உள்ள(த்)தைச் சொல்கிறோம்
ஏராளமான புண்ணிய குளங்களின் தீர்த்தங்கள், நதிகளின் தீர்த்தங்கள், கடல் தீர்த்தங்கள் பற்றிய தகவல்களை, மாசி மக ஸ்பெஷலாக ஒரு மாலையாகத் தொடுத்து வாசகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாற்கடலை கடைந்தால் எப்படி ‘‘அமுதம்’’ கிடைத்ததோ, அதைப் போல் எண்ணற்ற நினைவுகளைக் கொண்ட நமது ‘‘மனம்’’ எனும் கடலைக் கடைந்தால், இறைவனாகிய அமுதம் நமக்குக் கிடைப்பான் என்ற தத்துவம் மிக அற்புதம். - எஸ் வஜ்ரவடிவேல்,கோவை
‘பொருள் பொதிந்த சடங்குகள்’ என்று பொறுப்பாசிரியர் தந்திருப்பது ஆன்மிகப் பயணத்தின் புதையல்களை அடையாளங்காட்டிவிட்டார் என்று புரிகிறது! கேலிக்குறித்தான சடங்குகள்கூட அறிந்தோ அறியாமலோ வேள்வியின் புண்ணியத்தை வார்க்கவே செய்கின்றன என்பதை உணர்ந்து வணங்கினேன் இதழை! வாழ்த்தினேன் இதழ் சேர்த்து! - ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.
`விளக்கில் விளங்கும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்’ கட்டுரை, புதிய சிந்தனைக்கு விருந்து படைத்தது. ‘ஒளி’ மயமான எதிர் காலத்திற்கு பிள்ளையார்சுழி போட்டுவிட்டது என்றால் மிகையாகாது! - கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
மாசி மகம் இறைவழிபாடு, நீராடுதல் ஏன் சிறப்பு பெறுகிறது? என்பதை காரண காரியங்களோடு விளக்கி, பக்தர்களை கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராட வைத்து விட்டார் கோகுலாச்சாரி! - ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.
‘குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்’ என்னும் கட்டுரையை படித்தேன். ஈசன் பிரம்மனை பார்த்து கூறிய விஷயங்கள், என் இதயத்தை தொட்டன. கும்பகோணம் எப்படி உருவானது என்ற விளக்கம் கண்டு, கும்பத்தின் மூக்கு வழியாக வந்த அமுதம், மற்றும் அந்த கோணம் விழுந்த தலமே கும்பகோணம் என்பதை கேட்டதும் மெய் சிலிர்த்தது.
‘‘திருத்தலங்களை நிறைந்திருக்கும் தீர்த்தங்கள்’’ படித்தேன். வாரனாசிக்கு, எப்படி அந்த பெயர் வந்தது. காசி ராமேஸ்வரத்தில் மட்டும் தீர்த்தம் இருக்கிறது என்று மட்டுமில்லாமல் காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தீர்த்தங்கள் இவற்றில் முக்கியமானது நவக்கிரகங்களால் அமைக்கப்பட்ட பருதி தீர்த்தம். கேட்கவே தீர்த்தம் குடித்தது போல இருந்தன. - வண்ணை கணேசன், சென்னை
‘மாசி மகம்’ பக்தி ஸ்பெஷல் வாசகர்களின் ராசி யோகம் என அமைந்தது என்பதற்கு அட்டைப்பட தரிசனத்தின் மங்களம்கூட சான்றுதான்! - மருதூர் மணிமாறன், திருநெல்வேலி.
‘‘குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்’’ தொகுப்பும், படங்களும் தந்த தரிசனமே அகமும் முகமும் தேஜஸ் பெற உதவியது! நன்றி! - என்.ஜானகி ராமன், திருநெல்வேலி.
மூன்றே வாசகர்கள் கேள்விக்கான பதில்களோடு ஒரே பக்கத்தில் அடக்கினாலும்கூட `தெளிவு பெறுஓம்’ பகுதி மூலம் நாலா பக்கமும் அறிய வேண்டிய விஷயங்கள் பல ஆர்ப்பரிக்கின்ற! ஆனந்தமே...ஆனந்தம்! - ஆர். விநாயகராமன், நெல்லை.
மகத்தான வாழ்வருளும் மாசி மகம் நீராட்டம் என்ற தலைப்பில் மாசி மகம் வைபவத்தின் மகத்தான சிறப்புக்களை முப்பது முத்துக்களாக அரிய பல தெய்வீகத் தகவல்களுடன் தொகுத்து கோகுலாச்சாரி அவர்கள் வழங்கிய விதம் அகம் குளிர வைத்துவிட்டது. - த. சத்தியநாராயணன், அயன்புரம்.
வினைப்பயனை யாராக இருந்தாலும், அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற பேருண்மையை, சரமாதேவி நாய் தேவதைக் கதையில் இருந்து விலாவாரியாக அறிய முடிந்தது. ஒரு தவறும் செய்யாத சரமா தேவி நாயின் குட்டிகளைத் துன்புறுத்திய ஜனமேஜயனின், தம்பிகள் செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை ஜனமேஜெயன் படிப்படியாகப் பெற்றதை குருஷேத்திர போரின் கதைகளில் இருந்து நன்கு அறிய முடிந்தது. - முனைவர். இராம.கண்ணன், திருநெல்வேலி.
மாசி மகம் பக்தி ஸ்பெஷல் அமோகமாய் இருந்தது. அட்டைபடம் தூள். கழுகு பார்வையாக குளம் மட்டுமல்லது, கும்பகோணத்தை காட்டிய விதம் அருமையிலும் அருமை! - சாய்.அ.தமிழ், வைத்தீஸ்வரன் கோயில்.
படிக்காசு புலவரை பற்றி படித்ததும், இன்னும் அவரை பற்றிய ஏதாவது செய்தி கிடைக்கின்றனவா.. என்று நூல் நிலையங்களில் தேடி வருகிறேன். அந்த அளவிற்கு பரசுராமனின் கட்டுரை என்னை பாதித்தது. வெங்கியின் ஓவியம் அற்புதமாக இருந்தது. - பொன்.சிவா, விழுப்புரம்.
|