானார்கள். அதன்பலனாக, காகதீய அரசின் படைத்தலைவன் பிரளயநாயக்கன் என்பவனும், அவனது மைத்துனன் காபயநாயக்கன் என்பவனும் முதல் ஆளாக வீரவல்லாளனோடு கைகள் கோர்த்தனர். அவர்களோடு பிரளயவேமன் என்பவனும், தெலுங்கு சோழனாகிய இருவா என்பவனும் உடன் சேர்ந்தனர். உற்சாகமான மன்னர், அவர்களுக்கு படைகள் தந்து உதவினார். கூட்டுப்படைகள் பலமாகின.
பிரளயநாயக்கன், மன்னர் வீரவல்லாளனின் துணையுடன் கடலோர ஆந்திரப்பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த முஸ்லீம்படைகளை விரட்டியடித்துவிட்டு, கிழக்குகோதாவரியின் பத்ராசலத்தில் தனியரசு அமைத்தான். அவன் காலத்திற்கு பிறகு பொறுப்பேற்ற, அவன் சகோதரி மகன் கப்பையநாயக்கன், சுல்தானுக்கு எதிராக மேலும் வேகமானான். தெலுங்கானாவிற்குள் நுழைந்து, அங்கிருந்த துலுக்கப்படைகளை மோசமாக தோற்கடித்தான். அதோடு வாரங்கலையும் கைப்பற்றினான்.
இதன் தொடர்ச்சியாக, பல இடங்களில் வடக்கத்துப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. தென்னக அரசுகள் இழந்த பலபகுதிகள் மீண்டும் கைப்பற்றப்பட்டன. தொடர் வெற்றிகளால் உற்சாகமான மன்னர் வீரவல்லாளன், கேரளத்தின் வடக்குப்பகுதி மீதான படையெடுப்பில், கப்பையநாயக்கனுடன் இணைந்து, தன்படைகளோடு நேரிடையாக போரிட்டார். பெரும்படையுடன் நுழைந்து, மொத்த சுல்தான்படைகளையும் துரத்தி விரட்டியடித்து, கோட்டையை கைப்பற்றினார்.
கைப்பற்றிய பகுதியை தனது அரசோடு சேர்க்காமல், அதற்கான உரிமையுள்ள “மண்கொண்ட சம்புவராயன்” என்பவனிடமே, நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். அடுத்ததாக, சாளுக்கிய சோமதேவன் என்பவனுக்கு படையுதவி அளித்து, சுல்தான்படைகள் தோற்கடித்து, வீரமரணமடைந்த காம்பிலிதேவனின் ஆத்மா நிறைவுபெறும்வகையில், காம்பிலிதேசத்தை மீட்டார்.
(தொடரும்)
குமரன் லோகபிரியா
|